Tuesday, March 31, 2009

அயன் கதையும், ஆபீஸ் காமெடியும்!

11 comments

முதல்ல நான் இணையத்தில படித்துச் சுவைத்த ஒரு காமெடியைப் பார்த்துவிட்டு அப்புறமா ‘அயன்’ கதைக்குப் போகலாம்.

அது ஒரு ஆபீஸ். மதிய நேர உணவுக்குப் பிறகு வழமையாகத் தூங்கி வழிந்துகொண்டிருக்கிற அது அன்று பரபரப்பாகக் காணப்பட்டது. எல்லோரும் கூடிக்கூடிப் பேசுவதும், சத்தமாக விவாதிப்பதுமாக இருந்தது.

அந்த ஆபீசுக்குப் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் அங்கிருந்த சிரேஸ்ர உழியர் ஒருவரிடம் அதைப்பற்றிக் கேட்டனர். அதற்கு அவர் அந்தக் கம்பனி Boss ஐ யாரோ கடத்தி விட்டதாகவும், அவரை விடுவிக்க 10 கோடி கப்பமாகக் கேட்பதாகவும், இல்லாவிட்டால் அவரைப் பெற்றோல் ஊற்றி எரித்துவிடப் போவதாக மிரட்டுவதாகவும் கூறினார்.

மேலும் அவர் ஊழியர்கள் அனைவரும் தங்களால் முடிந்ததைக் கொடுத்துதவப் போகின்றோம். நீங்களும் உங்களால் முடிந்ததைத் தாருங்கள் என்றார்.

அதற்கு அவர்கள் நிச்சயமாக, சராசரியாக ஒருவரிடமிருந்து எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்றனர்.

அதற்கு அந்தச் சிரேஸ்ட ஊழியர், சராசரியாக ஒருவருக்கு ஒரு லீட்டர் என்றார்???!!!

எவ்வளவு கடுப்போடு இருந்திருக்கிறார்கள் பாருங்கள். இனி அயன் கதைக்குப் போகலாம்.



கதை தொடங்குவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். ஒரு குழுவினர் பாறைகளை வெட்டி எதையோ தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெட்டும் ஆயுதங்கள் எல்லாம் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கின்றன. அப்போதுதான் அவர்கள் கண்ணுக்கு அது படுகின்றது.

ஆம் அது அயன்! அயனேதான்!!. அங்கேதான் (உலகிற்கு) அறிமுகமாகின்றது ஆங்கிலத்தில் அயன் எனப்படும் இரும்பு.

ஸ்டாப் ஸ்டாப்…..

ஸாரி, நீங்கள் சூர்யா நடிச்ச அயன் கதையையா எதிர்பாத்தீங்க? நான் சொல்ல வந்தது இரும்பு கண்டுபிடிச்ச கதையை. அப்படி எதிர்பார்த்து வந்தவங்களுக்கு அட்வான்ஸ் ஏப்ரல் பூல்!!!

உங்களை மாதிரியே அடுத்தவங்களும் ………… ஆக வேண்டாமா? அப்படீன்னா ஒரு ஓட்டைப் போட்டுட்டுப் போக மறந்துடாதீங்க.

ஒரு ஒற்றுமை பாத்தீங்களா? எலக்சனிலையும் இப்படித்தான் ஓட்டைப் போட்டு அடுத்தவங்களையும் ஏமாத்தப்போறீங்க.


Monday, March 30, 2009

அடுத்தவரை ஏப்ரல் பூல் ஆக்குவதற்குப் பயனுள்ள 11 ஐடியாஸ்!

5 comments



ஏப்ரல் 1ம் திகதி முட்டாள்கள் தினம். நம்மைத்த‍விர மத்த‍வங்கள் எல்லோருக்காகவும் இருக்கிற ஒரேயொரு தினத்தை நாம கொண்டாட வேண்டாமா? அதுக்குத்தான் இதோ டிப்ஸ்…



1. மணல் இல்லேன்னா சாம்பலைப் பொதிசெய்து ஏதாவது பிரபலமான கம்பனியோட பெட்டியில பார்சல் பண்ணி ரோட்டில தவறுதலா விழுந்து கிடக்குற மாதிரி போட்டுவிட்டா எவனாவது அதை எடுத்துக்கொண்டு போய் ஏமாறுவது நிச்சயம். ஆனா இலங்கையில இப்படியான பார்சல்கள் வீண் குழப்பத்தைத் தோற்றுவிக்கும் எங்கிறதால இதைத் தவிர்ப்பது நல்லது.

2. ‘பின்லேடன் பிடிபட்டார்’, ‘ரஜனிகாந் அரசியலுக்கு வாராராம்’ போன்ற பியூஸ் போன நியூஸ் எல்லாத்தாலும் முட்டாளாக்க முடியாது. ‘நமீதாவுக்குக் கல்யாணம்’, ‘ரகஸ்யாவுக்கு ஒரு ரகசியக் காதலனாம்’ போன்ற சூடான செய்திகளைக் கூறிப்பாருங்கள். ஐந்துவயதுப் பையன் முதல் அறுபது வயதுத் தாத்தா வரை அதிர்ச்சியடைவது நிச்சயம்.




4. பின்னாடி போய் ‘பேய்…’ என்று கத்திச் சின்னப்பசங்களைப் பயமுறுத்தலாம். ஆனா பெரியவங்களுக்கு இது கொஞ்சம் கஸ்டம். அவங்களுக்காகவே ஒரு அருமையான ஐடியா. பின்னாடி போய் ‘நமீதா’ என்று கத்திப் பாருங்கள். பதறி அடித்துக்கொண்டு திரும்புவார்கள்.

5. தலையிலே தூசி கிடக்கிறது என்று கூறினால் யாரும் இப்போது ஏமாற மாட்டார்கள். பதிலாக தலையிலே இமயமலை இல்லேன்னா மருதமலை கிடக்கிறது என்றால் பயத்தில் தலையைத் தடவுவது நிச்சயம்.

8. காலுக்கடியில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற பயங்கர விலங்குகள் இருப்பதாகக் கூறியெல்லாம் பயமுறுத்த முடியாது. பதிலாக காசு கிடப்பதாகக் கூறிப் பாருங்கள். பத்துப் பைசா என்று கூறினாலே பதறியடித்துக்கொண்டு குனிவார்கள்.

9. பதிவுலகில் அடத்தவரை முட்டாளாக்குவதற்கு இப்போது சூடாக விவாதிக்கப்படும் ஒரு விடயத்தைப்பற்றித் தலைப்பைப் போட்டுவிட்டு, உள்ளே உங்கள் அக்கா பையன் மடியில் சுச்சா போனதை எழுதிவிடலாம். ஏதோ சூடான விடயம் என்று நம்பி வந்தவர்கள் உங்கள் மடி சூடான விடயத்தைப் பார்த்ததும் ஏமார்ந்து போவார்கள்.

