வாழ்க்கை ஒரு வட்டம், இங்கே தோக்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான். ஒரு பிரபலமான Dialogue. ஆனால் இது உண்மையும் கூட. வாழ்க்கை மட்டுமல்ல, இயற்கையின் அத்தனை நிகழ்வுகளுமே ஒரு வட்டப்பாதையில்தான் நிகழ்கின்றன. கோள்கள் சூரியனைச் சுற்றுவது, உப கோள்கள் கோள்களைச் சுற்றுவது, மாதங்கள், நாட்கள், பெண்களின் மாதவிடாய், வானிலை, காலநிலை என எரிமலை வெடிப்பது முதல் எறும்பின் வாழ்க்கை வரை அத்தனையுமே ஒரு வட்டத்தில்தான் நிகழ்கின்றது.
ஒவ்வொரு வட்டப்பாதையும் அதற்கேயுரிய ஒழுங்கமைப்பில், கால இடைவெளியில் நடைபெறுகின்றது. ஆனால் மனிதனின் மனிதன் தன் விஞ்ஞானத்தால் இதைக் குலைக்க முயல்கிறான். மனிதனால் இயற்கையின் வட்டப்பாதையின் கால அளவை மாற்ற முடிந்ததே தவிர இன்றுவரை எந்த ஒரு வட்டப்பாதையையும் குலைக்க முடியவில்லை. மாறாக மனிதன் அவ்வாறு குலைக்கும் போதெல்லாம், இயற்கையின் ஒழுங்கு குலைந்து அது மனிதனிற்கே எமனாக ஆவதுதான் நிகழ்கின்றது. இவற்றை மனிதன் உணர்ந்தாலும், ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.
இந்த இயற்கையின் வட்டத்திற்றான் மனிதனின் வாழ்க்கை வட்டம், வாழும் முறை, ஏன்?, மனிதனின் நடை, உடை பாவனைகூட நிகழ்கின்றது. முக்கியமாக மனிதனின் உடை நாகரிகத்தின் வட்டம் மிகக் குறுகியதாக இருப்பதுடன் எளிதாக உணரக்கூடியதாகவும் உள்ளது.
இந்த வட்டத்திற்கு மனிதனின் அறிவும் தப்பவில்லை போன்றே தெரிகின்றது. இன்றய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் பெரும்பாலானவை பண்டய மனிதர்களால் அறியப்பட்டவை என்பது பல சமய நூல்களில் இருந்து அறியமுடியும். ஆனால் அவை சமயத்தைச் சார்ந்திருப்பதாலும் ஆதாரங்கள் இல்லாதிருப்பதாலும், வேறுபல காரணங்களாலும் அவற்றை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு மறைத்தும் விடுகின்றனர்.
எந்த ஒரு மதமும் அதன் அடிப்படையில் பகுத்தறிவையே போதிக்கின்றது. அவ்வாறே மதங்களின் தோற்றத்திற்கும் பகுத்தறிவு வாதிகளே காரணமாக இருந்துள்ளனர். புத்தரே, இயேசுவோ, இல்லை நபியோ போதித்தது பகுத்தறிவையே தவிர மதத்தையல்ல. அவர்கள் போதித்த பகுத்தறிவே மார்க்கங்களாகக் கருதப்பட்டு பின் மதங்களாகத் தோற்றம் பெற்றன. இந்து சமயத்திற்கோ அடிப்படையாக இயற்கையே உள்ளது. பண்டைய மனிதர்கள் வணங்கிய இயற்கைப் பொருட்களே பின்வந்த மனிதர்களால் தெய்வ வடிவம் கொடுக்கப்பட்டு கடவுள்களாக்கப்பட்டன. இன்றும் கூட இயற்கை வளிபாடு இந்து சமயத்தில் பல மாற்றங்களுக்குட்பட்டாலும் உள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு மதங்களையும் பின்பற்றியோரில் ஒருசிலர் தமது வயிற்றுப் பிழைப்புக்காக மதங்களின் அடிப்படையான பகுத்தறிவைப் பின்தள்ளி மூட நம்பிக்கைகளை வளர்த்தனர். தொழில் முறைச் சாதிகளை, சாதிமுறைத் தொழில்களாக மாற்றினர். இவ்வாறு சாதிமுறையைச் சாராத சமயங்கள் தமது மதத்தைப் பரப்புவதற்கு அதே சாதியைக் கையில் எடுத்தன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன.
இவ்வாறு மூட நம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கப்பட்ட மனிதர்கள் சிந்திக்கத்தொடங்கியதுதான் விஞ்ஞான வளற்சி. இந்த விஞ்ஞான வளற்சியிற்றான் மனிதன் மதங்களை விடுத்துப் பகுத்தறிவு பேசுகின்றான். ஆனால் இன்றய அனைத்து மதங்களும் அதே பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றன என்பதை மறந்து விடுகிறான். அப்பகுத்தறிவு மூட நம்பிக்கையாகி, இன்று மீண்டும் அதே பகுத்தறிவு உச்சம் பெறுகின்றது. இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களிலேயே, இல்லாவிட்டால் மனிதனின் உணர்வுகளிலேயே, இல்லை மனிதனின் சிந்தனைகளிலேயே இயற்கை தனது வட்டத்தைக் காட்டிவிட்டது இல்லையா?
9 comments:
மனிதனின் உணர்வுகளிலேயே, இல்லை மனிதனின் சிந்தனைகளிலேயே இயற்கை தனது வட்டத்தைக் காட்டிவிட்டது இல்லையா? /////////
சரியான கருத்து
Marvelous analyzed article anna…..
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் !
\\இவ்வாறு ஒவ்வொரு மதங்களையும் பின்பற்றியோரில் ஒருசிலர் தமது வயிற்றுப் பிழைப்புக்காக மதங்களின் அடிப்படையான பகுத்தறிவைப் பின்தள்ளி மூட நம்பிக்கைகளை வளர்த்தனர். தொழில் முறைச் சாதிகளை, சாதிமுறைத் தொழில்களாக மாற்றினர்\\
இதை நம்மால் முடிந்தவரை எடுத்துச்
சொல்லுவோம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
அருமையான் ஆக்கம். தொடருங்கள் சுபாங்கன்
அருமையான் ஆக்கம். தொடருங்கள் சுபாங்கன்
அருமையான் ஆக்கம். தொடருங்கள் சுபாங்கன்
சுபாங்கன் உங்களுடைய கட்டுரை மிக மிக சுருக்கமாக காணப்படுகின்றது. நிறைய விடயங்கலை உங்களுடைய தனிப்பட்ட முடிவுகளாக சொல்லியிருக்கின்றீர்கள், அவற்றை ஆதாரங்களுடன், உதாரணங்களுடன் அல்லவா நீங்கள் முன்மொழிந்திருக்கவேண்டும். மாறாக ஒரு பிரசங்கி போதிப்பது போல அறிவியல் விடயங்களை எவ்வாறு முன்மொழியமுடியும்?
//இன்றய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் பெரும்பாலானவை பண்டய மனிதர்களால் அறியப்பட்டவை என்பது பல சமய நூல்களில் இருந்து அறியமுடியும்//
பொதுப்படையாக சொல்லியிருக்கின்றீர்கள். உதாரனத்துக்கு சில பல கண்டுபிடிப்புக்களை முன்வைக்கமுடியுமா? நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும், விஞ்ஞானம் என்பது, இயற்கையை விபரிப்பது. இயற்கை நிகழ்வுகளை விபரிப்பது. காரணகாரியங்களை கண்டறிவது.
//ஆனால் அவை சமயத்தைச் சார்ந்திருப்பதாலும் ஆதாரங்கள் இல்லாதிருப்பதாலும், வேறுபல காரணங்களாலும் அவற்றை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு மறைத்தும் விடுகின்றனர்.//
இதற்கும் உங்கள் உதாரணங்களை முன்வைத்தீர்களானால், மேலே தொடரலாம்.
//எந்த ஒரு மதமும் அதன் அடிப்படையில் பகுத்தறிவையே போதிக்கின்றது. //
எதை வைத்துகொண்டு இப்படிச்சொல்கின்றீர்கள் என்று தெரியவில்லை. நம்பிக்கை என்ற மூளையின் அபரிமிதமான செயற்பாடு, பரிணாமத்தில் மனித இனத்துக்கு மிக மிக அவசியமாக இருந்தது. நம்பிக்கை என்ற தொழிற்பாடு கூட, பரிணாமத்தில் மனிதன் அடைந்த பகுத்தறிவு என்ற அரும்பெரும் மூளைச்செயற்பாட்டின் ஆரம்பமே.
உங்களுக்கு ஒரு உதாரணத்தை முன்வைக்கின்றேன்.
ஒன்று - மரங்கள் திடீரென்று பேயாட்டம் ஆடியபோது, பயந்த மனிதன், அங்கே ஏதோ ஒரு சக்தி உள்ளதென்றும், அது தான் மரங்களை பிடித்து ஆட்டுவிக்கின்றது என்று சிந்தித்தான் (பகுத்தறிந்தான்). கோபம் கொண்ட அந்த சக்தியை சாந்தப்படுத்த, பூசை, மந்திரங்கள் என்று செய்யத்தொடங்கி, அந்த ஆட்டுவித்த சக்தி கடவுளாக்கப்பட்டு வணங்கப்பட்டது.
இரண்டு - இல்லையில்லை, பூமியிலே வளிமண்டலமுள்ளது. அத்லே பல வாயுக்கள் உள்ளன, அவை உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதன. வளி அசையும்போது காற்று என்கின்றோம். வளிமண்டல வளியமுக்க மாற்றங்களால், பேய்க்காற்று, புயற்காற்று வீசுகின்றது. அதனால் மரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன.
இப்போது சொல்லுங்கள், விடயம் ஒன்றா அல்லது இரண்டா உங்களுக்கு பகுத்தறிவானதாக தெரிகின்றது. ஒன்று - அப்போது, சரியான பகுத்தறிவாக தென்பட்டது. ஆனால் இப்போது சொல்லுங்கள் எது பகுத்தறிவு. பகுத்தறிவு என்றால் என்ன (பகுத்தறிவு - Reasoning)
//இந்த விஞ்ஞான வளற்சியிற்றான் மனிதன் மதங்களை விடுத்துப் பகுத்தறிவு பேசுகின்றான். ஆனால் இன்றய அனைத்து மதங்களும் அதே பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றன என்பதை மறந்து விடுகிறான்.//
சுபாங்கன்,
மதங்கள் சொல்லும் கருத்துக்கள் அநேகமானவை அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு முரணானவையே. பூமி தட்டையென்றும், பிரபஞ்சத்டின் மையம் பூமியென்றும், பிரபஞ்சமும், சூரியக்குடும்பமும் 6000 ஆண்டுகளுக்கு முன் 6 நட்களின் உருவாக்கப்பட்டது என்றூம் பைபிள் சொல்வதை ஏற்றுக்கொள்ளச்சொல்கின்றீர்களா?
//சுபாங்கன் உங்களுடைய கட்டுரை மிக மிக சுருக்கமாக காணப்படுகின்றது. நிறைய விடயங்கலை உங்களுடைய தனிப்பட்ட முடிவுகளாக சொல்லியிருக்கின்றீர்கள், அவற்றை ஆதாரங்களுடன், உதாரணங்களுடன் அல்லவா நீங்கள் முன்மொழிந்திருக்கவேண்டும்.//
ஆமாம், உண்மைதான். நான் பதிவெழுதவந்த ஆரம்பத்தில் இப்பதிவு எழுதப்பட்டதால் எழுதுவது தொடர்பான அறிவு அப்போது குறைவு (இப்போது வந்துவிட்டதாகச் சொல்லவில்லை). இப்பதிவில் குறிப்பிட்டவை எதன் அடிப்படையில் எழுதப்பட்டது, ஆதாரங்கள் அல்லது உதாரணங்கள் என்பவற்றை விரைவில் இங்கேயோ அல்லது தனிப்பதிவாகவோ தருகிறேன். இப்போது ஆணிகள் அதிகமாக இருப்பதால் எழுதமுடியவில்லை.
Post a Comment