Monday, September 28, 2009

கலைஞரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது…

34 comments






தமிழக முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கடந்த இரு வாரங்களாகத் தீர்க்கப்பட முடியாமலிருந்த எனது பிரச்சினைக்கு தீர்வைத் தந்துவிட்டார். அண்ணா விருது, உளியின் ஓசை படத்திற்காக சிறந்த உரையாடலிற்கான தமிழக அரசு விருது ஆகியவற்றைப் பெற்றதன் மூலம் எனது விருதுப் பிரச்சினைக்கும் தீர்வைத் தந்துவிட்டார்.








சந்ரு அவர்கள் கொடுத்த இந்த விருதை நான் பெறும்போது விருது வழங்கும் கலாசாரம் முடிவிற்கு வந்து விட்டதாலும், பெரும்பாலும் அனைவரும் பெற்றுவிட்டதாலும் இந்த விருதை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது பாணி தெம்பைத் தந்தது.



அதனால் இந்த விருதுகளை எனக்கே வழங்கிக்கொள்கிறேன்.


நன்றி சந்ரு
நன்றி சுபாங்கன் ( விருது கொடுத்ததற்காக)


பதிவு எழுதிப்பார்!

51 comments


வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை ஆளாளுக்கு மாற்றி எழுதிப் பதிவிட்டுவிட்டார்கள். நானும் எழுதாவிட்டால் என்னைப் பதிவர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயத்திலேயே இதை எழுதிவிட்டேன். வைரமுத்து மன்னிப்பாராக.










பதிவு எழுதிப்பார்!

திரட்டிகளில் உன்பெயர்
தெளிவாகத் தெரியும்.
உன்தமிழ் அழகாகும்.
உனக்கும் கோபம்வரும்.
இணையம் தெய்வமாகும்
கம்யூட்டர் கோவிலாகும்.
பதிவு எழுதிப்பார்

அதிகம் சிந்திப்பாய்
பார்ப்பதெல்லாம் குறிப்பெடுப்பாய்
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவாய்
பல்துலக்க முன்னேவந்து – உன்
பதிவுகளில் பின்னூட்டம் தேடுவாய்
பதிவு எழுதிப்பார்.

பதிவெழுத வந்துவிட்டால்
மணித்துளிகள் நிமிசமென்பாய்
பின்னூட்டம் வந்திடாத
நிமிசமும் மணிகளென்பாய்
ஒற்றை நிமிடத்தினுள்
ஒன்பதுமுறை ஓட்டுப்பார்ப்பாய்
பதிவு எழுதிப்பார்

மொக்கைப் பதிவுகளுக்கு
முக்கியத்துவம் தருவாய்
சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்
சிந்தித்தே பதிலளிப்பாய்
கும்மி அடிப்பதென்றால்
குதூகலமாய் கிளம்பிடுவாய்
கும்மி உனக்கென்றால் – கொஞ்சம்
ஒதுங்கியே பதுங்கிடுவாய்
பதிவு எழுதிப்பார்

நல்லாய் இருக்குதென்ற
டெம்ளெட் பின்னூடத்திற்கும்
நன்றிசொல்வாய்
அர்த்தமற்ற அனானிக்கும்
ஆறுதலாய்ப் பதிலுரைப்பாய்
அனானியாய் நீயேவந்து
சமயத்தில் பின்னிடுவாய்
பதிவு எழுதிப்பார்.

அனானிகள் வந்து
தாக்கினாலும்
பாலோவர்ஸ் எண்ணிக்கை
படிப்படியாய்க் குறைந்தாலும்
ஒரே பிளாக்கை இருவர்
சிக்கனமாய்ப் பகிர்ந்தாலும்
நீ பின்னூட்டமிடும் அவனோ, அவளோ
உனக்குப் பின்னூட்டமிட மறுத்தாலும்
பதிவு எழுதிப்பார்.

சொர்க்கம், நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்.


பதிவு எழுதிப்பார்.


Friday, September 25, 2009

காதல், பணம், கடவுள், அழகு

24 comments


இந்தப் பதிவுக்கு சிந்து அழைத்து குறைந்தது ஒரு வாரமாவது ஆகிவிட்டிருக்கும். தலைப்பு கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் இனியும் எழுதாவிட்டால் வங்கதேசத்திலிருந்து வந்தாலும் வந்துவிடுவார் என்பதால் இன்று பட்ட கடனில் ஒன்றைக் குறைத்துக்கொள்கிறேன்.




காதல்





எனக்கு இதற்குமான தொடர்பு கொஞ்சம் வித்தியாசமானது. ஒருவகை ஈர்ப்பின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் தவிர்த்து உண்மைக் காதலை என்னுள் இதுவரை உணர்ந்ததில்லை. கொஞ்சம் ஒதுங்கியே இருக்கவேண்டும் என விரும்புபவற்றில் இதுவும் ஒன்று. ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை பல்கலையில் நடைபெறவுள்ள வாணிவிழாவில் எனது தலைப்பு பல்கலைக்கழகக் காதல். விதி யாரை விட்டது?


கடவுள்



இவர் தொடர்பான எல்லாவற்றுக்கும் மனம் அர்த்தம் தேடிக்கொண்டிருந்தாலும் சிக்கலான சமயங்களில் அடிக்கடி மனதின் அமைதிக்கு இவரே தேவைப்படுவார். இவரிடம் எதையும் வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் இருக்கிறது. அங்கே மனம் அமைதியடைவதையும் உணர்ந்திருக்கிறேன். கடவுளை நம்புகிறேன். மனிதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட உருவங்களை அல்ல. அந்த உருவங்களால் இன்று மனிதர்கள் பிரச்சினைப்படுவதை அந்தக் கடவுளே விரும்பமாட்டார்.




பணம்





இன்றய உலகின் ஈடு இணையற்ற கடவுள். மனித மனங்களையே புரட்டிப்போடும் சக்தி இதற்குத்தான் உண்டு. நிஜ வாழ்க்கையில் எத்தனையோ நடிகர்களை உருவாக்கிய பெருமை இதற்குண்டு. இதனால் மனிதர்கள் மாறும் வேகம் கண்டு எத்தனையோ நாள் பிரமித்திருக்கிறேன். மனம் முதல் மாளிகை வரை இதற்கு அடிமை. இதைச் சேமிக்கலாம், நேர்மையாக மாத்திரம்.




அழகு







இயற்கையின் படைப்பில் எல்லாமே அழகுதான். அதைப் பார்க்கும் பார்வைகள்தான் வித்தியாசப்படுகின்றன. அழகை ரசிப்பதில் தவறில்லை, அனுபவிக்க ஆசைப்படக்கூடாது என்பதே எனது கொள்கை. இன்று நட்பு முதல் வேலைவாய்ப்புக்கள் வரை அத்தனையிலும் இது செல்வாக்குச் செலுத்துவதே வருந்தத்தக்க உண்மை.




இதைத் தொடர நான் அழைப்பது




Monday, September 21, 2009

உன்னைப்போல் ஒருவன்

17 comments



கமலின் பாணியிலான விறுவிறு வேகம், ஆங்கிலப்படத்துக்கேயுரிய நீளம், ஆங்காங்கே உறுத்தாத நகைச்சுவை, அருமையான ஒளிப்பதிவு, படத்தையே தூக்கிநிறுத்தும் பின்னணி இசை, அளவான பாத்திரங்கள், அருமையான நடிப்பு. இதுதான் உன்னைப்போல் ஒருவன்.


சண்டைக்காட்சிகள் இல்லாது, பாடங்கள் இல்லாது, முக்கியமாக ஹீரோயின் இல்லாது ஒரு தமிழ்ப்படம்  எடுத்ததற்கே கமலைப் பாராட்டலாம். ரீமேக்தான் என்றாலும் இப்படித் தமிழில் எடுப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்.  தமிழ் சினிமாவில் புதுமை புகுத்துவதென்றால் அது கமலாகத்தான் இருக்கமுடியுமென்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.


தவறிவிழும் ஒற்றைத் தக்காளியைக்கூட பொறுக்கி எடுத்துக்கொண்டு வரும் கமல், ஆறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கமிஷனருக்கு போன் செய்யும்போதே நிமிர்ந்து உட்காரவைத்துவிடுகிறார் இயக்குனர்.  இறுதிவரை அந்த ஆர்வத்தைக் குறையவிடாமல் அப்படியொரு வேகம், இறுதிக்காட்சிவரை தொடர்கிறது.


படத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர் அற்புதமாகச் சிரிக்கவைக்கிறார் என்றால் பின்னர் எலக்சனுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையே என்று கேட்கும் காட்சியில் முதல்வர் எல்லாத்தையுமே தூக்கிச்சாப்பிட்டுவிடுகிறார். அரசியல்வாதிகளின் புத்தியை அப்படியே காட்டியிருக்கிறார்கள்.


கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் அந்த இரு  இளைஞர்கள், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், லக்ஸ்மி எல்லோருமே பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். வசனங்களில் இரா. முருகன் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.







மென்பெருளைப் பயன்படுத்தி வேகமாகப் பயணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கமல், சரளமாகப் பேசப்படும் ஆங்கிலம் என்பன சராசரி ரசிகனிற்குப் புரியுமா என்பது சந்தேகமே என்றாலும் படத்தின் விறுவிறுப்பிற்கு அவை நிறையவே கைகொடுத்திருக்கின்றன. 



படத்தின் சில காட்சிகளில் சினிமாத்தனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி ஒரு தமிழ்ப்படம் பார்த்ததே அவற்றையெல்லாம் எழுதவிடாமல் செய்துவிட்டது.



உன்னைப்போல் ஒருவன்  - ஒரு சாதாரணனின் கோபம், கொஞ்சம் சினிமாத்தனமாக.


Friday, September 18, 2009

பெட்டி தி(பி)றந்த கதை

10 comments

நான் பதிவெழுத வந்த கதையை பனையூரான், சுபானு இருவருமே எழுதச்சொல்லிக் கேட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். இதற்குமேலும் தாமதிக்கக்கூடாது என்பதால் இன்றய மழைக்குளிருக்குக் குட்டித்தூக்கம் கூடப் போடாமல் இதை பதிவிடுகிறேன்.

அப்போது பல்கலையில் June term நடந்துகொண்டிருந்த காலம். விளையாடுவது எப்படி என நடந்துகொண்டிருந்த லெக்சரில் வரவைப் பதிந்துவிட்டு பின்வாசல் வழியாக லெக்சரிலிருந்து ‘எஸ்’ ஆகி மீன்தொட்டியின் சிங்களப்பதத்தால் செல்லமாக அழைக்கப்படும் கணினி ஆய்வுகூடத்தினுள் ஐக்கியமானேன். அங்கே எனக்கு முன்னரே ‘எஸ்’ ஆகியிருந்த நண்பன் ஒருவனினால் அறிமுகப்படுத்தப்பட்டதே லோஷன் அண்ணாவின் தளம். எதற்கும் இருக்கட்டும் என்று அதிலே இருந்த “Create a blog” இனைக் கிளிக்கி நானும் ஒன்றை உருவாக்கிக்கொண்டேன். அன்றுமுதல் லோஷன் அண்ணாவின் பதிவுகளையும், அவர் இணைப்புக்கொடுத்திருந்த ஏனய பதிவர்களின் பதிவுகளையும் படிக்கத் தொடங்கினேன்.

அதே June termஇன் இரண்டாவது பாதி. ஏதாவது ஒரு Project சமர்ப்பிக்க வேண்டிய காலம். டிபார்ட்மென்டில் கூட இருந்த ஒரேயொரு தமிழ் நண்பனும் நானும் வெவ்வேறு குழுக்களாக்கப்பட்டுவிட தமிழ் பேசக் கூட யாருமே இல்லாத நிலையில்தான் நானும் பதிவெழுதினால் என்ன என்ற விபரீத ஆசை எனக்குள்ளும் துளிர்விட்டது.

அப்போது எனக்கு தமிழ்மணம், தமிழிஷ், ஏன் திரட்டிகளில் பதிவுகள் திரட்டப்பட்டுத்தான் பலரையும் சென்றடைகின்றது என்பதுகூடத் தெரியாது. பின்னர் ஆங்காங்கே பதிவுகளில் இருக்கும் இணைப்புக்களை சொடுக்கி அவற்றைப்பற்றி அறிந்து, இணைப்பது எப்படி எனத் தெரியாது விழித்து, என அவை எல்லாம் சொந்தக்கதை, சோகக்கதை.

பதிவுகள் எழுதத் தொடங்கும்போதே facebookஇன் புண்ணியத்தில் தமிழ்99 தட்டச்சும், யுனிக்கோட் பற்றிய அறிவும் இருந்ததால் அதில் பிரச்சினை ஏற்படவில்லை.

பதிவுலகம் எனக்குக் கொடுத்தவை ஏராளம். பல முகம்தெரியாத பதிவர்களுடன் கூட பலகாலம் பழகிய ஒரு உணர்வை இது எனக்குத் தந்திருக்கிறது. கூடவே இதுவரை நான் யார்கூறியும் கேட்டறியாத கெட்ட வார்த்தைகள் அடங்கிய அனானிப் பின்னூட்டங்களையும்தான். அதிகம் தொழில்நுட்பப் பதிவுகள் இடத் தொடங்கியமைக்கு அவையும் ஒரு காரணம்.

பதிவுகள் எழுதத் தொடங்கிய பின்னர்தான் பல இடங்களில் எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைப்பதாய் உணர்ந்திருக்கிறேன். இன்று பதிவிடல் தொடர்பாக என்னிடமும் சிலர் ஆலோசனை கேட்கும்போது ஒருவகைப் பெருமையாகவே இருக்கும்.

எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் சுயபுராணம் பாடும்போதும் கொஞ்சம் அடக்கியே பாடவேண்டும். அதனால் இத்தோடு முடிக்கிறேன்.

ஏற்கனவே இதைப் பலரும் எழுதி முடித்துவிட்டதால் இனி யாரையும் அழைக்கப் போவதில்லை. மன்னிக்க.

Monday, September 14, 2009

ஏமாறுவோர் இருக்கும்வரை… (உண்மைச் சம்பவம்)

17 comments

நான் கடந்த வியாழக்கிழமை யாழிலிருந்து கொழும்பு வருவதற்காகக் காத்திருந்தபோது நடந்த சம்பவம் இது. பலர் அன்று ஏமாறக் காரணமாக நானும் ஒரு மறைமுகக் காரணமாக இருந்துவிட்டதால் ஏற்பட்ட உறுத்தல் இன்னமும் இருப்பதால் இதை எழுதுகிறேன்.

யாழ் – கொழும்புக்கான A9 வீதி அண்மையில் திறக்கப்பட்டது அறிந்ததே. ஆனாலும் அதனூடு பயணிப்பவர்கள் அனைவரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒருமித்த வாகனத்தொடரணியாகவே வவுனியா வரை அழைத்துவரப்படுகிறார்கள். அன்றும் இந்த பரிசோதனை முடிக்கக் காத்திருத்தோர் ஆயிரதிற்கும் அதிகம். அண்மையில்தான் A9 வீதி திறக்கப்பட்டமையால் அதனூடு பயணம் செய்வதற்கான விதிமுறைகள் தெரிந்தவர்கள் மிகச் சொற்பமாகவே இருந்தனர்.

பஸ்சிற்கு மக்களை ஏற்றும் யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒரேயொரு போட்டோ பிரதி எடுக்கும் கடை மாத்திரமே காணப்படுகிறது. அங்கேயும் ஏனய கடைகளை விட மூன்றுமடங்கிற்கும் அதிகமான கட்டணம் அறவிடப்படுகிறது. ( ஒரு பக்கத்திற்கு 10 ரூபா ).

நான் புகையிரத நிலையத்திற்கு சென்றடைந்த போது ஒருவர் அடையாள அட்டை, மற்றும் பயண அனுமதி ( Clearance ) ஆகிய இரண்டிலும் தலா இரண்டு போட்டோ பிரதிகள் தேவை எனவும் இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்திக்கொண்டிருந்தார். என்னிடம் இல்லாததால் அதை எடுப்பதற்காக அக் குறிப்பிட்ட கடைக்குச் சென்றேன். அங்கே பெரிய வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஏறத்தாள இருபது நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு போட்டோ பிரதியுடன் திரும்பினேன். என் பின்னாலும் பலர் காத்திருந்தனர். வெளியே வந்த நான் அங்கிருந்த சிலருக்கு இதைப்பற்றி அறிவுறுத்த, அவர்களும் அதற்காக சென்றார்கள்.

பின்னர் சோதனைக்காக சென்றோம். அங்கே இராணுவத்தினரால் கோரப்பட்டது ஒரேயொரு அடையாள அட்டையின் பிரதி மாத்திரமே!

மூன்று ரூபா பெறுமதியான போட்டோ பிரதிக்கு பத்து ரூபா அறவிடுவது மாத்திரமல்லாமல் மக்களை பொய்யான வழியில் ஏமாற்றி அதிக பிரதிகள் எடுக்க வைத்ததும் அந்தக் குறிப்பிட்ட கடைக்காரர் என்பதை ஊகிக்க முடிகிறதல்லவா? அன்று ஒருநாள் மட்டும் அவருக்கு இலாபம் பல ஆயிரங்கள். அத்தோடு நின்றுவிடாது இது அங்கே தினம்தினம் தொடரும் ஒரு செயற்பாடு.

இதைப்பற்றி அங்கிருந்த இராணுவத்தினரிடம் முறையிடப்பட்டது. அங்கிருந்த உயரதிகாரியொருவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

ஆனாலும் ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள் இல்லாயா?

Friday, September 11, 2009

இன்னுமொரு சனிப்பெயற்சி

16 comments





கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விடுமுறையில் வீடு சென்றிருந்தேன். அங்குள்ள இணைய இணைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத்தால் என்னால் பதிவிட முடியவில்லை. அந்த ஒருமாதத்தில் நானும் பதிவுலகமும்….

  • பதிவுலகின் எனது முதலாவது நண்பி சிந்துவை யாழில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  பதிவுலகால் இடம்பெற்ற எனது முதலாவது சந்திப்பு இது.



  • இந்த இடைப்பட்ட காலத்தில் யாழ்தேவி திரட்டி என்னை நட்சத்திரமாக அறிவித்திருந்தது. அந்த வாய்ப்பை என்னால் பயன்படுத்திக்கொள்ளவே முடியாமல் போய்விட்டது.


  • இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இலங்கையின் முதலாவது பதிவர் சந்திப்பு இடம்பெற்றது. முதலில் வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும் பின் யாழ் – கொழும்பு பயண இழுபறிகள் முடிவை மாற்றிவிட்டன.


  • சந்ரு அண்ணா எனக்கு அடுத்த அன்புப்பரிசையும் கொடுத்துவிட்டார். இன்னுமொரு விருது. Scrumptious Blog Award . அவருக்கு எனது நன்றிகள். அதை வேறு நாற்பது பேருக்குக் கொடுக்க வேண்டுமாம். ஸபா..


  • சக பதிவர்கள் பனையூரான், சுபானு இருவருமே என்னை நான் பதிவெழுதத் தொடங்கிய கதையை எழுதச்சொல்லி அழைத்துள்ளனர். கரும்பு தின்னக் கூலியா? தோ.. எழுதத் தொடங்கிட்டேனே!


  • கார்த்தி அண்ணா என்மேல் கொண்ட அளவுகடந்த பாசத்தால் என்னை பிரபல பதிவராக்கிந்தோடு மட்டும் நின்றுவிடாது எனது சில தணிக்கை செய்யப்பட்ட தகவல்களையும் வலையில் பரப்பிவிட்டதும் இதே காலத்தில்தான். அது இங்கே!


  • ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள். நானும் ஏமாந்து மற்ற சிலரையும் ஏமாறச்செய்த எனது மனதை உறுத்தும் ஒரு சம்பவம் அடுத்த பதிவில்.


Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy