Monday, May 3, 2010

சுஜாதா !!!


 

writer_sujatha_bday

 

சுஜாதா – அறிமுகமே தேவையில்லாத ஒரு ஆளுமை. அவரின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் சரி, இன்றய பதிவர்களும் சரி, அவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவிற்கு தனது மேலோட்டமான எழுத்துக்களால் வாசகர்களை ஆழமாகப் பாதித்தவர் சுஜாதா.

சுஜாதாவின் எழுத்துக்களில் தேவையற்ற விபரிப்புகள் இருக்காது. ஒரு நகைச்சுவை இருக்கும். விபரிக்கும் சூழலை உள்வாங்கி, அதற்கேயுரிய மொழிநடையில் ஆழமான கருத்துக்களையும் மிக இலகுவாகச் சொல்லிச்செல்வதில் அவருக்கு நிகர் அவரேதான். இலகுவான இந்த நடைதான் அவரை தமிழில் அதிகம் படிக்கப்படும் எழுத்தாளராக மாற்றியது மட்டுமல்ல, அவரது படைப்புக்களை ஒருதடவை படிப்பவர்கள் மேலும் தேடித்தேடிப் படிக்கவும் வைத்தது.

சுஜாதா ஒரு எழுத்தாளர் மாத்திரமல்ல, பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். அவரது காலம்வரை இருந்துவந்த எழுத்துநடையை இலகுவாக்கி, எழுத்துகளில் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை அதிகமாக இடம்பெறச்செய்த அவரது முயற்சிதான், அவரை வாசிப்பவர்களிடமும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்றய தமிழ்ப் பதிவுலகமும், அதன் அதிகப்படியான பரம்பலும் சுஜாதாவின் இந்த மாற்றத்தின் விளைவுதான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சுஜாதா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா என்ற எண்ணமும் கூட வருகிறது அவர் 60, 70 களில் எழுதிய கணையாளியின் கடைசிப்பக்கங்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் சினிமா பற்றிய எதிர்வுகூறல்களும் சரி, பல இடங்களில் குறிப்பிட்ட அறிவியல், தொழில்நுட்ப எதிர்வுகூறல்களும்சரி பல இன்று உண்மைகளாகியிருக்கின்றதை, உண்மைகளாகிவருவதைப் பார்க்கின்றபோது.

சிறுகதைஉலகில் இவரது பணி அளப்பரியது. கணேஷ், வசந்த் என்ற இரு கதாபாத்திரங்களை உருவாக்கி, வாசகர்கள் மனதில் உண்மையான கதாபாத்திரங்களாகவே நடமாடவைத்தவர். ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மூலம், நான் முன்பின் பார்த்திராத ஒரு ஊரையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர். கதைமாந்தர்களின் இலகுவான உரையாடல்மூலம் கதையை நகர்த்திச்செல்லும் இவரது பாணி, வாசகர்களை இலகுவில் கதையோடு ஒன்றச்செய்துவிடும்.

சினிமாவான இவரது படைப்புகள், வாசிப்பில் ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் ஏற்படுத்தத் தவறியிருந்தாலும்கூட, இவர் வசனமெழுதி வெளிவந்த படங்களின்மூலம் சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

பல்வேறு காரணங்களுக்காக சிலர் இவரது படைப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், இவர்வசமுள்ள பெரிய வாசகர் கூட்டமும், அவர்களில் இவர் ஏற்படுத்திய தாக்கமும் தமிழ் எழுத்துலகில் இருந்துகொண்டுதான் இருக்கும்.

பி.கு – மறைந்தும் மறையாமல் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்கு இன்று (03/05/2010) 75 ஆவது பிறந்தநாள்.

17 comments:

பத்மநாபன் on May 3, 2010 at 12:19 AM said...

வாழ்த்துக்கள் .. வாத்தியாரின் பிறந்த நாளன்று அவரை சிறப்பு செய்து ஒரு பதிவிட்டமைக்கு நன்றி ..

//மறைந்தும் மறையாமல் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர் சுஜாதா //..... மிகச்சரி நண்பரே ...

கன்கொன் || Kangon on May 3, 2010 at 12:19 AM said...

அநந்த மாபெரும் எழுத்து மேதை மறைந்தும் மறையாமல் வாழ்கிறார் என்பதற்கு இப்போதும் அவரது எழுத்துக்களுக்கு இருக்கும் மதிப்பும் வாழ்த்தும் மூலமே அறியலாம்.

மாபெரும் மேதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Prasanna on May 3, 2010 at 1:01 AM said...

தலைக்கு வாழ்த்துக்கள்.. உங்களுக்கு நன்றி :)

Bavan on May 3, 2010 at 7:40 AM said...

சுஜாதா = சரித்திரம்

சரித்திரத்துக்கு பிறந்தாநாள் வாழ்த்துக்கள்...;)

maruthamooran on May 3, 2010 at 8:26 AM said...

சிறப்பான நினைவூட்டல் சுபாங்கன்….

‘சுஜாதா’ என்கிற ஆளுமையின் தாக்கங்களை உள்வாங்கி நூற்றுக்காணக்கான இளைஞர்கள் எழுத்துலகில் நுழைந்திருக்கிறார்கள்.

இரத்தம் ஒரே நிறம், சிறிரங்காத்து தேவதைகள், தூண்டில் கதைகள், மத்மயர் என்று சுஜாதாவின் எழுத்துக்களை வாசித்துள்ளேன். உள்வாங்கியுமுள்ளேன்.

தமிழ் எழுத்துலகில், சிறிய அழகியல் முடிச்சுக்களின் மூலம் முடிவுகளைச் சொல்லி சிறுகதையுலகில் புதுமை புகுத்தியவர் சுஜாதா.

sasibanuu on May 3, 2010 at 9:27 AM said...

Good article on time

Hi Sujatha fans,
Pls go through

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2820

balavasakan on May 3, 2010 at 12:44 PM said...

இவர் வசனமெழுதி வெளிவந்த படங்களின்மூலம் சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்..##

இவரது வசனங்களுக்காகவே பல சங்கர் படங்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்...

Unknown on May 3, 2010 at 3:12 PM said...

அவர் ஒரு சகாப்தம்...
அவரிடம் 'கற்றதும் பெற்றதும்' ஏராளம்!

Karthik on May 3, 2010 at 4:38 PM said...

He is one tamil writer i really admire. Thanks thala for the post. :)

Belated birthday wishes to you too. :)

தமிழ் மதுரம் on May 3, 2010 at 5:30 PM said...

சுஜாதாவின் கதை வசனங்களும் சரி, அவரது உரை நடைகளும் சரி என்றென்றுமே மனதை விட்டு அகலாதவை.

நினைவூட்டலுக்கும், பதிவிற்கும் நன்றிகள் நண்பா.

INDIA 2121 on May 3, 2010 at 6:20 PM said...

SUPERB SIR
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

EKSAAR on May 3, 2010 at 6:51 PM said...

அருமையான பதிவு.. சுஜாதா மறக்கமுடியாத ஒருவர்
www.eksaar.blogspot.com

ramalingams on May 3, 2010 at 9:32 PM said...

sujatha is my roll model. he has dreamed national identification no 30 years back now it comes true.

anuthinan on May 4, 2010 at 12:54 PM said...

வாழ்நாள் சாதனையாளருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!

(http://anuthinan0.blogspot.com/)

தர்ஷன் on May 6, 2010 at 6:30 PM said...

சத்தியமான வார்த்தைகள் சுஜாதா தீர்க்கதரிசிதான்
நன்றி சுபாங்கன் வாத்தியாரை நினைவூட்டியமைக்கு
நானும் சுஜாதா பற்றி எழுதியிருந்தேன் முடிந்தால் வாசித்துப் பாருங்கள்

http://sridharshan.blogspot.com/2010/02/blog-post_26.html

பனித்துளி சங்கர் on May 7, 2010 at 10:29 PM said...

வாழ்த்துக்கள் நண்பரே எழுத்து சிகரத்தின் புகழை அவரின்பிறந்த நாளன்று மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு !

ம.தி.சுதா on September 3, 2010 at 11:18 PM said...

எத்தனை பேர் எழுதவந்தாலும் அவர்களில் இவரின் வாசம் வீசும் சுபா...

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy