Monday, December 28, 2009

சரக்கு வித் சைடிஸ் – 2009

11 comments


இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிராச்சரங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அதையெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? நானும் என்பங்குக்கு எனது பிராச்சரத்தையும் செய்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். தமிழ்மண விருதுக்காக நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவில் பதிவு எழுதிப்பார் என்ற பதிவையும், சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் இயற்கையின் வட்டமும், மதங்களும், மனிதர்களும் என்ற பதிவையும் நாமினேட் செய்திருக்கிறேன். நமக்குள்ள எதுக்கு வாக்குறுதி எல்லாம் குடுத்துகிட்டு? ஏதோ பாத்து செஞ்சிடுங்க மக்கா

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சுனாமியின் ஐந்தாவது நினைவுதினம் வந்து போய்விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத அனர்த்தம் அது. சுனாமி வந்தவுடன் ஏதோ கடல் ஊருக்குள் புகுந்துவிட்டதாம் என்று டியூசனை மூடிவிட்டார்கள். அப்பாடா என்று வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்தபிறகுதான் தெரிந்தது நிலமையின் உச்சம். அதன்பிறகு நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றபோது கண்ட காட்சிகள் மறக்கவே முடியாதவை. பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து செய்த முதல் நல்ல காரியம் எனக்குத் தெரிந்து நிவாரணப்பணிக்குச் சென்றதுதான். ஆனால் அன்று நாங்கள் சென்ற பகுதிகள் எல்லாம் இன்று அதைவிட மோசமாக அழிவடைந்துவிட்டன. இயற்கை எவ்வளவோ பரவாயில்லை இல்லையா?

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கிரிக்கெட்டில் அண்மையில் ரசித்த ஒரு விடயம் அவுஸ்திரேலிய வீரர் வட்சனின் ஆட்டமிழப்பு. பொதுவாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கும்போது அவர் ஆட்டமிழந்தாரா இல்லையா என்பதற்கே மூன்றாவது நடுவரின் உதவி நாடப்படும். ஆனால் இங்கே வட்சன், ஹட்டிச் இருவரில் யார் ஆட்டமிழந்தார் என்று அறிய மூன்றாவது நடுவரின் உதவி நாடப்பட்டதும், இறுதியில் ஒரு நொடிக்கும் குறைவான நேர வித்தியாசத்தால் ஹட்டிச் முந்திக்கொள்ள வட்சன் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும்தான் சிறப்பு. அந்தக் காட்சியை இங்கே சென்று பாருங்கள். கிரிக்கெட்டில் பலகாலங்களுக்கு பேசப்படப்போகும் விடயம் இது.

கடுப்பாக்கிய விடயம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கைவிடப்பட்ட நேற்றய போட்டி. இந்திய ஆடுகளங்கள் ஒன்றில் தட்டையாக, அல்லது இந்தமாதிரி அபாயகரமாக இருப்பது விளையாட்டின் சுவாரசியத்தையே குறைத்துவிடுகிறன.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இணையத்தில் படித்த செய்திகளில் கோபப்படுத்திய செய்தி ருச்சிகா கிர்கோத்திரா என்கிற பெண்ணின் மீது பாலியல் வன்முறை செய்த ரத்தோர் என்றவனுக்கு, 19 வருடங்களின் பின்னர் ஆறுமாத சிறையும், ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, உடனே பெயிலும் கொடுத்த நீதிபதிகள்(?) பற்றியது. 14 வயதுப்பெண்ணைக் கற்பழித்தவனை 19 வருடங்கள் வெளியில் விட்டுவைத்த்தும் அல்லாது, கொடுக்கப்பட்ட கேவலமான தீர்ப்பு நீதித்துறையின் கேவலம். இப்போது எனது பார்வையில் அந்த நீதிபதிகளும் குற்றவாளிகளே. இந்தியச் செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், இன்னும் பேசப்படாத எத்தனையோ செய்திகள் இங்கேயும் கிடந்து உறுத்துகின்றன.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்த வருடத்தில் எனது இறுதிப் பதிவு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். எனவே இப்போதே சொல்லிவிடுகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஒரு வார்த்தையில்லாக் கவிதை - இரக்கம் 


Monday, December 21, 2009

பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு

12 comments


Wind turbines


காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள்.Kitegen

பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் இதற்குப் பயன்படுகிறது. இவ்விசிறிகள் உயரத்தில் தொடற்சியான காற்றுக்கு பட்டத்தைக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அதில் கம்பிகளின் மூலம் பட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகள் பட்டத்தின் உயரத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சுமார் 2000 மீட்டர் உயரம்வரை இவை பறக்கவிடப்படுகிறது.

இவ்வாறு பறக்கவிடப்பட்ட பட்டங்கள், அவை இணைக்கப்பட்டிருக்கும் தளத்திலுள்ள மின்பிறப்பாக்கியைச் சுழலச்செய்கின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.

இங்கே முக்கியமான விடயம், இவ்வாறு பறக்கவிடப்படும் பட்டங்களின் பறப்பை தரையிலிருந்தே கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாகும். இவ்வாறு கட்டுப்படுத்தி, பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் மாற்றிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது பறக்கவிடப்படும் பட்டங்கள் பறவைகளைப் பாதித்துவிடாது இருப்பதற்காக ரேடார் மூலம் பறவைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்டங்கள் பறக்கவிடப்படுவதுதான்.

இது காற்றாலைகளைப்போல அதிக இடத்தை அடைக்காது என்பதுடன் அதிக மின்சாரத்தினையும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்துவரும் மின்தேவைக்காக எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பித்து, சூழலையும் மாசாக்குவதைவிட இவ்வாறான கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே!

இதன் தொழிற்பாட்டைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.


Saturday, December 19, 2009

வேட்டைக்காரன், பதிவுலகம், இன்னபிற…

18 comments

வேட்டைக்காரன் விமர்சனங்கள் பலவற்றைப் படித்தபின்பும், வேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு வந்த விஜய் ரசிகராக இருக்கும் நண்பனைக் கேட்டுவிட்டும் முடிவெடுத்துவிட்டேன். படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் போவதில்லை என்று. வரும் பொங்கலுக்கோ, இல்லை மாட்டுப் பொங்கலுக்கோ சன் டீவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். படத்தைப்பார்த்து, விமர்சனம் எழுதி என்னைக் காப்பாற்றிய அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றிகள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவு எழுதுவதால் அது வருங்காலத்தில் சோறு போடப்போவதில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்களை அடையாளம் தெரியாத இன்றய அவசர உலகத்தில் பதிவு எழுதிப் பிரபலம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. பின்னூட்டங்கள், ஓட்டுக்கள், ஹிட்ஸ் எல்லாவற்றையுமே அதிகமாகப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் இருக்கின்றன. ஆனால் பதிவு எழுதுவதால் கிடைக்கும் ஒரே பிரதிபலன் நண்பர்கள்தான். இப்படிக் கிடைக்கும் நண்பர்களுக்கிடையேயே ஆப்பு வைக்க யாராவது முகம்தெரியாதவர்கள் முயலும்போது ஆத்திரம்தான் வருகிறது.  இப்படிக் குறுக்கு வழிகளால் இவர்கள் சாதிக்க நினைப்பது எதனை என்றுதான் புரியவில்லை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

A9 வீதியினூடான யாழ்ப்பாணத்திற்கான பயணம் இலகுவாக்கப்பட்டிருக்கிறதாம். இதன் பின்னாலிருக்கும் அரசியல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கலாம். ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை 20000 ரூபா செலவுசெய்து வீட்டிற்குச் சென்று ஒருமாதம் இருந்துவிட்டு வரும் என்னைப்போன்றோருக்கு இது மகிழ்ச்சியான செய்திதானே? சனி, ஞாயிறோடு இரண்டு தினங்கள் கம்பஸ்சை கட் அடித்துவிட்டால் போதும். வீட்டுக்குச் சென்றுவந்துவிடலாம்.  இதற்கு அரசியல்களைக் கலந்து பின்னூட்டங்கள் வேண்டாமே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்த்து. இது தொடர்பாக பலரும் பதிவிட்டுவிட்டதால் இனிமேல் நானும் பதிவிடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால் இங்கே இடுகிறேன். சந்திப்பு தொடர்பாக அறிவித்தல்களை வெளியிட்ட திரட்டிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திற்குமே நன்றிகள். கலந்துகொண்ட பதிவர்கள் அனைவருக்குமே ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் நன்றிகள். அன்று ஏற்பாட்டு வேலைகள் சிலவற்றில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததால் கலந்துரையாடல்களில் கருத்துக்களைத் தெரிவிக்க முடியவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே முடிந்தது. இருந்தாலென்ன, இறுதியில் பதிவர்கள் நன்றிகூறி விடைபெறும்போது பெற்ற மகிழ்ச்சிக்கு இணையே இல்லையே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்தப் பதிவோடு எனது வலைத்தளத்தைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 150 ஆக மாறியுள்ளது. நன்றி நண்பர்களே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வழமையாக திங்கட்கிழமைகளில் வரும் சரக்கு வித் சைடிஸ் தான் இது. சிலபல காரணங்களுக்காக இன்று இடவேண்டி வந்துவிட்டதால் வேறு பெயரில்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

உண்மைக் காதல்

Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?

22 commentsகுழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பிடித்த நடிகராக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வலம்வந்த விஜய் இப்போது குழந்தைகளுக்கு விஜய்கிட்ட புடிச்சுக் குடுத்துடுவன் என்று வெருட்டி பெண்கள் சாப்பாடு ஊட்டும் நிலைக்கு வந்துவிட்டார் என்றால் அதற்கு காரணம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. விஜய் ஜோக்ஸ் என்ற பெயரில் எங்களுக்கும் கலகலப்பூட்டுகிறார் விஜய்.

வேட்டைக்காரனுக்கு வரும் எதிர்ப்பு என்ற பெயரிலான பிரச்சாரத்தையும், சன் குழுமத்தின் விளம்பரத்தையும் தாண்டி வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?1. வேட்டைக்காரன் வெற்றிபெறப்போகிறது என்று எழுதிவரும் பதிவர்கள் இனி சுறா வெற்றிபெறும் என்று எழுதத் தொடங்குவார்கள். விஜயை வறுக்கும் பதிவுகள் அதிகமாகும்.

2. விஜயின் ஐம்பதாவது படத்துக்கு தியேட்டரே கிடைக்காது.

3. பழைய படப் பெயர்களை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

4. ஜேம்ஸ் கமரூனின் அவதார் போன்ற படங்களை தவிர்த்து தமிழ்ப் படங்களைப் பார்க்கும் சாதாரண மக்கள் கூட வேறு மொழிப் படங்கள் மேல் காதல் கொள்வர்.

5. இயக்குனர் பாபு சிவனை யாருமே தேடமாட்டாரகள்.

6. எந்த மொக்கைப்படத்தையும் ஓடவைக்கலாம் என்ற சன் பிக்சர்சின் நினைப்புக்கு மரண அடி விழும்.

7. விஜய ஆன்டனி – விஜய் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள் என்பதுடன் அவர் இனி விஜய்க்கு இசையமைக்கவே வரமாட்டார்.

8. ஏற்கனவே படம் பாரக்காமல் விஜய் படத்துக்கு விமர்சனம் எழுதும் பதிவர்கள் குருவி பட விமர்சனத்தையே மீள்பதிவாக வேட்டைக்காரனுக்கும் இடுவார்கள்.

9. இந்தப் படக் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள்.

10. விஜய் – த்ரிஷா ஜோடியால் த்ரிஷா ஓரங்கட்டப்பட்டது போல அனுஷ்காவும் ஓரங்கட்டப்படலாம்.

11. Blonde Jokes, Sartharji Jokes போல தமிழருக்கென தனியான நகைச்சுவையாக விஜய் ஜோக்ஸ்  உருவாகலாம்.

12. வேட்டைக்காரன் ஓடும் என்று பதிவுபோட்டு ஹிட்ஸ் தேடிய பதிவர்களின் ஹிட்ஸ் குறையலாம்.

13. நம்ம சதீஷ்க்கு விஜயைப் பிடிக்காமல் போகலாம்.

14. .நான் இந்த பதிவு போட காரணமாக இருந்த சதீஷ் வேட்டைக்காரன் வென்றுவிட்டால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்

15. தியேட்டர் திரைகள் விஜய் ரசிகர்களால் கிழிக்கப்படலாம்.

16. படத்தைப் புறக்கணிப்போம் என்ற பெயரால் படத்துக்கு மறைமுக விளம்பரம் செய்யும் சிலர்??? இதை நீங்களே சொல்லுங்கள் அவர்கள் கதி என்னாகும்

17. இதைவிடக் கொடுமை, இனி விஜய் இப்படிப் படங்களில் நடிக்காது விடுவதால் எமக்கு பதிவிட விசயமே கிடைக்காது போகலாம்.
டிஸ்கி 1 – இந்தப்பதிவு சதீஷின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு அல்ல.

டிஸ்கி 2 – இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.Sunday, December 13, 2009

இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்

22 comments
இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு இன்று மாலை இரண்டு மணியளவில் ஆரம்பமாகி சுமார் அறுபது பதிவர்களின் நேரடிச்சமூகத்துடனும் மேலும் 20க்கும் மேற்பட்டோரின் இணைய த்தினூடான பார்வையிடலுடனும் மிக மிக வெற்றிகரமாக தேசிய கலைப்பேரவை மண்டபத்தில் நடை பெற்று முடிவடைந்தது.  இதுதொடர்பாக விரைவில் பதிவிடுகிறேன். இப்போது இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் உங்களுக்காக.Friday, December 11, 2009

பதிவுலக கிசுகிசுக்கள்

22 comments
இலங்கையின் பதிவர் சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருப்பதால் அதற்கான ஆயத்தங்களில் பதிவர்கள் மும்முரமாகிவிட்டார்கள். இவர்களை இரகசியமாமக் கண்காணித்ததில் கிடைத்த நம்பந்தகுந்த தகவல்கள் இவை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சென்ற பதிவர் சந்திப்பில் தான் சொன்ன மொக்கை ஜோக்குக்கே பலரும் சிரித்ததால் இம்முறையும் ஜோக் சொல்லவென ஆனந்தவிகடன், குமுதம், இருக்கிறம், ப்ளேபோய் போன்ற பத்திரிகைகளை மந்திப்பதிவர் படித்துவருவதாக அவரது கீர்த்தி அறிந்தோர் தெரிவிக்கின்றனர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கடல்கடந்து இருக்கும் பெண் பதிவரிடம் அடிக்கடி நோண்டி ஆகும் போண்டிப்பதிவர் இம்முறை பத்து ரூபாய்க்காக லோக்கலிலும் வம்பிழுத்துவிட்டதால் கவர்ச்சிப் பதிவரின் பின்னால் பதுங்கியிருக்க முடிவெடுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவர் சந்திப்புக்கு வருவோர் தன்னிடம் கேட்கப்போகும் கேள்வியை முன்னரே ஊகித்துவிட்ட பிரபல பதிவர் ஒருவர் எல்லாம் காற்றுச் செய்த கயமை என்று அறிக்கை விட்டுள்ளாராம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சமுதாயப்பொறுப்புடன் எழுதும் குட்டிப்பதிவர், பதிவர் சந்திப்புக்கு அனைவரும் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு பயபக்தியுடனேயே வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகத் தகவல்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தன் சிகையலங்காரத்தால் இம்முறை அதிக ரசிகர்கள் தன்பக்கம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாராம் பெட்டிப்பதிவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்தியாவிலிருந்து உச்சந்தலையில் குடுமியுடன் ஒருவர் வருவதாக்க் கிடைத்த தகவலை அடுத்து, வகுப்பு என டிவிட்டரில் அறிக்கை விடுத்துவிட்டு மாயமாகிவிட்டாராம் படம் காட்டும் பதிவர் ஒருவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவர்கள் தலைக்கு நூறு ரூபாய் இட்டே பதிவர் சந்திப்பை சிறப்பாக நடாத்த உள்ளதால், அதற்கு ஐந்தொகை தயார்செய்து, அது IAS இற்கு உட்படுகிறதா என ஆராய்ந்துகொண்டிருக்கிறாராம் பங்கு பிரித்து சந்தையில் போடும் பதிவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அண்மையில் அனானியிடம் அடிவாங்கிய பதிவர் ஒருவர் பதிவர் சந்திப்பை டிவிட்டரில் நடாத்துவது தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறாராம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்ப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும், போட்டிகளில் வெல்வதற்கும் நீங்களும் வருகிறீர்கள் தானே? எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டுமணிக்கு கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு?


Tuesday, December 8, 2009

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல!

41 comments
சில பாடல்களைக் கேட்கும்போது எங்களை இருந்த இடத்திலிருந்து இன்னுமொரு உலகத்திற்குத் தூக்கிச்சென்றுவிடும். எமக்குள்ளும் இயக்குனர்கள் உருவாகியது போல பாடலின் வரிகள் மனதில் காட்சிகளாக விரியும். பாடலை மீண்டுக் மீண்டும் கேட்கவேண்டும் போல இருக்கும். அனுபவித்திருக்கிறீர்களா?

அப்படியாக நான் அனுபவித்த ஒரு பாடல் சர்வம் படத்தின் சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

பாடலின் ஆரம்ப இசையே பாடலைக் கண்ணைமூடி ரசிக்கவைத்துவிடுகிறது.

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!

காதலர்கள் சந்தித்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்தாலும், பிரியும்போது வரும் ஏக்கமும் வெறுமையும், பாடல் வரிகளினூடே உணர முடிகிறது. காதலி விலகிச் சென்றுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுமே, அப்படி ஒரு சிலிர்ப்பு இந்த வரிகளில்.

ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

இந்த வரிகளைக் கேட்கும்போது இனம்புரியாத ஒரு உணர்வு. ஆற்றில் சலனமில்லாது ஓடும் நீரின் நடுவில் தத்தளிக்கும் சிறு எறும்பின் உணர்வு. ஆழ்மனத்து அமைதியை ஒருமுறை தட்டிப்பார்க்கிறது.

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அற்புதமாகக் காதலின் உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறது வரிகள். பிரிவின் வலியும் அதனூடே காதலியை உணர்வதும் அழகு.

உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

இந்த வரிகளும், அதைத் தொடரும் இசையும் கண்ணை மூடிக் கேட்டால் ஒரு வித்தியாசமான உணர்வுக்குத் தள்ளப்படுகிறேன். காற்றில் மிதப்பது போன்ற உணர்வு. அற்புதமான வரிகள். அதற்கேற்ற இசை.

உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை 
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

காதலின் உணர்வுகள். வேறென்ன சொல்ல?

அமைதியான நேரத்தில் நீங்களும் கேட்டுப்பாருங்கள். எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்.Monday, December 7, 2009

கடவுளாக்கப்பட்ட கயவர்கள்

70 commentsபகுத்தறிவு வளர்கின்றது, மூடநம்பிக்கை அகல்கின்றது என்று என்னதான் வாய்கிழியக் கத்தினாலும் உண்மையில் நடப்பதெல்லாமே நேர்மாறுதானா என்று எண்ணத்தோன்றுகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சியொன்றில் ஒரு குப்பைத்தொட்டிக்கு பட்டுக்கட்டி, பூச்சூடி அதை மங்களகரமாக மாற்றிவைக்க பலரும் அதை கும்பிட்டுவிட்டுப் போவதாகக் காட்டினார்களாம். இப்படிக் கண்டதையும் கடவுளாக்கி வணங்கும் மூடநம்பிக்கைகள் மற்ற மனிதர்களை கடவுளாக்கி, கோயில்கட்டிக் கும்பிடும் நிலையையும் தாண்டி நிற்கின்றது.

பல காலமாகவே தம்மை அவதாரம், கடவுள் எனக் கூறி அடுத்தவர்களை ஏமாற்றும் கூட்டம் இருந்துகொண்டே இருந்தாலும், அது பெரும்பாலும் அந்த ஊரோடு, அல்லது கிராமத்தோடே மட்டுப்படுத்தப்பட்டுவிடும். இந்த நிலமை இன்று மோசமாகி பல நாடுகளிலும் கிளை தொடங்கி சம்பாதிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதற்கும் ஒவ்வொரு ஊரிலும் கையூட்டுப் பெற்ற ஒரு கூட்டம், இவர்களின் பயப்பு வார்த்தைகளுக்கு மயங்கிச் செல்லும் கூட்டத்தை அப்படியே வளைத்துப்போட நன்கு பயிற்றப்பட்ட இன்னுமொரு கூட்டம் என்று இந்தக் கடவுள் வியாபாரத்துக்குப்பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னலே இயங்குகிறது.

இப்படியானோரின் பிரார்த்தனைகளின் ஆரம்பத்தில் கண்டிப்பாக ஒரு தியானம் இருக்கும். எப்படிப்பட்ட மனதையும் தியானம் ஒருநிலைப்படுத்திவிடும் என்பது விஞ்ஞானம். மனம் ஒருநிலைப்பட்டு அமைதியடைந்தவுடனேயே பலர் இவர்களைக் கடவுளாக நம்பத்தொடங்கிவிடுவார்கள். அதன்பிறகு காண்பிக்கப்படுபவை எல்லாம் மேஜிக். கண்கட்டுவித்தை. இவற்றையெல்லாம் நம்பி, இவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பவர்களால் இன்று கோடிகளில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் கடவுள்கள்.

பார்ப்பதற்கு ஒரு கட்டணம், பேசுவதற்கு இன்னுமொரு கட்டணம் என அறவிடும் இந்தக் கயவர்கள், அவற்றை முதலிடுவதற்கு பிள்ளைகளின் பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் பல கல்லூரிகள், கட்டுமானக் கம்பனிகள் என வைத்து அரசாங்கங்களையும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்றய மனிதனுக்கு எதிலும் அவசரம். கோயில்களுக்குச் சென்று கடவுளை வளிபடுவது ஒருவழித் தொடர்பாடல். பதிலும் கிடைக்காது, நடக்குமா என்பதும் தெரியாது. பதிலாக இப்படியானவர்களின் சாந்தமான பேச்சும் நடத்தையும், பதிலும் மனதுக்கு நம்பிக்கையாக இருப்பதால்தான் இப்படியானவர்களுக்கும் கூட்டம் கூடுகிறது. இது மட்டுமா? மற்றவர்களைக் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு மனிதன் கையாளும் மார்க்கம்தான் மாந்திரீகம். இப்படி மனிதர்களுக்குள் வளரும் போட்டிகளால்தான் மனிதக் கடவுள்களும் வளர்க்கப்படுகிறார்கள்.

எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல.

இறுதியாக ஒன்று. எனக்கு இந்த மேஜிக் செய்பவர்களைக்கண்டால் தொன்றுவது, இப்படி மேடைக்கு மேடை மேஜிக் செய்வதை விட்டுவிட்டு பேசாமல் கடவுளாகியிருக்கலாம். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதை விடுத்து கோடிகளில் கூடிவாழ்ந்திருக்கலாமே.


Saturday, December 5, 2009

த(ல)லைக்கு விழுந்த ஆப்பு!

60 comments

நுணலும் தன் வாயாற் கெடும் என்பார்கள். வழக்கம் போல சும்மா இருக்காமல் வாயைக் கொடுத்ததால் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தை இங்கே பதிவுசெய்கிறேன்.

பொதுவாகவே நான் தலைமுடி அலங்காரத்தில் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. சலூனுக்குப்போனோமா, ஏதோ முடியை வெட்டினோமா, வந்தோமா என்பதுதான் எனது வழமை. நேற்றுவரை இதுதான் தொடர்ந்தது.

இன்று காலை தலைமுடி வெட்டுவதற்காக கடைக்குள் நுளைந்தபோதுதான் என் நாக்கில் நரகாசுரன் ஏறி நர்த்தனமாடிவிட்டான்.  முடி திருத்துபவரிடம் ஏற்கனவே நான் திட்டமிட்டிருந்தவாறு எப்படி வெட்டவேண்டும் என்பதை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தெளிவாகக் கூறிவிட்டு தலையைக் கொடுக்கத் தயாரானேன்.

நான் கூறியபடியே ஆரம்பித்தார் அவர். ஓரங்களை மெசினால் ட்றிம் பண்ணவா என்று கேட்ட அவருக்கு சரி என்று கூறியபோது நாக்கு மீண்டும் தன் வேலையைக் காட்டிவிட்டிருந்தது அப்போது எனக்குத் தெரியவில்லை. மெசினை எடுத்து, காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். செதுக்கி முடித்தபிறகுதான் கவனித்தேன். என் மண்டை மட்டுமல்ல, அதற்கு உள்ளாக இருக்கும் அனைத்துமே ஏறத்தாள தெரியத்தொடங்கியிருந்தது. அடுத்தது என்ன செய்வது என்று யோசிக்குமுன்னரே அவரது கத்தரி உச்சி மண்டையையும் பதம் பார்த்திருந்தது.இப்படியல்ல, என் நிலமை இதைவிடக் கேவலம்

அழாக்குறையாக வீட்டுக்கு வந்த என்னை, வீட்டிலிருக்கும் வாண்டு மொட்டை அண்ணா என்று அழைக்க, ஏனையோர் அதைப்பார்த்துச் சிரிக்க என்று இன்று வீட்டில் ஹீரோ நான்தான். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லதாக ஏறத்தாள பொலீசாரின் தலைவெட்டுப்போல் இருப்பதால் இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது.


Tuesday, December 1, 2009

அகவை ஒன்றில் ஐந்தறைப்பெட்டி!

59 comments
நேற்றுப்பொல இருக்கிறது. லோஷன் அண்ணாவின் தளத்தைப்பார்த்து பிளாக் ஒன்றை ஆரம்பித்துவிட்டு, என்ன போடுவது என்று தெரியாமல் மின்னஞ்சலில் கிடைத்த படங்களைப் பதிவேற்றியது. சரியாக இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.

ஆரம்பத்தில் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என ஒன்றுமே தெரியாமல் எழுதிவந்த நான், இன்று ஏதோ ஒரளவு எழுதுகிறேன் என நீங்கள் நினைத்தால் தமது எழுத்துக்களை வாசிக்கச்செய்ததன்மூலம் என்னைத் திருத்திய பதிவுலகின் அத்தனை முகம்தெரியா நண்பர்களையும்தான் சாரும்.

இந்த ஒரு வருடங்களில் பதிவுலகம் பல முகம் தெரிந்த, தெரியாத நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. பலரை என்னையும் வாசிக்கவைத்துள்ளது. எனது வாசிப்பு அனுபவத்தை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் எனது ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாக்கியுள்ளது.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதுதான். இங்கே நான் எழுதுபவற்றில் எங்கோ நான் படித்தவற்றின் தாக்கம் இருக்கலாம். ஆனாலும் copy ஆக இருக்காமல் Smart copy ஆக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே எழுதிக்கொண்டிருக்கிறேன். பதிவுலகில் என்னோடு ஒத்த விருப்பு வெறுப்புக்களைக்கொண்ட பலரை சந்திக்கக்கிடைத்ததும், அவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருவதும் என்னையே நான் பார்ப்பதுபோன்ற உணர்வுகளை பல இடங்களில் சந்தித்திருக்கின்றேன். இவற்றின் தாக்கங்கள் இல்லாமல் எழுதுவது என்பது கொஞ்சம் கடினமான விடயம்தான்.

இதுவரை எழுதியவற்றுள் தொழில்நுட்ப்ப்பதிவுகளே அதிகம். ஆனாலும் அவை என் கற்பனைக்குதிரைக்குக் கடிவாளம் என உணரத்தொடங்கியதால் கொஞ்சம் அவற்றைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் என்னிடம் தொழில்நுட்ப்ப்பதிவுகளை எதிர்பார்ப்பவர்களுக்காக இவற்றைப் பகிர்வதை முற்றாக நிறுத்திவிடப்போவதில்லை.

இந்த ஒரு வருடத்தில் எனது எழுத்துநடை பெரிதளவில் மாறியுள்ளது எனக்கே தெளிவாகத் தெரிகிறது. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் பதிவுலக ஃபோபியாக்களிலிருந்தும் கொஞ்சம் விடுபட்டிருக்கிறேன். இங்கே மனிதர்களைத்தவிர மற்றெல்லாம் போலி என்ற ஒரு கருத்துக்கு வந்துவிட்டேன். பட்டுத்தெளிந்த விடயம் இது.

இங்கு காணப்படும் நட்புத்தான் இந்த ஒருவருடமும் என்னை பதிவுலகோடு கட்டிப்போட்டுவைத்திருக்கிறது. பல வழிகளிலும் என்னை ஊக்குவிக்கும், தொடர்ந்து படித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்!


Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy