Thursday, September 23, 2010

டைமன்ட் (சவால் சிறுகதை)

21 comments

 

Gamini

கையிலிருந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு புன்னகையுடன் மீண்டும் ஒருமுறை தலையை ஆட்டிக்கொண்டான் சிவா. அதிலே பூக்களின் பின்னணியில், மாலைச்சூரிய வெளிச்சத்தால் அங்கங்களும் கொஞ்சம் மஞ்சள் தொட்டுத் தெரிய, வெள்ளை நிற ஆடையில், ஃபேன்சி தோடுகள் சகிதமாக ‘சீஸ்’ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள் காமினி.

‘சூப்பரா இருக்கா பாஸ், ஆமா பெயர் என்ன சொன்னீங்க?’

‘காமினி’ இது பரந்தாமன்

‘என்ன பெயர் பாஸ் இது? ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க?’

‘அடேய், அது அவளோட ஒரிஜினல் பெயர்டா, சரி நீ கிளம்பு. நைட் 2.30க்கு லேன்டிங். ட்றஃபிக் இருக்காது. ஒன் அவர்ல இங்க வந்துடலாம். பொருள் பத்திரம்’

‘பயப்படாதீங்க பாஸ், பொண்ணும் பத்திரமா இருக்கும்’ சிரித்தபடியே காரைக் கிளப்பினான் சிவா.

-

பதினைந்து நிமிடத் தாமதத்துடன் ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி முரண்டுபிடித்துவிட்டு, மூன்றாவதுதடவை முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வருகையை ஒற்றை வார்த்தையில் அறிவிப்புப்பலகை அறிவிக்க, ஒருவித பரபரப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. சிறிதுநேரத்திலேயே வெளிப்பட்ட காமினியைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமமிருக்கவில்லை அவனுக்கு.

‘ஹாய், ஐம் சிவா’ என்றவாறே கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டான்.

‘காமினி’

‘ஐ நோ, நைஸ் நேம். ட்ராவல்ல ஒண்டும் பிரச்சினையில்லையே?’

‘இல்லை. போகலாமா?’

இடதுபக்கக் கதவால் காமினி பின் சீட்டில் ஏறிக்கொள்ள, சீட் பெல்ட்டை மாட்டியவாறே காரை எடுத்தான் சிவா.

‘U.K ல எங்க இருக்கிறீங்க?’

‘Uxbridge’

‘ஸ்டூடன்ஸ் விசாவா? என்னோட மாமாகூட அங்கதான் இருக்கார், பெயர் கூட வந்…’

‘சிவா, உங்க பருப்பு எங்கிட்ட வேகாது. பரந்தாமன் அங்கிள் உங்களைப்பற்றி முன்னாடியே எல்லாம் சொல்லிட்டார். So, கொஞ்சம் பேசாமப் போறீங்களா?’

கோபத்துடன் சிவா ஆக்சிலரேட்டரை மிதிக்க, அதிகம் வாகனநடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் சீறிப்பாய்ந்தது கார். சிறிதுதூரத்தில் குறுக்கே புகுந்த மோட்டார்சைக்கிள்காரனைக் காப்பாற்ற சிவா எடுத்துக்கொண்ட முயற்சியால் கார் கண்ணுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த இரும்பு மின்விளக்குக்கம்பத்தை 30 பாகையால் சரிக்க, அதே வேகத்தில் முன் சீட்டில் இடிபட்டு, மீண்டும் பின்னால் பிடரியில் அடிபட்டு பின்சீட்டிலேயே வலதுபக்கமாகச் சரிந்தாள் காமினி.

-

உடலில் ஆங்காங்கே வயர்கள் மாட்டப்பட்டு, கண்கள் சொருகிய நிலையில் சோர்ந்து கிடந்தாள் காமினி.

‘சீரியசா எதுவுமில்லை. நெத்தியிலதான் ஏழு ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். ரத்தம் கொஞ்சம் அதிகமாப் போனத்தல மயங்கிட்டா. பிரடியில அடிபட்டதால மூச்சுவிட கொஞ்சம் கஸ்டப்பட்டா, இப்ப எல்லாம் நார்மல். கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சுடுவா’ அருகில் டாக்டர் ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி, பரந்தாமன் வீட்டைச் சென்றடைந்தாள்.

‘என்ன ஆச்சு காமினி? ஏன் இவ்வளவு லேட்? நெத்தியில என்ன காயம்?’ பார்த்ததுமே பதறிய பரந்தாமனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள் காமினி.

‘அப்ப சிவா?’

‘சீட் பெல்ட் மாட்டியிருந்ததால அவனுக்கு அவ்வளவா அடிபடல போல, ஆக்சிடன்ட் ஆனதுமே கார்லருந்து இறங்கி என்னோட ஹேன்ட்பேக்கையும் எடுத்துட்டு ஓடுறதைப பார்த்தேன். அதுக்கப்புறம் நான் மயங்கிட்டதால எதுவுமே தெரியல’

‘அதுசரி, நீ எதுக்கும்மா ஹாஸ்பிட்டல்ல இருந்து ஓடிவந்த? போலீஸ் கேஸ் வேற. சிக்கலாயிடும். வா போலீஸ் ஸ்ரேசனுக்குப் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு, உன் மத்த லக்கேஜசையும் வாங்கிட்டு வந்துடலாம்’

இவர்கள் வாசலால் வெளியேற, அதற்காகவே காத்திருந்தவன் போல குறுக்கே பாய்ந்து

‘ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை’ என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

‘த்சோ த்சோ த்சோ, பயந்துட்டியா?’ என்றவாறே துப்பாக்கியை எடுத்து இம்முறை பரந்தாமனின் நெற்றியில் வைத்தான்.

‘உன்னோட லக்கேஜில எனக்குத் தேவையான பொருள் ஒண்டு இருக்கு. மரியாதையா அதை எப்படியாவது போலீஸ்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்திடு. ஏதாவது வம்பு பண்ணணும்னு நினைச்சா உன்னோட பரந்தாமன் அங்கிள் அந்தப் பரந்தாமன்கிட்டயே போகவேண்டியதுதான்’ என்றான் சிவா.

-

சில மணி நேரங்களில் லக்கேஜை எடுத்தவாறு உள்ளே நுளைந்த காமினி பரந்தாமனும், சிவாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றாள்.

‘காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே’ என்று பாராட்டினார் பரந்தாமன்

‘டைமன்டா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி

‘என்னோட ப்ரண்ட் உன்கிட்ட தந்துவிட்ட பார்சல்ல டைமன்ட் இருக்கிற விசயம் உனக்குத் தெரியாது. அது இருக்கிற பாக் எண்டு நினைச்சுத்தான் சிவா உன்னோட ஹேன்ட்பேக்கை எடுத்துட்டு ஓடினான் என்கிறதும் உனக்குத் தெரியாது. கடைசியா நான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தா அரஸ்ட் பண்ணிடுவாங்க என்கிறதால உன்னைத் தனியா அங்க அனுப்புறதுக்குப் போட்டதுதான் இந்த துப்பாக்கி ட்றாமா என்கிறதும் உனக்குத் தெரியாது’ என்றுவிட்டு அதிர்ந்து சிரித்தார் பரந்தாமன்.

‘இப்ப உங்களைக் கொண்ணுட்டு டயமன்டை நானே எடுத்துக்கப்போறேன் எண்டுற விசயம் உங்களுக்குத் தெரியாது பாஸ்’ என்றவாறே பரந்தாமன் தலையில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

‘வெரிகுட், ஆனா நான் போலீஸ் என்கிற விசயம் உங்கள் ரெண்டுபேருக்குமே தெரியாது’ என்றவாறே சிவாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாள் காமினி.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy