குழந்தைகளின் உலகுக்குள்
அனுமதிக்கப்படாத அந்நியர்கள்
தங்களை பெரிய மனிதர்களாக
எண்ணிக்கொள்வது பிழையல்ல
பேதமை!
காலையில் விகடனில் படித்துவிட்டு ‘அட!’ போடவைத்த இந்த வரிகள் மாலை தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் உலகத்தைப் பார்த்தபோது அப்படியே மனதில் ஆழப் பதிந்துபோனது.
கிருஷ்ணா – நிலா என்ற இரண்டு குழந்தைகளின் உலகம். இந்தக் குழந்தைகளின் குடும்பத்தின் ஐந்து வயதுக் குட்டி ஏஞ்சல் நிலாவாக பேபி சாரா. அவருக்குத் தகப்பனாக, தாயாக ஏன் சமயத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் இன்னுமொரு குழந்தையாக ஒரு மனநிலை குன்றியவரின் பாத்திரத்தில் சற்றும் அலட்டலில்லாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். இந்த இருவருக்கும் இடையிலான விளையாட்டு, குறும்பு, பாசம், பிரிவு, ஏக்கம், ஏமாற்றம், கோபம் இதுதான் தெய்வத் திருமகள்.
கலகலப்பாக ஆரம்பித்து நகர்ந்துகொண்டிருக்கும் படத்தில் சிரித்துச் சிரித்து கண்ணில் வந்த கண்ணீர் காயுமுன்னரேயே மகளைப் பிரிந்து கிருஷ்ணா கதறும் காட்சி உறையவைக்க உணர்வுகளின் கலவையாக, ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை ஒரே நேரத்தில் முழுமையாக உணரவைக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அடித்துச்சொல்லியிருக்கிறது தெய்வத்திருமகள்.
படத்தில் இசையே பேசப்படாத பல வசனங்களைப் பேசிவிட, பல இடங்களில் பாத்திரங்களது மௌனமும் உடல் மொழிகளுமே புரிந்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்கின்றன. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் இசை காதுகளில் நுளைந்து மனதைக் கட்டிப்போட்டு விடுகின்றன. சரியான பாத்திரத் தெரிவுகள், அலட்டலில்லாத நடிப்பு, மனதைக் கவரும் இசை என்று எல்லாவற்றையும் தாண்டி படம் முடிந்து பல மணி நேரம் ஆகியும் இன்னும் மனதுக்குள் நிற்பது – நிலா!
அடர்ந்த புருவங்கள், கதை பேசும் கண்கள், மெல்லிய புன்னகை என்று ஒருமுறை பார்த்தாலே மனதோடு ஒட்டிக்கொள்ளும் அந்தச் சின்ன முகமே படத்தின் பாதி இடங்களில் நடித்துவிடுகிறது. பாடசாலைக்கு வரும் தகப்பனிடம் சைகை மொழியில் உரையாடி வீட்டுக்குப் போகுமாறு கையெடுத்த்துக் கும்பிடுவதாகட்டும், இடிக்குப் பயந்து இருவரும் ஒடுங்கிக் கிடந்துவிட்டு கைகளில் தண்ணீர் ஏந்தி விளையாடுவதாகட்டும், தகப்பனைப் பிரிந்து ஏங்கும் காட்சிகளாகட்டும், இறுதி நேர நீதிமன்றக் காட்சியில் தகப்பனும் மகளுமாக சைகைகளிலேயே கோபித்துக்கொள்வதும் பின் சமாதானமாகி கதைபேசி உரையாடுவதும் அன்பைப் பரிமாறுவதும் என ஒவ்வொரு காட்சிகளுமே ஒவ்வோர் வார்த்தையில்லாக் கவிதைகள். மழலைக் குரலும், காட்சிக்கேற்ப மாறிமாறிக் கதைபேசும் கண்களுமாக அந்தக் குட்டி ஏஞ்சலுக்கு ஐந்து வயதுதான் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. காட்சிக்குக் காட்சி பாசம், பிரிவு, ஏக்கம், வேதனை என்று மாறி மாறிக் காட்டி இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா? வீட்டுக்குப் போய் முதலில் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லவேண்டும்.
ஒவ்வ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்?
படம் I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.
குட்டி நிலாவின் பாசப் போராட்டம் முடிந்து வெளியேறும்போது அடர்ந்த மௌனம், கனத்த மனத்துடன் கொஞ்சம் கண்ணீரையும் சேர்த்தே தந்துவிடுகிறது தெய்வத்திருமகள்.
12 comments:
ஒரு அழகான படத்துக்கு அழகான பதிவு..
அதற்காக இந்த அழகான பின்னூட்டம் :)
படம் அழகோ அழகு :) நானும் சாராவின் படம் தேடி தேடி அலுத்துப் போனேன்
ஆங்.. வகுப்பு கட் பண்ணியாவது அடுத்த வாரத்துக்குள் பார்த்துவிட வேண்டும். நானும் "மனசெல்லாம் நிலா.." என்று ஸ்ரேட்டஸ் போடுறதுக்காகவாவது..:-))
இன்றுதான் படம் பார்த்தேன், எனது ஆல்டைம் பேவரைட் லிஸ்ட்டில் இதையும் சேர்த்துவிட்டேன்.
கண் மூடினால்,திறந்தால், உட்கார்ந்தால், எழுந்தால் என எது செய்தாலும் படம் நினைவுக்கு வருகிறது...
பதிவு அருமை
நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...
இந்த படத்தை பற்றி பேசுவதும் எழுதுவதும் பெருமைதான்!
/// I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.////
அவர் ரசிகன் என்பதற்கப்பால் எனது கேள்வியும் இதே தான் சுபா...
நல்ல விமரிசனம் சுபாங்கன். ஐ லைக் இட்.
படத்தைப் பார்த்துவிட வேண்டும் எனும் எண்ணத்தை உங்கள் பதிவு விதைத்துவிட்டது
பதிவு அருமை
//படம் I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.
மிகச் சிறந்ததொரு படம் தமிழுக்கு கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அதை கொப்பி என்று கூறி கொச்சைப் படுத்திவிட நானும் உங்களைப் போல தயாரில்லை. அது த்ழுவலாக இருந்துவிட்டுப் போகட்டும்.தழுவல் என்பதற்காய் இந்தப் படத்தில் உழைத்த அனைத்துக் கலைஞகளின் உழைப்பிஅயும் நாம் தூக்கி எறிந்து விட முடியாதே. வாழ்த்துக்கள் விமர்சனத்துக்க்கு
கிருஷ்ணா வந்தாச்சி.....
நிலா வந்தாச்சி.....
படம் பார்த்த பிறகு கூட என் மனதில் இருந்து இரண்டு குழந்தைகளும் நீங்கவில்லை, அதனால் நான் என்னையும் அறியாமல் எட்டு முறை பார்த்தேன், அந்த அளவிற்கு அருமையாக உள்ளது, தங்கள் பதிவு மென்மேலும் வளர என் மனமார்ந்த நன்றி...
Post a Comment