2007ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு உயர்கல்விக்காக வந்தவன் நான். யாழ்ப்பாணத்தில் Sampleக்குக் கூட சிங்களம் பயன்படுத்தப்படுவது கிடையாது. அங்குள்ள சிங்களப் படையினர் கூட நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அப்பாவின் ஆசைக்காக அங்கே அவ்வப்போது சிங்கள வகுப்பிற்கு விஜயம் செய்ததால் ஒருசில சிங்களச் சொற்கள் ஒட்டிக்கொண்டன. அவற்றில் முக்கியமானது ‘மட தண்ணயி’ (எனக்குத் தெரியாது). அத்துடன் ‘த’ என முடியும் சொற்கள் கேள்விகள் எனவும் தெரியும்.
கொழும்பிற்கு வந்த ஆரம்பத்தில் Campusற்குப் போய்வரும் போது இவற்றைக்கொண்டு சமாளித்துவிடுவேன். எவராவது பஸ்சில் ‘த’ என முடியும் எதையாவது கேட்டால் அவர்கள் இறங்கவேண்டிய இடத்தைத்தான் கேட்கிறார்கள் என ஊகித்து ‘மட தண்ணயி’ எனக் கூறிவிடுவேன். அதேபோல வீதியில் போகும்போதும் யாராவது கேள்விகேட்டாலும் பாதையைத்தான் கேட்கிறார்கள் என ஊகித்து அதே பதிலைக் கூறிவிடுவேன்.
ஆனால் சில சமயங்களில் விதி வேறு வழிகளிலும் விளையாடிவிடும். சில சமயங்களில் ‘த’ என முடியாத வார்த்தைகளையும் என்னிடம் பேசுவார்கள். ஆனால் ஆறாவது அறிவு என ஒன்று இருக்கிறதே, அதை வைத்துச் சமாளித்துவிடுவேன். ஒன்றும் முடியாவிட்டால், ‘மட’ இற்கும் ‘தண்ணயி’ இற்கும் இடையில் ‘சிங்கள’ இனை இட்டு ‘மட சிங்கள தண்ணயி’ (எனக்குச் சிங்களம் தெரியாது) எனக் கூறிவிடுவேன்.
ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ஒருமுறை ஒருவர் என்னைப்பார்த்து ‘ வேலாவ கீயத?’ எனக் கேட்டார். அதாவது நேரம் என்ன?. நானும் எனது வளமையான ‘த’ Theory இனைப் பயன்படுத்தி ‘மட தண்ணயி’ எனக் கூறிவிட்டேன். அவரோ எனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டார் போலும். ஏதோ கூறினார். நானும் அது கைக்கடிகாரத்தைப் பற்றித்தான் என ஊகித்துவிட்டேன். அப்போதுதான் கேட்டது நேரம் எனப் புரிந்தது. சுற்றியிருந்தவர்கள் எனைப்பார்த்த பார்வையும் எனது முகம் போன போக்கும் இருக்கிறதே, வடிவேலு தோற்றுவிடுவார் போங்கள்.
இப்போது ஓரளவு சிங்களம் பேசத் தெரிந்த பின்பும் இவற்றை யோசிக்க சிரிப்பு தான் வருகிறது. ம்ம்ம்ம், ஆறாவது அறிவையும் அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும் போல!
3 comments:
எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்..:-) நல்ல நகைச்சுவை..
சுபாங்கன்,ஆறாவது அறிவையும் பயன்படுத்தி சந்தோசமாக வாழுங்க. வாழ்த்துக்கள்.
இந்த கறுமம் வேண்டாம் என்று தான் நான் வெறும் கையுடன் திரியிறது!
Post a Comment