போல் ஒக்டோபசானந்தா. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முழுவதுமே தனது துல்லியமான கணிப்புகளால் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்து உலகத்தையே தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்த மகான். மனித குலம் முழுவதற்கும் எதிர்காலத்தை துல்லியமாகக் கணித்துக் கொடுத்து, இறைஞானம் தந்தருளவெனவே அவதரித்திருக்கும் அவதார புருஷர். மனதைக் கொண்டும், அதன் தர்க்கங்கள், கருத்துகள், பழைய நம்பிக்கைகள் வாத பிரதிவாதங்களைக் கொண்டும் இவரைப் புரிந்து கொள்ள முடியாது. அனுபவித்து ஆராதிக்க வேண்டிய அதிசயம் இவர்.
எங்கள் போல் ஒக்டோபசானந்தாவின் உயிர் மூச்சு ஒன்றேதான். போட்டிகளின் முடிவுகளை முன்னரே கணித்துச்சொல்லி, அதன்மூலம் போட்டியின் விறுவிறுப்பு நேரத்தில் ஏற்படும் தேவையற்ற டென்ஷனைத் தவிர்ப்பதும், நகத்தைக் கடித்து அதனால் ஏற்படும் கிருமித்தொற்றைத் தவிர்ப்பதும், தனது பக்தர்களை நோயற்ற வாழ்வு வாழ வழிசமைப்பதும்தான்.
இதோ, போல் ஒக்டோபசானந்தாவின் அற்புதங்களுக்கு ஒருசோறு பதமாக பதிவர் லோஷனின் கடிதம்.
என் பெயர் லோஷன். எனது விளையாட்டுப் பதிவுகளாலும், அது குறித்தான எதிர்வுகூறல்களாலும் பதிவுலகில் எனக்கென ஒரு தனித்துவமான முத்திரை பதித்தவன். எனது எதிர்வுகூறல்கள் எல்லாம் எதிர்மறையான முடிவையே தந்திருந்தாலும், எனது தொடர்ச்சியான வாசகர்களுக்கு அதுகுறித்துத் தெரிந்திருந்ததால் எனது வாடிக்கையாளர்களுக்கு குறையேதும் இருக்கவில்லை. இப்படியாக வெற்றிகரமான எனது எதிர்மறை எதிர்வுகூறல்களாக
போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதே பாணியை தொடர்ந்தும் கால்பந்தாட்ட உரக்ககிண்ணப் போட்டிகளிலும் பயன்படுத்தி, காலிறுதி வரை கலக்கியே வந்திருக்கிறேன். அனைவருமே எதிர்பார்த்த ஆர்ஜென்டீனா அணிக்கு எனது அமோக ஆதரவை அள்ளி வழங்கி, காலிறுதியோடு அதையும் மோசமாகக் கலைத்தவனும் நான்தான் என்றுதான் கடைசிவரை எண்ணிக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் போல் ஒக்டோபசானந்தா சுவாமிகளைப்பற்றி எனக்கு அறியக்கிடைத்தது. அவரது உலகப்புகழோடு போட்டியிட்டு உலகப்புகழ் பெறுவதற்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் எனது வலைப்பதிவுகளில் சுவாமிகள் ஆதரவளித்த அணிக்கே எனது ஆதரவையும் வெளிப்படையாக அறிவித்து, அவற்றைத் தோல்வியடையச் செய்ய நான் செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்.
நேற்றய இறுதிப்போட்டியில் நான் ஆதரவளித்த ஸ்பெயின் அணியே நான் சற்றும் எதிர்பாராதவகையில் கோப்பையைத்தூக்கி, எனது பலகோடிக் கனவுக்கு ஆப்படித்தது. அப்போதுதான் போல் ஒக்டோபசானந்த சுவாமிகளின் மகிமையை உணர்ந்துகொண்டேன். எனது அறிவுக்கண்ணைத் திறந்துவைத்த போல் ஒக்டோபசானந்த சுவாமிகளுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
இறுதியாக சுவாமிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவுசெய்து கிரிக்கெட் பற்றியும் எதிர்வுகூறி, உங்கள் பக்தனின் இமேஜை டேமேஜ் பண்ணிவிடாதீர்கள்.
போல் ஒக்டோபசானந்தா அடிப்பொடி
LOSHAN
http://arvloshan.com/