Saturday, January 31, 2009

ஆறாவது அறிவால் வந்த வினை!

3 comments

2007ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு உயர்கல்விக்காக வந்தவன் நான். யாழ்ப்பாணத்தில் Sampleக்குக் கூட சிங்களம் பயன்படுத்தப்படுவது கிடையாது. அங்குள்ள சிங்களப் படையினர் கூட நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அப்பாவின் ஆசைக்காக அங்கே அவ்வப்போது சிங்கள வகுப்பிற்கு விஜயம் செய்ததால் ஒருசில சிங்களச் சொற்கள் ஒட்டிக்கொண்டன. அவற்றில் முக்கியமானது ‘மட தண்ணயி’ (எனக்குத் தெரியாது). அத்துடன் ‘த’ என முடியும் சொற்கள் கேள்விகள் எனவும் தெரியும்.

கொழும்பிற்கு வந்த ஆரம்பத்தில் Campusற்குப் போய்வரும் போது இவற்றைக்கொண்டு சமாளித்துவிடுவேன். எவராவது பஸ்சில் ‘த’ என முடியும் எதையாவது கேட்டால் அவர்கள் இறங்கவேண்டிய இடத்தைத்தான் கேட்கிறார்கள் என ஊகித்து ‘மட தண்ணயி’ எனக் கூறிவிடுவேன். அதேபோல வீதியில் போகும்போதும் யாராவது கேள்விகேட்டாலும் பாதையைத்தான் கேட்கிறார்கள் என ஊகித்து அதே பதிலைக் கூறிவிடுவேன்.

ஆனால் சில சமயங்களில் விதி வேறு வழிகளிலும் விளையாடிவிடும். சில சமயங்களில் ‘த’ என முடியாத வார்த்தைகளையும் என்னிடம் பேசுவார்கள். ஆனால் ஆறாவது அறிவு என ஒன்று இருக்கிறதே, அதை வைத்துச் சமாளித்துவிடுவேன். ஒன்றும் முடியாவிட்டால், ‘மட’ இற்கும் ‘தண்ணயி’ இற்கும் இடையில் ‘சிங்கள’ இனை இட்டு ‘மட சிங்கள தண்ணயி’ (எனக்குச் சிங்களம் தெரியாது) எனக் கூறிவிடுவேன்.

ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ஒருமுறை ஒருவர் என்னைப்பார்த்து ‘ வேலாவ கீயத?’ எனக் கேட்டார். அதாவது நேரம் என்ன?. நானும் எனது வளமையான ‘த’ Theory இனைப் பயன்படுத்தி ‘மட தண்ணயி’ எனக் கூறிவிட்டேன். அவரோ எனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டார் போலும். ஏதோ கூறினார். நானும் அது கைக்கடிகாரத்தைப் பற்றித்தான் என ஊகித்துவிட்டேன். அப்போதுதான் கேட்டது நேரம் எனப் புரிந்தது. சுற்றியிருந்தவர்கள் எனைப்பார்த்த பார்வையும் எனது முகம் போன போக்கும் இருக்கிறதே, வடிவேலு தோற்றுவிடுவார் போங்கள்.

இப்போது ஓரளவு சிங்களம் பேசத் தெரிந்த பின்பும் இவற்றை யோசிக்க சிரிப்பு தான் வருகிறது. ம்ம்ம்ம், ஆறாவது அறிவையும் அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும் போல!

Thursday, January 29, 2009

கம்பஸ்சின் கலைச்சொற்கள்!

4 comments

எனது பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்படும் சில கலைச்சொற்களை (?) இங்கே தொகுத்துத் தருகிறேன். இவை பொதுவாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படுபவை. இவை எப்போது எங்கே தோற்றம் பெற்றன என யாருக்கும் தெரியாது. இவற்றில் பல பல்கலைக்கழகங்களிற்கு வெளியிலும் பயன்படுத்தப்பட்டாலும் பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப் படும்போதுதான் இவற்றுக்கு ஒரு தனிச்சுவை. இவற்றுடன் எனது பல்கலைக்கழகத்தின் படங்கள் சிலவற்றையும் இணைத்துள்ளேன். இனிச் சொற்கள்……



  • குப்பி

இது பல்கலைக்கழகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதன் பொருள் ஒரு மாணவன் இன்னொரு மாணவனிற்கு கற்பித்தல் என்பதாகும். அவ்வாறு கற்பிப்பவன் சக பாடியாகவோ, சீனியராகவோ, இல்லை யூனியராகவோ ( ஒரு வருடம் மட்டை அடித்தால் வேறு வழி? ) இருக்கலாம். பரீட்சைக் காலங்களில் குப்பிக்காக கொப்பியும் கையுமாக ஒரு கூட்டமே அலையும். ஆனால் சில சமயம் குப்பி எடுப்பவனை விட குப்பி வாங்குபவன் அதிக மார்க்ஸ் எடுத்துவிடுவான்.


  • குத்தல

சராசரி அளவு என சான்றோர்களால் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகப் படித்தல் குத்தல் எனப்படும். இவ்வாறு குத்துபவர்கள் எந்நேரமும் Library இல் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். நாங்களெல்லாம் குப்பிக்காக இவர்களையே தேர்ந்தெடுப்போம். சும்மா சொல்லக்கூடாது, PHD முடித்த எமது prof மாரை விட நன்றாகவே சொல்லித்தருவார்கள். ஆனா என்னதான் குத்தினாலும் குப்பியில படிக்கிறவன்தான் எடுப்பான் A+.


  • கையில

பரீட்சையில் fail விடுவதை இப்படி நாகரிகமாகக் கூறுவார்கள். பரீட்சை முடிந்தபின் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே “ மச்சான் கையிலதான்டா ” என்ற வாசகத்தைப் பரவலாகக் கேட்கலாம். ஆனால் அதைச் சொல்பவன்தான் A+ எடுத்துவிடுவான். நாங்களெல்லாம் “ பரவாயில்லை ” ரகம். எங்கட Result உம் பரவாயில்லை தான். ஒருமுறை யோசித்தேன், நானும் “ மச்சான் கையிலதான்டா ” எனக் கூறுவோம் என்று. ஆனால் எப்போதும் உண்மையாகும் எனது “ பரவாயில்லை ” யைப்போல “ மச்சான் கையிலதான்டா ” வும் உண்மையாகிவிட்டால் என்று பேசாமல் இருந்துவிட்டேன். போதுமென்ற மனமே …….


  • வாளி

பேசும் போது கொஞ்சம் ஓவராக வழிபவர்களும், தாமே வலியச்சென்று தேவையற்ற விடயங்களைப் பேசுபவர்களும் ( குறிப்பாகப் பெண்களிடம் ) வாளி எனப்படுவர். பொதுவாக இப்படி இருப்பவர்களை நாம் என்னதான் நக்கல் அடித்தாலும் அதைக் கணக்கிலேயே எடுக்கமாட்டார்கள்.


  • நோண்டி

அடுத்தவர் முன் அவமானப்படுதல் என நேரடிப் பொருள் எடுத்தாலும் உண்மையில் இதற்கு நேரடி அர்த்தமாக அதை எடுக்க முடியாது. இதை எப்படி வரைவிலக்கணப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவமானம் ஏற்படுத்தும் பாதிப்பை விட சற்றுக் குறைந்த பாதிப்பை மனதில் ஏற்படுத்தும்.


  • வாசிப்பு

வஞ்சப் புகழ்ச்சியின் நாகரிக வடிவம்தான் இந்த வாசிப்பு. இதைச் செய்வது ஒரு தனிக்கலை. ஒருவனின் காதல், கல்வி போன்றவையே இதில் முக்கிய இடம்பெறும். ஒருவனுக்கு வாசிக்கும்போது அவனைப்பற்றித் தெரியாதவர்கட்கு ஒன்றுமே புரியாது. ஆனால் தெரிந்தவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.


ஆத்தா! நான் திரைப்படத்திற்குக் கதை எழுதுகிறேன்!

0 comments


எனது இந்தப் பதிவிற்கும் நான் முன்னர் இட்ட ஒரு படத்தின் கதை அம்பலம் என்ற பதிவிற்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது. அதைப் படிக்காதவர்கள் தயவுசெய்து இங்கே சொடுக்கி அதைப் படித்துவிட்டுத் தொடர்ந்து வாசிக்கவும்.

கனது அந்தப் பதிவிற்கு நான் யாருடைய பதிவுகளையெல்லாம் படிப்பதையே பெருமையாக நினைக்கின்றேனோ, அவர்களே வந்து பின்னூட்டம் இட்டதில் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை எழுத வார்த்தைகளே இல்லை. ஆனால் அதைவிட மகிழ்ச்சியான / நகைச்சுவையான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. அது என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நண்பனுடனான உரையாடல். இதோ…..

அவன் :- மச்சான் நீ நேற்று Blog ல எழுதியிருந்தியே கதை, நல்லா இருந்துதுடா

நான் :- Thanx டா

அவன் :- அது சரி, உனக்கு எப்பிடிக் கிடச்சுது?

நான் :- ????!!!!

அவன் :- இல்ல, உண்மயிலயே அவுட் ஆயிட்டுதா?, இல்ல நீ சும்மா அடிச்சு விடுறியா?

நான் :- இல்லடா, சும்மா fun க்கு எழுதினது. சரியா வாசி, எல்லாப் பழய கதையும் அதில இருக்கும்.

அவன் :- அது தெரியுதடா, ….. சும்மாதான் கேட்டனான். Ok! Bye..

நம்பினால் நம்புங்கள்.
அந்த நடிகரின் கதை என நம்பும் அளவிற்கு எனது கதை அவ்வளவு ( மோசமாக / நன்றாக ) இருந்ததா, இல்லை அந்த நடிகரின் எல்லாப் படக் கதைகளுமே (?) ஒரே மாதிரி இருப்பதால் வந்த பிரச்சினையா என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

Tuesday, January 27, 2009

ஒரு படத்தின் கதை அம்பலம்

4 comments


ஒரு முன்னணிக் கதாநாயகன் தற்போது நடித்துவரும் படத்தின் கதை எப்படியோ வெளியில் வந்துவிட்டது. படத்தின் கதாசிரியருக்கும், இயக்குனருக்கும் இடையிலிருந்த முறுகலே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதோ அந்தக் கதை

இந்தப் படத்தில் ஹீரோவிற்கு இரட்டை வேடம். அண்ணா ஹீரோ ஒரு விமானப்படை அதிகாரி. தம்பி ஹீரோ படிக்காமல் ஊர் சுற்றும் ஒரு ‘போக்கிரி’. இருவருக்கும் ஒரே தங்கை. இருவரும் அவள்மேல் ‘ப்ரியமுடன்’ இருந்து வந்தனர்.

இதற்கிடையில் இவர்கள் இருக்கும் ஊரை வளைத்துப் போட வில்லன் குழு திட்டம் தீட்டுகிறது. அதற்காக அவர்கள் சிக்குன் குனியா வைரசை நுளம்புகளுக்குள் செலுத்தி ஊருக்குள் பரவச் செய்கின்றனர். இந்த நுளம்புக் கடிக்கு இலக்கான தங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன்மார் தங்கை குணமாகி வீடு திரும்பும்போது ஊருக்குள் சிக்குன்குனியாவே இருக்காது, நுளம்புகளை ‘ஆதி’ முதல் அந்தம் வரை ஒளிப்போம் எனச் சபதம்செய்து ‘வில்லில்’ இருந்து புறப்படும் அம்பாகப் புறப்படுகின்றனர்.

மூத்த அண்ணாவோ தனது விமானத்தில் கொசு மருந்தைக் கட்டிக்கொண்டு புறப்படுகின்றார். இரண்டாவது அண்ணாவோ கையில் ‘திருப்பாச்சி’ அரிவாளும் ‘சிவகாசி’ சரவெடியுமாகப் புறப்படுகிறார்.

பைலட் அண்ணா போகும் வளியில் படத்தின் ஒரு கதாநாயகியான திரிசா நுளம்புகளாற் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கின்றார். உடனே தன்னை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு விமானத்திலிருந்து பாய்ந்து தனி ஒருவனாக அத்தனை கொசுக்களையும் பந்தாடுகிறார். ‘குருவி’ போல வந்து தன்னைக் காப்பாற்றிய ஹீரோமேல் ஹீரோயினுக்குக் காதல் வந்துவிடுகிறது. வில்லன் தங்கை எனத் தெரிந்து ஹீரோவும் அவரைக் காதலிப்பது போல் நடிக்கிறார். உடனே இருவரும் சுவிட்சலாந்தில் ‘குஷி’யாக டூயட் பாடுகின்றனர்.


அடுத்த ஹீரோ செல்லும் வழியில் இரண்டாம் ஹீரோயின் நமீதாவைப் பார்க்கிறார். தனது ‘போக்கிரி’த் தனத்தால் அவளைக் கற்பமாக்கிவிட்டு கழன்றுவிடுகிறார். ஆனால் நமீதாவோ அவர் நல்லவர் எனக் கூறிக்கொண்டு அவரைத் தேடுகிறார். இதை அறிந்த ஏற்கனவே நமீதாவைக் காதலித்துவந்த வில்லனும் இரண்டாவது ஹீரோவைத் தேடி அலைகிறான்.

இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். சொல்லி அடிப்பதில் ‘கில்லி’யான ஹீரோ வில்லனைத் துவைத்து எடுக்கின்றார். இதனால் நமீதாவிற்கு இரண்டாம் ஹீரோமேல் காதல் அதிகமாகின்றது. அங்கே ஒரு டூயட் வருகின்றது. ரசிகர்களை ‘ஒன்ஸ்மோர்’ கேட்கவைக்கும் அளவிற்கு ஹீரோ ஆட்டம் போடுகிறார்.

முதலாவது ஹீரோ, வில்லனின் தங்கையின் காதலனாக வில்லனின் கோட்டைக்குள் நுளைகின்றார். வில்லனின் இரகசியங்கள் அனைத்தையும் அறிகின்றார். அங்கே கண்டறிந்த மாற்று மருந்தைப் பயன்படுத்தி நுளம்புகளை ஒளித்துப் ‘புதிய கீதை’ படைக்கின்றார். கிளைமார்க்சில் வில்லனை புழுதி மணலில் புரட்டி எடுக்கின்றார். இதனால் அவர் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்கின்றது. அவர் அதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகின்றார். இரண்டாவது ஹீரோவும் தனது தவறை உணர்ந்து நமீதாவுடன் சேர்கின்றார்.

இதுதான் அந்தக்கதை. இவற்றில் சில காட்சிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான காட்சிகள் ஒத்துப்போவதை அடுத்த படம் வெளிவரும்போது காணலாம்.

Monday, January 26, 2009

அவளும் நானும்

1 comments
விம்மிய முகத்துடன் நான்
அருகில் விசும்பற் குரலுடன் அவள்
அன்று
ஆண்டு ஒன்றின் முதன்நாள்
ஆண், பெண் என்பதே
அறியாத அந்நாள்

ஆங்கிலம் கற்கத்தொடங்கிய
ஆண்டு மூன்று
அருகிலே அவள் இல்லை
அவன்
அருகிருக்கவும் தோன்றவில்லை
வித்தியாசம் என ஏதோ புரிந்தது

ஆண்டு ஐந்துப் பரீட்சை
அவளைவிட அதிக மார்க்
எடுத்தாக வேண்டும்
ஏதோ ஒரு வைராக்கியம்
அதுவும் முடிந்தது

அடுத்த பாடசாலை
அவளுக்கு வேறு
எனக்கு வேறு
டியூசன் வகுப்பிலும்
தெளிவான இரண்டுபக்கம்
வித்தியாசம் நிச்சயிக்கப்படுகிறது

திடீரென ஓர்நாள்
அவள் இல்லை - பின்
வந்தாள் வாரம் இரண்டு
ஏதோ வித்தியாசம்
எனக்குப் புரிந்தது
எனக்குள்ளும் புரிந்தது

அவள்
தற்செயலாய்த் திரும்பினாலே
தறிகெட்டுத் துள்ளியது மனது
ஆம், என்னைத்தான் பார்க்கிறாள்
நானும் அவளையே

எல்லோரும் என்னையே
பார்ப்பதாய் உணர்கிறேன்
ஆடைகள் விசயத்திலும் நான்
அவ்வளவு கவனம்
தனியாக ஒரு நண்பர் கூட்டம்
என்னைச் சுற்றி
அவளுக்கும் தான்

அவள் என்னைவிட வேகமாக
சைக்கிள் விடுகின்றாள்
அவளுக்குப் பின்னாலே நான்
அடுத்தடுத்த பரீட்சையிலும்

அடுத்துப் பல்கலைக்கழகம்
மீண்டும் அவளோடு நான்
அருகிலேயே
தெளிவாகத் தெரிகின்ன
எதிர்காலக் கேள்விக்குறி
ஆனால்
இப்போது நான்
அதே ஆண்டு ஒன்று!

Saturday, January 24, 2009

வாங்க…. பழகலாம்!

1 comments

எங்கள்ள ரெம்பப்பேருக்கு அடுத்தவங்களோட பேச ஆசைதான். ஆனா அது எப்படி என்றுதான் தேரியிறதில்ல. என்னதான் நாங்க பேச முயற்சி செய்தாலும், அவங்களோட ரெம்பக் க்ளோஸ் ஆகிறது எப்படி என்றும் தெரியிறதில்லை. இதுக்காகத்தான் Joe, Hari என்ற ரெண்டு அமெரிக்காக் காரங்க சேந்து ஒரு வழியைக் கண்டுபிடிச்சிருக்காங்க. இப்ப இல்லை. 1950 களிலேயே !. கலிபோர்ணியாக் கம்பஸ்ஸில படிக்கிறப்ப ஏதோ ப்ராஜக்ட் செய்யிறப்ப கண்டுபிடிச்சாங்களாம். அதுக்கு என்று JOHARI WINDOW ன்னு பேர் வச்சிருக்காங்க. அத நான்கு யன்னல் இருக்கிற ஒரு வீட்டை வைத்து விளங்கப்படுத்தியிருக்காங்க.


படத்தில இருக்கிற மாதிரி ஒரு வீட்டை நினைச்சுக்கிங்க. அதில அறை நம்பர் ஒன்னு,நாலு ரெண்டையும் நீங்க பாக்கலாம். அதே மாதிரி அறை ஒன்னு, ரெண்டு ரெண்டையும் நீங்க சந்திக்கிறவங்க பாக்கலாம். அறை ரெண்டை நீங்க பாக்க முடியாது, அறை நாலு அவங்க பாக்க முடியாது. அறை மூணு யாருமே பாக்க முடியாது.


இதில அறை ஒண்ணை ரெண்டுபேருக்கும் தெரிந்த விசயமா வச்சுக்கலாம். அறை ரெண்டை உங்கள சந்திச்சவங்களுக்கு மட்டும் தெரிஞ்ச விசயமா வச்சுக்கலாம். அறை மூணை ரெண்டுபேருக்கும் தெரியாத விசயமாவும், நான்கை உங்களுக்கு மட்டும் தெரிஞ்ச விசயமாவும் வச்சுங்கங்க.


ரெண்டுபேரும் முதன்முதல் சந்திக்கறப்ப மேல இருக்கற படத்தில இருக்கிற மாதிரி ரண்டுபேருக்கும் தெரிந்த விசயங்கள் குறைவாகவும் தெரியாத விசயங்கள் கூடவாகவும் இருக்கும்.


இப்ப படத்தில இருக்கிற மாதிரி உங்களுக்குத் தெரிந்த அவங்களுக்குத் தெரியாத விசயங்களை அவங்களோட பேசிப்பேசிக் குறையுங்க. அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்பிராயம் வந்துவிடும். அப்புறம்


அவங்களும் உங்களோட பேசத் தொடங்குவாங்க. அப்புறம் இந்தப் படத்தில இருக்கிற மாதிரி அவங்களுக்குத் தெரிந்த உங்களுக்குத் தெரியாத விசயங்களும் குறையும். இதனால


இந்தப் படத்தில இருக்கிற மாதிரி ரெண்டுபேருக்கும் தெரிந்த விசயங்கள் கூடும். தெரியாத விசயங்கள் குறையும். ரெண்டுபேருக்குமே தெரியாத விசயங்களையும் ரெண்டுபேரும் சேர்ந்து அறிவீங்க. இறுதியில


புள்ளிக் கோட்டால காட்டின மாதிரி ஆரம்பத்தில இருந்த இருந்த ரெண்டுபேருக்கும் தெரிந்த இடம் நெடுங்கோட்டால காட்டினமாதிரி வந்துவிடும். ரெண்டுபேருக்கும் தெரியாத விசயங்களும் குறைந்துவிடும். இந்தப் படத்தில

A ங்கிறது அவங்க உங்களுக்குக் காட்டின விசயங்கள்.

B ங்கிறது ரெண்டுபேரும் சேர்ந்து கண்டுபிடித்த விசயங்கள்.

C ங்கிறது நீங்க அவங்களுக்குக் காட்டின விசயங்கள்.

இப்படிப் பேசிப் பழகிறதால நிறய விசயங்கள் தெரிஞ்சுக்கலாம் என்கிறது புரிஞ்சுதா?

அப்ப சரி, வாங்க …பழகலாம்! (சிவாஜி ரஜினி ஸ்டைல்ல வாசிங்க).

ஆனா ஒன்னு பழகிறேன் பேர்வழி என்று அறைகளை இப்படி ஆக்கி விட்டுடாதீங்க


ஏன் சொல்றேன்னா, சின்ன அறைக்குள்ளயும் குடும்பம் நடத்த முடியாது, அறையே இல்லாத வீட்டுக்குள்ளயும் குடும்பம் நடத்த முடியாது. ஒவ்வோருத்தருக்கும் personal என்று ஒன்று இருக்கும். அதில யாரும் தலப்போட முடியாது. ஆனா practicalலா இப்படி ஆக்கவும் முடியாது. புரிஞ்சுதா?

காதலில் விழுந்தேன்!

2 comments



கனவோடு வாழ்ந்து தலை
நரைகூடக் கண்டபின்னும்
என் காதலினை உனக்குக்கூற
தைரியம் வரவில்லையடி

கண்டால் முறுவுவதும் பின்
கண் சிமிட்டிச் சிரிப்பதுவும்
கையசைத்துக் கதைப்பதுவும் உன்
காற்கொலுசும் கவிதையடி

உன் கன்னக் குழியினிலே
கவிழ்ந்துவிட்ட என்னோடம்
கரைகாண வழியின்றிக்
கலங்கித் தவிக்குதடி

கண்ணாடி பிம்பங்களும் என்
கண்கடந்து போவோரும்
காண்போரெல்லாம் உன்னுருவாய்க்
கண்ணுக்குத் தெரியுதடி

நழினங்கள் இழையோடும் நம்மவர் நாட்டியமும்
அதிரடி இசையோடும் தற்கால நாட்டியமும்
அங்கங்கள் குலுங்க ஆடும் ஆபிரிக்க நாட்டுயமும்
உன் நடையெனும் நாட்டியத்தின் கடைகூட இல்லையடி

கடிதங்கள் எழுதுகிறேன், அனுப்ப வழி தேடுகிறேன்
தூதுவிடப் புறாவுமில்லை, உன் தூரத்து உறவுமில்லை
உன்னண்பி எனக்கு இன்னும் நண்பியும் ஆகவில்லை
என் கடதாசிக்காதல் உனைக் கண்டு கரை சேருமாடி

Tuesday, January 20, 2009

பொறியியலாளர்கள் இல்லாவிடில் உலகம்…

1 comments

சில மாதங்களிற்கு முன் எனது நண்பன் ஒருவன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. வேறு ஒரு மின்னஞ்சலிற்காய் inbox ஐத் துளாவியபோது கிடைத்தது. அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.

  • Aeronautical Engineers இல்லாவிடில்…



நாங்கள் யாழ்ப்பாணம் போகும் Expo Air விமானத்தினை விட இது எவ்வளவோ பரவாயில்லை என யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

  • Electronics Engineers இல்லாவிடில்




ம்ம்ம்ம்……….

இல்லத்தரசர்களின் பெருமூச்சு. யாருப்பா இதெல்லாம் இல்லைன்னு அழுதது?


  • Mechanical Engineers இல்லாவிடில்…



அட! பெற்றோல் விற்கும் விலைக்கு இது ரெம்ப நல்ல ஐடியாவா இருக்கே! வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி ஆழுங்க Mech போனாலும் இப்படித்தான்.


  • Telecommunication Engineers இல்லாவிடில்…




இப்படியே இருந்துவிட்டால் பல அலுவலகங்களில் செலவு பாதி ஆகிவிடும். ஆனா என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் நூலு விடுற கூட்டம் குறையாதுபோல.



  • Computer Engineers இல்லாவிடில்…



ஹையோ கம்பஸ்சில OS, OOP எதுவுமே இருந்திருக்காது. ஆனால் என்ன, Laptop ல படம்தான் பார்க்க முடியாது. Blog உம் எழுத முடியாது.


  • Civil Engineers இல்லாவிடில்…




ஒரு மருத்துவர் விடும் தவறு ஒரு உயிரைத்தான் பாதிக்கும். பிரசவ சமயத்தில் என்றால் இரண்டு உயிர்களை. ஆனால் ஒரு Civil Engineer விடும் தவறு? இதிலயாவது பிடித்துத் தொங்கக் கயிறாவது இருக்கிறது. அவங்க கட்டறதில?.



என்னோட Electrical Engineering எங்க காணலன்னு பாக்கிறீங்களா?



அது இருந்தும் இல்லாத மாதிரித்தான் என்று யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் இருக்கும் சிலர் புலம்புறது கேட்குது தானே!


அது சரி, ஆனா மனிதன் நெருப்பு, சில்லு, வில்லு ( விஜய் படம் இல்லை ) எல்லாம் கண்டுபிடித்தது பொறியியல் அறிவாற்றான். அந்த அறிவே இல்லாவிடின்?

மனிதன் இப்படித்தான் இருந்திருப்பான்.





ஆனால் உலகம்???

ரொம்ப நல்லா இருந்திருக்கும்!!!




Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy