Saturday, October 2, 2010

எந்திரன் – குற்றமும் பின்னணியும்

15 comments

 

cbe20_Endhiran-Movie-Aug-Stills-19

“சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதையில் இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாகவேண்டும்” - சுஜாதா

மேலைநாட்டுக் இலக்கியங்களிலேயே தாராளமாகக் காணப்பட்ட அறிவியல் புனைகதைகள் (Science fiction) மற்றும் எதிர்காலவியல் சிந்தனைகளுடன் கூடிய கதைகள் (Futurology) என்பவற்றை மேலைநாட்டு வட்டத்தைத்தாண்டி தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அவருக்கு முன்னரும் சில கதைகள் தமிழில் இந்த வட்டத்தைத் தொட முயற்சித்திருந்தாலும், சைன்ஸ்ஃபிக்ஷன் என்று அவற்றை ஏற்றுக்கொள்வது சிரமம்தான்.

இந்த சைன்ஸ்ஃபிக்ஷனை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் ஆங்கிலத்தில் சாதாரணமானவை என்றாலும், தமிழுக்குப் புதிது. இவற்றுக்குப் பின்னாலிருக்கின்ற அதிக பொருட்செலவுதான் இதற்குச் சொல்லப்படுகின்ற பிரதான காரணமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களுக்குள்ளாகவே நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் குத்தப்பட்டுவிடுகின்ற ‘இமேஜ்’ உம், அதைவிட்டு வெளியே வருவதை அவர்களும், ரசிகர்களும் விரும்பாததும்கூடக் காரணம்தான். இதே காரணத்துக்காகத்தான் எந்திரன் ரஜினி படமா, சங்கர் படமா என்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் அண்மைக்காலப் படங்களில் ரஜினி என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார். சந்திரமுகி, சிவாஜி என்று இப்போது எந்திரனில் சாதாரணமாக நடித்துவிட்டுப் போயிருப்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், வரவேற்கவேண்டிய ஒரு விடயமே. அடுத்ததாக சங்கர். அவரது வழமையான ஊழல் பேயைத் துரத்தும் வேலையையும், நாட்டை மாற்றியமைக்கும் முக்கியமான பொறுப்பையும் புறந்தள்ளிவிட்டு, வித்தியாசமான ஒரு முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்.

00000667-constrain-160x200 சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, இன்னும் அவற்றில் லாஜிக் அடி வாங்கிய இடங்களையும் மாற்றி எந்திரனில் ரோபோவையும் காதலிக்கவைத்திருக்கிறார். படத்தில் இவரது பல வசனங்கள் நறுக் என்று இறங்குகின்றன. வசனங்களில் தாராளமாகக் கடந்துபோகும் அறிவியல் சங்கதிகள் எல்லாம் உறுத்தாமல் இறங்குகின்றன. இப்படி ஒரு படத்திற்கான கதையை பத்துவருடங்களுக்கு முன்னரேயே எழுதிவிட்டு இறந்துபோயிருக்கிறார். இவர் இல்லாவிட்டால் எந்திரனை தொழில்நுட்பத்தில் அதிகம் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இப்படி ஒரு பரிமானத்தில் சாத்தியமே இல்லை. எந்திரத்திற்கும் உணர்வுகள் வருகின்றட என்பதை மீண்டும் ஜீனோவில் தொட்டுச்சென்றவர், எந்திரனில் அதைக் காதலிக்கவும் வைத்துவிட்டார். படத்தை குறைந்தபட்சம் அவருக்கு சமர்ப்பணமாவது செய்திருக்கலாம். எல்லாம் பணம் செய்யும் வேலை.

ரஹ்மானின் பின்னணி இசை எங்கேயுமே உறுத்தாமல் படத்தோடு சேர்ந்து ரசிக்கமுடிகிறது. பாடல்கள் தியேட்டரில் கேட்கும்போது அதிகமாக இனிக்கின்றன. குறிப்பாக அரிமா அரிமா ஹெட் செட்டில் கேட்கும்போது இல்லாத ஒரு உணர்வை தியேட்டரில் கொடுத்தது. ஆஸ்கர் பெற்றுக்கொண்டபோது அவர்முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மீண்டும் ஒருமுறை எந்திரன் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். கிளிமாஞ்சாரோ பாடல் ஏற்கனவே பிடித்துவிட்டாலும் திரையில் பாடலை ரசிக்கவிடாமல் ஐஸ் ஆக்கிரமித்திருக்கிறார். ஐஸ் படம் முழுவதும் அப்படியேதான் வந்துபோனாலும் க்ளோசப் காட்சிகள் அவருக்கும் வயதாவதைக் காட்டுகின்றன.

Endhiran-Stills-009

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் க்ளைமாக்சின்போது கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தாலும், அதன் நுணுக்கங்கள் கச்சிதமாக இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் சிட்டி ரோபோ தன் எந்திர உடலுடன் முதன்முறையாக ரஜினி ஸ்டைலிலேயே நடந்துவந்து, இடுப்பில் கைவைத்து லுக்குவிடும் காட்சி ஒன்றே போதும், கிராபிக்சின் துல்லியத்தையும், சங்கர் அவற்றைக் கையாண்ட நேர்த்தியையும் சொல்ல.

இந்தப் படத்தில் ரசித்த இன்னுமொரு விடயம், காட்சிகளை பலதரப்பட்ட ரசிகர்களையும் கவரும்படியான காட்சிகள்தான். விஞ்ஞான நுணுக்கங்களைக்கூட போகிறபோக்கில் உறுத்தாமல் சொல்லிவிட்டுச் செல்வது அழகு. படத்தின் ஒன்லைன், பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், சொல்லப்பட்ட விதம் எல்லாமே தமிழ் சினிமாவிற்குப் புதிது. இதில் உள்ள ஆங்கிலப்படத்தின் தாக்கங்களை தேடித்தேடிப் பலரும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தப்படத்துக்கான சிந்தனை பத்து வருடங்களுக்கு முற்பட்ட ஒன்று, இரண்டாவது இப்படி ஒரு படம் தமிழுக்குப் புதிது. எந்திரன் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு படம். குறை கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்துக்கொண்டேயிருங்கள். புறக்கணிப்பவர்கள் புறக்கணித்துக்கொண்டேயிருங்கள். உங்களுக்காகவே யாராவது மசாலா அரைத்துக்கொண்டிருப்பார்கள்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy