Monday, December 28, 2009

சரக்கு வித் சைடிஸ் – 2009

11 comments


இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிராச்சரங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அதையெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? நானும் என்பங்குக்கு எனது பிராச்சரத்தையும் செய்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். தமிழ்மண விருதுக்காக நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவில் பதிவு எழுதிப்பார் என்ற பதிவையும், சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் இயற்கையின் வட்டமும், மதங்களும், மனிதர்களும் என்ற பதிவையும் நாமினேட் செய்திருக்கிறேன். நமக்குள்ள எதுக்கு வாக்குறுதி எல்லாம் குடுத்துகிட்டு? ஏதோ பாத்து செஞ்சிடுங்க மக்கா

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சுனாமியின் ஐந்தாவது நினைவுதினம் வந்து போய்விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத அனர்த்தம் அது. சுனாமி வந்தவுடன் ஏதோ கடல் ஊருக்குள் புகுந்துவிட்டதாம் என்று டியூசனை மூடிவிட்டார்கள். அப்பாடா என்று வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்தபிறகுதான் தெரிந்தது நிலமையின் உச்சம். அதன்பிறகு நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றபோது கண்ட காட்சிகள் மறக்கவே முடியாதவை. பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து செய்த முதல் நல்ல காரியம் எனக்குத் தெரிந்து நிவாரணப்பணிக்குச் சென்றதுதான். ஆனால் அன்று நாங்கள் சென்ற பகுதிகள் எல்லாம் இன்று அதைவிட மோசமாக அழிவடைந்துவிட்டன. இயற்கை எவ்வளவோ பரவாயில்லை இல்லையா?

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கிரிக்கெட்டில் அண்மையில் ரசித்த ஒரு விடயம் அவுஸ்திரேலிய வீரர் வட்சனின் ஆட்டமிழப்பு. பொதுவாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கும்போது அவர் ஆட்டமிழந்தாரா இல்லையா என்பதற்கே மூன்றாவது நடுவரின் உதவி நாடப்படும். ஆனால் இங்கே வட்சன், ஹட்டிச் இருவரில் யார் ஆட்டமிழந்தார் என்று அறிய மூன்றாவது நடுவரின் உதவி நாடப்பட்டதும், இறுதியில் ஒரு நொடிக்கும் குறைவான நேர வித்தியாசத்தால் ஹட்டிச் முந்திக்கொள்ள வட்சன் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும்தான் சிறப்பு. அந்தக் காட்சியை இங்கே சென்று பாருங்கள். கிரிக்கெட்டில் பலகாலங்களுக்கு பேசப்படப்போகும் விடயம் இது.

கடுப்பாக்கிய விடயம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கைவிடப்பட்ட நேற்றய போட்டி. இந்திய ஆடுகளங்கள் ஒன்றில் தட்டையாக, அல்லது இந்தமாதிரி அபாயகரமாக இருப்பது விளையாட்டின் சுவாரசியத்தையே குறைத்துவிடுகிறன.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இணையத்தில் படித்த செய்திகளில் கோபப்படுத்திய செய்தி ருச்சிகா கிர்கோத்திரா என்கிற பெண்ணின் மீது பாலியல் வன்முறை செய்த ரத்தோர் என்றவனுக்கு, 19 வருடங்களின் பின்னர் ஆறுமாத சிறையும், ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, உடனே பெயிலும் கொடுத்த நீதிபதிகள்(?) பற்றியது. 14 வயதுப்பெண்ணைக் கற்பழித்தவனை 19 வருடங்கள் வெளியில் விட்டுவைத்த்தும் அல்லாது, கொடுக்கப்பட்ட கேவலமான தீர்ப்பு நீதித்துறையின் கேவலம். இப்போது எனது பார்வையில் அந்த நீதிபதிகளும் குற்றவாளிகளே. இந்தியச் செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், இன்னும் பேசப்படாத எத்தனையோ செய்திகள் இங்கேயும் கிடந்து உறுத்துகின்றன.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்த வருடத்தில் எனது இறுதிப் பதிவு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். எனவே இப்போதே சொல்லிவிடுகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஒரு வார்த்தையில்லாக் கவிதை - இரக்கம் 


Monday, December 21, 2009

பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு

12 comments


Wind turbines


காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள்.Kitegen

பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் இதற்குப் பயன்படுகிறது. இவ்விசிறிகள் உயரத்தில் தொடற்சியான காற்றுக்கு பட்டத்தைக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அதில் கம்பிகளின் மூலம் பட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகள் பட்டத்தின் உயரத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சுமார் 2000 மீட்டர் உயரம்வரை இவை பறக்கவிடப்படுகிறது.

இவ்வாறு பறக்கவிடப்பட்ட பட்டங்கள், அவை இணைக்கப்பட்டிருக்கும் தளத்திலுள்ள மின்பிறப்பாக்கியைச் சுழலச்செய்கின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.

இங்கே முக்கியமான விடயம், இவ்வாறு பறக்கவிடப்படும் பட்டங்களின் பறப்பை தரையிலிருந்தே கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாகும். இவ்வாறு கட்டுப்படுத்தி, பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் மாற்றிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது பறக்கவிடப்படும் பட்டங்கள் பறவைகளைப் பாதித்துவிடாது இருப்பதற்காக ரேடார் மூலம் பறவைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்டங்கள் பறக்கவிடப்படுவதுதான்.

இது காற்றாலைகளைப்போல அதிக இடத்தை அடைக்காது என்பதுடன் அதிக மின்சாரத்தினையும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்துவரும் மின்தேவைக்காக எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பித்து, சூழலையும் மாசாக்குவதைவிட இவ்வாறான கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே!

இதன் தொழிற்பாட்டைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.


Saturday, December 19, 2009

வேட்டைக்காரன், பதிவுலகம், இன்னபிற…

18 comments

வேட்டைக்காரன் விமர்சனங்கள் பலவற்றைப் படித்தபின்பும், வேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு வந்த விஜய் ரசிகராக இருக்கும் நண்பனைக் கேட்டுவிட்டும் முடிவெடுத்துவிட்டேன். படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் போவதில்லை என்று. வரும் பொங்கலுக்கோ, இல்லை மாட்டுப் பொங்கலுக்கோ சன் டீவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். படத்தைப்பார்த்து, விமர்சனம் எழுதி என்னைக் காப்பாற்றிய அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றிகள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவு எழுதுவதால் அது வருங்காலத்தில் சோறு போடப்போவதில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்களை அடையாளம் தெரியாத இன்றய அவசர உலகத்தில் பதிவு எழுதிப் பிரபலம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. பின்னூட்டங்கள், ஓட்டுக்கள், ஹிட்ஸ் எல்லாவற்றையுமே அதிகமாகப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் இருக்கின்றன. ஆனால் பதிவு எழுதுவதால் கிடைக்கும் ஒரே பிரதிபலன் நண்பர்கள்தான். இப்படிக் கிடைக்கும் நண்பர்களுக்கிடையேயே ஆப்பு வைக்க யாராவது முகம்தெரியாதவர்கள் முயலும்போது ஆத்திரம்தான் வருகிறது.  இப்படிக் குறுக்கு வழிகளால் இவர்கள் சாதிக்க நினைப்பது எதனை என்றுதான் புரியவில்லை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

A9 வீதியினூடான யாழ்ப்பாணத்திற்கான பயணம் இலகுவாக்கப்பட்டிருக்கிறதாம். இதன் பின்னாலிருக்கும் அரசியல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கலாம். ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை 20000 ரூபா செலவுசெய்து வீட்டிற்குச் சென்று ஒருமாதம் இருந்துவிட்டு வரும் என்னைப்போன்றோருக்கு இது மகிழ்ச்சியான செய்திதானே? சனி, ஞாயிறோடு இரண்டு தினங்கள் கம்பஸ்சை கட் அடித்துவிட்டால் போதும். வீட்டுக்குச் சென்றுவந்துவிடலாம்.  இதற்கு அரசியல்களைக் கலந்து பின்னூட்டங்கள் வேண்டாமே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்த்து. இது தொடர்பாக பலரும் பதிவிட்டுவிட்டதால் இனிமேல் நானும் பதிவிடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால் இங்கே இடுகிறேன். சந்திப்பு தொடர்பாக அறிவித்தல்களை வெளியிட்ட திரட்டிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திற்குமே நன்றிகள். கலந்துகொண்ட பதிவர்கள் அனைவருக்குமே ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் நன்றிகள். அன்று ஏற்பாட்டு வேலைகள் சிலவற்றில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததால் கலந்துரையாடல்களில் கருத்துக்களைத் தெரிவிக்க முடியவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே முடிந்தது. இருந்தாலென்ன, இறுதியில் பதிவர்கள் நன்றிகூறி விடைபெறும்போது பெற்ற மகிழ்ச்சிக்கு இணையே இல்லையே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்தப் பதிவோடு எனது வலைத்தளத்தைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 150 ஆக மாறியுள்ளது. நன்றி நண்பர்களே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வழமையாக திங்கட்கிழமைகளில் வரும் சரக்கு வித் சைடிஸ் தான் இது. சிலபல காரணங்களுக்காக இன்று இடவேண்டி வந்துவிட்டதால் வேறு பெயரில்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

உண்மைக் காதல்

Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?

22 commentsகுழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பிடித்த நடிகராக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வலம்வந்த விஜய் இப்போது குழந்தைகளுக்கு விஜய்கிட்ட புடிச்சுக் குடுத்துடுவன் என்று வெருட்டி பெண்கள் சாப்பாடு ஊட்டும் நிலைக்கு வந்துவிட்டார் என்றால் அதற்கு காரணம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. விஜய் ஜோக்ஸ் என்ற பெயரில் எங்களுக்கும் கலகலப்பூட்டுகிறார் விஜய்.

வேட்டைக்காரனுக்கு வரும் எதிர்ப்பு என்ற பெயரிலான பிரச்சாரத்தையும், சன் குழுமத்தின் விளம்பரத்தையும் தாண்டி வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?1. வேட்டைக்காரன் வெற்றிபெறப்போகிறது என்று எழுதிவரும் பதிவர்கள் இனி சுறா வெற்றிபெறும் என்று எழுதத் தொடங்குவார்கள். விஜயை வறுக்கும் பதிவுகள் அதிகமாகும்.

2. விஜயின் ஐம்பதாவது படத்துக்கு தியேட்டரே கிடைக்காது.

3. பழைய படப் பெயர்களை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

4. ஜேம்ஸ் கமரூனின் அவதார் போன்ற படங்களை தவிர்த்து தமிழ்ப் படங்களைப் பார்க்கும் சாதாரண மக்கள் கூட வேறு மொழிப் படங்கள் மேல் காதல் கொள்வர்.

5. இயக்குனர் பாபு சிவனை யாருமே தேடமாட்டாரகள்.

6. எந்த மொக்கைப்படத்தையும் ஓடவைக்கலாம் என்ற சன் பிக்சர்சின் நினைப்புக்கு மரண அடி விழும்.

7. விஜய ஆன்டனி – விஜய் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள் என்பதுடன் அவர் இனி விஜய்க்கு இசையமைக்கவே வரமாட்டார்.

8. ஏற்கனவே படம் பாரக்காமல் விஜய் படத்துக்கு விமர்சனம் எழுதும் பதிவர்கள் குருவி பட விமர்சனத்தையே மீள்பதிவாக வேட்டைக்காரனுக்கும் இடுவார்கள்.

9. இந்தப் படக் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள்.

10. விஜய் – த்ரிஷா ஜோடியால் த்ரிஷா ஓரங்கட்டப்பட்டது போல அனுஷ்காவும் ஓரங்கட்டப்படலாம்.

11. Blonde Jokes, Sartharji Jokes போல தமிழருக்கென தனியான நகைச்சுவையாக விஜய் ஜோக்ஸ்  உருவாகலாம்.

12. வேட்டைக்காரன் ஓடும் என்று பதிவுபோட்டு ஹிட்ஸ் தேடிய பதிவர்களின் ஹிட்ஸ் குறையலாம்.

13. நம்ம சதீஷ்க்கு விஜயைப் பிடிக்காமல் போகலாம்.

14. .நான் இந்த பதிவு போட காரணமாக இருந்த சதீஷ் வேட்டைக்காரன் வென்றுவிட்டால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்

15. தியேட்டர் திரைகள் விஜய் ரசிகர்களால் கிழிக்கப்படலாம்.

16. படத்தைப் புறக்கணிப்போம் என்ற பெயரால் படத்துக்கு மறைமுக விளம்பரம் செய்யும் சிலர்??? இதை நீங்களே சொல்லுங்கள் அவர்கள் கதி என்னாகும்

17. இதைவிடக் கொடுமை, இனி விஜய் இப்படிப் படங்களில் நடிக்காது விடுவதால் எமக்கு பதிவிட விசயமே கிடைக்காது போகலாம்.
டிஸ்கி 1 – இந்தப்பதிவு சதீஷின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு அல்ல.

டிஸ்கி 2 – இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.Sunday, December 13, 2009

இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்

22 comments
இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு இன்று மாலை இரண்டு மணியளவில் ஆரம்பமாகி சுமார் அறுபது பதிவர்களின் நேரடிச்சமூகத்துடனும் மேலும் 20க்கும் மேற்பட்டோரின் இணைய த்தினூடான பார்வையிடலுடனும் மிக மிக வெற்றிகரமாக தேசிய கலைப்பேரவை மண்டபத்தில் நடை பெற்று முடிவடைந்தது.  இதுதொடர்பாக விரைவில் பதிவிடுகிறேன். இப்போது இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் உங்களுக்காக.Friday, December 11, 2009

பதிவுலக கிசுகிசுக்கள்

22 comments
இலங்கையின் பதிவர் சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருப்பதால் அதற்கான ஆயத்தங்களில் பதிவர்கள் மும்முரமாகிவிட்டார்கள். இவர்களை இரகசியமாமக் கண்காணித்ததில் கிடைத்த நம்பந்தகுந்த தகவல்கள் இவை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சென்ற பதிவர் சந்திப்பில் தான் சொன்ன மொக்கை ஜோக்குக்கே பலரும் சிரித்ததால் இம்முறையும் ஜோக் சொல்லவென ஆனந்தவிகடன், குமுதம், இருக்கிறம், ப்ளேபோய் போன்ற பத்திரிகைகளை மந்திப்பதிவர் படித்துவருவதாக அவரது கீர்த்தி அறிந்தோர் தெரிவிக்கின்றனர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கடல்கடந்து இருக்கும் பெண் பதிவரிடம் அடிக்கடி நோண்டி ஆகும் போண்டிப்பதிவர் இம்முறை பத்து ரூபாய்க்காக லோக்கலிலும் வம்பிழுத்துவிட்டதால் கவர்ச்சிப் பதிவரின் பின்னால் பதுங்கியிருக்க முடிவெடுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவர் சந்திப்புக்கு வருவோர் தன்னிடம் கேட்கப்போகும் கேள்வியை முன்னரே ஊகித்துவிட்ட பிரபல பதிவர் ஒருவர் எல்லாம் காற்றுச் செய்த கயமை என்று அறிக்கை விட்டுள்ளாராம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சமுதாயப்பொறுப்புடன் எழுதும் குட்டிப்பதிவர், பதிவர் சந்திப்புக்கு அனைவரும் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு பயபக்தியுடனேயே வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகத் தகவல்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தன் சிகையலங்காரத்தால் இம்முறை அதிக ரசிகர்கள் தன்பக்கம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாராம் பெட்டிப்பதிவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்தியாவிலிருந்து உச்சந்தலையில் குடுமியுடன் ஒருவர் வருவதாக்க் கிடைத்த தகவலை அடுத்து, வகுப்பு என டிவிட்டரில் அறிக்கை விடுத்துவிட்டு மாயமாகிவிட்டாராம் படம் காட்டும் பதிவர் ஒருவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவர்கள் தலைக்கு நூறு ரூபாய் இட்டே பதிவர் சந்திப்பை சிறப்பாக நடாத்த உள்ளதால், அதற்கு ஐந்தொகை தயார்செய்து, அது IAS இற்கு உட்படுகிறதா என ஆராய்ந்துகொண்டிருக்கிறாராம் பங்கு பிரித்து சந்தையில் போடும் பதிவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அண்மையில் அனானியிடம் அடிவாங்கிய பதிவர் ஒருவர் பதிவர் சந்திப்பை டிவிட்டரில் நடாத்துவது தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறாராம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்ப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும், போட்டிகளில் வெல்வதற்கும் நீங்களும் வருகிறீர்கள் தானே? எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டுமணிக்கு கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு?


Tuesday, December 8, 2009

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல!

41 comments
சில பாடல்களைக் கேட்கும்போது எங்களை இருந்த இடத்திலிருந்து இன்னுமொரு உலகத்திற்குத் தூக்கிச்சென்றுவிடும். எமக்குள்ளும் இயக்குனர்கள் உருவாகியது போல பாடலின் வரிகள் மனதில் காட்சிகளாக விரியும். பாடலை மீண்டுக் மீண்டும் கேட்கவேண்டும் போல இருக்கும். அனுபவித்திருக்கிறீர்களா?

அப்படியாக நான் அனுபவித்த ஒரு பாடல் சர்வம் படத்தின் சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

பாடலின் ஆரம்ப இசையே பாடலைக் கண்ணைமூடி ரசிக்கவைத்துவிடுகிறது.

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!

காதலர்கள் சந்தித்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்தாலும், பிரியும்போது வரும் ஏக்கமும் வெறுமையும், பாடல் வரிகளினூடே உணர முடிகிறது. காதலி விலகிச் சென்றுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுமே, அப்படி ஒரு சிலிர்ப்பு இந்த வரிகளில்.

ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

இந்த வரிகளைக் கேட்கும்போது இனம்புரியாத ஒரு உணர்வு. ஆற்றில் சலனமில்லாது ஓடும் நீரின் நடுவில் தத்தளிக்கும் சிறு எறும்பின் உணர்வு. ஆழ்மனத்து அமைதியை ஒருமுறை தட்டிப்பார்க்கிறது.

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அற்புதமாகக் காதலின் உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறது வரிகள். பிரிவின் வலியும் அதனூடே காதலியை உணர்வதும் அழகு.

உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

இந்த வரிகளும், அதைத் தொடரும் இசையும் கண்ணை மூடிக் கேட்டால் ஒரு வித்தியாசமான உணர்வுக்குத் தள்ளப்படுகிறேன். காற்றில் மிதப்பது போன்ற உணர்வு. அற்புதமான வரிகள். அதற்கேற்ற இசை.

உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை 
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

காதலின் உணர்வுகள். வேறென்ன சொல்ல?

அமைதியான நேரத்தில் நீங்களும் கேட்டுப்பாருங்கள். எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்.Monday, December 7, 2009

கடவுளாக்கப்பட்ட கயவர்கள்

70 commentsபகுத்தறிவு வளர்கின்றது, மூடநம்பிக்கை அகல்கின்றது என்று என்னதான் வாய்கிழியக் கத்தினாலும் உண்மையில் நடப்பதெல்லாமே நேர்மாறுதானா என்று எண்ணத்தோன்றுகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சியொன்றில் ஒரு குப்பைத்தொட்டிக்கு பட்டுக்கட்டி, பூச்சூடி அதை மங்களகரமாக மாற்றிவைக்க பலரும் அதை கும்பிட்டுவிட்டுப் போவதாகக் காட்டினார்களாம். இப்படிக் கண்டதையும் கடவுளாக்கி வணங்கும் மூடநம்பிக்கைகள் மற்ற மனிதர்களை கடவுளாக்கி, கோயில்கட்டிக் கும்பிடும் நிலையையும் தாண்டி நிற்கின்றது.

பல காலமாகவே தம்மை அவதாரம், கடவுள் எனக் கூறி அடுத்தவர்களை ஏமாற்றும் கூட்டம் இருந்துகொண்டே இருந்தாலும், அது பெரும்பாலும் அந்த ஊரோடு, அல்லது கிராமத்தோடே மட்டுப்படுத்தப்பட்டுவிடும். இந்த நிலமை இன்று மோசமாகி பல நாடுகளிலும் கிளை தொடங்கி சம்பாதிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதற்கும் ஒவ்வொரு ஊரிலும் கையூட்டுப் பெற்ற ஒரு கூட்டம், இவர்களின் பயப்பு வார்த்தைகளுக்கு மயங்கிச் செல்லும் கூட்டத்தை அப்படியே வளைத்துப்போட நன்கு பயிற்றப்பட்ட இன்னுமொரு கூட்டம் என்று இந்தக் கடவுள் வியாபாரத்துக்குப்பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னலே இயங்குகிறது.

இப்படியானோரின் பிரார்த்தனைகளின் ஆரம்பத்தில் கண்டிப்பாக ஒரு தியானம் இருக்கும். எப்படிப்பட்ட மனதையும் தியானம் ஒருநிலைப்படுத்திவிடும் என்பது விஞ்ஞானம். மனம் ஒருநிலைப்பட்டு அமைதியடைந்தவுடனேயே பலர் இவர்களைக் கடவுளாக நம்பத்தொடங்கிவிடுவார்கள். அதன்பிறகு காண்பிக்கப்படுபவை எல்லாம் மேஜிக். கண்கட்டுவித்தை. இவற்றையெல்லாம் நம்பி, இவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பவர்களால் இன்று கோடிகளில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் கடவுள்கள்.

பார்ப்பதற்கு ஒரு கட்டணம், பேசுவதற்கு இன்னுமொரு கட்டணம் என அறவிடும் இந்தக் கயவர்கள், அவற்றை முதலிடுவதற்கு பிள்ளைகளின் பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் பல கல்லூரிகள், கட்டுமானக் கம்பனிகள் என வைத்து அரசாங்கங்களையும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்றய மனிதனுக்கு எதிலும் அவசரம். கோயில்களுக்குச் சென்று கடவுளை வளிபடுவது ஒருவழித் தொடர்பாடல். பதிலும் கிடைக்காது, நடக்குமா என்பதும் தெரியாது. பதிலாக இப்படியானவர்களின் சாந்தமான பேச்சும் நடத்தையும், பதிலும் மனதுக்கு நம்பிக்கையாக இருப்பதால்தான் இப்படியானவர்களுக்கும் கூட்டம் கூடுகிறது. இது மட்டுமா? மற்றவர்களைக் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு மனிதன் கையாளும் மார்க்கம்தான் மாந்திரீகம். இப்படி மனிதர்களுக்குள் வளரும் போட்டிகளால்தான் மனிதக் கடவுள்களும் வளர்க்கப்படுகிறார்கள்.

எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல.

இறுதியாக ஒன்று. எனக்கு இந்த மேஜிக் செய்பவர்களைக்கண்டால் தொன்றுவது, இப்படி மேடைக்கு மேடை மேஜிக் செய்வதை விட்டுவிட்டு பேசாமல் கடவுளாகியிருக்கலாம். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதை விடுத்து கோடிகளில் கூடிவாழ்ந்திருக்கலாமே.


Saturday, December 5, 2009

த(ல)லைக்கு விழுந்த ஆப்பு!

60 comments

நுணலும் தன் வாயாற் கெடும் என்பார்கள். வழக்கம் போல சும்மா இருக்காமல் வாயைக் கொடுத்ததால் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தை இங்கே பதிவுசெய்கிறேன்.

பொதுவாகவே நான் தலைமுடி அலங்காரத்தில் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. சலூனுக்குப்போனோமா, ஏதோ முடியை வெட்டினோமா, வந்தோமா என்பதுதான் எனது வழமை. நேற்றுவரை இதுதான் தொடர்ந்தது.

இன்று காலை தலைமுடி வெட்டுவதற்காக கடைக்குள் நுளைந்தபோதுதான் என் நாக்கில் நரகாசுரன் ஏறி நர்த்தனமாடிவிட்டான்.  முடி திருத்துபவரிடம் ஏற்கனவே நான் திட்டமிட்டிருந்தவாறு எப்படி வெட்டவேண்டும் என்பதை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தெளிவாகக் கூறிவிட்டு தலையைக் கொடுக்கத் தயாரானேன்.

நான் கூறியபடியே ஆரம்பித்தார் அவர். ஓரங்களை மெசினால் ட்றிம் பண்ணவா என்று கேட்ட அவருக்கு சரி என்று கூறியபோது நாக்கு மீண்டும் தன் வேலையைக் காட்டிவிட்டிருந்தது அப்போது எனக்குத் தெரியவில்லை. மெசினை எடுத்து, காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். செதுக்கி முடித்தபிறகுதான் கவனித்தேன். என் மண்டை மட்டுமல்ல, அதற்கு உள்ளாக இருக்கும் அனைத்துமே ஏறத்தாள தெரியத்தொடங்கியிருந்தது. அடுத்தது என்ன செய்வது என்று யோசிக்குமுன்னரே அவரது கத்தரி உச்சி மண்டையையும் பதம் பார்த்திருந்தது.இப்படியல்ல, என் நிலமை இதைவிடக் கேவலம்

அழாக்குறையாக வீட்டுக்கு வந்த என்னை, வீட்டிலிருக்கும் வாண்டு மொட்டை அண்ணா என்று அழைக்க, ஏனையோர் அதைப்பார்த்துச் சிரிக்க என்று இன்று வீட்டில் ஹீரோ நான்தான். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லதாக ஏறத்தாள பொலீசாரின் தலைவெட்டுப்போல் இருப்பதால் இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது.


Tuesday, December 1, 2009

அகவை ஒன்றில் ஐந்தறைப்பெட்டி!

59 comments
நேற்றுப்பொல இருக்கிறது. லோஷன் அண்ணாவின் தளத்தைப்பார்த்து பிளாக் ஒன்றை ஆரம்பித்துவிட்டு, என்ன போடுவது என்று தெரியாமல் மின்னஞ்சலில் கிடைத்த படங்களைப் பதிவேற்றியது. சரியாக இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.

ஆரம்பத்தில் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என ஒன்றுமே தெரியாமல் எழுதிவந்த நான், இன்று ஏதோ ஒரளவு எழுதுகிறேன் என நீங்கள் நினைத்தால் தமது எழுத்துக்களை வாசிக்கச்செய்ததன்மூலம் என்னைத் திருத்திய பதிவுலகின் அத்தனை முகம்தெரியா நண்பர்களையும்தான் சாரும்.

இந்த ஒரு வருடங்களில் பதிவுலகம் பல முகம் தெரிந்த, தெரியாத நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. பலரை என்னையும் வாசிக்கவைத்துள்ளது. எனது வாசிப்பு அனுபவத்தை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் எனது ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாக்கியுள்ளது.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதுதான். இங்கே நான் எழுதுபவற்றில் எங்கோ நான் படித்தவற்றின் தாக்கம் இருக்கலாம். ஆனாலும் copy ஆக இருக்காமல் Smart copy ஆக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே எழுதிக்கொண்டிருக்கிறேன். பதிவுலகில் என்னோடு ஒத்த விருப்பு வெறுப்புக்களைக்கொண்ட பலரை சந்திக்கக்கிடைத்ததும், அவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருவதும் என்னையே நான் பார்ப்பதுபோன்ற உணர்வுகளை பல இடங்களில் சந்தித்திருக்கின்றேன். இவற்றின் தாக்கங்கள் இல்லாமல் எழுதுவது என்பது கொஞ்சம் கடினமான விடயம்தான்.

