உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது என்று கூகுல் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வினாடிக்கும் புதிதாக ஒரு பிளாக் உருவாக்கப்படுகிறதாம் (இவற்றில் 90% ஆனவை ஒரு மாதத்திலேயே செயலிழந்து விடுவது வேறு கதை). இன்றய இணையத்தள நெரிசல்களுக்கு பிளாக்குகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றனர்.
இன்றய இணையப் பாவனையாளர்களின் பாதிக்கும் மேற்பட்டோர் சொந்தமாக ஒரு பிளாக்காவது வைத்திருக்கின்றனர். இன்று வீதியில் நடந்துசெல்லும்போது சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும் ஒரு காமன்மேன் ஒரு பதிவராகக் கூட இருக்கலாம்.
பதிவுகள் பெரும்பாலும் இலகு மொழிநடையில் சொந்த அனுபவங்கள் சார்ந்தே எழுதப்படுவதால் இவற்றை விரும்பி வாசிப்போரும் அதிகம். நான்கூட பல்கலைக்கழக அசைன்மென்டுகள் தொடர்பான ஏதாவது தேடலில் இணையத்தளங்களை மட்டுமல்லாது, பதிவுகளிலும் ஒருமுறை தேடிக்கொள்வேன், காரணம் அவை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியவையாக இருக்கும்.
பாவனையாளர்களின் இந்த பிளாக்குகளின் மீதான ஈர்ப்பு பல முன்னணி நிறுவனங்களையும் பிளாக்குகள் பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்துள்ளது. அவை தமது தயாரிப்புக்கள் மற்றும் சலுகைகளை தமது இணையத்தளங்களிற்கு முன்னதாகவே பிளாக்குகளில் அறிவிக்கின்றன. அவற்றின் இணையத்தளங்களை விட பிளாக்குகளையே அதிகமானோர் பார்வையிடுவதுடன், இதனால் வருமானமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை. ஊடகங்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் பதிவர்களுக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே ஊடகங்களுக்கு நிகராக இன்று பதிவுகளும் பலராலும் நோக்கப்படுகின்றன. உளவு அமைப்புக்களின் பார்வையிலும் பதிவுகள் முக்கியம் பெறத் தவறுவதில்லை.
‘உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாது’ என்பது பதிவுகளுக்கு நன்றாகப் பொருந்துகின்றது. பல மறைக்கப்பட்ட விடயங்களும் பதிவுகள் மூலம் வெளிவந்துவிடுகின்றன. இதனாலோ, என்னவோ பல அரசியல், முதலாளித்துவச் சக்திகள் பதிவுகளின் இந்த வளற்சியை விரும்புவதில்லை. மாற்றுக்கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடியாத தனிநபர்களுக்கும் பதிவுகள் எழுதுபவர்கள் பாதகர்கள்தான். இன்று அதிகரித்துவரும் பதிவுலக அனானிகள் இவற்றின் வெளிப்பாடுகளாகக்கூட இருக்கலாம்.
இப்போது சொலுங்கள் பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?