மாதங்கள் பத்து மகிழ்வுடனே காத்திருந்து
பாரமென்று பார்க்காமல் பக்குவமாய் எனைத்தாங்கி
நான் கொடுத்த வலியினையும் நன்மையெனப் பொறுத்துக்கொண்டு
ஈன்றெடுத்த என்னம்மா பொறுமையிலே போதிமரம்
பரீட்சைக்கு நான் படிக்க பக்கத்தில் விழித்திருந்து
கண்ணயர்ந்த போதிலெல்லாம் கனிவுடனே காப்பிதந்து
பாசான செய்திகேட்டு என்னைவிட மகிழ்ச்சிகொண்ட
என்னம்மா எனக்கு பாசத்திலே போதிமரம்
தப்பு செய்தால் உடனே தட்டிக் கேட்டுவிட்டு
கண்கலங்கி நான் நிற்க, தானும் சேர்ந்தழுதுவிட்டு
வாரி எடுத்தென்னை வாயாலே திருத்திவிட்ட
வாஞ்ஞையிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்
மைல்கள் பல கடந்து, தினம்தினம் தொலைபேசி
சின்னக் கவலை மறைத்துச் சிரிப்போடு தினம்பேசி
அங்கிருந்தே எனக்கு அறிவுரைகள் கூறிவிடும்
அறிவினிலே எனக்கு அவர் ஒரு போதிமரம்
அன்னையர் தினத்திற்காய் வாழ்த்தொன்று நான்கூற
‘அடப்போடா’ என்று அப்படியே வெட்கப்பட்டு
சின்னச் சிரிப்பொன்றை எனக்காய்க் கொடுத்துவிட்ட
சிலிர்ப்பினிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்
1 comments:
superb kavithai
mothers day spl
gud really nice
Post a Comment