இஞ்சியை மென்று விழுங்கிய ஃபீலிங்கில் தொடர்ந்து கொஞ்சநாள் பதிவெழுதிவிட்டேன் போலிருக்கிறது. பதிவெல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது, ஏதாவது பிரச்சினையா என்று கேட்டே விட்டார் ஒரு பதிவர். அதற்காகத்தான் இன்று கொஞ்சம் ஆறுதலாக. அவ்வப்போதாவது மரணமொக்கைப் பதிவுகளும் எழுதவேண்டும். இல்லாவிட்டால் யாழில் இலக்கியவாதியாக ஆக்கப்பட்டுவிடும் அபாயம்வேறு இருக்கிறது.
இப்போதெல்லாம் மூன்றுநாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை வந்தாலே வீட்டுக்குப் பயணப்பட்டுவிடுகிறேன். ஊரில் சந்திப்பதற்கு இதுவரைகாலமும் பதிவராக பாலவாசகன் மட்டுமே இருந்தநிலையில் இப்போது ஜெனாவும், Cool Boy கிருத்திகனும் இணைந்திருக்கிறார்கள். ஒருபுறம் Cool Boy தனது யதார்த்தமான கருத்துக்களால் கவர்கிறார் என்றால் மறுபுறம் பதிவர் ஜெனா எங்கள் ஆச்சரியத்தையும், பொறாமையையும் சேர்த்தே வாங்கிக்கொள்கிறார். முதலாவது சந்திப்பில் சுஜாதாவின் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். மனிதர் வீட்டில் பெரிய லைப்ரரியே வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். மகளுக்குச் சாக்லெட் கொடுப்பது போலவாவது ஒருமுறை உள்ளே நுளைந்துவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
அண்மைக்காலமாக அதிக நூல்கள் படிக்கக்கிடைக்கிறது. முக்கியமாக மூன்றைப்பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். முதலாவது த. அகிலனின் மரணத்தின் வாசனை. எமது ஈழத்து மொழிவழக்கில் எங்கேயோ கண்ட, கேட்ட போரின் வடுக்களைப்பற்றிப் பேசிச்செல்லும்போது அந்த வாசனையை உண்மையிலேயே உணரமுடிகிறது. அகிலனைச் சந்திக்கும் வாய்ப்பை அனியாயமாகத் தவறவிட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்புக்கிடைத்தால் கண்டிப்பாக சந்தித்தே தீரவேண்டும்.
அடுத்தது சுஜாதாவின் கொலையுதிர்காலம். நீண்டகாலம் தேடியலைந்த புத்தகம். இப்போதுதான் கிடைத்தது. விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து மனிதர் கதகளியே ஆடியிருக்கிறார். வழமைபோலவே விபரிக்கும் காட்சிகள் அனைத்தும் மனதில் திரைபோல விரிய, எதிர்பாராத திருப்பங்களுடன் கதை நகர்கிறது. அதிலும் கதாநாயகி லீனா குளிக்கும் காட்சியில் அவரது வர்ணிப்பு
“மார்பகங்கள் இரண்டு வெண்புறாக்கள் போல, இரண்டு ஷம்பேன் கோப்பைகள் போல – மிகக் கொஞ்சம் ஊதா தொட்டுத் தெரிய கணேஷ் எச்சிலை விழுங்கினான்”.
கூடவே வாசித்துக்கொண்டிருக்கும் நானும்.
மூன்றாவது புத்தகம் என்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவி. இரண்டு பாகங்களைக்கொண்ட கொஞ்சம் பெரிய நாவல். அவர் கதைகளில் உறவுகளைச் சித்தரிக்கும் பாங்கை முன்னர் வாசித்த சில நாவல்களிலேயே உணர்ந்திருந்தாலும், இதில் கொஞ்சம் அதிகமாகவே உணர்வுகளோடு விளையாடியிருக்கிறார். அதிலும் கதாநாயகியின் பாத்திரம் மனதைவிட்டு அகல மறுக்கிறது. ஏறத்தாள முழுக்கதையின் பெரும்பாலான பகுதிகளை ஒரே மூச்சில் படித்துவிட்டுப் படுத்த நேரத்தில் பெரும்பாலும் ஊரில் பலர் எழுந்துவிட்டிருப்பார்கள். அதற்கடுத்தநாள் ஸீரோ டிகிரி படிப்பதற்காய்த் திறந்து சிறிது நேரத்தில் லேசாகத் தலை வலிக்கத்தொடங்கியது. அனேகமாக முதன்நாள் சரியாக நித்திரை இல்லாததுதான் காரணமாக இருக்கவேண்டும்.
ராவணன் படத்தை அனேகமானோர் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டனர். அவற்றில் பெரும்பாலானவற்றை வாசிக்கமுதலேயே படத்தைப் பார்த்துவிட்டதாலோ, அல்லது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாத்தாலோ என்னவோ படத்தை ரசிக்கமுடிந்தது. ஆங்காங்கே உறுத்தல்கள் இருந்தாலும், படமாக்கப்பட்ட இடமும், கேமராவும், விக்ரமின் நடிப்பும் அபாரம். கேமராவுக்காகவே தியேட்டரைவிட்டு ஓடமுதல் இந்தியிலும் ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறேன். படம் பார்த்த அடுத்த நாளே மழை தூறிக்கொண்டிருக்க மலையேறும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் பாதிப்பில் நன்றாகவே ரசிக்க முடிந்தும் ஒரே குறை, பக்கத்தில் ஐஸ்தான் இல்லை.