11. பதிவுலகில் பரபரப்பான இலக்கமான பதினொன்றைத் தலைப்பில் போட்டுவிட்டு எவ்வளவு யோசித்தும் பதினொரு விடயம் சிக்கவில்லையா? இப்படி என்னைப்போல் இலக்கங்களைத் தாறுமாறாக இட்டுவிட்டு கடைசி இலக்கத்தைப் பதினொன்றாக இட்டுவிட்டால் சிலர் கவனிக்காமல் ஏமாறுவார்கள். கவனித்துப் பின்னூட்டுபவர்களுக்கும் ஏப்ரல் பூல் கூறிவிடலாம். எப்படி ஐடியா?

Saturday, March 28, 2009

Facebook தனது வடிவத்தை மாற்றியது – வானொலியில் செய்தி !!!

1 comments


கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் என்று நினைக்கிறேன். உலகின் Social networks களில் முதலிடம் வகிக்கும் Facebook தனது உட்கட்டமைப்பை மாற்றியமைத்தது. அவ்வளவுதான். ஏதோ நீண்டநாள் காதலிமீது Acid ஊற்றியதுபோலக் கொதித்துப் போனார்கள் அதன் பாவனையாளர்கள் பலர்.




சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கே Facebook இல் சங்கம் ஆரம்பிக்கும் நம்மவர்கள் இதற்குச் சும்மா இருப்பார்களா? We hate new Facebook என அதற்கும் ஒரு சங்கம் ஆரம்பித்துவிட்டார்கள். அச்சங்கம் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே அதன் அங்கத்தவர் எண்ணிக்கை ஆறு இலக்க எண்ணில் இருந்தது. இப்போது ஏழு இலக்கத்தைத் தொட்டிருக்கலாம்.

Campus இலும் Computer lab இனுள் இதே பேச்சுத்தான். ஒரு வாரத்திற்கு முன் ஒருநாள் அங்கிருந்தவாறே பதிவுகளில் மேய்ந்துகொண்டிருந்தேன். அங்கிருந்த சிங்கள நண்பர்களுக்கிடையே ஏதோ விவாதம் போய்க்கொண்டிருந்தது. நடந்து முடிந்த இடைப்பரீட்சையைப் பற்றியதோ என எண்ணிக் காதைக் கொடுத்தேன். அப்போதுதான் தெரிந்தது அது Facebook இன் புதிய வடிவத்தைப் பற்றியது. அதைப் பிடித்திருக்கிறது எனச் சிலரும், பிடிக்கவில்லை எனச் சிலருமாக கூட்டம் களை கட்டியிருந்தது.

சரி, இதையெல்லாம் போனால் போகட்டும் என விட்டுவிடலாம் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கைத் தனியார் வானொலி ஒன்றைக் கேட்டவாறே காலை உணவை எடுத்துக்கொண்டிருந்தேன். உலகில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள் சிலவற்றைக் கூறிக்கொண்டு வந்த அந்தப் பெண் அறிவிப்பாளர் அதில் Facebook தனது வடிவமைப்பை மாற்றிவிட்டதாகவும், அதைப் பிடிக்காத பலர் Facebook இல் அதற்கெதிராக Group ஒன்று தொடங்கிவிட்டதாகவும், கூறியதுடன் அதைப்பற்றித் தனது கருத்தையும் கூறத் தூக்கிவாரிப் போட்டது எனக்கு. நாடு இருக்கும் நிலமைக்கு இதெல்லாம் தேவையா?

சரி, இதைப்பற்றி Facebook என்ன கூறுகின்றது தெரியுமா? இந்தப் புதிய வடிவமைப்பில் பாவனையாளர்கள் தமது நண்பர்களை இலகுவாகப் பிரித்தறியக் கூடியதாக இருக்கும் என்றும், இந்த வடிவமைப்பு மூலமாக Spam users இனை இலகுவாக இனம்காண முடியும் என்றும் கூறுகின்றது.

அண்மைக் காலங்களில் Facebook தனது சட்டங்களை இறுக்கமாக்கி, Facebook இல் நடைபெறும் இணையக் குற்றங்களை குறைக்கப் பகீரதப் பிரயர்த்தனம் செய்து வருகின்றது. சும்மா இருப்பார்களா நம்மவர்கள்? அவர்கள் யார் எம்மைக் கேட்காது சட்டங்களை மாற்றுவது என அதற்கும் ஒரு Group உருவாக்கிவிட்டனர். நல்லதுக்கும் காலமில்லை.

Friday, March 27, 2009

பாதியாக இருப்பதால் கிடைத்த பெருமை!

5 comments



நூறு. முதலாவது மூவிலக்க எண். பெரும்பாலான பரீட்சை வினாத்தாள்களின் அதியுச்சப் புள்ளி. இதன் மூவிலக்கத்தின் முதலாவது எண் என்ற பெருமையே இது ஒரு அடையாளமாக கருதப்படக் காரணம். ஆனால் சில சமயங்களில் இது அடைய முடியாத இலக்காகி விடுகின்றது. அவ்வாறான சந்தற்பங்களே ஐம்பதையும் அடையாளமாக்கின.

பரீட்சையில் ஐம்பது புள்ளிகள் எடுத்தவரை யாரும் கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில் ஐம்பது என்பது அங்கே சராசரியை விடக் குறைவு. ஆனால் கிரிக்கெட் போன்ற உடலை களைப்பாக்குகின்ற விடயங்களில் நூறு என்பது சிறிது கடினமான விடயம்தான். அதனால்தான் ஐம்பதும் ஒரு அடையாளமாகக் கருதப்பட்டது. கிரிக்கெட்டில் முதலில் பிரபலமாகத் தொடங்கிய ஐம்பது பின் அனைத்திலுமே அடையாளப்படுத்தப்பட்டது. பதிவுலகிலும்தான். எனக்கும் இது ஐம்பதாவது பதிவு.


ஐம்பதாவது பதிவை இடுவதென்பது ஒவ்வொரு பதிவருக்கும் ஆனந்தமான விடயம். எனக்கும்தான். இந்த எனது ஐம்பதாவது பதிவிற்காக எழுத உட்கார்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்கிறேன் என்பது எனக்கே தெரிகின்றது.

அனைவரையும் போலத்தான் ஐம்பதாவது பதிவில் கடந்துவந்த பாதையைப்பற்றி எழுத ஆசைதான். ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக எனக்கில்லை. ஆரம்பத்தில் கவிதைகளை மட்டுமே எழுதிவந்தேன். ஏதோ ஒரு உந்துதல். எழுதவும் தொடங்கினேன். தமிழ்மணம் கூட தாமதமாகத்தான் தெரியவந்தது. தமிழிஷ் அதைவிடத் தாமதம். ஆனால் அதன்பின்தான் ஏதோ எனது எழுத்தையும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. தமிழிஷ் இல் ஒவ்வொரு முறை எனது பதிவுகள் பிரபலமாகும்போதும் ஏதோ பரீட்சையில் சித்தியடைந்த சந்தோசம். இளமை விகடனில் எட்டிப்பார்த்தபோது பல்கலையில் நுளைந்தபோது இருந்த மகிழ்ச்சி. தமிழ்மணத்திலும் ஒன்றிரண்டு சூடானதாம். யாரோ சொல்லித்தான் தெரியும். அதனால் அதை அனுபவிக்க முடியவில்லை.

பதிவுலகம் எனக்குக் கற்றுக்கொடுத்ததும் பெற்றுக்கொடுத்ததும் ஏராளம். நான்கு மாதங்கள் பதிவிட்டிருந்தாலும் பதிவுலகோடு தொடர்பு ஏற்பட்டது இரண்டு மாதங்களாகத்தான். அதற்குள் இவ்வளவும். நண்பர்கள் கூடப் பலர் கிடைத்துவிட்டார்கள். ஐம்பது என்பது வெறும் எண் கணக்குக்குத்தான் என்பதும் எனக்குத் தெரியும். மொக்கைப் பதிவுகளை உதிரிகளாகச் சேர்த்துக் கொண்டால் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை ஐம்பது.

பதிவுலகில் ஒருவரைச் சந்திப்பதென்பது கடற்கரையில் சந்திப்பது போன்றது என எங்கோ ஆங்கிலப் பதிவில் படித்த ஞாபகம். ஆயிரக்கணக்கானோர் மத்தியில் தேவையானவரைச் சந்திப்பது அதிசயமே. அப்படி நான் சந்தித்தவர்களும், என்னைச் சந்தித்தவர்களுமே எனக்குத் தெரிந்த பதிவுலகம். இன்னும் சந்திக்க வேண்டியோர் பலர். கடற்கரைக் காற்தடங்களை ஆராய்ந்து பிரிக்க முடியாதது போலவே பதிவுலகும். நான் செல்கின்ற பாதை யாரோ ஒருவர் சென்ற பாதையாகக் கூட இருக்கலாம். ஆனால் Copyயாக இருந்தாலும் Smart Copyயாக இருக்கவே விரும்புகிறேன்.

எனது பாட்டியிடம் ஒரு பெட்டி இருக்கும். அதில்தான் அவர் பொக்கிசமாகக் கருதியவற்றை இட்டு வைப்பார். அது அந்தக்கால ஐந்தறைப் பெட்டி என்பார். இந்தப் பதிவுத் தளத்திற்கு ஏதாவது பெயர் வைக்கவேண்டும் எனத் தேடியபோது ஏனோ அது ஞாபகம் வரவே அதையே வைத்துவிட்டேன். அதிகம் பேர் விளக்கம் கேட்டாலும் எப்படி இருக்கிறது என்று யாரும் இதுவரை சொன்னதில்லை. இருந்தாலும் ஏனோ பிடித்துவிட்டது.

இதுவரை எழுதிய பதிவுகளில் அதிக நேரம் எடுத்தது இந்தப் பதிவுதான் என நினைக்கின்றேன். மகிழ்ச்சியில் எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. இதுவரை ஆதரவளித்துவந்த, தொடர்ந்து வாசிக்கின்ற, அடிக்கடி வந்து பின்னூட்டமிடுகின்ற, தொடர்கின்ற, வாக்களிக்கின்ற அனைவருக்கும் நன்றிகள். இனியும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

Wednesday, March 25, 2009

இயற்கையின் வட்டமும், மதங்களும், மனிதர்களும்

9 comments




வாழ்க்கை ஒரு வட்டம், இங்கே தோக்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான். ஒரு பிரபலமான Dialogue. ஆனால் இது உண்மையும் கூட. வாழ்க்கை மட்டுமல்ல, இயற்கையின் அத்தனை நிகழ்வுகளுமே ஒரு வட்டப்பாதையில்தான் நிகழ்கின்றன. கோள்கள் சூரியனைச் சுற்றுவது, உப கோள்கள் கோள்களைச் சுற்றுவது, மாதங்கள், நாட்கள், பெண்களின் மாதவிடாய், வானிலை, காலநிலை என எரிமலை வெடிப்பது முதல் எறும்பின் வாழ்க்கை வரை அத்தனையுமே ஒரு வட்டத்தில்தான் நிகழ்கின்றது.

ஒவ்வொரு வட்டப்பாதையும் அதற்கேயுரிய ஒழுங்கமைப்பில், கால இடைவெளியில் நடைபெறுகின்றது. ஆனால் மனிதனின் மனிதன் தன் விஞ்ஞானத்தால் இதைக் குலைக்க முயல்கிறான். மனிதனால் இயற்கையின் வட்டப்பாதையின் கால அளவை மாற்ற முடிந்ததே தவிர இன்றுவரை எந்த ஒரு வட்டப்பாதையையும் குலைக்க முடியவில்லை. மாறாக மனிதன் அவ்வாறு குலைக்கும் போதெல்லாம், இயற்கையின் ஒழுங்கு குலைந்து அது மனிதனிற்கே எமனாக ஆவதுதான் நிகழ்கின்றது. இவற்றை மனிதன் உணர்ந்தாலும், ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.

இந்த இயற்கையின் வட்டத்திற்றான் மனிதனின் வாழ்க்கை வட்டம், வாழும் முறை, ஏன்?, மனிதனின் நடை, உடை பாவனைகூட நிகழ்கின்றது. முக்கியமாக மனிதனின் உடை நாகரிகத்தின் வட்டம் மிகக் குறுகியதாக இருப்பதுடன் எளிதாக உணரக்கூடியதாகவும் உள்ளது.

இந்த வட்டத்திற்கு மனிதனின் அறிவும் தப்பவில்லை போன்றே தெரிகின்றது. இன்றய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் பெரும்பாலானவை பண்டய மனிதர்களால் அறியப்பட்டவை என்பது பல சமய நூல்களில் இருந்து அறியமுடியும். ஆனால் அவை சமயத்தைச் சார்ந்திருப்பதாலும் ஆதாரங்கள் இல்லாதிருப்பதாலும், வேறுபல காரணங்களாலும் அவற்றை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு மறைத்தும் விடுகின்றனர்.

எந்த ஒரு மதமும் அதன் அடிப்படையில் பகுத்தறிவையே போதிக்கின்றது. அவ்வாறே மதங்களின் தோற்றத்திற்கும் பகுத்தறிவு வாதிகளே காரணமாக இருந்துள்ளனர். புத்தரே, இயேசுவோ, இல்லை நபியோ போதித்தது பகுத்தறிவையே தவிர மதத்தையல்ல. அவர்கள் போதித்த பகுத்தறிவே மார்க்கங்களாகக் கருதப்பட்டு பின் மதங்களாகத் தோற்றம் பெற்றன. இந்து சமயத்திற்கோ அடிப்படையாக இயற்கையே உள்ளது. பண்டைய மனிதர்கள் வணங்கிய இயற்கைப் பொருட்களே பின்வந்த மனிதர்களால் தெய்வ வடிவம் கொடுக்கப்பட்டு கடவுள்களாக்கப்பட்டன. இன்றும் கூட இயற்கை வளிபாடு இந்து சமயத்தில் பல மாற்றங்களுக்குட்பட்டாலும் உள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு மதங்களையும் பின்பற்றியோரில் ஒருசிலர் தமது வயிற்றுப் பிழைப்புக்காக மதங்களின் அடிப்படையான பகுத்தறிவைப் பின்தள்ளி மூட நம்பிக்கைகளை வளர்த்தனர். தொழில் முறைச் சாதிகளை, சாதிமுறைத் தொழில்களாக மாற்றினர். இவ்வாறு சாதிமுறையைச் சாராத சமயங்கள் தமது மதத்தைப் பரப்புவதற்கு அதே சாதியைக் கையில் எடுத்தன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன.

இவ்வாறு மூட நம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கப்பட்ட மனிதர்கள் சிந்திக்கத்தொடங்கியதுதான் விஞ்ஞான வளற்சி. இந்த விஞ்ஞான வளற்சியிற்றான் மனிதன் மதங்களை விடுத்துப் பகுத்தறிவு பேசுகின்றான். ஆனால் இன்றய அனைத்து மதங்களும் அதே பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றன என்பதை மறந்து விடுகிறான். அப்பகுத்தறிவு மூட நம்பிக்கையாகி, இன்று மீண்டும் அதே பகுத்தறிவு உச்சம் பெறுகின்றது. இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களிலேயே, இல்லாவிட்டால் மனிதனின் உணர்வுகளிலேயே, இல்லை மனிதனின் சிந்தனைகளிலேயே இயற்கை தனது வட்டத்தைக் காட்டிவிட்டது இல்லையா?

Tuesday, March 24, 2009

உலகின் வேகமாக எடுக்க‍ப்ப‍ட்ட‍ புகைப்ப‍டங்கள்

3 comments
இன்னிக்கு என்னோட Template ஐ மாத்தினதுக்காக‌ ஏதாவது பதிவு போடணும் என்று தோணிச்சுது. கையில சரக்கு ஒண்ணும் இல்லாத்தால Mailல இருந்த படங்களை எடுத்துப் போட்டுச் சமாளிச்சாச்சு. இந்தப் படங்களை குறித்த‍ Timing இல் எடுத்த‍து புகைப்ப‍டக் கலைஞரின் அதிஸ்டமா? இல்லை திறமையா? சத்திய‌மா எனக்குத் தெரியல. தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க. அப்ப‍டியே என்னோட புது Template எப்ப‍டி இருக்குன்னும் சொல்லிடுங்க.










Sunday, March 22, 2009

பயமுறுத்தும் பதிவுலகம், பதிவர்கள் ஜாக்கிரதை !

11 comments


சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பமான பதிவிடும் கலாச்சாரத்தின் வளற்சி அபரிமிதமானது. எழுத்தாற்றல் மிக்க பலர் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு களமாகவே பதிவுலகம் இருந்து வருகிறது. இந்தப் பதிவுகளை வாசிப்பதற்கும் ஆர்வமானோர் பலரால் இவை சாத்தியமாகவே இருந்து வருகின்றது. உண்மையிலேயே இது ஒரு வரப்பிரசாதம். செலவற்ற மூலதனம்.

இன்று பல பிரபல கம்பனிகளின் இணையப் பக்கங்களிலும் Blog என்ற ஒரு இணைப்புக் காணப்படும். அவ்வாறு காணப்படாத கம்பனிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்குக் காரணம் இணையப் பக்கங்களில் உலவுவதைவிட பதிவுப்பக்கங்களில் உலவுவது வாடிக்கையாளர்களுக்குப் பிடித்துப் போகின்றது. அதன் பயனாக வியாபாரம் அதிகரிப்பதாகக் கூறுகின்றன கம்பனிகள்.

இணையத்தில் ஏற்படும் Web Traffic எனப்படும் இணைய நெரிசலானது Blog கலாச்சாரத்தால் பலமடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர். கூகுலும் இந்த இணைய நெரிசலை அவதானித்துத்தான் தளங்களில் விளம்பரங்களை ஒழுங்கமைப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இந்தப் பதிவிடும் கலாச்சாரமும் ஒரு மாய உலகம் ( Virtual world ) என்றே கூறுகின்றனர். பதிவிடுவதால் ஏற்படும் பிரபலத்தாலும், அதற்கு வரும் பின்னூட்டங்கள், ஹிட்ஸ், Traffic என்பவற்றாலும் கவரப்பட்டு பதிவிடுவோர் பலர் அதனுடனேயே அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும் இதனால் அவர்களது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். பதிவகளை வெறுமனே வாசிப்போர் கூட அதனால் ஏற்படும் சுவாரசியத்தால் இதற்குத் தப்பவில்லை.

இதைப்பற்றிப் பிரபல பதிவர் ஒருவரிடம் வினவிய போது பதிவிடத் தொடங்குபவர்களும், புதிதாகப் பிரபலமானவர்களும் இப்படியான சிக்கல்களில் மாட்டுவது அதிகம்தான். ஆனால் எல்லாம் பதிவுலகில் சிறிதுகாலம் பழகப்பழகச் சரியாகிவிடும் என்றார்.

எப்படியோ, நன்மை இருக்கும் எந்த இடத்திலும் சிறிது தீமையும் இருப்பதுதான் உலக நியதி. மன அடக்கத்தோடு புகழ்ச்சிகட்கு அடிமையாகாது இருக்கின் பதிவுலகம் நல்லதொரு பாடசாலை!.

Friday, March 20, 2009

இளமை விகடனில் என் பதிவு ??!!

26 comments

நாள் முழுக்க இருந்து யோசித்து, பதிவெழுதி, அதை இட்டால் ஒருபயல் கண்டுக்கமாட்டாங்க. நேற்று நண்பன் ஒருவன் அனுப்பிய மின்னஞ்சலில் கிடைத்த படங்கள் ரொம்பப் பிடித்துப்போகவே அப்படியே எடுத்து ஒரு பதிவாக இட்டுவிட்டேன். இரவு பார்த்தால் நண்பன் ஒருவர் தொலைபேசி, எனது அந்தப் பதிவிற்கு இளமை விகடன் தளத்தில் இணைப்புக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியதுடன் அதன் Screen shot இனையும் அனுப்பிவைத்தான். அவற்றைப் பார்க்கும் பாக்கியம் இன்று காலைதான் எனக்குக் கிடைத்தது.


சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்


இந்த வாரம் மொக்கைப் பதிவுகள் வாரம்போல் இருக்கிறது. நேற்றுத்தான் லோசன் அண்ணா புலம்பிய பதிவு அதிக ஹிட்ஸ் வாங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இப்போது என்னுடையதும்!. இனிமேல் ‘மொக்கை’ என்ற வார்த்தையை தமிழ் அகராதியிலிருந்து (?????) தூக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறேன்.


இனிமேல் நாங்களும் ‘விகடன் புகழ்’ என்று போடலாமில்ல!

பி.கு :- இதைக் கேள்விப்பட்ட நண்பர் ‘கு.ப’ உடனடியாக ரசிகர் மன்றம் தொடங்கும் வேலையில் ஈடுபட்டாலும், எனது தலையீட்டால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே அதில் இணைவதாக உத்தேசித்தவர்கள் நடிகர் ரித்தீசின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து நாலு காசு சம்பாதிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.


Thursday, March 19, 2009

சூரியனும் இனி மனிதனின் உள்ளங்கையில்!

2 comments



சூரியன் உதிக்கும் நேரமும், மறையும் நேரமும் அதைப் பார்ப்பதே அழகுதான். அதை இங்கே எப்படியெல்லாம் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் பாருங்கள்? இதுக்கெல்லாம் ஒக்காந்து யோசிப்பாங்களோ?











Tuesday, March 17, 2009

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த, உலகக் கிண்ண வெற்றியின் 13ம் ஆண்டு.

5 comments




17/03/1996. எனக்கு ஒன்பது வயது ஆவதற்கு ஓரிரு மாதங்களே பாக்கியிருந்தன. அப்போது நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறையில் தங்கியிருந்த காலம். பாடசாலைகள் எல்லாம் இடம்பெயர்ந்தோரால் நிறைந்திருந்தன. படிப்பு இல்லை. ஆகையால் கிரிக்கெட்தான் ஏறத்தாள முழுநேர வேலை என்றாகிப்போனது. எனக்கும் வேறு பொழுதுபோக்கில்லை. பெரிய அண்ணாமார் கிரிக்கெட் ஆடும்போது வெளியில் சென்று விழும் பந்துகளைப் பொறுக்குவதுதான் எனது வேலை. அதற்காகவே அணியில் பதினேழாவது அல்லது பதினெட்டாவது வீரனாக இடம்பிடித்துவிடுவேன்.

அக்காலத்தில் ஒட்டுமொத்த யாழ்ப்பாணமுமே தென்மராட்சி, வடமராட்சிக்குள் சுருங்கிப்போனதால் எங்கும் சன நெரிசல். அதனால் எமக்கும் அணிக்கு இருபது பேர் கொண்ட கிரிக்கெட் போட்டிதான். எனது ஒன்றுவிட்ட அண்ணாவின் வீட்டின் பின்புறம் இருந்த தரிசு நிலம்தான் எங்கள் மைதானம்.


அன்று 17/03/1996. இலங்கை அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி. எனக்கோ இலங்கையும் தெரியாது, ஆஸ்திரேலியாவும் தெரியாது. என்னோடு விளையாடும் அண்ணாமார் எல்லோரும் சேர்ந்து காசு சேர்த்து ஒரு ஜெனரேட்டர் பிடித்து, பக்கத்து ரியூசன் கொட்டிலின் ஒரு வகுப்பறையில் மேட்ச் பார்க்க ஆயத்தமானார்கள். அது ஆஸ்திரேலியாவில் நடந்ததால் எமக்கு முழு இரவுப் போட்டியாக அமைந்திருந்தது என நினைக்கின்றேன். எனது அறிவுக்கு எட்டியவரை அதுதான் நான் T.V யில் பார்த்த முதல் கிரிக்கெட் மேட்ச்.


நீல உடை அணிந்தவர்கள்தான் இலங்கை அணியாம். மஞ்சள் உடையினர் ஆஸ்திரேலியாவாம். அண்ணாதான் சொல்லித்தந்தார். நாங்கள் இலங்கை ரண் எடுக்கும்போது கை தட்ட வேண்டுமாம். அண்ணாதான் சொன்னார். அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் கைதட்டிக் கூச்சல் போட்டுவிட்டு என்னை அறியாமலேயே தூங்கிப்போனேன். திடீரென யாரோ தட்டி எழுப்பினார்கள். அந்தக் கொட்டில் முழுவதும் ஒரே கூச்சலாக இருந்தது. இலங்கை உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம். நித்திரைக் கலக்கத்தில் பாதிதான் புரிந்தது. மறுபடியும் தூங்கிவிட்டேன். எப்படி வீடு வந்தேன் என எனக்கே தெரியாது. அடுத்தநாள் அப்பாதான் கூட்டிவந்தார் எனக் கூறும்வரை.


இன்று அதன் பதின் மூன்றாம் ஆண்டு நிறைவாம். இப்போதும் கொண்டாடுவதற்கு அதுதான். அதற்குப்பிறகு ஒன்றுமில்லை. அதைப்பற்றித்தான் இன்றுவரை பேச்சும்!.

நேற்று முன்தினம் நான் பார்த்த இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியே ஞாபகம் இல்லாத போது ஒன்பது வயதுகூட ஆகாத நிலையில் பார்த்த அந்தப் போட்டி எவ்வாறு நினைவில் நிற்கிறது என எனக்குப் புரியவில்லை.

இடம்பெயர்ந்த காலத்து வலியின் வேதனைகளோடு இந்த நினைவுகளும் சேர்ந்து விட்டதாலா?, இல்லை ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்து ஊர்களிலிருந்து வந்த மக்களுடன் ஒன்றாக இருந்த நினைவுகளாலா?, இல்லை நான் T.V யில் பார்த்த முதல் கிரிக்கெட் மேட்ச் என்பதாலா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கூறிய அனைத்துமே என் ஆழ்மனத்து நினைவுகள் என்பதுமட்டும் தெரியும்.

1996 உலகக் கிண்ணக் கிரிக்கெட்டை இலங்கை வென்ற 13ம் ஆண்டு நிறைவு நாள் இன்று. அதைப்பற்றித்தான் எழுத உட்கார்ந்தேன். ஆனால் பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்காய் முடிந்த கதையாக கடைசியில் இப்படி ஆகிவிட்டது.

Monday, March 16, 2009

எயர்டெல் விளம்பரத்தால் ஏமார்ந்தேன்!

9 comments



எயர்டெல்! பெயரைக் கேட்டவுடனேயே ஞாபகத்துக்கு வருவது அதன் விளம்பரங்கள்தான். ஒவ்வொரு விளம்பரமும் ஒரு கவிதை. அதன் விளம்பரங்களுக்கு இந்தியர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருக்கும் நானும், இன்னும் பலரும் அடிமை என்றுகூடச் சொல்லலாம்.

தமிழ்த் தொலைக்காட்சித்துறை பெரிதாக வழற்சியடையாத இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியத் தொலைக்காட்சிகள்தான் புகலிடம். இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளைக் காண்பதற்காகவே மாதம் அயிரம் ரூபாவரை செலவு செய்பவர்கள் இங்கு பலர். அதற்கு நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல.

அவ்வாறு இந்தியத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போது சிலசமயம் அதன் நிகழ்ச்சிகளைவிட அதில்வரும் விளம்பரங்கள் சுவாரசியம் மிகுந்ததாக இருந்துவிடும். அவ்வாறு நான் முதலில் ஈர்க்கப்பட்டது A.R.ரஹ்மான் வந்த எயர்டெல் விளம்பரத்தில்தான். அந்த விளம்பரமும், அதன் இசையும் காண்பவரைக் கட்டிப்போட்டு வைத்துவிடும். அதைத் தொடர்ந்து வந்த எயர்டெல்லின் விளம்பரங்களான தாத்தாவும் பேரனும் தொலைபேசியினூடு செஸ் விளையாடும் விளம்பரம், இந்திய, பாகிஸ்தான் சிறுவர்கள் முட்கம்பிகளுக்கிடையே காற்பந்து ஆடும் விளம்பரம், மற்றும் இப்போது காண்பிக்கப்படும் அந்தச் சிறுவன் தந்தையுடன் உரையாடும் விளம்பரம் போன்றவை மறக்க நினைத்தாலும் மறக்க முடியாதவை.

இவ்வாறு இந்திய எயர்டெல் விளம்பரங்களில் மூழ்கியிருந்த போதுதான் இலங்கையிலும் எயர்டெல் தனது சேவையை வளங்கப் போகிறது என்ற தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பத்தாவது நாள் அது தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டபோதும் அன்றே அதன் பரபரப்புத் தொடங்கிவிட்டது. இலங்கைத் தொலைக்காட்சிகளில் சாருக்கான் இலங்கையருக்குக் ஹலோ சொன்னார். இலங்கை கிரிக்கட் வீரர்குமார் சங்ககாரவும் தான் எயர்டெல்லுக்கு மாறிவிட்டதாகவும், அது மிகவும் சிம்பிளான பிளான் என்றும் கூறினார்.



இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரு எயர்டெல் முகவர் நிலையங்களுக்கு முன்னும் யாழ்ப்பாணத்துச் சங்கக் கடைகளில் நிற்கும் மக்கள் கூட்டத்தையெல்லாம் தொற்கடிக்கத்தக்கவாறு தமது இலக்கத்தை முன்பதிவு செய்யக் கியூ நின்றது கொழும்பிற்குப் புதிது.



நானும் இந்தப் பரபரப்பால் ஈர்க்கப்பட்டும், ஏற்கனவே எயர்டெல் தனது இந்திய விளம்பரங்களால் ஏற்படுத்திய தாக்கத்தாலும் கம்பஸ்சில் ஓசியாகக் கிடைத்த சிம் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டேன். ( நாமதான் ஓசி என்றால் Oil லும் குடிப்பவர்களாச்சே!).

எயர்டெல் தனது சேவையை ஆரம்பித்தது. கட்டணங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு குறைவாகவே இருந்தது. பரவாயில்லை என பழைய சிம்மை கழற்றிவிட்டு எயர்டெல் சிம்மை செருகினேன்.

Coverage எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதில் அழைப்பு எடுப்பதற்குள் சம்பந்தப் பட்டவரை நேரிலேயே சந்தித்துவிட்டு வந்துவிடலாம் போல் குதிரைக் கொம்பாக இருந்தது. Incoming முற்றிலும் இலவசம் என்றார்கள். ஆனால் அது வந்தால்தானே? யாரைக் கேட்டாலும் எனக்கு அழைப்பு எடுக்க முடியவில்லை என்றார்கள். கடுப்பானது எனக்கு. மறுபடியும் இப்போது பழைய சிம்தான். எயர்ரெல் என்னை ஏமாற்றிவிட்டது. என்னை மட்டுமல்ல, இன்னும் பல இலங்கையர்களையும்தான்.

ஒருவேளை அதன்மீது வைக்கப்பட்ட அளவுக்கதிகமான எதிர்பார்ப்பால் நிகழ்ந்த ஏமாற்றமாக இது இருக்கலாம். ஆனால் இந்தியாவின் சிறந்த ஒரு நிறுவனத்திடம் இப்படியான சேவைக்குறைபாடுகள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. காலப்போக்கில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்றாலும், மக்களின் ஆதரவை அது சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இனி அது ஆரம்பிக்கும்போதிருந்த ஆதரவைப் பெற கடினமாக உழைக்கவேண்டும். இன்னும் சிறிது காலம் எடுத்திருந்தாலும் அது தனது வலையமைப்பை சீராக்கிவிட்டு தொடங்கியிருந்தால் இன்று இலங்கையின் முன்னணி வலையமைப்பாக இருந்திருக்கும். இன்று மூன்றாமிடத்துக்கு முட்டிமோதிக்கொண்டுள்ளது. எயர்ரெல் காற்றுள்ள போது தூற்றிக்கோள்ளத் தவறிவிட்டது.

முடிக்கமுதல் ஒரு பஞ்ச்…….

எயர்டெல்,… Add எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா Outgoing க்குத்தான் Antenna பிடிக்கவேண்டியிருக்கு…..

இந்த பஞ்ச்சை எனது நண்பனான கு.ப விடம் கூறி எப்ப‍டி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் outgoing எல்லாம் நமக்குச் சரிவராது. நான் வேணா missed callஎன்று போடலாமா என்று கேட்டார்.

இது எப்படியிருக்கு?


Friday, March 13, 2009

பஸ்சில் பயணிக்கும் நாகரீக நங்கையர் ( ஆண்களுக்கு மட்டும் )

19 comments


பஸ்சில பயணம் செய்யிறது என்றாலே சுவாரசியத்துக்குக் குறைவிருக்காது. எனக்கோ நாள் ஒன்றின்கு இரண்டு மணி நேரம் பஸ்சில் பயணிக்கும் பாக்கியம். கேட்கவா வேண்டும்? தினமும் விதம் விதமா, தினுசு தினுசா, ரகம் ரகமா….. பார்க்கும் பாக்கியம் ( ரோட்டில போற வாகனங்களைத்தான் ). ஆனாஇன்றைக்குத்தான் இப்படி ஒரு பதிவு இட வேண்டும் என்ற ஐடியா வந்தது. இதற்குக் காரணமாக இருந்த, முந்தநாள் முன் சீட்டில் இருந்த அக்காவிற்கு ( அப்படித்தான் நினைத்தேன். பின்னர்தான் அது ஆன்டி என்று தெரிந்தது) நன்றிகள்.

பொதுவா பொம்பிளைங்க பலவிதமா ஸ்டைல் பண்ணிட்டு வருவாங்க. ஆனாஅதையெல்லாம் பாக்கிற ஆளில்லை நான் (நம்பித்தான் ஆகணும்). அதையும்மீறிக் கண்ணில பட்ட ஸ்டைல் பற்றித்தான் பார்ப்போம்.


  • ஸ்டைல் 1

வேலைக்குப் போற அவசரத்துல தலையைக் கட்ட மறந்துபோய், எண்ணெய் கூடவைக்காமல், பரட்டையா, செம்பட்டை நிறமா மாறிப்போன தலைமுடியோடவருவாங்க கொஞ்சப் பெண்கள் ( அது Straight பண்ணி, Colour பண்ணின Hair ஆமுங்கோ ). Averageஆ நிமிசத்துக்கு ஏழு தடவை தலையைக் கோதிக்கிட்டேஇருப்பாங்க ( நான் எண்ணலீங்கொ, ஒரு குத்துமதிப்புத்தான் ). அப்படி வாறவங்கஇருக்கிற சீட்டுக்குப் பின் சீட்டில இருக்கவே எல்லாரும் பயப்படுவாங்க. இருந்துட்டா பஸ் ஓடுற ஸ்பீடுல மயிர் எல்லாம் பறந்து பின் சீட்டிலஇருக்கிறவங்க மூக்கைப் பதம் பார்த்து அவங்களுக்கு அன்னிக்குஜலதோசம்தான். அப்படிப்பட்டவங்க கலரிங் கரையாம இருக்கவும், Straight பண்ணின Hair குலையாம இருக்கவும் அடிக்கடி தலையைக் கழுவமாட்டாங்களாம். ஏதாவது சென்ட் வேற தலைக்கு அடிச்சிருப்பாங்களாம். ரெண்டுவாசமும் சேர்ந்து மயிர் மூக்குக்க போனவங்களால மூணு நாளைக்கு மூச்சேவிடமுடியாதாம் ( தகவல் உபயம் – பக்கத்து சீட் அங்கிள் ).


  • ஸ்டைல் 2

ஊரில பொம்பிளைங்க கிணத்துல இல்லைன்னா ஆத்துல குளிக்கிறப்ப சீலையைநெஞ்சுக்குக் குறுக்காக் கட்டியிருப்பாங்களே, அதே ஸ்டைல்ல ட்றஸ் பண்ணிட்டுவருவாங்க கொஞ்சப்பேர் ( அந்தக் கருமத்துண்ட பெயர் எனக்குத் தெரியல. யாராவது தெரிஞ்சவங்க பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா ). அப்படிப்பட்டவங்கயாராவது வந்தா உடனேயே சீட் கிடைச்சுடும்( பொம்பிளைங்கன்னு அவ்வளவுமரியாதை! ). சீட் கொடுத்தவங்க பக்கத்துலயே நின்னுக்குவாங்க (?!). அப்படிவாறவங்களும் ட்றஸ் இருக்கா இல்லை கழன்று விழுந்திரிச்சா என்று அடிக்கடிகுனிஞ்சு பார்த்துக்கொண்டே வருவாங்க(?) ( அலேட்டாத்தாம்பா இருக்காங்க ). இவங்க பக்கத்துல இருந்திடக் கூடாது. அப்படியே திரும்பி எங்களையும் என்னபண்ணுறமுன்னு ஒரு பார்வை பாப்பாங்க. ஆனா எல்லாத்தையும் மேலஒருத்தன் பாத்திட்டிருக்கான்னு மறந்துடுவாங்க ( ஆண்டவனைத்தான்சொல்றனுங்கோ ).


  • ஸ்டைல் 3

மாரியாத்தா கோயில்ல கூழ் ஊத்துறப்ப பொய்க்கால் குதிரை ஆடுவாங்களே, அதே மாதிரி செருப்பின்ட குதியில லைட் போஸ்ட்டைக் கட்டிக்கொண்டுவருவாங்க கொஞ்சப்பேர் ( ஹைஹீல்சாமுங்கோ). அதுன்ட நுணிகூட ரொம்பஆ இருக்கும். அவங்க எல்லாம் ஏறின உடனே யாராவது சீட் கொடுத்துட்டாச்சரி, இல்லையின்னா அன்னிக்கு அவங்க பக்கத்துல நின்னுக்கிட்டு ட்ராவல்பண்ணுறவங்க பாடு பரிதாபம்தான். பஸ் குலுக்குற குலுக்கல்ல பொய்க்கால்குதிரை எல்லாம் தோத்துப்போற மாதிரி ஆடுவாங்க. அப்பப்ப காலையும் தூக்கித்தூக்கி வைக்கிறதால பக்கத்துல நிக்கிறவங்க இரும்புல பூட்ஸ் போட்டிருந்தாச்சரி, இல்லையின்னா ஹீல்சுக்கு இரையாக வேண்டியதுதான். இதுக்குத்தான்லேடீசுக்கு சீட் கொடுக்கச் சொல்லி சொல்லுவாங்களோ?



இன்னும் கொஞ்ச ஸ்டைல் பாக்கியிருக்கு. ஆனா எதுக்கு ஒட்டுமொத்தபெண்களோட சாபத்தை ஒரே நாள்ள வாரிக் கொட்டிக்கணும். அதப் பார்ட் 2 லபாத்துக்கலாம்.


Tuesday, March 10, 2009

21.12.2012 இல் உலகம் அழியப்போகிறதாம்!

25 comments




முதலில் இதைப்பற்றி நண்பன் ஒருவன் Campus இன் மதியநேர அரட்டையின்போது சொன்னபோதுதான் அறிந்தேன். பின் தொடர்ந்துவந்த நாட்களிலும் அவன் இதைப்பற்றிப் பேசுவதும், அதைத் தொடர்ந்து வரும் விவாதங்களுமாக இருந்ததே தவிர நாங்கள் யாரும் அதைக் கணக்கிலும் எடுக்கவில்லை. நம்பவும் இல்லை. நேற்றுத்தான் Campus இன் Assignment ஒன்றுக்காக சில கோப்புக்களைப் பதிவிறக்கம் செய்யக் கட்டளையைப் பிறப்பித்துவிட்டு Facebook இல் மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அவனின் Profile picture இனைப் பார்த்தேன். அதை Doom Day 2012 என மாற்றிவிட்டிருந்தான். சரி என்னதான் வருகிறது எனப் பார்ப்போமே என Google இல் Doom Day 2012 எனத் தேட முனைந்தேன்.


அவனது Profile picture.

ஏதோ ஒருசில முடிவுகளை எதிர்பார்த்த எனக்கோ ஆச்சரியம். இருந்து அத்தனையும் பார்த்திருந்தால் இன்னும் முடிந்திருக்காது. இந்த விடயத்தை நம்புகிறவர்கள் ஒருபுறமும், நம்பாதவர்கள் மறுபுறமுமாக போட்டுப் புரட்டி எடுத்திருந்தார்கள். சில Website களில் 21.12.2012 இற்கான Countdown வேறு.Youtube இலும் வேறு Video க்கள் மிரட்டுகின்றன. எப்படித்தான் அவ்வளவு அறுதியாக உலகம் அழியப்போவதாகக் கூறுகின்றார்கள்?

இதற்கு முதலாவது ஆதாரமாக மாயனின் கலண்டரைக் குறிப்பிடுகிறார்கள். இது கி.மு.3113ம் ஆண்டு தொடங்கப்பட்டதாம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் இன்றய விஞ்ஞான முறையினாற் கண்டறியப் பட்டவற்றோடு 94% ஒத்துப் போகிறதாம். அத்துடன் நாம் இன்று பயன்படுத்தும் நேரத்திற்கும், மாயனின் கலண்டரிலுள்ள நேரத்திற்கும் வித்தியாசம் 30 செக்கன் மட்டும்தானாம். அந்தக் கலண்டரின் இறுதித் திகதி 21.12.2012 ஆம். நீண்ட கால ஓட்டமுடைய கலண்டர் உலகத்தின் அழிவினோடுதான் முடிவடைகிறது என்கிறார்கள்.

இரண்டாவதாக இயற்கையில் எல்லாமே ஒரு வட்டப் பாதையிற்றான் நடக்கின்றதாம். சூரியன் காலும் சக்தியும் அப்படித்தான். 2012ம் ஆண்டின் பிற்பகுதியில் சூரியன் பூமியை நோக்கி அதிக சக்தியைக் காலப் போகிறதாம். அது செயற்கைக்கோள்கள் அனைத்தையுமே செயலிளக்கச் செய்யும் அளவிற்கு வலிமையாக இருக்குமாம் என்கிறார்கள் வானியல் நிபுனர்கள்.

மூன்றாவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகளால் பூமி தோன்றிய விதத்தைக் கண்டறியப் பரிசோதனை ஒன்று செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டப்பட்டு அதிவேகமாக மூலக் கூறுகளை மோதவிடப் போகிறார்கள். இது புவியின் உட்கட்டமைப்பையே பாதித்து புவியை அழிக்கும் அளவிற்கு சக்தியை வெளிவிடும் என பல விஞ்ஞானிகள் தெரிவித்துவருகின்றனர்.இதுவும் 2012 இன் பிற்பகுதியிலேயே நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நான்காவதாக பைபிளில் 2012ம் ஆண்டை Year of Armageddon எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையிலான இறுதி யுத்தம் நடக்கப்போகும் ஆண்டு என கூறப்பட்டுள்ளது. சில சீன சமய நூல்களிலும், எகிப்தியரின் நூல்களிலும் கூட இதைப்பற்றிக் கூறப்பட்டுள்ளதாம்.

ஐந்தாவதாக உலகின் மிகப்பெரிய எரிமலையான அமரிக்காவின் Yellowstone தேசியபூங்கா அமைந்துள்ள எரிமலை 650,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்குமாம். அடுத்த வெடிப்பு 2012ம் ஆண்டாக இருக்கலாம் என்கிறார்கள். இது இப்போதே சாம்பலைக் கக்கத் தொடங்கிவிட்டதாம்.


எரிமலையின் வெப்பத்தால் வற்றிவரும் Yellowstone தேசியபூங்காவிலுள்ள ஏரி

ஆறாவதாக எண்கணிதவியலாளர்களின் கணிப்பின்படி 2012ம் ஆண்டு பாரிய மாற்றம் ஒன்று நிகழவிருப்பதாகவும், பாரிய உயிர்ச் சேதங்கள் தவிர்க்கமுடியாதது எனவும் கூறுகின்றனர்.

ஏழாவதாக புவியைச் சுற்றிக் காந்தப்புலம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அது புவியின் வட – தென் முனைவுகட்கிடையே உள்ளது. ஒவ்வொரு 750,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இம்முனைவுகள் இடம்மாற்றிக் கொள்ளும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 750,000ம் ஆண்டைக் கடந்து இன்றோடு 30,000 ஆண்டுகள் ஆகியும் அது நிகழவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இம் முனைவுகள் 20 – 30 km இனால் நகர்கின்றதாம். அத்துடன் நகரும் வேகமும் அதிகரித்து வருகின்றதாம். இவ்வாறு ஒரு எல்லையைத் தாண்டி நகரும்பொது புவியின் காந்தப்புலம் முற்றாக அற்றுப் போவதோடு அது மீள உருவாக 100 ஆண்டுகள் வரைகூட அகலாமாம். இவ்வாறு காந்தப்புலம் அற்றுப்போனால் கழியூதாக் கதிர்கள் (UV) இலகுவில் ஊடுருவி தோல் வியாதிகளை ஏற்படுத்துவதுடன் அதை மாற்றுவதும் கடினமாக இருக்குமாம். அத்துடன் காந்தப்புலம் இல்லாதவிடத்து ரேடியோ அலைத் தொடர்பாடலும் செயலிழக்குமாம்.

இதைப்பற்றி நாசா விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? 2012ம் ஆண்டு டிசம்பரில் பூமி, சூரியன் மற்றும் நமது பால்வீதியின் மையமான கரும்புள்ளி ஆகியன ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் வருகிறதாம். அப்போது பூமியின் காலயிலையில் பாரிய மாற்றம் நிகழுமாம். இந்த மாற்றம் எந்த அளவிற்கு இருக்கும் என எதிர்வு கூற முடியாதுள்ளதாம். அத்துடன் பூமியின் பௌதிகக் கட்டமைப்பே மாறலாம் என்கிறார்கள்.


நாசா வெளியிட்ட அந்தக் கருந்துளையின் புகைப்படம்.

இவை அனைத்தும் நான் இணையத்திற் சுட்டவை. எதற்குமே இணைப்புக் கொடுக்கவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் Doom day 2012 என Google இல் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறுதான் 2000ஆம் ஆண்டும் உலகம் அழியப் போகிறது என்றார்கள். இப்போது 2012. இதுவரை மனிதன் எதிர்வுகூறிய எந்த ஒரு இயற்கை அழிவும் நடந்ததும் இல்லை, நடந்த சுனாமி போன்ற இயற்கை அழிவுகளை மனிதன் எதிர்வு கூறவும் இல்லை.

இதை நம்பாதவர்கள் என்பக்கம் நில்லுங்கள். நம்புபவர்களில் ஆத்திகர்கள் கடவுள்மீதும், நாத்திகர்கள், நீங்கள் நம்பும் மனிதர்களாகிய விஞ்ஞானிகள் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாத போது 2012 எல்லாம் எதற்கு? எதுவாக இருந்தாலும் 2012 இல் தெரிந்துவிடப் போகிறது இல்லையா?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy