இளைய தளபதி விஜய் நடித்து, உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுறா திரைப்படத்தை ஓசி டிக்கெட்டில் பார்க்கும் ஒப்பற்ற வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பக் காட்சி முதலே இளைய தளபதி விஜயின் ஆர்ப்பாட்டம்தான். அறிமுகக் காட்சி இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாதது. அதில் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியவாறே இளைய தளபதி விஜய் டைவ் அடித்து வரும் காட்சியைப்பார்த்த நீச்சல் உலக சாதனையாளர் மைக்கல் பிலிப்ஸ், இளைய தளபதி விஜயைத் தொடர்புகொண்டு அவ்வகை நீச்சலின் நுட்பங்களைத் தெரிந்துகொண்டதிலிருந்தே அதன் கனதியை அறியமுடியும்.
படத்தில் இளைய தளபதி விஜய் பிறந்து, வளர்ந்து, போராடிக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் கிராமத்தின் பெயர் யாழ்நகர். இப்படியான ஒரு காவியத்தில் இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு அருமையாகக் கையாண்டிருப்பது படத்தின் சிறப்புக்கு ஒரு சோறு பதம். யாழ்நகர் குப்பத்தின் குடிசைகள் எல்லாம் வெயில், மழை தாங்கும் கல் வீடுகளாக மாற்றி விட்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் வாழும் இளைய தளபதி விஜய் இனி அந்தக் குப்பத்துக்கு மட்டுமல்ல, இலங்கை இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்குமே தெய்வம் போலத்தான்.
படத்தின் நாயகி தமன்னா. பாசத்துடன் வளர்த்த நாய் காணாமல் போனதற்காகவே தற்கொலை பண்ண முயற்சிப்பதும், பின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் சொல்லாமலேயே, அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என்ற பயத்தில் தற்கொலை செய்ய முயற்சிப்பதும் அவரது இளகிய உள்ளத்தினை எடுத்துக்காட்டும் காட்சிகள். இரண்டாம் முறை தற்கொலைக்கு முயற்சிப்பவரை விஜய காப்பாற்றியபின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் கூறுகிறார். அப்போது தியேட்டரில் இருந்து இதற்கு தற்கொலையே மேல் என்று யாரோ ஒருவர் கத்தியது சத்தியமாக ரசிக்க முடியாத ஒன்று. இளைய தளபதி விஜயும் தமன்னாவை ஏற்றுக்கொண்டபிறகு வரும் டூயட் பாடல் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவாறு புதுமையாக, காதலைப் பறைசாற்றும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
காமெடிதான் படத்துக்கே பெரும் ப்ளஸ். ஒரே காட்சியில் வந்துவிட்டுப் போகும் கவுண்டமணி, செந்தில் ஜோடி, படம் முழுவதும் நினைத்து நினைத்துச் சிரிக்குமளவிற்கு காமெடி பண்ணிவிட்டுப் போகிறார்கள். அதற்குமுன் வடிவேலு அடிவாங்கும் காமெடிகளை ரசிக்க முடியவில்லை.
பின்னணி இசை படத்துக்குப் பெரும் பக்கபலம். படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் பின்னணி இசையை நிறுத்தி, வசனங்களை செவிமடுக்கவிட்டிருப்பது புதுவகை யுக்தி. ஆனாலும் படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் பஞ்ச் டயலாக்கே பேசிக்கொண்டிருப்பதால் பின்னணி இசை இருக்கும் நிமிடங்கள் மிகக் குறைவாகவே இருப்பது வருத்தம்தான்.
வடிவேலு, இளைய தளபதி விஜய் பேசிக்கொள்ளும் காட்சியினூடு றீமேக் படங்களை கலாய்ப்பது, தொடர்ந்து றீமேக் படங்களையே நம்பிக்கொண்டிருப்போர்க்கு செருப்படி. அத்துடன் படத்தின் பெரும்பாலான பாடல்க்காட்சிகளில் கால்சட்டையுடனேயே வந்துபோகும் தமன்னாவை, தஞ்சாவூரு ஜில்லாக்காரி பாடலில் தமன்னாவின் கால்சட்டையை மட்டும் ஆடவிட்டு விஜய் கலாய்ப்பதும் அழகு. இப்படியான காட்சிகள், தமிழ்ப்படம் போன்ற இன்னுமொரு ஸ்கூப் படம்தான் சுறாவோ போன்ற எண்ணப்ப்பாட்டை ரசிகர்கள்மத்தியில் அவ்வப்போது விதைக்கின்றன.
குப்பத்துத் திருவிழாவில் இளைய தளபதி விஜயை வெள்ளைக்காரிகளுடன் ஆடவிட்டு, கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தான் எவ்வகையிலும் சளைத்தவர் இல்லை என்று காட்டியிருக்கும் இயக்குனர் எஸ்.பி.இராஜக்குமார் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமைகளுப் புகுத்தி, எதிர்பார்ப்புகளை எகிறவைக்கிறார். கஷ்டம் அதிகாரியாக விஜய் வரும் காட்சியில், அவரை யாராலும் அடையாளமே காணமுடியாதவாறு செய்திருப்பதும், வெறும் பட்டாசுகளைக்கொண்டே, றாக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு தாக்குவதுபோல வில்லன் கூட்டத்தை நம்பவைப்பதும், பராசக்தி படத்தில் இருந்ததற்கு நிகராக நீதிமன்றில் இளைய தளபதி விஜய் பேசும் வசனங்களும் இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.
மொத்தத்தில் சுறா – சூப்பர்ப் படம்பா