ஒரு முன்னணிக் கதாநாயகன் தற்போது நடித்துவரும் படத்தின் கதை எப்படியோ வெளியில் வந்துவிட்டது. படத்தின் கதாசிரியருக்கும், இயக்குனருக்கும் இடையிலிருந்த முறுகலே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதோ அந்தக் கதை
இந்தப் படத்தில் ஹீரோவிற்கு இரட்டை வேடம். அண்ணா ஹீரோ ஒரு விமானப்படை அதிகாரி. தம்பி ஹீரோ படிக்காமல் ஊர் சுற்றும் ஒரு ‘போக்கிரி’. இருவருக்கும் ஒரே தங்கை. இருவரும் அவள்மேல் ‘ப்ரியமுடன்’ இருந்து வந்தனர்.
இதற்கிடையில் இவர்கள் இருக்கும் ஊரை வளைத்துப் போட வில்லன் குழு திட்டம் தீட்டுகிறது. அதற்காக அவர்கள் சிக்குன் குனியா வைரசை நுளம்புகளுக்குள் செலுத்தி ஊருக்குள் பரவச் செய்கின்றனர். இந்த நுளம்புக் கடிக்கு இலக்கான தங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன்மார் தங்கை குணமாகி வீடு திரும்பும்போது ஊருக்குள் சிக்குன்குனியாவே இருக்காது, நுளம்புகளை ‘ஆதி’ முதல் அந்தம் வரை ஒளிப்போம் எனச் சபதம்செய்து ‘வில்லில்’ இருந்து புறப்படும் அம்பாகப் புறப்படுகின்றனர்.
மூத்த அண்ணாவோ தனது விமானத்தில் கொசு மருந்தைக் கட்டிக்கொண்டு புறப்படுகின்றார். இரண்டாவது அண்ணாவோ கையில் ‘திருப்பாச்சி’ அரிவாளும் ‘சிவகாசி’ சரவெடியுமாகப் புறப்படுகிறார்.
பைலட் அண்ணா போகும் வளியில் படத்தின் ஒரு கதாநாயகியான திரிசா நுளம்புகளாற் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கின்றார். உடனே தன்னை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு விமானத்திலிருந்து பாய்ந்து தனி ஒருவனாக அத்தனை கொசுக்களையும் பந்தாடுகிறார். ‘குருவி’ போல வந்து தன்னைக் காப்பாற்றிய ஹீரோமேல் ஹீரோயினுக்குக் காதல் வந்துவிடுகிறது. வில்லன் தங்கை எனத் தெரிந்து ஹீரோவும் அவரைக் காதலிப்பது போல் நடிக்கிறார். உடனே இருவரும் சுவிட்சலாந்தில் ‘குஷி’யாக டூயட் பாடுகின்றனர்.
அடுத்த ஹீரோ செல்லும் வழியில் இரண்டாம் ஹீரோயின் நமீதாவைப் பார்க்கிறார். தனது ‘போக்கிரி’த் தனத்தால் அவளைக் கற்பமாக்கிவிட்டு கழன்றுவிடுகிறார். ஆனால் நமீதாவோ அவர் நல்லவர் எனக் கூறிக்கொண்டு அவரைத் தேடுகிறார். இதை அறிந்த ஏற்கனவே நமீதாவைக் காதலித்துவந்த வில்லனும் இரண்டாவது ஹீரோவைத் தேடி அலைகிறான்.
இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். சொல்லி அடிப்பதில் ‘கில்லி’யான ஹீரோ வில்லனைத் துவைத்து எடுக்கின்றார். இதனால் நமீதாவிற்கு இரண்டாம் ஹீரோமேல் காதல் அதிகமாகின்றது. அங்கே ஒரு டூயட் வருகின்றது. ரசிகர்களை ‘ஒன்ஸ்மோர்’ கேட்கவைக்கும் அளவிற்கு ஹீரோ ஆட்டம் போடுகிறார்.
முதலாவது ஹீரோ, வில்லனின் தங்கையின் காதலனாக வில்லனின் கோட்டைக்குள் நுளைகின்றார். வில்லனின் இரகசியங்கள் அனைத்தையும் அறிகின்றார். அங்கே கண்டறிந்த மாற்று மருந்தைப் பயன்படுத்தி நுளம்புகளை ஒளித்துப் ‘புதிய கீதை’ படைக்கின்றார். கிளைமார்க்சில் வில்லனை புழுதி மணலில் புரட்டி எடுக்கின்றார். இதனால் அவர் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்கின்றது. அவர் அதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகின்றார். இரண்டாவது ஹீரோவும் தனது தவறை உணர்ந்து நமீதாவுடன் சேர்கின்றார்.
இதுதான் அந்தக்கதை. இவற்றில் சில காட்சிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான காட்சிகள் ஒத்துப்போவதை அடுத்த படம் வெளிவரும்போது காணலாம்.
4 comments:
ஆகா......:-)))
sema comedy sir...
ரசித்தேன் படித்தேன் அருமை...
vote now for tamil bloggers and invite you to join now in bloggers unit
நல்ல இருக்கு நல்ல இருக்கு...
Post a Comment