இதுவரை எழுதியவற்றுள் தொழில்நுட்ப்ப்பதிவுகளே அதிகம். ஆனாலும் அவை என் கற்பனைக்குதிரைக்குக் கடிவாளம் என உணரத்தொடங்கியதால் கொஞ்சம் அவற்றைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் என்னிடம் தொழில்நுட்ப்ப்பதிவுகளை எதிர்பார்ப்பவர்களுக்காக இவற்றைப் பகிர்வதை முற்றாக நிறுத்திவிடப்போவதில்லை.

இந்த ஒரு வருடத்தில் எனது எழுத்துநடை பெரிதளவில் மாறியுள்ளது எனக்கே தெளிவாகத் தெரிகிறது. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் பதிவுலக ஃபோபியாக்களிலிருந்தும் கொஞ்சம் விடுபட்டிருக்கிறேன். இங்கே மனிதர்களைத்தவிர மற்றெல்லாம் போலி என்ற ஒரு கருத்துக்கு வந்துவிட்டேன். பட்டுத்தெளிந்த விடயம் இது.

இங்கு காணப்படும் நட்புத்தான் இந்த ஒருவருடமும் என்னை பதிவுலகோடு கட்டிப்போட்டுவைத்திருக்கிறது. பல வழிகளிலும் என்னை ஊக்குவிக்கும், தொடர்ந்து படித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்!


Monday, November 30, 2009

சரக்கு வித் சைடிஸ் – 30.11.2009

29 comments
அண்மையில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டார், உங்களுக்கு எப்போதும் இல்லாத சமூக அக்கறை பதிவெழுதத் தொடங்கியவுடன் மாத்திரம் எங்கிருந்து வந்துவிடுகிறது என்று. அதற்கு நான் எங்கிருந்து வந்தாலென்ன, நல்ல விடயம்தானே என்றேன். விடாத அவர் அதெப்படி எல்லாப் பதிவர்களுக்கும் சொல்லி வைத்தாற்போல வருகிறது? அடுத்தவர்களிடமிருந்து உங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் ஆயுதம்தான் இது என்றார். இதற்கு நான் கொடுத்த பதிலைப் பிறகு தருகின்றேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

**********

பின்னூட்டம் இடப்படும்போது தானியங்கிமுறையில் இடப்படும் Spam பின்னூட்டங்களை தடுப்பதற்காகவே Word Verification பயன்படுகின்றது. தமிழ்ப் பதிவுகளில் Spam பின்னூட்டங்கள் பெரிதாக வருவதில்லை என்பதாலும், Word Verification படிப்பவர்களை எரிச்சற்படுத்தும் என்பதாலும் யாரும் அதை செயற்படுத்துவதில்லை.

ஆனால் அண்மைக்காலமாக எனக்கு அப்படியான Spam பின்னூடங்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் வருகின்றன. ஒரு நிறுவனத்தின் விளம்பரத்துக்காகவே அது இடப்படுகிறது. (அந்த நிறுவனத்திற்கும் தமிழ் பதிவுலகிற்கும் எந்த சம்பந்தமுமில்லை) பின்னூட்டங்களை மட்டுறுத்தி வைத்திருப்பதனால் அவற்றை வெளியிடுவதில்லை. பின்னூட்டங்களை மட்டுறுத்தாத பதிவர்கள் இது தொடர்பாக கொஞ்சம் அவதானமாக இருங்கள். இல்லாவிட்டால் பதிவுகளை அவை குப்பையாக்கிவிடும்.

**********

இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது மின் அகராதி ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் தேடிக்கொள்ளலாம் என்பதால் எனக்கு அதிகம் பயன்படுகிறது. உங்களுக்கும் பயன்படலாம். பார்வையிட இங்கே சொடுக்கவும்.


**********

பரீட்சை முடிவடைந்த்தால் DVD யில் ஈரம் படம் பார்க்கக் கிடைத்தது. வித்தியாசமான கதைக்கரு. படம் இறுதிவரை சுவாரசியம் குறையாமல் இருந்தது சிறப்பு. காதலையும் ஹீரோயிசத்தையும் தவிர்த்து வரும் படங்களை தமிழ் சினிமாவில் தாராளமாக வரவேற்கலாம் - இறுதிவரை பார்க்கமுடிந்தால்!


**********பேராண்மை திரைப்படமும் இப்போதுதான் பார்க்கக்கிடைத்தது. அருமையான கதை. ஆனால் ஆரம்பத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், சாதி வெறிக் காட்சிகளும் – ஒரு துளி விஷம். தவிர்த்திருக்கலாம். ஆனால் மேலே கூறிய காரணத்துக்காகவே இதைப் பாராட்டலாம்.


**********
இதற்கு வார்த்தைகள் தேவையா?


Tuesday, November 24, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்

39 comments

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு
வணக்கம் நண்பர்களே,

இலங்கையில் பதிவர்சந்திப்பை இரண்டாவது தடவையாகவும் நடாத்தவேண்டும் என்கின்ற எம் அனைவரதும் ஆசை நிறைவேறப்போகின்றது.

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
சிற்றுண்டியும் சில பாடல்களும்
கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு        சிறப்பாகப் பயன்படுத்துவது?
கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
உங்களுக்குள் உரையாடுங்கள்

பதிவர்கள் தங்கள் வருகையை இங்கே பதிலிடுவதன் மூலமோ, தெரிந்தால் அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

Monday, November 16, 2009

கமலும் நயனும் இன்னுமொரு செயின் ரியாக்சனும்

405 comments

இன்னுமொரு செயின் ரியாக்சன், அதுதான் தொடர் பதிவு. இந்தப் பதிவுக்கு சந்ரு அண்ணாவால் அழைக்கப்பட்டிருக்கிறேன். பிடிக்காவிட்டாலும் சமாளித்துக்கொண்டு வாழப் பழகிவிட்ட இன்றய வாழ்க்கைமுறைக்குள் பிடிக்காதவற்றையும் சொல்லியாகவேண்டிய பதிவு. இது பிடித்திருக்கிறது.

பிடித்தவர், பிடிக்காதவரை அப்படியே சொல்லிவிடவேண்டும் என்ற காரணத்தாலேயே எனக்கு ஆர்வமில்லாத, அல்லது நழுவல் போக்கை கடைப்பிடிக்கவேண்டிய தலைப்புகளை விட்டுவிட்டு, சிலவற்றை மாற்றியிருக்கிறேன். அழைத்தவரும், ஆரம்பித்தவரும் மன்னிப்பார்களாக.

நடிகர்

பிடித்தவர் – கமல்

இவருடைய ஒரே போட்டியாளர் ரஜினியே தனது நடிப்பின் குரு இவர்தான் என்று சொல்லிவிட்டபிறகு நான் என்ன சொல்ல, இவரைப்பற்றி?

பிடிக்காதவர் – சிம்பு

இவரது தகப்பனார் பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.

பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு

நடிகை

பிடித்தவர் – ஜோதிகா

படம் முழுவதும் இவரது முகத்தையே காட்டலாம். அவ்வளவு நடிப்பையும் அதிலே காட்டிவிடுவார். சந்திரமுகி அதன் உச்சம். இப்போதெல்லாம் சூர்யாமீது கடுப்பாகவே இருக்கிறது – கொஞ்சம் தாமதித்திருக்கலாம்.

பிடிக்காதவர் – நயன்தாரா

இப்போது பாட்டியாகிவிட்ட இவரை எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. காரணம் – கொஞ்சம் ஓவர் பில்டப்

எழுத்தாளர்

பிடித்தவர் - சுஜாதா

ஒரு தலைமுறையே இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும்போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

பிடிக்காதவர் – சாரு

இவரிடம் காணப்படும் ஒருவகைக் கர்வம் இவரிடமிருந்து என்னைக் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர்

பிடித்தவர் – A. R. ரஹ்மான்

நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு.

பிடிக்காதவர் – விஜய் ஆன்டனி

ஆத்திசூடியைக் கொலை செய்தது ஒன்றே போதுமே.

பாடகர்

பிடித்தவர் – S. P. பாலசுப்பிரமணியம்

இவரது தமிழ் உச்சரிப்பும், தன்னடக்கமும், நேர்த்தியும் என்னைக் கவர்ந்தவை.

பிடிக்காதவர் – உதித் நாராயணன்

அடித்துக் கொல்லத்தூண்டும் தமிழ்.  அது ஒன்றே போதுமே.

பாடகி

பிடித்தவர் – சித்ரா

இவரது புன்னகை சிந்தும் முகமும், இவரது குரலும் என்னைக் கவர்ந்தவை

பிடிக்காதவர் – ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இவரது குரல் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை

விளையாட்டு 

பிடித்தது – கிரிக்கெட்

ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

பிடிக்காதது – WWF

மனிதர்களை மனிதர்களே அடித்துக்கொள்ளும் விளையாட்டு – நாம் கற்காலத்திலிருந்து நாகரிகத்தால் வளர்ந்துவிட்டோமா?

இதைத் தொடர நான் அழைப்பது
Wednesday, November 11, 2009

பத்தோடு பதினொன்று

46 commentsஇந்தத் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்த நண்பன் பாலவாசகனுக்கு நன்றிகள். தொடர்பதிவுகளிற்கு தலைப்பு பொருத்தமானதுதானே?


1. A – Available/Single? : Available, எங்கேயும், எப்போதும்.

2. B – Best friend? : இருக்காங்க.

3. C – Cake or Pie?: கேக்

4. D – Drink of choice? : பல்கலைக்கழகம் கற்றுத்தந்த பால் பக்கற்.

5. E – Essential item you use every day? : பணம்

6. F – Favorite color? : கருப்பு.(இது ஒரு கலர் இல்லையாமே?)

7. G – Gummy Bears Or Worms?: இரண்டுமில்லை.

8. H – Hometown? - யாழ்ப்பாணம்

9. I – Indulgence? – பதிவு எழுதுவது (?!)

10. J – January or February? February 14 (ட்றீட்டுக்காக மட்டும். அவ்வ்வ்)

11. K – Kids & their names? : சாரி, ராங் நம்பர்.

12. L – Life is incomplete without? - தேடல்

13. M – Marriage date? நான் பேச்சுலர்ப்பா (நோட் திஸ் பாயின்ட்).

14. N – Number of siblings? கூடப் பிறந்த தம்பியும் நீங்கள் அனைவரும்

15. O – Oranges or Apples? Apples

16. P – Phobias/Fears? : பதிவுலகில் இருக்கும் அத்தனை ஃபோபியாக்களும்.

17. Q – Quote for today? : Try to Witness a miracle

18. R – Reason to smile? : காரணமே இல்லாமல் சிரிப்பதுதான் அதிகம்.

19. S – Season? வசந்தகாலம்

20. T – Tag 4 People?

21. U – Unknown fact about me? தெரியலயே.

22. V – Vegetable you don't like? எல்லாமே பிடிக்கும்

23. W – Worst habit? தெரியவில்லை, தெரிந்ததும் சொல்கிறேன்.

24. X – X-rays you've had? : இது எதுக்கு?

25. Y – Your favorite food? அம்மாவின் சமையல் எல்லாமே.

26. Z – Zodiac sign? டபுல்ஸ் (அதான் Gemini).


அ - அன்பிற்கு உரியவர்கள் - அனைவரும்.

ஆ - ஆசைக்குரியவர்: அம்மா

இ - இலவசமாய் கிடைப்பது: ஆலோசனை.

ஈ - ஈதலில் சிறந்தது: “ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது” – எங்கேயோ படித்தது.

உ - உலகத்தில் பயப்படுவது: என் நாக்குக்கு.

ஊ - ஊமை கண்ட கனவு: சொல்ல முடியாத அதேதான்.

எ - எப்போதும் உடனிருப்பது: மனசாட்சி

ஏ - ஏன் இந்த பதிவு: நண்பனின் அழைப்பு

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வியும் செல்வமும்

ஒ - ஒரு ரகசியம்: கிட்ட வாங்க, சொல்கிறேன்.

ஓ - ஓசையில் பிடித்தது: புல்லாங்குழல் இசை

ஔ - ஔவை மொழி ஒன்று: ஊக்கமது கைவிடேல்.

ஃ - (அ)ஃறிணையில் பிடித்தது: இயற்கையின் எல்லாமே

Saturday, November 7, 2009

கூகுல் வேவ் – ஒரு பார்வை

30 commentsஇணைய உலகில் இன்று பரபரப்பைக் கிளப்பியிருக்கும் விடயம் கூகுல் வேவ். கூகுல் மட்டுப்படுத்தப்பட்டோருக்கே இதனைப் பாவிக்க அனுமதி அளித்துள்ளமை இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இன்று டிவிட்டரில் அதிகமாக டிவிட்டப்படும் முதல் பத்து வார்த்தைகளுக்குள் கூகுல் வேவும் ஒன்று. அந்தளவுக்கு அமைந்துள்ளது இதன் எதிர்பார்ப்புகள்.


கூகுல் தான் தெரிவுசெய்த பாவனையாளர்களுக்கே அழைப்புக்களை அனுப்பியுள்ளதுடன் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களால் அழைக்கப்படும் நபர்களும் கூகுலின் மேற்பார்வையின் கீழே அழைப்புகளைப் பெறுகின்றனர். இதனால் அனுப்பப்படும் அழைப்புகள் உடனடியாகப் போய்ச் சேர்வதும் கிடையாது. அவை கிடைக்காமல் விடுவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனக்கு அண்மையிலேயே ஆதிரை அண்ணாவால் அழைப்பு அனுப்பப்பட்டு கூகுல் வேவ் கணக்கு கிடைத்தது. ஆனால் அழைப்பு அனுப்பி ஐந்து நாட்களின் பின்னரே அது கிடைத்தது.


கூகுல் வேவின் தற்போதய பாவனையாளர்கள் பலர் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். கூகுலின் user friendly தன்மை இதிலும் இருந்தாலும் இது புதிதாக இருப்பதால் பலர் சரிவர இதனை விளங்கிக்கொள்ளவில்லை என இதுபற்றி கூகுல் குறிப்பிட்டுள்ளது.
இதில் தொடங்கப்படும் ஒவ்வொரு உரையாடங்களையும் ஒவ்வொரு அலை எனக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு அலைக்கும் தேவையான நண்பர்களை இணைத்துத்தொள்ளலாம். இவை ஒவ்வொன்றும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கும். இவற்றை சீர்திருத்தலாம். குறிப்பிட்ட செய்திகளுக்கு மட்டும் பதிலளிக்கலாம். மேலும் இவை அனைத்தும் Real time இல் தெரிவதால் அந்த அலையில் இணைந்திருப்போர் நீங்கள் செய்பவற்றை உடனுக்குடன் காணவும் முடியும். மேலும் மேலே படத்தில் இருக்கின்ற கட்டங்களை எமக்கு ஏற்றாற்போல் மாற்ற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.


தற்போது பாவனையில் இருக்கும் கூகுல் வேவ் ஆனது ஒரு Preview version ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருக்கும் ஒவ்வொன்றும் Under construction என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிமேல்தான் இதன் Beta version வரவிருக்கிறது.


இவ்வாறு கூகிலால் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்படும் கூகுல் வேவ் எதிர்காலத் தொடர்பாடலில் மாற்றங்களை ஏற்படுத்துமா?, மின்னஞ்சல் கலாச்சாரத்தை உடைக்குமா?, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.Friday, November 6, 2009

இந்தப் பதிவை யாரும் படிக்க வேண்டாம்

40 comments

டிஸ்கி 1 – இது வயது வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு. சிறுவர்கள் விலகிவிடுவது நல்லது.

டிஸ்கி 2 – பலவீனமான இதயம் கொண்டவர்கள் இதற்குமேல் படிப்பது நல்லதல்ல.

டிஸ்கி 3 – இரத்த அழுத்த நோய் கொண்டவர்கள் விலகிவிடுவது உத்தமம்.

டிஸ்கி 4 – உங்களால் அதிர்ச்சியைத் தாங்க முடியாவிடின் இது உங்களுக்கான இடம் அல்ல

டிஸ்கி 5 – பச்சிளம் பாலகர்கள் பார்க்கவே கூடாத இடம் இது

டிஸ்கி 6 – இதைப் பார்த்துவிட்டு தற்கொலை முயற்சில் இறங்கினால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

டிஸ்கி 7 – இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆத்திரத்தில் உங்கள் கணினியை உடைத்தால் அதற்கான செலவு உங்களுடையதே

டிஸ்கி 8 – மேற்சொன்ன காரணத்துக்காக அலுவலகத்தில் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நலம்

டிஸ்கி 9 – இந்தப் பதிவுக்குப் பிறகு லோஷன் அண்ணாவின் ‘நண்பர்களை’ எனக்கு நண்பர்கள் ஆக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை.

டிஸ்கி 10 – இது சும்மா, பத்து வரவேண்டுமென்பதற்காக.

இதுதான் மேட்டரு

.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.


இலங்கைப் பதிவர்களே இன்னொருதடவை சந்திப்போமா?

12 comments


வெற்றிகரமாக நடந்துமுடிந்த இலங்கைப் பதிவர்களின் முதலாவது ஒன்றுகூடலைத் தொடர்ந்து இருக்கிறமில் அனைவரும் சந்தித்துக்கொண்டாலும் அது வெறுமனே கூடினோம், கு… குதுகலித்தோம், பின்னர் பிரிந்துவிட்டோம் என்பதைத் தவிர்த்து பதிவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யவில்லை என்பதே பலரதும் ஒருமித்த கருத்து.


இதனாலேயே இரண்டாவது சந்திப்பு தொடர்பான எதிர்பார்ப்பு பலரது பதிவுகளில் தெரிந்தாலும் அதை ஒரே இடத்தில் அறிந்துகொள்ளவே இந்தப் பதிவு. இரண்டாவது சந்திப்பு தொடர்பான உங்கள் ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையுமே பின்னூட்டமிடுங்கள். அல்லது தனிமடலில் தெரியப்படுத்துங்கள். உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யலாம். கலந்துகொள்வோரின் எண்ணிக்கையைப் பொறுத்து இடத்தை முடிவுசெய்யலாம். இந்த மாத இறுதியில், இல்லை அடுத்த மாத ஆரம்பத்தில் சந்திக்கலாம்.


வேறென்ன? ஸ்டாட் மீசிக்…..


Thursday, November 5, 2009

அம்மா ஆன நயன்தாரா!

46 comments
சர்ச்சசைகளுக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்ன சம்பந்தமோ தெரியவில்லை. சிம்புவுடனான காதல், பின் பிரபுதேவாவுடனான கறுமம் என்று இது நீண்டுகொண்டே போகிறது.
ஆதவன் படத்துக்குப்பிறகு நயன்தாராவை பதிவர்கள் பலரும் பாட்டி என்று வர்ணித்திருந்தாலும், அவரை ஒரு அம்மா என்று அழைத்திருக்கிறது ஒரு புத்தகம்.

அந்தப் பக்கத்தை இங்கே உங்களுக்காகத் தந்திருக்கிறேன்.
இது எந்தப் புத்தகமா? எங்கள் வீட்டில் முதலாம் ஆண்டு படிக்கும் வாண்டுவின் தமிழ் பயிற்சிப் புத்தகம்.

ஏய் வேணாம். அப்புறம் கொலைக் கேசிலதான் மாட்டுவீங்க. கொலை வெறித் தாக்குதல்கள் பின்னூட்டங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


Tuesday, November 3, 2009

கலக்கல் பதிவர்கள் !

39 comments
நேற்று இருக்கிறமின் சந்திப்பில் சந்தித்துக்கொண்ட பதிவர்கள் என்ன பேசியிருப்பார்கள்?

படங்களை கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.டிஸ்கி 1 - படங்கள் நண்பர்களிடமிருந்து சுடப்பட்டவை.

டிஸ்கி 2 - இந்தப்பதிவுக்கு பலவழிகளிலும் உதவிபுரிந்த பவனுக்கு நன்றிகள்.

டிஸ்கி 3 - காமென்ட்ஸ் போடுமளவுக்கு புகைப்படங்களில் தோன்றாத ஏனய சக பதிவர்களுக்கு எனது மென்மையான கண்டனங்கள்.


Thursday, October 29, 2009

பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?

22 comments


உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது என்று கூகுல் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வினாடிக்கும் புதிதாக ஒரு பிளாக் உருவாக்கப்படுகிறதாம் (இவற்றில் 90% ஆனவை ஒரு மாதத்திலேயே செயலிழந்து விடுவது வேறு கதை). இன்றய இணையத்தள நெரிசல்களுக்கு பிளாக்குகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றனர். 
இன்றய இணையப் பாவனையாளர்களின் பாதிக்கும் மேற்பட்டோர் சொந்தமாக ஒரு பிளாக்காவது வைத்திருக்கின்றனர். இன்று வீதியில் நடந்துசெல்லும்போது சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும் ஒரு காமன்மேன் ஒரு பதிவராகக் கூட இருக்கலாம்.
பதிவுகள் பெரும்பாலும் இலகு மொழிநடையில் சொந்த அனுபவங்கள் சார்ந்தே எழுதப்படுவதால் இவற்றை விரும்பி வாசிப்போரும் அதிகம். நான்கூட பல்கலைக்கழக அசைன்மென்டுகள் தொடர்பான ஏதாவது தேடலில் இணையத்தளங்களை மட்டுமல்லாது, பதிவுகளிலும் ஒருமுறை தேடிக்கொள்வேன், காரணம் அவை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியவையாக இருக்கும்.
பாவனையாளர்களின் இந்த பிளாக்குகளின் மீதான ஈர்ப்பு பல முன்னணி நிறுவனங்களையும் பிளாக்குகள் பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்துள்ளது. அவை தமது தயாரிப்புக்கள் மற்றும் சலுகைகளை தமது இணையத்தளங்களிற்கு முன்னதாகவே பிளாக்குகளில் அறிவிக்கின்றன. அவற்றின் இணையத்தளங்களை விட பிளாக்குகளையே அதிகமானோர் பார்வையிடுவதுடன், இதனால் வருமானமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். 

பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை. ஊடகங்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் பதிவர்களுக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே ஊடகங்களுக்கு நிகராக இன்று பதிவுகளும் பலராலும் நோக்கப்படுகின்றன. உளவு அமைப்புக்களின் பார்வையிலும் பதிவுகள் முக்கியம் பெறத் தவறுவதில்லை.
‘உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாது’ என்பது பதிவுகளுக்கு நன்றாகப் பொருந்துகின்றது. பல மறைக்கப்பட்ட விடயங்களும் பதிவுகள் மூலம் வெளிவந்துவிடுகின்றன. இதனாலோ, என்னவோ பல அரசியல், முதலாளித்துவச் சக்திகள் பதிவுகளின் இந்த வளற்சியை விரும்புவதில்லை. மாற்றுக்கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடியாத தனிநபர்களுக்கும் பதிவுகள் எழுதுபவர்கள் பாதகர்கள்தான். இன்று அதிகரித்துவரும் பதிவுலக அனானிகள் இவற்றின் வெளிப்பாடுகளாகக்கூட இருக்கலாம்.


இப்போது சொலுங்கள் பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?
Monday, October 26, 2009

சரக்கு வித் சைடிஸ் – 26.10.09

22 commentsஇருக்கிறம் சஞ்சிகையினர் வலைப்பதிவர் மற்றும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை எதிர்வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மீண்டும் சந்திக்கவிரும்பும் பதிவுலக சொந்தங்கள் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக தமது வரவை 0113150836 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது irukiram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தமது வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

எனது முதலாவது பதிவர் சந்திப்பாக இது அமையப்போகிறது. வாருங்கள், வரும் திங்கட்கிழமை சந்திக்கலாம்.

-----XXX-----

கடந்த சனிக்கிழமை இரவு உணவை எடுத்தவாறே தொலைக்காட்சியில் மேய்ந்துகொண்டிருந்தபோது சக்தி தொலைக்காட்சியில் சக்தி சுப்பர்ஸ்டார் நிகழ்ச்சி நடந்நுகொண்டிருந்ததை தற்செயலாகக் காணக்கிடைத்தது. துருப்பிடித்த இரும்புக்கு Anti – cross பெயின்ட் அடித்துவிட்டது போல மேக்கப்புடன் ஒரு போட்டியாளர் பாடிக்கொண்டிருந்தார். அவர் பாடி முடித்ததும் அந்த அறிவிப்பாளர் காற்றைக் கையால் விசிறியவாறே கதைக்கத் தொடங்க எனக்கோ அடக்கமுடியாமல் கெக்கே பெக்கே என்று சிரிப்புத்தான் வந்தது. இறுதியில் வாயில் வைத்த புட்டு புரைக்கேறி மூக்கால் வெளியில் வந்தவுடன் சேனலை மாற்றிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது அந்த அறிவிப்பாளர் சக்தி சுப்பர்ஸ்டார் நிகழ்ச்சிக்கென்றே பிரத்தியோகமாக வந்தவராம். சிறந்த காமெடி நிகழ்ச்சி பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக சக்தி சுப்பர்ஸ்டார் பார்க்கலாம். வரும் பின்விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல.

-----XXX-----சிலருக்குச் சில படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதில்லை. அந்த வரிசையில் எனக்கு Chak de India. நேற்றும் மூன்றாவது தடவையாக  படம் பார்த்தேன். ஏனோ எத்தனைமுறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்கவேண்டும் போலவே இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதலே இயக்குனர் கதையோடு எம்மையும் ஒன்றச்செய்துவிடுகிறார். தமிழில் இப்படியொரு படம் – கஸ்டம்தான்.

-----XXX-----நேற்று மாலை யாழ்தேவி திரட்டியை மேய்ந்துகொண்டிருந்தபோதுதான் இது கண்ணில் பட்டது. இலங்கைப் பதிவர் சந்திப்பு தொடர்பான லோஷன் அண்ணாவின் பதிவிற்கு மொத்தம் 35 நெகடிவ் ஓட்டு குத்தியிருந்தார்கள். நெகடிவ் ஓட்டு குத்துமளவிற்கு அந்தப் பதிவில் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. அனேகமாக ஒருவரோ, இல்லை குழுவோதான் செய்திருக்க வேண்டும். யாழ்தேவியில் டைனமிக் IP வைத்திருப்பவர்கள் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலுக் குத்தலாம் என்ற குறைபாடு நிலவுகிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தான் என்பதை உறுதிப்படுத்த யாழ்தேவி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

-----XXX-----

கனவுக்கன்னி, கஜினியுடன் காணாமல் போனாலும் இன்னும் பிசின் மாதிரி மனதில் இருக்கும் அசினுக்கு இன்று பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசின்

-----XXX-----


ம்ஹும்.. இவங்களுக்கும் நிச்சயம் ஆயிடுச்சாம் :-(((


Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy