Tuesday, December 27, 2011

கால இயந்திரம்







சட்டென்று தனிமை
ஆட்கொள்ளும் நேரங்களில்தான்
தேவையற்ற நினைவுகளும்
செருகேடுகளின் ஞாபகமும்..


புரட்டத் தொடங்கிய 
செருகேட்டும் பக்கங்களின்
இடுக்குகளில் உருண்டோடுகிறது
கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட 
கால இயந்திரம்


காலம் கடந்து 
கவனிக்கையில் மட்டும் - ஏனோ
கடதாசித் தடிப்பையும் விடக் 
கனத்துக் கிடக்கின்றன
புகைப்படங்கள்..!


நினைவுகளின் கனத்தைத் 
தாங்க முடியாமல் - அதை
முன்னோக்கிச் செலுத்தும் 
முழு முயற்சியில் தோற்றுக்கொண்டே
குதிக்கால் ஊன்றி பெருவிரல் வரைந்த
குட்டி வட்டத்துக்குள் 
சுற்றத் தொடங்குகிறேன்..


இறந்துபோன நிகழ்காலத்து
இடுக்குகளில் எழுந்துவந்தாள்
பிரிந்துபோன பழைய நண்பி


எப்போதோ பார்த்த நான்
எனக்கே சிரிப்பூட்டினான்


எங்கோ எப்பொழுதோ தொலைத்த
அந்தக் கண்களை
சந்திக்க நேரிடுகிறது


'அ' போட்டு வரைந்த மயில்
'ல' போட்டு வாங்கிய அடி
பாசி படிந்துபோன
கோயிலடிக் குழாய்க்கிணறு
அதிகம் சுவைத்த 
மாற்றான் தோட்டத்து மாங்காய்


பல நேரங்களில் 
விடைபெறல் என்பது 
வெறும் கையசைப்பு மட்டுமல்ல..!


கடைசிப் பக்கம் கடந்து
கண்கள் நிறைந்து
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளியைப்
புறந்தள்ளி நிமிர்கிறேன்


இன்னும்
தூசி ஏறிப்போன பரனில்
மூலை மடங்கி, முன் அட்டை கிழிந்து
பழுப்பேறிப்போன பழைய புத்தகத்துள் 
குட்டிபோட்டுக் கிடக்கின்றன
மயிலிறகுகள்..!


10 comments:

நிரூஜா on December 27, 2011 12:16 PM said...

குட்டி போட்ட மயில் இறகு வரிகள் என் பள்ளி வாழ்க்கைக்கு என்னை அழைத்துச்சென்றது சில வினாடிகளுக்கு!

அருமை தோழா! வாழ்த்துக்கள்

ஜீ... on December 27, 2011 12:37 PM said...

//காலம் கடந்து
கவனிக்கையில் மட்டும் - ஏனோ
கடதாசித் தடிப்பையும் விடக்
கனத்துக் கிடக்கின்றன
புகைப்படங்கள்..!//

ஏதோ ஒரு தருணத்தில் நாம் எல்லோரும் உணர்ந்த/உணரும் இந்த வரிகள் மிக அருமை!
வாழ்த்துக்கள் தோழர்!

♔ம.தி.சுதா♔ on December 27, 2011 1:24 PM said...

அப்பாடி எத்தனை நாளைக்கப்புறம் இந்தத் தரங்கத்தில் ஒரு அரங்கம் போடப்பட்டிருக்கிறது..

நன்றி சுபா..

கவிக்கு என்ன கருத்திடலாம் ????????

கார்த்தி on December 27, 2011 2:05 PM said...

சார் என்ன நடந்தது? திடிரென்று பதிவு போட்டிருக்கீங்க....

LOSHAN on December 27, 2011 2:05 PM said...

அட.. மீண்டும்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு....
நல்லா இருக்கு....

//'அ' போட்டு வரைந்த மயில்

'ல' போட்டு வாங்கிய அடி//
ரசனை :)

படமும் வரிகளும் பழைய நினைவுகளைத் தூசு தட்ட வைக்கிறது

Anuthinan Suthanthiranathan on December 27, 2011 6:58 PM said...

மீண்டும் சுபாங்கன் அண்ணே! கலக்குங்கோ!

கவி பாட அனுமதி வாங்கிவிட்டீர்களா? அல்லது சொல்லி விட்டீர்களா?? :P

நல்லா இருக்கு அண்ணே!

sinmajan on December 27, 2011 7:24 PM said...

வார்த்தைகளை லாவகமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.. பிடித்திருக்கிறது

திண்டுக்கல் தனபாலன் on December 28, 2011 7:45 AM said...

மிகவும் விரும்பிப் படித்தேன். அருமை!

Bavan on December 28, 2011 8:29 AM said...

அட! பல வருடங்களுக்குப் பிறகு..:P

கவிதை நல்லாருக்கு :-))

Sinthu on February 1, 2012 11:24 PM said...

நிஜங்களை நினைவூட்டிய நினைவுகள்
அருமை..

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy