யாழ்ப்பாணம் புற்றளை பிள்ளையார் ஆலயத்தில் லோஷன் அண்ணாவின் தலைமையில் இடம்பெற்ற மறுபடியும் பாரதி என்ற பொதுத்தலைப்பிலான கவியரங்கத்தில் ஜயமுண்டு பயமில்லை மனமே என்ற தலைப்பின்கீழ் நான் படித்த கவிதை இது.
இக் கவியரங்கக் கவிதைகள் அனைத்துமே எம்மால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் அறிமுகத்திலிருந்து தொடங்கிப் படிப்பது கவியரங்கத்தை முழுமையாக வாசித்த உணர்வைத் தரும் என்பதால் இங்கே இருந்து படிக்க ஆரம்பிப்பது நலம்.
கீழே சிகப்பு எழுத்தில் இடப்பட்டுள்ள பகுதி வணக்கங்களும், சின்னச் செல்லக் கடிகளும்தான் என்பதால் பிரதான கவிதையை மட்டுமே படிப்பேன் என அடம்பிடிப்போர் சிகப்பு நிறப் பகுதியை ஒரே தாவாகத் தாவிக் கீழே சென்று படிக்கவும்.
ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலேகவிதையினை ஒலிவடிவில் கேட்க…
விடுதலை உண்டு நிலை உண்டு,
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற
குலசக்தி சரணுண்டு பயமில்லை
சக்தி பெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
புற்றளை விநாயகனே
எங்கள் விழா நாயகனே
யானை முகத்தவனே
சாற்றுகிறேன் முதல் வணக்கம்.
நற்றமிழ் தந்து நாவில் விளையாடும்
கலை வாணிக்கோர் கவி வணக்கம்.
தங்க மொழி தந்த தமிழ்த்தாய்க்குத் தமிழ் வணக்கம்
பாட்டுடைத் தலைவனாம் பாரதிக்கோர் பெருவணக்கம்
அண்ணன் – பெரியண்ணன்
பேச்சிலே இவன் ஒரு விண்ணன்
விளையாட்டிலோ இவன் இன்னுமொரு கண்ணன்
அறிமுகமே தேவையில்லா மன்னன்.
இவன் வைத்திருப்பதோ ஒரு வலைப்பூ
இவன் குரல் கேட்டால் ஒருவித மலைப்பு
இவன் பெயரால் இங்கே பலருக்கும் பிழைப்பு
இவனால்தான் எனக்கும் இங்கே அழைப்பு
இவன் ஒலியுலக சிற்பி
செல்லமாய் விக்கி
கவியரங்கத்திலோ இன்று இவன் எம் மத்தி.
அரங்கத் தலைவர் லோஷனுக்கு ஓர் தனி வணக்கம்
கூடிக் கவி பாடக்
கூடவே வந்திருக்கும்
ஒரு கூட்டுப் பறவைகள்
ஒருவர் - என்
கட்டைவிரல் கேட்காத கவியுலக துரோணர்
கணினி உலகின் கலங்கரை விளக்கம்
சிரிப்பிலோ சினேகா - சீற்றத்தில் சிங்கம்
சிறீ அண்ணா எங்கள் கருப்பு நிறத் தங்கம்.
அடுத்து அண்ணன் மாலவன்.
எங்கள் காவலன்
கூட்டத்தின் குலவிளக்கு.
பக்கத்தில் பார்த்தாலோ ஒரு புகை கக்கும் எரிமலை
பழகிப் பாருங்கள் அண்ணன் ஒரு பனி மலை
இறுதியாய் என் இளவல் பவன்.
எங்கள் செல்லக் குஞ்சு.
இவன் மனமோ வெள்ளைப் பஞ்சு
பதிவுலகில் பப்புமுத்து
கவியுலகிலோ இவன் ஒரு குட்டி வைரமுத்து
மூவருக்கும் மொத்தமாய்
முத்தாக ஒரு வணக்கம்.
இனி அவை வணக்கம்
கணினி மொழி பயிலும் காலத்தில் கூடக்
கவி மொழி கேட்கக் காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
இது – என்
கன்னி மொழி விதைக்கத் தரப்பட்ட பெருந்தோட்டம்.
கன்னி மொழி –எதனுடனும்
கலக்காத ஒரு மொழி
தனியாக வேரூன்றித் தருவாகத் தழைத்திட்ட
என் தாய் – தமிழ் மொழி
அதைச் சரியாகப் பேசிச்
சரியாமல் காக்கின்ற – ஊரே… உறவுகளே…
உங்களுக்கோர் பெருவணக்கம்.
கவிதை தொழிலல்ல எனக்கு
தொழில் முடிந்துத் தேகம் ஆற்றும் தேசம் அது
அறியும் ஆறாம் புலன் அது
ஆற்றாமையில் எந்தன் புலம்பல் அது
ஆங்காங்கே வந்தாலும் - எம்
வாய்ப்பிழை பொறுத்தருள்வீர்
ஜயமுண்டு பயமில்லை மனமே
நேற்று இரவு – எனக்கோர் கனவு
பகல் கனவில்லை.
பாதியிலேயே கலைந்து எழுந்துவிடவுமில்லை.
கனவிலே வந்தான் – ஒரு
கறுப்புச்சட்டைக்காரன்.
‘யாரப்பா நீ?’
நான்தான் பாரதி என்றான்.
‘மறுபடியும் பாரதியா?’
இதற்குமுன் எங்கேயப்பா என்னை நீ பார்த்தாய் என்றான்.
அதுதான் யாழ் வரும் வழியில்
பொட்டல் காட்டில் – நெற்றிப்
பொட்டுடன் வரவேற்றாயே என்றேன்.
அது வெறும் தட்டியடா என்று
தடதடத்துச் சிரித்தான்.
தலைப்பாகை இல்லையே என்றேன்
(என்) தலையே போனபிறகு தலைப்பாகை ஒரு கேடா என்றான்
எனக்கிது போதாதா என்று வடத்து மீசை முறுக்கிக்கொண்டான்.
இறந்தவர்கள் கனவிலே பேசாரே என்றதற்கு
இறக்கவில்லையடா. உன்னில் – அவனில்
உயிர் வாழ்கிறேன் என்றான்.
உயிர் போகும் அவசரம் என்றாயே? என்றேன்
அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.
நான் கனாக்கண்ட உலகம் காண உன் கனவுக்குள் வந்தேன் என்றான்.
நகர்வலம் செல்வோம் வா! என்றான்
நகர்வலம் எதற்கு? உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் காட்டுகிறேன் என்றேன்
மடிக்கணினி பயின்றான்.
கணையப் பசி மறந்து இணையம் நாடினான்
கூகில் கண்டு குறிச்சொல் தேடினான்.
முதலில் பாரதி – பாரதி பார்த்தான்
கறுப்பு மீசையின்கீழ் வெழுப்பாய்ப் புன்னகைத்தான்.
புதுமைப் பெண் தேடினான்
அங்கேயும் நான்தானா என்றான்
கொஞ்சம் இரு … என்று ஆங்கிலம் காட்டினேன்.
ஐயகோ என்றான். ஆங்கிலம் வேண்டாம், அழகு தமிழே போதுமென்றான்.
அதையும் காட்டினேன்.
வேண்டாம், நிறுத்து என்றான்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருக்கிறதே என்றேன்.
அது – இதுவல்ல என்றான்.
காணி நிலம் உண்டோ என்றான்.
காலி இடம் இல்லை என்றேன்.
கடலுக்குள் கட்டிக்கொண்ட
களனி நிலம் காட்டினேன். விந்தை என்றான்.
நீண்டு கிடக்கும் நெடும்பாலம் கண்டு வியந்தான்.
அடுக்கு மாடி பார்த்து அதிசயித்தான்.
விலை கேட்டான். விறைத்தான்.
மோவாய் சொறிந்து முகடுபார்த்தான்.
என்ன இது கூடாரம்? உன்வீடு எங்கே என்றான்.
உன் பாரத தேசத்தால் வீடு எமக்குப் பகல்கனவு என்றேன்.
ஊமைப் பெருமூச்சை எறிந்தான்.
சலிப்பா என்றேன்.
இல்லை, அது என் சாபமென்றான்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம். - என்ற
ஒற்றைக் கனவாவது ஒழுங்காய் பலித்ததே என்றான்.
எப்படியப்பா?
அதுதான் கடலுக்குள் களனி செய்து காப்பாற்றுகிறீர்களே என்றான்.
மெல்லச் சிரித்தேன்.
சோமாலியா எதற்கு என்று
சொந்த நாடே சுட்டினேன்.
உன் நாட்டின் நிலைமையோ
இதைவிட மோசமென்றேன்.
உளைப்பு இல்லையோ?
செக்கு மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்
நெஞ்சம் குமுறுகிறார்
ஏன் என்றான் கவிஞன்
எதுவும் மாறவில்லை
என்றேன் நான்.
பொன்மொழிகள் பொய்க்காது – ஆகவே இந்தக்
கவிஞன் வாக்கும் பொய்க்காது தம்பி - பொய்ச்
சாதியேனும் போனதுவோ என்றான்
சோலி எதற்கென்று ஞாயிறு இதழில்
நான்கு பக்கம் சுட்டினேன்.
மணமகன் தேவை
மணமகள் தேவை
மாமியார் தேவை
தேவைகளின் தொடர்ச்சியாய்
சிவத்து உயர்ந்த சிங்கை மாப்பிளைக்கு
சீதணத்தோடு சேர்த்து
சாதியும் தேவைப்பட்டது.
துடித்தான் மஹாகவி.
போகுமுன்பு ஒன்று என்று
செல்லம்மாவின் சோறு போட்ட சிட்டுக்குருவி கேட்டான்.
இரசாயணத்தால் அழிந்துவரும் இன்னல் விளக்கினேன்.
போங்கடா என்று பொங்கினான்.
அன்றே சொன்னேன்
காலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை என்றான்.
விரக்திச் சிரிப்பிற்கு விளக்கம் கேட்டான்.
இன்னும் இன்னல் உள்ளதுவோ என்றான்.
நீதான் கவிஞனாயிற்றே - எங்கள்
கசியும் மௌனங்களில் இருந்தே
கண்டுபிடித்துக் கொள்ளேன் என்றேன்.
நான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.
பொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.
ஒன்று மனதிற்கொள்.
வாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்
தாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.
ஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்
ஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்
காரிருளின் கர்வத்தை மின்னல்களும் போக்கலாம்
அடித்த காற்றில் முகில் விலகி நட்சத்திரமும் தோன்றலாம்.
ஜயமுண்டு பயமில்லை மனமே
சும்மா இருக்காதே
பஞ்ச பூதங்களின் பழக்கம் தேடு
வேரில் வார்க்கப்பட்ட அமிலம் கிடக்கட்டும்
காற்றில் கரைந்திருக்கும் ஒட்சிசன் தேடு
காற்றைப் பிடிக்கக் கறுவி நின்றாலும்
தழுவிச்செல்லும் பழக்கம் நாடு
ஒப்பாரியிலும் ஒழிந்திருக்கும்
ஓர் ராகம் தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
நீர் போல் மாறு
பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே
எதுவுமே சும்மா இல்லை இயற்கையில்.
பூமி அமைதிதான் – ஆனால் அது
சும்மா சிரித்தாலே சுனாமி வருகிறது
இயற்கை பழகு
மேடு கிடக்கட்டும் – முதலில்
பள்ளத்தைப் பதம் செய்
கற்கள் கிடக்கட்டும் – முதலில்
கனிம மண்ணில் வேர் விடு
மலையின் மௌனத்தையும்
அருவி கொண்டு போக்கு
புல்லின் நுனியிலும்
புதுக் கவிதை தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
ஒற்றைச் சொடுக்கில் உலகம்
ஓடிக்கொண்டே இருக்கும் நகரம்
கடல் தூர்த்து நிலம்
காகிதமில்லா புத்தகம்
கணிப்பொறியில் கடிதப்போக்குவரத்து
நேனோ தொழில்நுட்பம் மூலம்
சிரன்ஜீவிதனம் சீக்கிரமே சாத்தியம்
என்னதான் வந்தாலும் - உலகின்
ஏதோ ஒரு மூலையில் மனிதம் ஒட்டிக் கிடக்கும்வரை
ஜயமுண்டு பயமில்லை மனமே.
எனது இந்தக் கவிதைக்கான தொகுப்பைப் படிக்கவும், கவியரங்கத்தினை லோஷன் அண்ணாவின் தளத்தில் தொடர்ந்து படிக்கவும் இங்கே சொடுக்கவும்.
9 comments:
அருமை சுபாங்கன். வாழ்த்துகள்.
முழுமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்… மீண்டுமொருமுறை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது… மகிழ்ச்சி..
nalla iruuku
சூப்பர்... சூப்பர்...
சற்றே பிந்தினாலும் அனைவரும் ஒரே நேரத்தில் தந்தமைக்கு நன்றிகள். ஏற்கனவே பால்குடியின் தயவில் நேரடியாக கொஞ்சமும் பின்னர் நெட்டில் முழுமையும் எனக் கேட்டேன். ஆணிகள் அலவாங்குகள் இருப்பதால் முழுமையான பின்னூட்டம் பின்னர் வரும் (ஆனால் வராது).
படித்தேன் ரசித்தேன் .
///பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே/// இந்த இடத்தில் பாரதியே வந்துட்டரோ ,சூப்பர்..
:-)
உரைவடிவத்திற்கு நன்றிகள். :-)
:-))
Post a Comment