Tuesday, December 27, 2011

கால இயந்திரம்

10 comments





சட்டென்று தனிமை
ஆட்கொள்ளும் நேரங்களில்தான்
தேவையற்ற நினைவுகளும்
செருகேடுகளின் ஞாபகமும்..


புரட்டத் தொடங்கிய 
செருகேட்டும் பக்கங்களின்
இடுக்குகளில் உருண்டோடுகிறது
கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட 
கால இயந்திரம்


காலம் கடந்து 
கவனிக்கையில் மட்டும் - ஏனோ
கடதாசித் தடிப்பையும் விடக் 
கனத்துக் கிடக்கின்றன
புகைப்படங்கள்..!


நினைவுகளின் கனத்தைத் 
தாங்க முடியாமல் - அதை
முன்னோக்கிச் செலுத்தும் 
முழு முயற்சியில் தோற்றுக்கொண்டே
குதிக்கால் ஊன்றி பெருவிரல் வரைந்த
குட்டி வட்டத்துக்குள் 
சுற்றத் தொடங்குகிறேன்..


இறந்துபோன நிகழ்காலத்து
இடுக்குகளில் எழுந்துவந்தாள்
பிரிந்துபோன பழைய நண்பி


எப்போதோ பார்த்த நான்
எனக்கே சிரிப்பூட்டினான்


எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது


'அ' போட்டு வரைந்த மயில்
'ல' போட்டு வாங்கிய அடி
பாசி படிந்துபோன
கோயிலடிக் குழாய்க்கிணறு
அதிகம் சுவைத்த 
மாற்றான் தோட்டத்து மாங்காய்


பல நேரங்களில் 
விடைபெறல் என்பது 
வெறும் கையசைப்பு மட்டுமல்ல..!


கடைசிப் பக்கம் கடந்து
கண்கள் நிறைந்து
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளியைப்
புறந்தள்ளி நிமிர்கிறேன்


இன்னும்
தூசி ஏறிப்போன பரனில்
மூலை மடங்கி, முன் அட்டை கிழிந்து
பழுப்பேறிப்போன பழைய புத்தகத்துள் 
குட்டிபோட்டுக் கிடக்கின்றன
மயிலிறகுகள்..!


Saturday, July 23, 2011

நிலா..!!!

12 comments

 

குழந்தைகளின் உலகுக்குள்

அனுமதிக்கப்படாத அந்நியர்கள்

தங்களை பெரிய மனிதர்களாக

எண்ணிக்கொள்வது பிழையல்ல

பேதமை!

காலையில் விகடனில் படித்துவிட்டு ‘அட!’ போடவைத்த இந்த வரிகள் மாலை தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் உலகத்தைப் பார்த்தபோது அப்படியே மனதில் ஆழப் பதிந்துபோனது.

Vikram, Baby Sara in Deiva Thirumagan

கிருஷ்ணா – நிலா என்ற இரண்டு குழந்தைகளின் உலகம். இந்தக் குழந்தைகளின் குடும்பத்தின் ஐந்து வயதுக் குட்டி ஏஞ்சல் நிலாவாக பேபி சாரா. அவருக்குத் தகப்பனாக, தாயாக ஏன் சமயத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் இன்னுமொரு குழந்தையாக ஒரு மனநிலை குன்றியவரின் பாத்திரத்தில் சற்றும் அலட்டலில்லாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். இந்த இருவருக்கும் இடையிலான விளையாட்டு, குறும்பு, பாசம், பிரிவு, ஏக்கம், ஏமாற்றம், கோபம் இதுதான் தெய்வத் திருமகள்.

கலகலப்பாக ஆரம்பித்து நகர்ந்துகொண்டிருக்கும் படத்தில் சிரித்துச் சிரித்து கண்ணில் வந்த கண்ணீர் காயுமுன்னரேயே மகளைப் பிரிந்து கிருஷ்ணா கதறும் காட்சி உறையவைக்க உணர்வுகளின் கலவையாக, ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை ஒரே நேரத்தில் முழுமையாக உணரவைக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அடித்துச்சொல்லியிருக்கிறது தெய்வத்திருமகள்.

படத்தில் இசையே பேசப்படாத பல வசனங்களைப் பேசிவிட, பல இடங்களில் பாத்திரங்களது மௌனமும் உடல் மொழிகளுமே புரிந்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்கின்றன. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் இசை காதுகளில் நுளைந்து மனதைக் கட்டிப்போட்டு விடுகின்றன. சரியான பாத்திரத் தெரிவுகள், அலட்டலில்லாத நடிப்பு, மனதைக் கவரும் இசை என்று எல்லாவற்றையும் தாண்டி படம் முடிந்து பல மணி நேரம் ஆகியும் இன்னும் மனதுக்குள் நிற்பது – நிலா!

sara-11

அடர்ந்த புருவங்கள், கதை பேசும் கண்கள், மெல்லிய புன்னகை என்று ஒருமுறை பார்த்தாலே மனதோடு ஒட்டிக்கொள்ளும் அந்தச் சின்ன முகமே படத்தின் பாதி இடங்களில் நடித்துவிடுகிறது. பாடசாலைக்கு வரும் தகப்பனிடம் சைகை மொழியில் உரையாடி வீட்டுக்குப் போகுமாறு கையெடுத்த்துக் கும்பிடுவதாகட்டும், இடிக்குப் பயந்து இருவரும் ஒடுங்கிக் கிடந்துவிட்டு கைகளில் தண்ணீர் ஏந்தி விளையாடுவதாகட்டும், தகப்பனைப் பிரிந்து ஏங்கும் காட்சிகளாகட்டும், இறுதி நேர நீதிமன்றக் காட்சியில் தகப்பனும் மகளுமாக சைகைகளிலேயே கோபித்துக்கொள்வதும் பின் சமாதானமாகி கதைபேசி உரையாடுவதும் அன்பைப் பரிமாறுவதும் என ஒவ்வொரு காட்சிகளுமே ஒவ்வோர் வார்த்தையில்லாக் கவிதைகள். மழலைக் குரலும், காட்சிக்கேற்ப மாறிமாறிக் கதைபேசும் கண்களுமாக அந்தக் குட்டி ஏஞ்சலுக்கு ஐந்து வயதுதான் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. காட்சிக்குக் காட்சி பாசம், பிரிவு, ஏக்கம், வேதனை என்று மாறி மாறிக் காட்டி இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா? வீட்டுக்குப் போய் முதலில் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லவேண்டும்.

ஒவ்வ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்?

படம் I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.

குட்டி நிலாவின் பாசப் போராட்டம் முடிந்து வெளியேறும்போது அடர்ந்த மௌனம், கனத்த மனத்துடன் கொஞ்சம் கண்ணீரையும் சேர்த்தே தந்துவிடுகிறது தெய்வத்திருமகள்.

Friday, July 22, 2011

ஜயமுண்டு பயமில்லை மனமே!

9 comments

யாழ்ப்பாணம் புற்றளை பிள்ளையார் ஆலயத்தில் லோஷன் அண்ணாவின் தலைமையில் இடம்பெற்ற மறுபடியும் பாரதி என்ற பொதுத்தலைப்பிலான கவியரங்கத்தில் ஜயமுண்டு பயமில்லை மனமே  என்ற தலைப்பின்கீழ் நான் படித்த கவிதை இது.
 
இக் கவியரங்கக் கவிதைகள் அனைத்துமே எம்மால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் அறிமுகத்திலிருந்து தொடங்கிப் படிப்பது கவியரங்கத்தை முழுமையாக வாசித்த உணர்வைத் தரும் என்பதால் இங்கே இருந்து படிக்க ஆரம்பிப்பது நலம்.
 
கீழே சிகப்பு எழுத்தில் இடப்பட்டுள்ள பகுதி வணக்கங்களும், சின்னச் செல்லக் கடிகளும்தான் என்பதால் பிரதான கவிதையை மட்டுமே படிப்பேன் என அடம்பிடிப்போர் சிகப்பு நிறப் பகுதியை ஒரே தாவாகத் தாவிக் கீழே சென்று படிக்கவும்.
DSCN1190

கவிதையினை ஒலிவடிவில் கேட்க…
ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலே
விடுதலை உண்டு நிலை உண்டு,
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற
குலசக்தி சரணுண்டு பயமில்லை

சக்தி பெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
புற்றளை விநாயகனே
எங்கள் விழா நாயகனே
யானை முகத்தவனே
சாற்றுகிறேன் முதல் வணக்கம்.
நற்றமிழ் தந்து நாவில் விளையாடும்
கலை வாணிக்கோர் கவி வணக்கம்.
தங்க மொழி தந்த தமிழ்த்தாய்க்குத் தமிழ் வணக்கம்
பாட்டுடைத் தலைவனாம் பாரதிக்கோர் பெருவணக்கம்

அண்ணன் – பெரியண்ணன்
பேச்சிலே இவன் ஒரு விண்ணன்
விளையாட்டிலோ இவன் இன்னுமொரு கண்ணன்
அறிமுகமே தேவையில்லா மன்னன்.
இவன் வைத்திருப்பதோ ஒரு வலைப்பூ
இவன் குரல் கேட்டால் ஒருவித மலைப்பு
இவன் பெயரால் இங்கே பலருக்கும் பிழைப்பு
இவனால்தான் எனக்கும் இங்கே அழைப்பு
இவன் ஒலியுலக சிற்பி
செல்லமாய் விக்கி
கவியரங்கத்திலோ இன்று இவன் எம் மத்தி.
அரங்கத் தலைவர் லோஷனுக்கு ஓர் தனி வணக்கம்

கூடிக் கவி பாடக்
கூடவே வந்திருக்கும்
ஒரு கூட்டுப் பறவைகள்
ஒருவர் - என்
கட்டைவிரல் கேட்காத கவியுலக துரோணர்
கணினி உலகின் கலங்கரை விளக்கம்
சிரிப்பிலோ சினேகா - சீற்றத்தில் சிங்கம்
சிறீ அண்ணா எங்கள் கருப்பு நிறத் தங்கம்.

அடுத்து அண்ணன் மாலவன்.
எங்கள் காவலன்
கூட்டத்தின் குலவிளக்கு.
பக்கத்தில் பார்த்தாலோ ஒரு புகை கக்கும் எரிமலை
பழகிப் பாருங்கள் அண்ணன் ஒரு பனி மலை

இறுதியாய் என் இளவல் பவன்.
எங்கள் செல்லக் குஞ்சு.
இவன் மனமோ வெள்ளைப் பஞ்சு
பதிவுலகில் பப்புமுத்து
கவியுலகிலோ இவன் ஒரு குட்டி வைரமுத்து
மூவருக்கும் மொத்தமாய்
முத்தாக ஒரு வணக்கம்.
இனி அவை வணக்கம்

கணினி மொழி பயிலும் காலத்தில் கூடக்
கவி மொழி கேட்கக் காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
இது – என்
கன்னி மொழி விதைக்கத் தரப்பட்ட பெருந்தோட்டம்.
கன்னி மொழி –எதனுடனும்
கலக்காத ஒரு மொழி
தனியாக வேரூன்றித் தருவாகத் தழைத்திட்ட
என் தாய் – தமிழ் மொழி
அதைச் சரியாகப் பேசிச்
சரியாமல் காக்கின்ற – ஊரே… உறவுகளே…
உங்களுக்கோர் பெருவணக்கம்.

கவிதை தொழிலல்ல எனக்கு
தொழில் முடிந்துத் தேகம் ஆற்றும் தேசம் அது
அறியும் ஆறாம் புலன் அது
ஆற்றாமையில் எந்தன் புலம்பல் அது
ஆங்காங்கே வந்தாலும் - எம்
வாய்ப்பிழை பொறுத்தருள்வீர்
ஜயமுண்டு பயமில்லை மனமே

நேற்று இரவு – எனக்கோர் கனவு
பகல் கனவில்லை.
பாதியிலேயே கலைந்து எழுந்துவிடவுமில்லை.
கனவிலே வந்தான் – ஒரு
கறுப்புச்சட்டைக்காரன்.
‘யாரப்பா நீ?’
நான்தான் பாரதி என்றான்.
‘மறுபடியும் பாரதியா?’
இதற்குமுன் எங்கேயப்பா என்னை நீ பார்த்தாய் என்றான்.
அதுதான் யாழ் வரும் வழியில்
பொட்டல் காட்டில் – நெற்றிப்
பொட்டுடன் வரவேற்றாயே என்றேன்.
அது வெறும் தட்டியடா என்று
தடதடத்துச் சிரித்தான்.
தலைப்பாகை இல்லையே என்றேன்
(என்) தலையே போனபிறகு தலைப்பாகை ஒரு கேடா என்றான்
எனக்கிது போதாதா என்று வடத்து மீசை முறுக்கிக்கொண்டான்.
இறந்தவர்கள் கனவிலே பேசாரே என்றதற்கு
இறக்கவில்லையடா. உன்னில் – அவனில்
உயிர் வாழ்கிறேன் என்றான்.
உயிர் போகும் அவசரம் என்றாயே? என்றேன்
அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.
நான் கனாக்கண்ட உலகம் காண உன் கனவுக்குள் வந்தேன் என்றான்.
நகர்வலம் செல்வோம் வா! என்றான்
நகர்வலம் எதற்கு? உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் காட்டுகிறேன் என்றேன்

மடிக்கணினி பயின்றான்.
கணையப் பசி மறந்து இணையம் நாடினான்
கூகில் கண்டு குறிச்சொல் தேடினான்.
முதலில் பாரதி – பாரதி பார்த்தான்
கறுப்பு மீசையின்கீழ் வெழுப்பாய்ப் புன்னகைத்தான்.
புதுமைப் பெண் தேடினான்
அங்கேயும் நான்தானா என்றான்
கொஞ்சம் இரு … என்று ஆங்கிலம் காட்டினேன்.
ஐயகோ என்றான். ஆங்கிலம் வேண்டாம், அழகு தமிழே போதுமென்றான்.
அதையும் காட்டினேன்.
வேண்டாம், நிறுத்து என்றான்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருக்கிறதே என்றேன்.

அது – இதுவல்ல என்றான்.

காணி நிலம் உண்டோ என்றான்.
காலி இடம் இல்லை என்றேன்.
கடலுக்குள் கட்டிக்கொண்ட
களனி நிலம் காட்டினேன். விந்தை என்றான்.
நீண்டு கிடக்கும் நெடும்பாலம் கண்டு வியந்தான்.
அடுக்கு மாடி பார்த்து அதிசயித்தான்.
விலை கேட்டான். விறைத்தான்.
மோவாய் சொறிந்து முகடுபார்த்தான்.
என்ன இது கூடாரம்? உன்வீடு எங்கே என்றான்.
உன் பாரத தேசத்தால் வீடு எமக்குப் பகல்கனவு என்றேன்.
ஊமைப் பெருமூச்சை எறிந்தான்.
சலிப்பா என்றேன்.
இல்லை, அது என் சாபமென்றான்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம். - என்ற
ஒற்றைக் கனவாவது ஒழுங்காய் பலித்ததே என்றான்.
எப்படியப்பா?
அதுதான் கடலுக்குள் களனி செய்து காப்பாற்றுகிறீர்களே என்றான்.
மெல்லச் சிரித்தேன்.
சோமாலியா எதற்கு என்று
சொந்த நாடே சுட்டினேன்.
உன் நாட்டின் நிலைமையோ
இதைவிட மோசமென்றேன்.
உளைப்பு இல்லையோ?
செக்கு மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்
நெஞ்சம் குமுறுகிறார்
ஏன் என்றான் கவிஞன்
எதுவும் மாறவில்லை
என்றேன் நான்.

பொன்மொழிகள் பொய்க்காது – ஆகவே இந்தக்
கவிஞன் வாக்கும் பொய்க்காது தம்பி - பொய்ச்
சாதியேனும் போனதுவோ என்றான்
சோலி எதற்கென்று ஞாயிறு இதழில்
நான்கு பக்கம் சுட்டினேன்.
மணமகன் தேவை
மணமகள் தேவை
மாமியார் தேவை
தேவைகளின் தொடர்ச்சியாய்
சிவத்து உயர்ந்த சிங்கை மாப்பிளைக்கு
சீதணத்தோடு சேர்த்து
சாதியும் தேவைப்பட்டது.
துடித்தான் மஹாகவி.

போகுமுன்பு ஒன்று என்று
செல்லம்மாவின் சோறு போட்ட சிட்டுக்குருவி கேட்டான்.
இரசாயணத்தால் அழிந்துவரும் இன்னல் விளக்கினேன்.
போங்கடா என்று பொங்கினான்.
அன்றே சொன்னேன்
காலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை என்றான்.

விரக்திச் சிரிப்பிற்கு விளக்கம் கேட்டான்.
இன்னும் இன்னல் உள்ளதுவோ என்றான்.
நீதான் கவிஞனாயிற்றே - எங்கள்
கசியும் மௌனங்களில் இருந்தே
கண்டுபிடித்துக் கொள்ளேன் என்றேன்.
நான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.
பொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.

ஒன்று மனதிற்கொள்.
வாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்
தாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.
ஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்
ஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்
காரிருளின் கர்வத்தை மின்னல்களும் போக்கலாம்
அடித்த காற்றில் முகில் விலகி நட்சத்திரமும் தோன்றலாம்.
ஜயமுண்டு பயமில்லை மனமே

சும்மா இருக்காதே
பஞ்ச பூதங்களின் பழக்கம் தேடு
வேரில் வார்க்கப்பட்ட அமிலம் கிடக்கட்டும்
காற்றில் கரைந்திருக்கும் ஒட்சிசன் தேடு
காற்றைப் பிடிக்கக் கறுவி நின்றாலும்
தழுவிச்செல்லும் பழக்கம் நாடு
ஒப்பாரியிலும் ஒழிந்திருக்கும்
ஓர் ராகம் தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே
நீர் போல் மாறு

பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே

எதுவுமே சும்மா இல்லை இயற்கையில்.
பூமி அமைதிதான் – ஆனால் அது
சும்மா சிரித்தாலே சுனாமி வருகிறது
இயற்கை பழகு
மேடு கிடக்கட்டும் – முதலில்
பள்ளத்தைப் பதம் செய்
கற்கள் கிடக்கட்டும் – முதலில்
கனிம மண்ணில் வேர் விடு
மலையின் மௌனத்தையும்
அருவி கொண்டு போக்கு
புல்லின் நுனியிலும்
புதுக் கவிதை தேடு
ஜயமுண்டு பயமில்லை மனமே

ஒற்றைச் சொடுக்கில் உலகம்
ஓடிக்கொண்டே இருக்கும் நகரம்
கடல் தூர்த்து நிலம்
காகிதமில்லா புத்தகம்
கணிப்பொறியில் கடிதப்போக்குவரத்து
நேனோ தொழில்நுட்பம் மூலம்
சிரன்ஜீவிதனம் சீக்கிரமே சாத்தியம்
என்னதான் வந்தாலும் - உலகின்
ஏதோ ஒரு மூலையில் மனிதம் ஒட்டிக் கிடக்கும்வரை
ஜயமுண்டு பயமில்லை மனமே.

எனது இந்தக் கவிதைக்கான தொகுப்பைப் படிக்கவும், கவியரங்கத்தினை லோஷன் அண்ணாவின் தளத்தில் தொடர்ந்து படிக்கவும் இங்கே சொடுக்கவும்.
 

Tuesday, May 17, 2011

ஈழத்துச் சதன்

6 comments

mic_on_stage_op_710x476

சிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.

அதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.

பறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.

அவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.

ஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.

எவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.

ஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.

- ஈழத்துமுற்றத்திற்காக எழுதியது-

Wednesday, February 16, 2011

‘குஞ்சு’ பவன்

18 comments

 

163467_1693480051349_1068214480_1961912_6636538_n

ஃபோட்டோ கொமன்ட் பவன் என்று பதிவுலகில் பலராலும் அறியப்பட்டவர் பதிவர் பவன். அதன் பின்னர் இவரது உல்டா கவிதைகளுக்காக பப்புமுத்து என்றும் நாமாகரணம் செய்யப்பட்டாலும் சில பல காரணங்களுக்காக இவருக்கு வைக்கப்பட்ட குஞ்சு பவன் என்ற பெயரே பலருக்குப் பிடித்துப்போனது, நிலைத்தும்போனது.

மொத்தமாக மூன்று கையடக்கத் தொலைபேசிகளுக்குச் சொந்தக்காரர். எங்கு சென்றாலும் மூன்று தொலைபேசிகளையுமே பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு செல்லும் இவர் மூன்றிலிருந்தும் மிஸ்ட்கால் மட்டுமே கொடுப்பார் என்பது கூடுதல் தகவல்.

சிறந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர். இவர் பந்துவீசும் பாணியை வைத்தும், இவரது தோற்றத்தை வைத்தும் இந்திய வீரர் இசாந் சர்மாவுடன் இவரை ஒப்பிடுபவர்கள் பலர். அது தனக்கு அவமானம் என்று கருதுகிறார் இவர் ;)

60454_1566049705670_1068214480_1703407_2731663_n

வெயிலோ, இல்லை குளிரோ இவரது அறையில் எந்நேரமும் ஒரு உஷா ஃபேன் சுற்றிக்கொண்டே இருக்கும்.

அண்மையில் தனது உயர்கல்வியை ஆரம்பித்திருக்கும் இவர் பகிடிவதையில் பகிடி மட்டுமே இருப்பதால் அது இப்போதைக்கு முடிந்துவிடக்கூடாது என்று கோணேஸ்வரப் பெருமாளை வேண்டிக்கொள்கிறாராம். நாளொன்றுக்கு பத்துப் பாட்டு, நாற்பது சல்யூட்டு என இவரது ‘பகிடி’ லிஸ்ட் நீள்கிறது.

புதிதாகக் கல்லூரியில் கிடைத்திருக்கும் நண்பிகளிற்கு பல விடயங்களையும் கற்றுக்கொடுக்கும் முக்கிய சுமை காரணமாகவே அண்மைக்காலமாக இவர் பதிவுகளை குறைத்துக்கொண்டிருப்பதாக நேற்றய கும்மியில் அறிவித்திருக்கிறார்.

58156609

விரல்வித்தை நடிகரின் பரம விசிறி. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு தூக்கிவிட்ட காலரை இன்னமும் இறக்காமலேயே சுற்றித்திரிகிறார் இவர்.

இவரது கம்யூட்டர் முதல் கனவு வரை அத்தனை இடங்களிலுமே எமா வட்சன் மயம்தான்.

53068610

அண்மைக்காலமாக இளையராஜாவின் காதல் பாடல்களை அதிகம் ரசிக்க ஆரம்பித்திருக்கிறார். யார் செய்த மாயமோ?

முன்பின் தெரியாத பெண் ஒருவர் கடையொன்றில் வைத்து “’நீங்கள் பதிவர் பவன்தானே?” என்று கேட்டதை இன்னும் பிறவிப்பயனாக நினைத்து மகிழ்கிறார்.

சுஜாதாவின் எழுத்து, வைரமுத்துவின் கவி வரிகள் எறு நீளும் ரசனைக்குச் சொந்தக்கார்ரான இவரது எதிர்கால இலட்சியம் ஒரு கிராஃபிக் டிசைனராவது.

இன்று இவருக்கு 21வது பிறந்தநாள் :)

எங்கள் குஞ்சு பவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

3204099568_b7ea29805f

Tuesday, January 18, 2011

சின்னதாய்ச் சில…

20 comments

 

 cry-blood-red-tears

 யுத்தம் விட்டுச்சென்ற

கந்தகக் குழிக்குள்ளும்

எட்டிப்பார்க்கிறது ஈரம்..!

 

 

 tired_beggar

 

முன்பனி இரவு

பிச்சைக்காரன் தட்டில்

ஒடுங்கி விழுகிறது

ஒற்றைத்துளி..!

 

 

2980119739_5c2d5c897a_z

 

கனவுகளற்ற உறக்கத்தின்

கடைசிக் கணத்தின்பின்...

ஐயோ கொல்லாதே..!

 

 

stock-photo-old-wooden-billboard-isolated-over-white-66932572

 

தறித்தெடுத்துச் சீவப்பட்ட

நீள்சதுர மரத்துண்டில்

'மரங்களை வெட்டாதீர்' !

 

 

 

 

 

red_balloon

 

பறித்துக்கொண்டு பறக்கிறது.

எக்கணமும் வெடிக்கலாம்

சிறுவனின் உலகம்!

 

 

 

 

400_F_13058099_OQIrIq0jf7oazuJhVK1kWmokcaA9sVD7 

அரைத்தூக்கச் சிரிப்பில்

அம்மாவுக்கும் தெரிகிறது

குழந்தையின் கனவு!

Thursday, January 6, 2011

இசைப்புயலின் முத்துக்கள் மூன்று

14 comments

 

ar-rahman-oscar

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஒஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். இசைப்புயலின் இசையில் வந்து என்னால் அதிகமாகச் செவிமடுக்கப்பட்ட, அதிகமாக முணுமுணுக்கப்பட்ட, நான் விரும்பி ரசித்த மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயமாக இவை உங்களுக்கும் பிடித்தவையாகவே இருக்கும்

அந்த அரபிக்கடலோரம் – பம்பாய்

என் உற்சாகமான தருணங்களோடு உற்சாகமாகத் தொற்றிக்கொண்டுவிடும் பாடல் இது. இசைப்புயலின் குரலில் தாளம் போடவைக்கும் இந்தப்பாடலின் படத்தில் இடம்பெற்றதை விட மேடைக்கச்சேரிகளில் ப்ளேஸின் ராப் ஆரம்பத்துடன் பாடப்படும் இந்த வடிவம் என்னை இன்னும் அதிகமாகக் கவர்ந்திருக்கிறது

 

வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்

அந்த அரபிக்கடலோரம் பாடல் பாடிய அதே குரலில் இப்படியொரு மென்மையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலைத் தெரியச்சொன்னால் எனது தெரிவு இதுவாகத்தான் இருக்கும். காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசையும் உறுத்தாத குரலுமாக என் பலநாள் தூக்கங்களைத் தழுவிக்கொண்ட சுகானுபவம் இந்தப்பாடல்

 

புது வெள்ளை மழை – ரோஜா

இசைப்புயலின் முதற் படத்திலிருக்கும் இந்தப்பாடல் இதுவரை நான் அதிக தடவைகள் கேட்ட பாடல்களில் நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும். சுஜாதா, உன்னிமேனன் குரல்களில் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம் இந்தப்பாடலில். இதன் ஆரம்ப இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடனான ஹோரஸும் காதுகளில் கபடியாடுகையில் பல தடவைகள் என்னையறியாமலேயே கண்கலங்கியிருக்கிறேன். நிச்சயமாக ஒரு வித்தியாசமான உணர்வு அது.

 

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy