Thursday, October 29, 2009

பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?

22 comments






உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது என்று கூகுல் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வினாடிக்கும் புதிதாக ஒரு பிளாக் உருவாக்கப்படுகிறதாம் (இவற்றில் 90% ஆனவை ஒரு மாதத்திலேயே செயலிழந்து விடுவது வேறு கதை). இன்றய இணையத்தள நெரிசல்களுக்கு பிளாக்குகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றனர். 




இன்றய இணையப் பாவனையாளர்களின் பாதிக்கும் மேற்பட்டோர் சொந்தமாக ஒரு பிளாக்காவது வைத்திருக்கின்றனர். இன்று வீதியில் நடந்துசெல்லும்போது சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும் ஒரு காமன்மேன் ஒரு பதிவராகக் கூட இருக்கலாம்.




பதிவுகள் பெரும்பாலும் இலகு மொழிநடையில் சொந்த அனுபவங்கள் சார்ந்தே எழுதப்படுவதால் இவற்றை விரும்பி வாசிப்போரும் அதிகம். நான்கூட பல்கலைக்கழக அசைன்மென்டுகள் தொடர்பான ஏதாவது தேடலில் இணையத்தளங்களை மட்டுமல்லாது, பதிவுகளிலும் ஒருமுறை தேடிக்கொள்வேன், காரணம் அவை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியவையாக இருக்கும்.




பாவனையாளர்களின் இந்த பிளாக்குகளின் மீதான ஈர்ப்பு பல முன்னணி நிறுவனங்களையும் பிளாக்குகள் பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்துள்ளது. அவை தமது தயாரிப்புக்கள் மற்றும் சலுகைகளை தமது இணையத்தளங்களிற்கு முன்னதாகவே பிளாக்குகளில் அறிவிக்கின்றன. அவற்றின் இணையத்தளங்களை விட பிளாக்குகளையே அதிகமானோர் பார்வையிடுவதுடன், இதனால் வருமானமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். 





பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை. ஊடகங்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் பதிவர்களுக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே ஊடகங்களுக்கு நிகராக இன்று பதிவுகளும் பலராலும் நோக்கப்படுகின்றன. உளவு அமைப்புக்களின் பார்வையிலும் பதிவுகள் முக்கியம் பெறத் தவறுவதில்லை.




‘உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாது’ என்பது பதிவுகளுக்கு நன்றாகப் பொருந்துகின்றது. பல மறைக்கப்பட்ட விடயங்களும் பதிவுகள் மூலம் வெளிவந்துவிடுகின்றன. இதனாலோ, என்னவோ பல அரசியல், முதலாளித்துவச் சக்திகள் பதிவுகளின் இந்த வளற்சியை விரும்புவதில்லை. மாற்றுக்கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடியாத தனிநபர்களுக்கும் பதிவுகள் எழுதுபவர்கள் பாதகர்கள்தான். இன்று அதிகரித்துவரும் பதிவுலக அனானிகள் இவற்றின் வெளிப்பாடுகளாகக்கூட இருக்கலாம்.


இப்போது சொலுங்கள் பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?








Monday, October 26, 2009

சரக்கு வித் சைடிஸ் – 26.10.09

22 comments



இருக்கிறம் சஞ்சிகையினர் வலைப்பதிவர் மற்றும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை எதிர்வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மீண்டும் சந்திக்கவிரும்பும் பதிவுலக சொந்தங்கள் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக தமது வரவை 0113150836 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது irukiram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தமது வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

எனது முதலாவது பதிவர் சந்திப்பாக இது அமையப்போகிறது. வாருங்கள், வரும் திங்கட்கிழமை சந்திக்கலாம்.

-----XXX-----

கடந்த சனிக்கிழமை இரவு உணவை எடுத்தவாறே தொலைக்காட்சியில் மேய்ந்துகொண்டிருந்தபோது சக்தி தொலைக்காட்சியில் சக்தி சுப்பர்ஸ்டார் நிகழ்ச்சி நடந்நுகொண்டிருந்ததை தற்செயலாகக் காணக்கிடைத்தது. துருப்பிடித்த இரும்புக்கு Anti – cross பெயின்ட் அடித்துவிட்டது போல மேக்கப்புடன் ஒரு போட்டியாளர் பாடிக்கொண்டிருந்தார். அவர் பாடி முடித்ததும் அந்த அறிவிப்பாளர் காற்றைக் கையால் விசிறியவாறே கதைக்கத் தொடங்க எனக்கோ அடக்கமுடியாமல் கெக்கே பெக்கே என்று சிரிப்புத்தான் வந்தது. இறுதியில் வாயில் வைத்த புட்டு புரைக்கேறி மூக்கால் வெளியில் வந்தவுடன் சேனலை மாற்றிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது அந்த அறிவிப்பாளர் சக்தி சுப்பர்ஸ்டார் நிகழ்ச்சிக்கென்றே பிரத்தியோகமாக வந்தவராம். சிறந்த காமெடி நிகழ்ச்சி பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக சக்தி சுப்பர்ஸ்டார் பார்க்கலாம். வரும் பின்விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல.

-----XXX-----



சிலருக்குச் சில படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதில்லை. அந்த வரிசையில் எனக்கு Chak de India. நேற்றும் மூன்றாவது தடவையாக  படம் பார்த்தேன். ஏனோ எத்தனைமுறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்கவேண்டும் போலவே இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதலே இயக்குனர் கதையோடு எம்மையும் ஒன்றச்செய்துவிடுகிறார். தமிழில் இப்படியொரு படம் – கஸ்டம்தான்.

-----XXX-----



நேற்று மாலை யாழ்தேவி திரட்டியை மேய்ந்துகொண்டிருந்தபோதுதான் இது கண்ணில் பட்டது. இலங்கைப் பதிவர் சந்திப்பு தொடர்பான லோஷன் அண்ணாவின் பதிவிற்கு மொத்தம் 35 நெகடிவ் ஓட்டு குத்தியிருந்தார்கள். நெகடிவ் ஓட்டு குத்துமளவிற்கு அந்தப் பதிவில் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. அனேகமாக ஒருவரோ, இல்லை குழுவோதான் செய்திருக்க வேண்டும். யாழ்தேவியில் டைனமிக் IP வைத்திருப்பவர்கள் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலுக் குத்தலாம் என்ற குறைபாடு நிலவுகிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தான் என்பதை உறுதிப்படுத்த யாழ்தேவி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

-----XXX-----

கனவுக்கன்னி, கஜினியுடன் காணாமல் போனாலும் இன்னும் பிசின் மாதிரி மனதில் இருக்கும் அசினுக்கு இன்று பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசின்





-----XXX-----


ம்ஹும்.. இவங்களுக்கும் நிச்சயம் ஆயிடுச்சாம் :-(((






Tuesday, October 20, 2009

ஆதவனும் அறுந்த செருப்புகளும்

28 comments



எந்தப் பிறப்பில் செய்த பாவமோ, பண்டிகை நாட்களில் படம் பார்க்கும் பழக்கம் அண்மைக்காலங்களில் தொற்றிக்கொண்டுவிட்டது. ஆதவன் பார்த்தவர்கள் எழுதியிருந்த விமர்சனங்கள், ஆதவன் பார்க்கப் போவது சொந்த செலவில் சூனியம் வைக்கும் வேலை என்று தெரிந்திருந்தாலும், பேராண்மை திரையிடப்பட்ட ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல் என்பதால் வேறு வழியின்றி ஆதவனிற்காய் சினிசிட்டிக்கே சென்றேன்.


மதியநேரக் காட்சிக்காய் சென்றிருந்தபோதும், அங்கு நின்றிருந்த கூட்டம் இரவுக்காட்சிவரை இருந்த நான்கு திரையரங்குகளையும் நிரப்பப் போதுமானதாக இருந்தது. எப்படியாவது ஆதவன் பார்த்தே தீருவது என்ற முடிவோடு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானேன்.


அடுத்த காட்சிக்கு டிக்கட் கொடுக்கத் தொடங்கினார்கள். எவ்வளவோ முயன்றும் திரையரங்கிற்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. எனக்கு முன்னால் நின்றிருந்தவர் காலைக்காட்சிக்கு வந்தவராம். அவருக்கும் அதே கதிதான். அதற்கு முதல்நாள் நடந்த விசேட காட்சிக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தும் செல்லாததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


கொஞ்ச நேரத்தில் போறுமை இழந்த கூட்டம் நமது மூதாதயரின் புத்தியைக் காட்டத் தொடங்கியது. கம்பித் தடுப்புக்களினூடு ஏறிக் குதித்தும், போஸ்டர்களைக் கிழித்தும் அட்டகாசம் செய்யத் தொடங்கியது.  யன்னலைத்திறந்து தியேட்டர் மேலாளர் கத்திய கத்தலும், அதன்பின் கதவை மூடிய வேகமும், விவேக் பாணியில் சொல்வதென்றால் அப்பவே மைல்டா எனக்கொரு டவுட் வரத்தான் செய்தது.



எதிர்பார்த்தது போலவே அடுத்த சில நிமிடங்களில் போலீஸ்காரர் பொல்லுகளுடன் வந்திறங்கினர். எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. வீதியின் அடுத்த பக்கத்தில் நின்றிருந்தேன். ஏறத்தாள ஒட்டுமோத்தக் கூட்டமும் ஓடிவிட, கம்பிகளுக்கு மேலே ஏறி வித்தை காட்டிக்கொண்டு இருந்தவர்களுக்கு தமது தீபாவளிப் பரிசுகளைக் கொடுத்துவிட்டு காணாமல் போனது போலீஸ்.


மீண்டும் பழைய குருடி, கதவைத் திறடி கதைதான். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் எல்லாம் பார்க்காமல் வரிசையில் கொஞ்சம் முன்னால் ஒடிச்சென்று நின்றுகொண்டேன்.


அடுத்த காட்சிக்கு டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் முதன்முறையாக தியேட்டரை அண்மித்தேன். போலீஸ் தடியடியின் எச்ச சொச்சங்களாக அறுந்துபோன செருப்புக்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஒரு வழியாக டிக்கெட் கிடைத்தது. படம் பார்த்து முடித்து வெளியே வந்தபோதும் கூட்டம் குறைவில்லை. ஐந்தாறு போலீசார் நிரந்தரமாகவே வெளியில் முகாமிட்டிருந்தனர். செருப்புக்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது.


பண்டிகை நாட்களில் படம் பார்க்கும் எண்ணத்தையும், கூடவே சூர்யா மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அந்தச் செருப்புகளுடனேயே தூக்கிப்போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன்.


எனது ஆதவன் விமர்சனத்தைப் படிக்க இங்கே அழுத்துங்கள்.



Saturday, October 17, 2009

ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை.

31 comments



நண்பன் ஒருவனை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த்தாலும், அவனும் நானும் சேர்ந்து தியேட்டருக்குப் போக எடுத்த முயற்சிகள் முன்பு பலமுறை தோற்றதாலும் இன்று எப்படியாவது அவனுடன் ஆதவன் பார்ப்பது என முடிவானது. தியேட்டருக்கு போன பிறகுதான் அது எப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவு என்பது உறைத்தது. போலீஸ் வந்து தடியடி தடாத்துமளவுக்கு அங்கே நிலமை இருந்தது. ஒருவழியாக மூன்றரை மணிநேர காத்திருப்புக்குப் பிறகு தியேட்டருக்குள் நுளைய முடிந்தது. இலங்கையில் இவ்வளவு ரசிகர்கள் சூர்யாவுக்கு இருப்பது எனக்கு இப்போதுதான் தெரியும்.


காத்திருந்ததற்கு குறைவைக்கவில்லை படத்தின் முதல்பாதி. விறுவிறு ஆரம்பமும், கூடவே சேர்ந்துகொண்ட வடிவேலுவின் நகைச்சுவையும் இடைவேளைவரை தொடர்ந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு வடிவேலுவின் நகைச்சுவை ரசிக்கக்கூடியதாக இருந்தது. கந்தசாமியில் டிக்கி ஆட்டியதுபோல எங்களை நெளியவைக்கவில்லை. பல ஒற்றை வசனங்களே இன்னும் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றது. Hats off வடிவேலு.


சரோஜாதேவி, இன்றய நவநாகரிகப் பாட்டி, ஓ சாரி அம்மம்மாக்களின் (படத்தைப் பாருங்க, புரியும்) பிரதிபலிப்பு. அவருக்காகப் பாடல் காட்சி வேறு. கலக்கல். அதிலும் பாடலில் அவரது காட்சிகளை கறுப்பு – வெள்ளையில் காட்டியது அழகு.


வில்லன் ராகுல் தேவ் அசத்தல். ஆனால் அவரை ஒரு டாக்டராகத்தான் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. டாக்டர்களுக்கான ஒரு வரையறை மனதில் பதிந்துவிட்டது காரணமாக இருக்கலாம். பெரிய குழுவுக்கே தலைவனான அவர் ஆள் வைத்துக் கொலை செய்வதற்குச் சொல்லும் காரணமும் ப்ச். அவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது காட்சிகளில் லாஜிக் ஓட்டைகள் நிறைய. சரிசெய்திருக்கலாம்.


நயன்தாரா. இவரது அறிமுகக் காட்சியில் மாத்திரமே விசில். அதன்பிறகு இவரை யாரும் கணக்கிலேயே எடுக்கவில்லை. சிம்புவும், பிரபுதேவாவும் அப்பாடா தப்பித்தோம் என்று தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். கழுத்துக்கு மேலேயும் கொஞ்சம் கவனீங்க அம்மணி.




சூர்யா, நடிப்பில் அதே வேகம். நடனக் காட்சிகளுக்கு கைதட்டல் வாங்குகிறார். ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து கலக்கியெடுக்கிறார். ஆனால் இவரது பத்து வயதுக் கதாபாத்திரத்தோடுதான் மனம் ஒட்ட மறுக்கிறது. அதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். கடைசி வாரணம் ஆயிரத்தில் வந்த வயதிலாவது நடித்திருக்கலாம். முடியல.


இடைவேளை வரை கலகல + விறுவிறுவாகப் போய்க்கொண்டிருந்த திரைப்படம் இடைவேளைக்குப்பிறகு கறுமம் பிடித்த காதல் ஆரம்பித்ததாலோ என்னவோ கொஞ்சம் தொய்யத் தொடங்கிவிடுகிறது. இத்தனைக்கும் படத்தில் நேரடிக் காதல் காட்சிகள் இல்லை. லாஜிக் மீறல்கள் தாராளமாக தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி, ஐயோ அம்மா, முடியலடா சாமி.


ரெட் ஜெயன்ட் மூவீசின் குருவியில் விமானம். இதில் ஹெலிகொப்டர். அடுத்த படத்தில் ராக்கெட், ஏவுகணை என்று ஏதாவது முயற்சிசெய்வார்கள் போல. வில்லன் உடனடியாக வெடிக்கும் ராக்கெட் லாஞ்சரை அடிக்காமல் டைம் செட் செய்து வெடிப்பதை அடித்துவிட்டு, அது வெடிக்கும்வரை காத்திருக்காமல் பறந்துவிடுவாராம். அதை சூர்யா பிடுங்கி ஹெலிகொப்டரில் பாய்ந்து குத்துவாராம். ஐயோ, தமிழ் ரசிகர்கள் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியான அபத்தங்களை தாங்குவதோ தெரியவில்லை. ஏதாவது புதுசா யோசீங்கப்பா.


மொத்தத்தில் ஆதவன் – அரை அறுவை. முதல் பாதி மட்டும் மூன்றுமுறை பார்க்கக்கூடிய படம்.


இறுதியாக ஒரு சந்தேகம். படம் முழுவதும் முருகா, முருகா என்ற டயலாக் வருகிறதே, ஒருவேளை நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி டயலாக் எழுதியிருப்பாரோ?


Tuesday, October 13, 2009

வயர் இல்லா மின்னோட்டம்

10 comments


இந்த Wireless Electricity பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். வயர்களைப் பயன்படுத்தாமல் வீடுகளிலேயே மின்சாரத்தை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தத் தொழில்நுட்பம் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலைகளை உருவாக்கி, அந்த மின்காந்த அலைகளை காற்றினூடு கடத்தி, மின்சாரம் உபயோகிக்கவேண்டிய பொருளில் உள்ள சிறிய தொழில்நுட்பம் மூலம் அந்த மின்காந்த அலைகளை மீண்டும் மின்சாரமாக்குவதன்மூலம் வயர்கள் இல்லாது மின்சாரம் கடத்தப்படுகிறது.

இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.




டிஸ்கி - வீடியோ கொஞ்சம் பெரியதுதான். இறுதிவரை பாருங்கள். அங்கே நேரடிச் செய்முறை காட்டப்படுகிறது.

Monday, October 12, 2009

நானும், நோட்டி ஏஞ்சலும்

6 comments












நண்பர் கனககோபி என்னிடம் இந்த தேவதையை அனுப்பியது அவருக்கே நினைவிருக்குமோ தெரியவில்லை. நேற்று ஒரு வழியாக தேவதையைத் தேடிப்பிடித்து நிலமையைப் புரியவைத்து வரங்களைக் கேட்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது.


நேரில் எந்தத் தேவதையையுமே பார்த்திராத எனக்கு (அட, நெசமாத்தாங்க) தேவதையைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வாயிலிருந்து வந்த வாட்டர் பா(F)லைக்கூடக் கவனிக்காமல் நின்றிருந்த என்னை கன்னத்தில் கிள்ளி (ஹையோ, ஹையோ) சுயநினைவுக்குக் கொண்டுவந்தது அந்தத் தேவதை. அசடு வழிந்த என்னைப்பார்த்து கேளப்பா உன் முதல் வரத்தை என்று செல்லக் குரலில் கூறியது.


தேவதையைப் பார்த்த கிறக்கத்திலிருந்து விடுபடாத நான் உன்னைப்போல் ஒரு தேவதை என் வாழ்க்கை முழுவதும் கூடவே வரவேண்டும் என்ற என் முதல் வரத்தைக் கூறிவிட்டேன். குறும்பு கொப்பளிக்க என்னைப் பார்த்த அது புன்னகைத்தவாறே சரி, இரண்டாவது என்றது.


காதலித்துக்கொண்டு எங்கள் கழுத்தறுக்கும் நண்பர்களுக்காக அவளை நான் கம்பஸ் காலத்திலிலேயே சந்திக்க வேண்டும் என்ற இரண்டாவது வரத்தைக் கேட்டேவிட்டேன். ஆகா, நீயும் பாதிக்கப்பட்டிருக்கிறாயா என்ற தேவதை, சரி பெற்றுக்கொள் என்றாள்.


எதையோ வென்றுவிட்ட உணர்வு போங்கியது. அடுத்த வரமாக என்னைப்போல் ஒரு அழகான (ஓகே, ஓகே) ஆண் குழந்தையும், அவளைப்போல் ஒரு அழகான தேவதையும் பிள்ளைகளாக பெறவேண்டும் என்றேன். பெண்குழந்தை ஓகே, பட் உன்னைப்போல்…. என்று இழுத்தவள், சரி பெற்றுக்கொள் என்றாள்.


ஆகா, தேவதை ஆங்கிலம் எல்லாம் பேசுதே என்று ஆச்சரியப்பட்ட நான், அடுத்த வரமாக அழகான குட்டி வீடும், அதில் நாலு காரும் கேட்டேன். ஒரு ப்ளானோடதாப்பா கிளம்பியிருக்க என்றவள், லைப்ல உருப்படற மாதிரியும் நாலு வரத்தைக் கேளேன் என்றாள்.


உச்சி மண்டையில் நங் என்று குட்டிய மாதிரி இருந்தது. சரி இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகல என்று நினைத்து, கம்பஸ்சில நாலு பேரிட்ட சொல்லறமாதிரி ஒரு ரிசல்ட் வரணும் என்றேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென சரி என்றவள், நெக்ஸ்ட் என்றாள்.


சீக்கிரமே நல்ல சம்பளத்தில ஒரு நல்ல வேலை கிடைக்கணும் என்றேன். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது என்றவள் ஏம்பா எல்லாத்தையும் சுயநலமாவே கேக்கிற என கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். ஆகா, சந்தோசத்தில ரோம்பவே ஓவராப் போயிட்டமோ என்று தலையில் அடித்துக்கொண்டேன்.


சரி, இலங்கை மக்கள் அனைவரும் சொந்த இடங்களில் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டும் என்றேன். புன்னகைத்தாள். உலகில் ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வே இருக்கக் கூடாது என்றேன். வெரி குட், உன்கிட்ட இருந்து இப்படித்தான் எதிர்பார்த்தேன் என்றாள்.


அவளது வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் உலகில் சாதி, மத, மொழிப் பிரச்சினைகளே இருக்கக் கூடாது என்றேன். அது என்ற அவள், அப்படியே என்னைக் கட்டிக்கொண்டாள் (வாய மூடுங்கப்பா, பல்லி உள்ள போயிடப் போவுது).


ஆகா, ஆகா என்று அப்படியே அந்தரத்தில் மிதந்த நான் பத்தாவது வரமாக இலங்கை முழுவதையும் கையில் அடையாள அட்டை இல்லாமல் சுற்றிவரவேண்டும் என்றேன். அவ்வளவுதான் அப்படியே என்னைத் தள்ளிவிட்டாள். என்ன நடக்கிறது என நான் சுதாகரித்துக்கொள்ளமுன்னமே தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டாள்.


ஏனோ தெரியவில்லை. இதனாலேயே அவளிடம் அடுத்து யாரிடம் செல்லவேண்டும் என்றே கூற முடியவில்லை.


Friday, October 9, 2009

சரக்கு வித் சைடிஸ்

18 comments





நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி சிகப்பு விளக்கு ஏரியா வேலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட, அவர் கூறியதாகக் கூறி விபச்சாரத்தில் ஈடுபடும் ஏனய நடிகைகளின் பெயர்களை மஞ்சள் பத்திரிகை தினமலர் (அப்படித்தான் சொல்றாங்களே – பார்க்க படம்) வெளியிட, இதைக்கண்டித்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்களை பச்சை பச்சையாகத் திட்ட, அதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் நடிகர்களுக்கெதிராக கறுப்புக்கொடி பிடிக்க என்று நடக்கின்ற கலர்புல்லான கலாட்டாக்களிலேயே இந்தவார பொழுது போய்விடும் போல இருக்கிறது. 


******************************


இலங்கை வலைப்பதிவர்களுக்கு இது பொற்காலம். இலங்கையிலிருந்து வெளியாகும் இரு வார இதழ் ‘இருக்கிறம்’ ஏற்கனவே இலங்கைப் பதிவர்களின் படைப்புக்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரல் பத்திரிகை பிரதி ஞாயிறு யாழ்தேவி திரட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புக்களையும், நட்சத்திரப் பதிவரின் சிறந்த படைப்பு ஒன்றை அவரது புகைப்படத்துடனும் வெளியிடவுள்ளது. நான் யாழ்தேவியில் ஏற்கனவே நட்சத்திரமாகி விட்டதால் – சொக்கா எனக்கில்லை… எனக்கில்லை…


******************************


இன்று கம்பஸ்சில் எனக்கு இருந்த விரிவுரை இரத்துச் செய்யப் பட்டதால் நிம்மதியாக வீட்டிலே இருந்து இரண்டு பதிவாவது இட்டுவிடலாம் என நினைத்துக் காலையில் எழுந்தால் வீட்டில் கரண்டும் இல்லை, தண்ணீரும் இல்லை. இலங்கையில் Total Power Failure என்று வந்திருந்த SMS தகவல் சொல்லியது. மின்சாரம் வரும்வரை தண்ணீரும் இல்லை. வளர்ச்சியடைந்த நாடுகளில்  Total Power Failure இற்கான சாத்தியக்கூறுகள் பதினைந்து வருடங்களிற்கு ஒருமுறை கூட இல்லையாம். நாமெல்லாம் எந்த மூலைக்கு?


******************************


Social network தளங்களில் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்களாம். எனக்குத்தெரிந்த ஆண் நண்பர்கள் சிலர் பெண்கள் பெயரில்தான் அவ்வாறான தளங்களில் இயங்குகிறார்கள். அவர்களது சில நடவடிக்கைகளுக்கு பெண்ணின் பெயரில் இருப்பது சௌகரியமாக இருக்கிறது போலத் தெரிகிறது. இப்படி இருந்தால் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகாமல் என்னசெய்யும்?




******************************




Friday, October 2, 2009

தற்கொலைதான் தீர்வாகுமா?

25 comments





அண்மையில் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்தச் செய்தி. தவணைப் பரீட்சையில் புள்ளிகள் குறைவடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு மாணவர். இதே காரணத்துக்காக உயிரை விட்ட எனக்குத் தெரிந்த இரண்டாவது மாணவர் இவர். இறுதிப்பரீட்சைப் புள்ளிகள் குறைவடைந்தால் தற்கொலை செய்த நிலை இன்று தவணைப் பரீட்சைகளில் வந்து நிற்கின்றது.

நான் படித்த அதே பாடசாலையில், அதே வகுப்பறைகளில் படித்த ஒரு மாணவன். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு.  வெறும் தவணைப் பரீட்சைப் புள்ளிக்காக தற்கொலை செய்து கொண்டது என்ன ஒரு முட்டாள்தனமான முடிவு? அதுவும் ஏனய தவணைகளில் சிறந்த புள்ளிகளையே பெற்றிருந்த இவர் கடந்த தவணையில் மட்டுமே குறைவாகப் பெற்றிருக்கிறார். ஒரு தவணையில் புள்ளிகள் குறைந்ததற்காக இப்படி ஒரு முடிவு தேவையா?

நான் கூட அதே பாடசாலையில், அதே க.பொ.த உயர்தரத்தில், இரசாயணவியல் பாடத்தில் 35இற்கும் குறைவான புள்ளிகளைக் கூடப் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று பல்கலைக்கழகத்தில்தான் இருக்கிறேன். தவணைப் பரீட்சை என்பது ஒரு பயிற்சி. அவ்வளவே. அதுவே இறுதி முடிவுகளைத் தீர்மானித்து விடுவது அல்ல.

மறுபக்கம் இந்த மாணவனை தற்கொலைக்குத் தூண்டிய காரணங்களையும் பார்க்கவேண்டும். மகனை எப்படியாவது மருத்துவனாக்கிப் பார்க்கவேண்டும் என்ற பெற்றோரின் கனவு. பல்கலைக்கழகம் இல்லாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறி என்ற மாயையை உடைய சமுதாயம். எல்லாவற்றையும் விட பலமான கல்விப் பாரம்பரியத்தை உடைய அவனது சுற்றாடல் என்பனவும் இன்னும் வெளியில் தெரியாத, சொல்ல முடியாத எவ்வளவோ காரணங்களும் இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தவிர்த்து, மேற்படிப்புக்கான வசதிகள் இல்லை என்ற ஒரு காலம் போய், இன்று கொழும்பின் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களின் படையெடுப்பினால் கொழும்பிலுள்ள பெரும்பாலான உயர்கல்வி வாய்ப்புக்களை அங்கேயே பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இன்று நிலவுகின்றது. இனியாவது இந்தப் பல்கலைக்கழக மாயையிலிருந்து விடுபடுவது அவசியம்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கானதே. அந்த மாணவனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.



Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy