Tuesday, December 27, 2011

கால இயந்திரம்

10 comments





சட்டென்று தனிமை
ஆட்கொள்ளும் நேரங்களில்தான்
தேவையற்ற நினைவுகளும்
செருகேடுகளின் ஞாபகமும்..


புரட்டத் தொடங்கிய 
செருகேட்டும் பக்கங்களின்
இடுக்குகளில் உருண்டோடுகிறது
கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட 
கால இயந்திரம்


காலம் கடந்து 
கவனிக்கையில் மட்டும் - ஏனோ
கடதாசித் தடிப்பையும் விடக் 
கனத்துக் கிடக்கின்றன
புகைப்படங்கள்..!


நினைவுகளின் கனத்தைத் 
தாங்க முடியாமல் - அதை
முன்னோக்கிச் செலுத்தும் 
முழு முயற்சியில் தோற்றுக்கொண்டே
குதிக்கால் ஊன்றி பெருவிரல் வரைந்த
குட்டி வட்டத்துக்குள் 
சுற்றத் தொடங்குகிறேன்..


இறந்துபோன நிகழ்காலத்து
இடுக்குகளில் எழுந்துவந்தாள்
பிரிந்துபோன பழைய நண்பி


எப்போதோ பார்த்த நான்
எனக்கே சிரிப்பூட்டினான்


எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது


'அ' போட்டு வரைந்த மயில்
'ல' போட்டு வாங்கிய அடி
பாசி படிந்துபோன
கோயிலடிக் குழாய்க்கிணறு
அதிகம் சுவைத்த 
மாற்றான் தோட்டத்து மாங்காய்


பல நேரங்களில் 
விடைபெறல் என்பது 
வெறும் கையசைப்பு மட்டுமல்ல..!


கடைசிப் பக்கம் கடந்து
கண்கள் நிறைந்து
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளியைப்
புறந்தள்ளி நிமிர்கிறேன்


இன்னும்
தூசி ஏறிப்போன பரனில்
மூலை மடங்கி, முன் அட்டை கிழிந்து
பழுப்பேறிப்போன பழைய புத்தகத்துள் 
குட்டிபோட்டுக் கிடக்கின்றன
மயிலிறகுகள்..!


Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy