Wednesday, February 1, 2012
வேண்டாம்.. விலகிவிடு!
காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது
வேண்டாம் விலகிவிடு
வேண்டாம்.. விலகிவிடு!
மரணத்தின் வலிகூட
மரத்துப்போன பிறகும் - உன்
வார்த்தைகள் வலிக்கிறது..!
வேண்டாம்.. விலகிவிடு!
காலங்கள் கடந்து
காப்பியமாய்க் கிடக்க - காதல்
முடிந்ததென்று நீயோ
முற்றுப்புள்ளி இடுகிறாயே..!
வேண்டாம்.. விலகிவிடு!
கற்கள் கேட்கிறாயே நீ - இந்தக்
காதல் கொண்ட கடைக் கவியிடம்
சொற்கள் மட்டும்தானே
சொந்தமாய் இருக்கின்றன!
வேண்டாம்.. விலகிவிடு!
யதார்த்தம் பேசுகிறாய் நீ - அது
முடியாதவர்களின்
முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் - இன்னும்
எஞ்சியிருக்கும் வெப்பம்
அது போதும் எனக்கு!
வேண்டாம்.. விலகிவிடு!
என்
கவிதைகள் கசக்கிறதா உனக்கு? - சொல்
மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்
என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? - சொல்
போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்
மரணம் கேட்கிறாயே நீ - மறந்தாயா
நம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!
வேண்டாம்.. விலகிவிடு!
நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்
வேண்டாம்.. விலகிவிடு!
Tuesday, December 27, 2011
கால இயந்திரம்
சட்டென்று தனிமை
ஆட்கொள்ளும் நேரங்களில்தான்
தேவையற்ற நினைவுகளும்
செருகேடுகளின் ஞாபகமும்..
புரட்டத் தொடங்கிய
செருகேட்டும் பக்கங்களின்
இடுக்குகளில் உருண்டோடுகிறது
கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட
கால இயந்திரம்
காலம் கடந்து
கவனிக்கையில் மட்டும் - ஏனோ
கடதாசித் தடிப்பையும் விடக்
கனத்துக் கிடக்கின்றன
புகைப்படங்கள்..!
நினைவுகளின் கனத்தைத்
தாங்க முடியாமல் - அதை
முன்னோக்கிச் செலுத்தும்
முழு முயற்சியில் தோற்றுக்கொண்டே
குதிக்கால் ஊன்றி பெருவிரல் வரைந்த
குட்டி வட்டத்துக்குள்
சுற்றத் தொடங்குகிறேன்..
இறந்துபோன நிகழ்காலத்து
இடுக்குகளில் எழுந்துவந்தாள்
பிரிந்துபோன பழைய நண்பி
எப்போதோ பார்த்த நான்
எனக்கே சிரிப்பூட்டினான்
எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது
'அ' போட்டு வரைந்த மயில்
'ல' போட்டு வாங்கிய அடி
பாசி படிந்துபோன
கோயிலடிக் குழாய்க்கிணறு
அதிகம் சுவைத்த
மாற்றான் தோட்டத்து மாங்காய்
பல நேரங்களில்
விடைபெறல் என்பது
வெறும் கையசைப்பு மட்டுமல்ல..!
கடைசிப் பக்கம் கடந்து
கண்கள் நிறைந்து
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளியைப்
புறந்தள்ளி நிமிர்கிறேன்
இன்னும்
தூசி ஏறிப்போன பரனில்
மூலை மடங்கி, முன் அட்டை கிழிந்து
பழுப்பேறிப்போன பழைய புத்தகத்துள்
குட்டிபோட்டுக் கிடக்கின்றன
மயிலிறகுகள்..!
Friday, July 22, 2011
ஜயமுண்டு பயமில்லை மனமே!
ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலேகவிதையினை ஒலிவடிவில் கேட்க…
விடுதலை உண்டு நிலை உண்டு,
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற
குலசக்தி சரணுண்டு பயமில்லை
சக்தி பெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
புற்றளை விநாயகனே
எங்கள் விழா நாயகனே
யானை முகத்தவனே
சாற்றுகிறேன் முதல் வணக்கம்.
நற்றமிழ் தந்து நாவில் விளையாடும்
கலை வாணிக்கோர் கவி வணக்கம்.
தங்க மொழி தந்த தமிழ்த்தாய்க்குத் தமிழ் வணக்கம்
பாட்டுடைத் தலைவனாம் பாரதிக்கோர் பெருவணக்கம்
அண்ணன் – பெரியண்ணன்
பேச்சிலே இவன் ஒரு விண்ணன்
விளையாட்டிலோ இவன் இன்னுமொரு கண்ணன்
அறிமுகமே தேவையில்லா மன்னன்.
இவன் வைத்திருப்பதோ ஒரு வலைப்பூ
இவன் குரல் கேட்டால் ஒருவித மலைப்பு
இவன் பெயரால் இங்கே பலருக்கும் பிழைப்பு
இவனால்தான் எனக்கும் இங்கே அழைப்பு
இவன் ஒலியுலக சிற்பி
செல்லமாய் விக்கி
கவியரங்கத்திலோ இன்று இவன் எம் மத்தி.
அரங்கத் தலைவர் லோஷனுக்கு ஓர் தனி வணக்கம்
கூடிக் கவி பாடக்
கூடவே வந்திருக்கும்
ஒரு கூட்டுப் பறவைகள்
ஒருவர் - என்
கட்டைவிரல் கேட்காத கவியுலக துரோணர்
கணினி உலகின் கலங்கரை விளக்கம்
சிரிப்பிலோ சினேகா - சீற்றத்தில் சிங்கம்
சிறீ அண்ணா எங்கள் கருப்பு நிறத் தங்கம்.
அடுத்து அண்ணன் மாலவன்.
எங்கள் காவலன்
கூட்டத்தின் குலவிளக்கு.
பக்கத்தில் பார்த்தாலோ ஒரு புகை கக்கும் எரிமலை
பழகிப் பாருங்கள் அண்ணன் ஒரு பனி மலை
இறுதியாய் என் இளவல் பவன்.
எங்கள் செல்லக் குஞ்சு.
இவன் மனமோ வெள்ளைப் பஞ்சு
பதிவுலகில் பப்புமுத்து
கவியுலகிலோ இவன் ஒரு குட்டி வைரமுத்து
மூவருக்கும் மொத்தமாய்
முத்தாக ஒரு வணக்கம்.
இனி அவை வணக்கம்
கணினி மொழி பயிலும் காலத்தில் கூடக்
கவி மொழி கேட்கக் காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
இது – என்
கன்னி மொழி விதைக்கத் தரப்பட்ட பெருந்தோட்டம்.
கன்னி மொழி –எதனுடனும்
கலக்காத ஒரு மொழி
தனியாக வேரூன்றித் தருவாகத் தழைத்திட்ட
என் தாய் – தமிழ் மொழி
அதைச் சரியாகப் பேசிச்
சரியாமல் காக்கின்ற – ஊரே… உறவுகளே…
உங்களுக்கோர் பெருவணக்கம்.
கவிதை தொழிலல்ல எனக்கு
தொழில் முடிந்துத் தேகம் ஆற்றும் தேசம் அது
அறியும் ஆறாம் புலன் அது
ஆற்றாமையில் எந்தன் புலம்பல் அது
ஆங்காங்கே வந்தாலும் - எம்
வாய்ப்பிழை பொறுத்தருள்வீர்
ஜயமுண்டு பயமில்லை மனமே
நேற்று இரவு – எனக்கோர் கனவு
பகல் கனவில்லை.
பாதியிலேயே கலைந்து எழுந்துவிடவுமில்லை.
கனவிலே வந்தான் – ஒரு
கறுப்புச்சட்டைக்காரன்.
‘யாரப்பா நீ?’
நான்தான் பாரதி என்றான்.
‘மறுபடியும் பாரதியா?’
இதற்குமுன் எங்கேயப்பா என்னை நீ பார்த்தாய் என்றான்.
அதுதான் யாழ் வரும் வழியில்
பொட்டல் காட்டில் – நெற்றிப்
பொட்டுடன் வரவேற்றாயே என்றேன்.
அது வெறும் தட்டியடா என்று
தடதடத்துச் சிரித்தான்.
தலைப்பாகை இல்லையே என்றேன்
(என்) தலையே போனபிறகு தலைப்பாகை ஒரு கேடா என்றான்
எனக்கிது போதாதா என்று வடத்து மீசை முறுக்கிக்கொண்டான்.
இறந்தவர்கள் கனவிலே பேசாரே என்றதற்கு
இறக்கவில்லையடா. உன்னில் – அவனில்
உயிர் வாழ்கிறேன் என்றான்.
உயிர் போகும் அவசரம் என்றாயே? என்றேன்
அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.
நான் கனாக்கண்ட உலகம் காண உன் கனவுக்குள் வந்தேன் என்றான்.
நகர்வலம் செல்வோம் வா! என்றான்
நகர்வலம் எதற்கு? உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் காட்டுகிறேன் என்றேன்
மடிக்கணினி பயின்றான்.
கணையப் பசி மறந்து இணையம் நாடினான்
கூகில் கண்டு குறிச்சொல் தேடினான்.
முதலில் பாரதி – பாரதி பார்த்தான்
கறுப்பு மீசையின்கீழ் வெழுப்பாய்ப் புன்னகைத்தான்.
புதுமைப் பெண் தேடினான்
அங்கேயும் நான்தானா என்றான்
கொஞ்சம் இரு … என்று ஆங்கிலம் காட்டினேன்.
ஐயகோ என்றான். ஆங்கிலம் வேண்டாம், அழகு தமிழே போதுமென்றான்.
அதையும் காட்டினேன்.
வேண்டாம், நிறுத்து என்றான்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருக்கிறதே என்றேன்.
அது – இதுவல்ல என்றான்.
காணி நிலம் உண்டோ என்றான்.
காலி இடம் இல்லை என்றேன்.
கடலுக்குள் கட்டிக்கொண்ட
களனி நிலம் காட்டினேன். விந்தை என்றான்.
நீண்டு கிடக்கும் நெடும்பாலம் கண்டு வியந்தான்.
அடுக்கு மாடி பார்த்து அதிசயித்தான்.
விலை கேட்டான். விறைத்தான்.
மோவாய் சொறிந்து முகடுபார்த்தான்.
என்ன இது கூடாரம்? உன்வீடு எங்கே என்றான்.
உன் பாரத தேசத்தால் வீடு எமக்குப் பகல்கனவு என்றேன்.
ஊமைப் பெருமூச்சை எறிந்தான்.
சலிப்பா என்றேன்.
இல்லை, அது என் சாபமென்றான்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம். - என்ற
ஒற்றைக் கனவாவது ஒழுங்காய் பலித்ததே என்றான்.
எப்படியப்பா?
அதுதான் கடலுக்குள் களனி செய்து காப்பாற்றுகிறீர்களே என்றான்.
மெல்லச் சிரித்தேன்.
சோமாலியா எதற்கு என்று
சொந்த நாடே சுட்டினேன்.
உன் நாட்டின் நிலைமையோ
இதைவிட மோசமென்றேன்.
உளைப்பு இல்லையோ?
செக்கு மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்
நெஞ்சம் குமுறுகிறார்
ஏன் என்றான் கவிஞன்
எதுவும் மாறவில்லை
என்றேன் நான்.
பொன்மொழிகள் பொய்க்காது – ஆகவே இந்தக்
கவிஞன் வாக்கும் பொய்க்காது தம்பி - பொய்ச்
சாதியேனும் போனதுவோ என்றான்
சோலி எதற்கென்று ஞாயிறு இதழில்
நான்கு பக்கம் சுட்டினேன்.
மணமகன் தேவை
மணமகள் தேவை
மாமியார் தேவை
தேவைகளின் தொடர்ச்சியாய்
சிவத்து உயர்ந்த சிங்கை மாப்பிளைக்கு
சீதணத்தோடு சேர்த்து
சாதியும் தேவைப்பட்டது.
துடித்தான் மஹாகவி.
போகுமுன்பு ஒன்று என்று
செல்லம்மாவின் சோறு போட்ட சிட்டுக்குருவி கேட்டான்.
இரசாயணத்தால் அழிந்துவரும் இன்னல் விளக்கினேன்.
போங்கடா என்று பொங்கினான்.
அன்றே சொன்னேன்
காலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை என்றான்.
விரக்திச் சிரிப்பிற்கு விளக்கம் கேட்டான்.
இன்னும் இன்னல் உள்ளதுவோ என்றான்.
நீதான் கவிஞனாயிற்றே - எங்கள்
கசியும் மௌனங்களில் இருந்தே
கண்டுபிடித்துக் கொள்ளேன் என்றேன்.
நான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.
பொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.
ஒன்று மனதிற்கொள்.
வாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்
தாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.
ஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்
ஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்
காரிருளின் கர்வத்தை மின்னல்களும் போக்கலாம்
அடித்த காற்றில் முகில் விலகி நட்சத்திரமும் தோன்றலாம்.
ஜயமுண்டு பயமில்லை மனமே
சும்மா இருக்காதே
பஞ்ச பூதங்களின் பழக்கம் தேடு
வேரில் வார்க்கப்பட்ட அமிலம் கிடக்கட்டும்
காற்றில் கரைந்திருக்கும் ஒட்சிசன் தேடு
காற்றைப் பிடிக்கக் கறுவி நின்றாலும்
தழுவிச்செல்லும் பழக்கம் நாடு
ஒப்பாரியிலும் ஒழிந்திருக்கும்
ஓர் ராகம் தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
நீர் போல் மாறு
பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே
எதுவுமே சும்மா இல்லை இயற்கையில்.
பூமி அமைதிதான் – ஆனால் அது
சும்மா சிரித்தாலே சுனாமி வருகிறது
இயற்கை பழகு
மேடு கிடக்கட்டும் – முதலில்
பள்ளத்தைப் பதம் செய்
கற்கள் கிடக்கட்டும் – முதலில்
கனிம மண்ணில் வேர் விடு
மலையின் மௌனத்தையும்
அருவி கொண்டு போக்கு
புல்லின் நுனியிலும்
புதுக் கவிதை தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
ஒற்றைச் சொடுக்கில் உலகம்
ஓடிக்கொண்டே இருக்கும் நகரம்
கடல் தூர்த்து நிலம்
காகிதமில்லா புத்தகம்
கணிப்பொறியில் கடிதப்போக்குவரத்து
நேனோ தொழில்நுட்பம் மூலம்
சிரன்ஜீவிதனம் சீக்கிரமே சாத்தியம்
என்னதான் வந்தாலும் - உலகின்
ஏதோ ஒரு மூலையில் மனிதம் ஒட்டிக் கிடக்கும்வரை
ஜயமுண்டு பயமில்லை மனமே.
எனது இந்தக் கவிதைக்கான தொகுப்பைப் படிக்கவும், கவியரங்கத்தினை லோஷன் அண்ணாவின் தளத்தில் தொடர்ந்து படிக்கவும் இங்கே சொடுக்கவும்.
Tuesday, January 18, 2011
சின்னதாய்ச் சில…
யுத்தம் விட்டுச்சென்ற
கந்தகக் குழிக்குள்ளும்
எட்டிப்பார்க்கிறது ஈரம்..!
முன்பனி இரவு
பிச்சைக்காரன் தட்டில்
ஒடுங்கி விழுகிறது
ஒற்றைத்துளி..!
கனவுகளற்ற உறக்கத்தின்
கடைசிக் கணத்தின்பின்...
ஐயோ கொல்லாதே..!
தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' !
பறித்துக்கொண்டு பறக்கிறது.
எக்கணமும் வெடிக்கலாம்
சிறுவனின் உலகம்!
அரைத்தூக்கச் சிரிப்பில்
அம்மாவுக்கும் தெரிகிறது
குழந்தையின் கனவு!
Thursday, December 16, 2010
மீண்டு'ம்...'
ஆழம்
ஆழி அடி இருளில்
அமிழ்ந்திருந்து, அலைக்கழிந்து மேல்வந்து
ஆர்ப்பரிந்த மேற்பரப்பின் ஓரத்தில்
வெளிச்சத்தின் கிறக்கத்தில் - இவன்
அறிவுக்கெட்டிய ஆழத்தின் தேடுதலில்
இன்னும்
அதே இருளில்
அது...!
நம்பிக்கை
பொத்தி விரிந்த கரங்களில்
ஒட்டிக்கொண்ட மஞ்சள்பற்றி
லஜ்ஜையற்றுக் கிளம்பியது
இரசாயணத்தில் இறக்கப்போகும்
இறுதிப் பட்டாம்பூச்சி..!
அன்பு
தொடங்கலிலும், முடிவிலுமாக
கடிதங்களில் மட்டும் தொங்கியிருந்ததைக்
கலைத்தெறிந்துவிட்டது காலம்
சங்கேதச் சுருக்கங்களையும்
அடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி - இன்னும்
பாட்டியின் பார்வைக்கு மட்டும் இழைத்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு சந்திப்பிற்கிடையிலும்…!
Thursday, December 2, 2010
ம்…
வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட
ஊமல் கொட்டைகளினதும்
மண் கட்டிகளினதும்
எறி பிடி விளையாட்டு
தண்ணீர் நிரம்பிய
சதுரக் குழிகளுக்குள்
சறுக்கி விழுந்து அடித்த நீச்சல்
எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்
கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு
பேச நாதியின்றி
எமக்குள் பேசியபடி
நானும், இன்னுமொரு பொம்மையும்
பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்
Monday, July 26, 2010
போல..!
தேர்தல்
விதை விதைத்தவன் தெரியாமல்
வேர் நீர் நனைத்தவன் அறியாமல்
கல் எறிபவனுக்கெல்லாம் - தன்
காய் கொடுத்துக்கொண்டிருக்கிறது
மரம் - மக்கள்
வழங்கும் வாக்குப் போல..!
பெரிசு
எரிந்து முடித்தவனின் அஸ்தி கரைத்து,
தாகத்து விலங்கின் நா தழுவி,
ஆடை கழுவும் அழுக்கையும் இழுத்துக்கொண்டு,
வழிப்போக்கன் கால்கழுவி, ஊர் வழி உப்பெடுத்து,
ஓடைக்குள் ஓர்நாள் ஒதுங்கிநின்று வந்தாலும்
பானைக்குள் போன மறுநாள்தான் - பழசு
ஆக்கப்படுகிறது தண்ணீர்
பெரிசு ஆக்கப்படும் தாய்போல…!
மாற்றம்
ஆதி அடி மரத்தின் அருமை அறியாது
வெட்டி ஒட்டிவிட்ட வெள்ளைப் பூவையே
பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்
சிவப்புச் செவ்வரத்தை..!
.
‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!
Saturday, July 17, 2010
ம்…
குணம்
காவலர் வரிசைக்கும்
கள்வர்கள் கயமைக்கும்
புணர்வதற்காய்ப் போட்டிக்கும் – இன்னும்
இல்லாத காரணங்களையும் இறுக்கப் பிடித்தபடி
குரைத்துக்கொண்டுதான் இருக்கின்றன
இரவில் தெருநாய்கள்
தெளிவு
வேகமான பயணம்.
கூடவே ஓடுகிறது நிழல்..!
சற்றே தெளிவற்றுத்தான் தெரிகிறது
நிஜம்..!
கணக்கு
கூட்டலும் பெருக்கலும்
கணினிக்கு மாறிவிட்டபிறகும்
மனதிலேயேதான் நடக்கிறது
பிரித்தலும்! கழித்தலும்!!
எல்லை
ஒருகல் தொலைவில் இருக்கிறது
இன்னுமொரு கல்..!
ஏலவே…
வகுக்கப்பட்ட எல்லையில்
இதுதான் இறுதிக்கல்..!
Sunday, May 16, 2010
ம்……
ஞாபகங்கள்
ஞாபகங்களில் மட்டும் – இன்னும்
மாறாமல் இருக்கிறது…
வரலாறும், புவியியலும்!
வேறுபாடு
ஊர் பெயர் கேட்டுவிட்டு
உயர்த்தும் உன் புருவங்களால்
புரிந்துகொள்கிறேன் நண்பா – உன்னிலிருந்து
எனக்குள்ள வேறுபாடு..!
முற்றுப்புள்ளி
அந்தக்கால உதாரணங்களுடன்
அமரிக்காவையும் சேர்த்துவிட்டு
முற்றுப்புள்ளியிடுகிறேன்.
விதிவிலக்காகிவிட
நீ ஒன்றும் இயேசுவல்லன்..!
புத்தனுமல்லன்..!!
இன்று… இப்படி…
நாடு கடந்து வந்த காசில்
நான்கு அறை வீடு
இளைப்பாறக் கொடுப்பதற்காய்
இப்போதுதான் பொருத்தப்பட்ட ஏ.சி
முற்றத்தில் காவிவந்த பேருந்து
இருபுறமும் பூந்தோட்டம்
பக்கத்துவீட்டுப் பார்வை தவிர்க்க
ஆளுயர மதில்
அழகிய படலை
அதற்கும் வெளியில் – ஒரு
பற்றைக்காணி
Wednesday, April 28, 2010
மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்
வேல். சாரங்கன், என்னைவிட இரண்டொரு வயது அதிகமிருக்கலாம். இருவரும் பிறந்து, வளர்ந்த தூரமும் அதிகமல்ல. அதனால்தானோ என்னவோ, அவர் கவிதைகளில் வாழ்ந்திருக்கும் வாழ்க்கை என்னுடையது போன்ற உணர்வு. அவர் கவிதைகளாய் மொழிபெயர்த்திருக்கும் மௌனம், என்னுள்ளும் இருக்கும் மௌனம். நான் பேசமறந்த, அல்லது பேசப்பயந்த மௌனம். ஒவ்வொரு கவிதையும் என்னுள் ஒரு உணர்வுகளை விட்டுச்செல்கின்றன, அல்லது தட்டிச்செல்கின்றன. பல இடங்களில் தலை என்னையும் அறியாமல் ஆமோதிக்கின்றது.
மனிதங்கள்
கொழும்பு- 0777537930.
புத்தகம் கிடைக்கும் இடங்கள்
Monday, September 28, 2009
பதிவு எழுதிப்பார்!
Friday, July 24, 2009
எனக்கேன் இந்த வேண்டாத வேலை?
நீ
Sunday, May 10, 2009
அம்மா எனக்கொரு போதிமரம்!
Tuesday, April 28, 2009
பேருந்துப் பயணம்
எப்போது பார்த்தாலும்
வித்தியாசம் காட்டும்
என்றும் இனிக்கும்
சாலை ஓரங்கள்
ஏறியவுடனே என்னைப்பார்த்து
"முன்னே வா" எனக்கூறும், ஆனால்
மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்
நடத்துனன்
வீதி விபத்தைத் தடுப்பதற்கோ
இல்லை வீடு செல்லத் திரணியற்றோ
சைக்கிளையும் முந்த விடும்
சாமர்த்திய ஓட்டுணன்
கூட வரும் பயணிகளைப் பார்க்கயில்
சில சமயம் ஆதங்கங்கள்
பல சமயம் மனதில்
பூகம்பங்கள்
தனிமையில் பயணிக்கையில்
தானும் கூட வரும்
என்னுடைய phone இலுள்ள
Radio & Music player
எல்லாவற்றுக்கும் மேலாக
தனிமையில் நானிருக்க
ஏளனமாய் எனைப் பார்க்கும்
பக்கத்து சீட்
Saturday, February 14, 2009
இன்று காதலின் நாள்

இன்று
காதலின் நாள்
அன்றைக் காதவரைக்
கைகோர்த்து விட்டவனின்
கடைசி நாள்
இன்றைக் காதலரின்
இதயம் மறந்துவிட்ட - அவன்
இறுதிநாள்
இன்று
பூ வியாபாரிகட்கோ பொன்நாள்
காதலர் மனம்கவர்ந்த
களியாட்டக்கடைகட்கு நன்நாள்
பார்க்கிலோ பெஞ்களிற்குப்
பற்றாக்குறை ஆகும்நாள்
பீச்சின் வியாபாரிக்குச் சுண்டல்
மிஞ்சாத ஓர்நாள்
இன்று
கலாச்சாரக் காவலற்குக் கரிநாள்
காக்கிச் சட்டைக் காரருக்கோ
கடமை கூடும்நாள்
அப்பாமார் அடிவயிற்றை
அரிக்கும் நாள் - அவர்
பாக்கட்டின் பணத்தையும்
சேர்த்தே பறிக்கும்நாள்
இன்று
காதல் சோல்ல இருப்போர்க்குச்
சோதனைநாள் - அதைச்
சொல்லித் தோற்றவர்க்கோ
வேதனைநாள்
வென்று விட்டவரோ வெளியில்
'வேலையாய்' அலையும்நாள் - வெறும்
என்னைப் போன்றவர்க்கோ
எப்போதும்போல் ஓர்நாள்
Wednesday, February 11, 2009
ஆண்டுகளின் மாற்றத்தில் அவள்!

அன்றுனக்கு வயதிரண்டு!
தட்டுத் தடுமாறித் தவழ்ந்துவரும் தாய்மொழியும்,
கட்டாமல் விட்டதனால் கலைந்துவிட்ட உன்தலையும்,
புழுதிகள் பிரண்டுவிட்ட செம்பட்டை நிறமுடியும்,
அதிகம் அலட்டாமல் அணிந்துவரும் ஆடையும்,
தத்தித் தவழ்ந்துவரும் நடையெனும் நாட்டியமும்,
காண்பவரின் கண்களெல்லாம் கனிவோடு நோக்குதடி.

வளர்ந்துவிட்டாய் இன்று, வயது இருபத்தொன்று!
ஆங்கிலத்தின் நடுவினிலே தடுமாறும் தமிழ்மொழியும்,
கட்டாமல் நீட்டிவிட்டுக் கத்தரித்த உன்தலையும்,
காஸ்ட்லி மை பிரண்ட செம்பட்டை நிறமுடியும்,
தோளிரண்டில் நூலிற் தொங்குகின்ற உன் உடையும்,
அடிமீது அடிவைத்து இடையாட்டும் கேட்வாக்கும்,
காண்பவரின் கண்ணையேல்லாம் காமத்தால் நிரப்புதடி.
ஆண்டுகளின் மாற்றத்தில் மாறவில்லை நீ எதுவும்,
காண்பவரின் கண்களிற்றான் காலத்தின் மாற்றமோடி?
அன்று நீ செய்துவிட்டால் குழந்தையின் அறியாமை,
இன்று நீ செய்வதுதான் நாகரிக நரிவேலை!
Wednesday, February 4, 2009
எனக்கு இப்போ வாலிப வயசு!

அம்மம்மாவின் பேச்சில் மட்டும்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
என் குட்டி வயதுக் குறும்புத்தனம்
அம்மாவின் அரவணைப்பை
அடியோடு மறந்துவிட்ட என்
தனியறைப் படுக்கை
அன்பாகப் பேசும்
அப்பாவின் பேச்சில் கொஞ்சம்
அதிகாரக் குறைப்பு
தம்பியின் விளையாட்டிலிருந்து
தனியாக்கப்பட்டு விட்ட
எனது பொழுதுபோக்கு
என்கூடத் தனியாக
வெளியில் வருவதையே
தானாகக் குறைத்துவிட்ட அக்கா
தங்கையின் உடைகளில்
நான் இப்போ காட்டும்
தனியான அக்கறை
இவையெல்லாம் எனக்குக்
கூறாமல் கூறின
"உனக்கு இப்போ வாலிப வயசு"
Monday, January 26, 2009
அவளும் நானும்
அருகில் விசும்பற் குரலுடன் அவள்
அன்று
ஆண்டு ஒன்றின் முதன்நாள்
ஆண், பெண் என்பதே
அறியாத அந்நாள்
ஆங்கிலம் கற்கத்தொடங்கிய
ஆண்டு மூன்று
அருகிலே அவள் இல்லை
அவன்
அருகிருக்கவும் தோன்றவில்லை
வித்தியாசம் என ஏதோ புரிந்தது
ஆண்டு ஐந்துப் பரீட்சை
அவளைவிட அதிக மார்க்
எடுத்தாக வேண்டும்
ஏதோ ஒரு வைராக்கியம்
அதுவும் முடிந்தது
அடுத்த பாடசாலை
அவளுக்கு வேறு
எனக்கு வேறு
டியூசன் வகுப்பிலும்
தெளிவான இரண்டுபக்கம்
வித்தியாசம் நிச்சயிக்கப்படுகிறது
திடீரென ஓர்நாள்
அவள் இல்லை - பின்
வந்தாள் வாரம் இரண்டு
ஏதோ வித்தியாசம்
எனக்குப் புரிந்தது
எனக்குள்ளும் புரிந்தது
அவள்
தற்செயலாய்த் திரும்பினாலே
தறிகெட்டுத் துள்ளியது மனது
ஆம், என்னைத்தான் பார்க்கிறாள்
நானும் அவளையே
எல்லோரும் என்னையே
பார்ப்பதாய் உணர்கிறேன்
ஆடைகள் விசயத்திலும் நான்
அவ்வளவு கவனம்
தனியாக ஒரு நண்பர் கூட்டம்
என்னைச் சுற்றி
அவளுக்கும் தான்
அவள் என்னைவிட வேகமாக
சைக்கிள் விடுகின்றாள்
அவளுக்குப் பின்னாலே நான்
அடுத்தடுத்த பரீட்சையிலும்
அடுத்துப் பல்கலைக்கழகம்
மீண்டும் அவளோடு நான்
அருகிலேயே
தெளிவாகத் தெரிகின்ன
எதிர்காலக் கேள்விக்குறி
ஆனால்
இப்போது நான்
அதே ஆண்டு ஒன்று!
Saturday, January 24, 2009
காதலில் விழுந்தேன்!

கனவோடு வாழ்ந்து தலை
நரைகூடக் கண்டபின்னும்
என் காதலினை உனக்குக்கூற
தைரியம் வரவில்லையடி
கண்டால் முறுவுவதும் பின்
கண் சிமிட்டிச் சிரிப்பதுவும்
கையசைத்துக் கதைப்பதுவும் உன்
காற்கொலுசும் கவிதையடி
உன் கன்னக் குழியினிலே
கவிழ்ந்துவிட்ட என்னோடம்
கரைகாண வழியின்றிக்
கலங்கித் தவிக்குதடி
கண்ணாடி பிம்பங்களும் என்
கண்கடந்து போவோரும்
காண்போரெல்லாம் உன்னுருவாய்க்
கண்ணுக்குத் தெரியுதடி
நழினங்கள் இழையோடும் நம்மவர் நாட்டியமும்
அதிரடி இசையோடும் தற்கால நாட்டியமும்
அங்கங்கள் குலுங்க ஆடும் ஆபிரிக்க நாட்டுயமும்
உன் நடையெனும் நாட்டியத்தின் கடைகூட இல்லையடி
கடிதங்கள் எழுதுகிறேன், அனுப்ப வழி தேடுகிறேன்
தூதுவிடப் புறாவுமில்லை, உன் தூரத்து உறவுமில்லை
உன்னண்பி எனக்கு இன்னும் நண்பியும் ஆகவில்லை
என் கடதாசிக்காதல் உனைக் கண்டு கரை சேருமாடி
Wednesday, January 14, 2009
சூரியனே உனக்கோர் விண்ணப்பம்!

பொங்கல் உண்பதற்காய் காலைப்
பொழுதோடு வருவாய் நீ
காத்திருந்து கையளிக்கிறேன்
கனிவாய் உனக்கோர் விண்ணப்பம்
ஊரெல்லாம் இன்று
உனக்காய்ச் சமைக்கயிலே
உணவில்லா மக்களுக்கும்
ஒரு பங்கைக் கொடுத்துவிடு
மரத்தின் நிழலில் வாடும்
மக்களிற்காய்க் கேட்கின்றேன்
மத்தியான வெயிலைக் கொஞ்சம்
மந்தமாக எறித்துவிடு
இரவில் ஒளியின்றி
இருக்கும் எம் மக்களிற்காய்
உன்னுடைய ஒளியைக் கொஞ்சம்
இரவினிலும் கொடுத்துவிடு
ஊரெல்லாம் வெடியுடனே
உனக்காய்ப் பொங்குகையில்
ஓரத்தின் ஓலத்திற்கும்
ஒருமுறை காதுகொடு
எமக்கெட்டாத ஊர்களையும்
எட்டிவிடும் நீ எமது
கட்டாத கதை மனதைத்
தட்டட்டும் சொல்லிவிடு
உழவுக்கு உயிர் கொடுக்கும்
உன்னிடத்தில் எனக்குள்ள
உரிமையில் கேட்கின்றேன் இல்லை
என்றிடாமல் ஏற்றுவிடு






