யாழ் மருத்துவபீட மாணவன் வேல். சாரங்கன் எழுதிய ‘மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்’ கவிதைத்தொகுப்பைப்பற்றி பதிவர் பாலவாசகன் தொலைபேசியில் குறிப்பிட்டபோதும்சரி, பின்னர் நேரில் சந்திக்கும்போது படித்துப்பார்க்கும்படி அந்நூலை எனக்குக் கொடுத்தபோதும்சரி அதன்பால் எனக்குப் பெரிதாக ஈர்ப்பு இருக்கவில்லை. படிப்பதற்காக எழுமாற்றாக ஒரு பக்கத்தைத் திறந்து படிக்கத் தொடங்கியபோதுதான் முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. ஒரே மூச்சாக அத்தனை கவிதைகளையும் வாசித்துமுடித்துவிட்டுத்தான் புத்தகத்தை மூடமுடிந்தது.
வேல். சாரங்கன், என்னைவிட இரண்டொரு வயது அதிகமிருக்கலாம். இருவரும் பிறந்து, வளர்ந்த தூரமும் அதிகமல்ல. அதனால்தானோ என்னவோ, அவர் கவிதைகளில் வாழ்ந்திருக்கும் வாழ்க்கை என்னுடையது போன்ற உணர்வு. அவர் கவிதைகளாய் மொழிபெயர்த்திருக்கும் மௌனம், என்னுள்ளும் இருக்கும் மௌனம். நான் பேசமறந்த, அல்லது பேசப்பயந்த மௌனம். ஒவ்வொரு கவிதையும் என்னுள் ஒரு உணர்வுகளை விட்டுச்செல்கின்றன, அல்லது தட்டிச்செல்கின்றன. பல இடங்களில் தலை என்னையும் அறியாமல் ஆமோதிக்கின்றது.
மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை..?
கவிஞர்களே ..!
கடதாசிகளை கொடுங்கள்
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்
இல்லயேல்
கண்ணீரையாவது துடைக்கட்டும்..!
முகத்தில் அறைகிறதா? இதோ இன்னுமொன்று
அம்மா பொட்டிழந்து,
அக்கா கற்பிழந்து,
அண்ணா காலிழந்து,
தாய்வயிற்றில்
கருக்கொண்ட
உருவினை
வெறுப்புடன்
எதிர்பார்த்திருந்த
பொழுதுகளில்…
குவித்த மண்ணில்
தலைவைத்து
குறையாய் உறங்கிய
பொழுதுகளில்…
என்று ஒவ்வொரு தருணங்களையும் அடுக்கிவருபவர், இறுதியில் கேட்கிறார்
எப்படி சொல்வது இத்தனை நீளமாய் ..?
தலைநகரில்,
அடையாள அட்டையை புரட்டியபடி
ஒற்றை வார்த்தையில் கேட்கிறாய் சோதரா…
பிறந்த இடம்…?
நம்மில் பலரும் உணர்ந்த வலிதான் இது. இவை மட்டுமல்ல, நம் காதலும், விளையாட்டுக்களும்கூட இறைந்துகிடக்கிறது கவிதைகளாய்.
மார்களி விடுமுறையில் பட்டம் ஏற்றிவிட்டுவருவதும், அதன்பின் தொடரும் “விடிஞ்சாப் பொழுதுபட்டாப் பட்டம்தான் இவனுக்கு. பட்டத்தை அண்ணாந்து பாத்து முகமெல்லாம் கறுத்துப்போச்சு” என்ற அம்மாவின் அதட்டலும் ஞாபகம் வருகிறது இவரது பட்டம் – விடுகதை…! என்ற கவிதையைப் படிக்கையில்
பாட்டின் அடியினிலே, ஒரு
பல்லவி சரணத்தின் முடிவினிலே
ஏற்றம் இறக்கமுடன் குரல்
கூட்டி இசை தரும் பாடகன்போல்
கூவிப் பறந்திருந்தாய் – அந்த
கூவல் எனக்கென நான் நினைத்திருந்தேன்…!
காற்றின் மிடுக்கினிலே – பல
நாள்கள் பறந்து பழகியதால்
காணும் என உணர்ந்தோ, பட்டம்
கயிற்றை அறுத்து விழுந்ததுகாண்..!!
சேற்று வயல் புறத்தே – நல்ல
நாற்று நடவந்த ஓர்மனிதன்
தோளில விழுந்தது போய்
அதைத் தூக்கி எடுத்தவன் முன் நகர்ந்தான்..!
இப்படியாக நான் அனுபவித்து உணர்ந்த பல பொழுதுகள் கவிதைகளாய்க் காணும்போது பிடித்துவிடுகிறது. முத்தாய்ப்பாக ஒரு கவிதை முழுவதுமாய்
உடைமைகளோடு…
குஞ்சுக்குடிசை…
கூரை செல்லரித்து,
நீலம் தெரியும்..;
நீர்சேரும், மாரியில்..!
பட்ட கதிகால்; சில
பழைய துருப்பேணிகள்…
ஊசித்துளைகளினால்
உருக்குலைந்த பழம்பானை…
போனமுறை ஓடித்
திரும்புகையில்,
தெருவிலெடுத்த
‘பச்சைப் பெட்டி’ நிறைய, கிளிஞ்ச
பழஞ்சேலைகள்…
வாலை ஆட்டியபடி ஒரு
குட்டி நாய்…!
பல்விழுந்த வாயின் புறுபுறுப்பு..
“நான் சேர்த்ததுகள்..,
விட்டிட்டுப் போகேலா…,
வாறது வரட்டும்”!!
வேல் சாரங்கனின் மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் கவிதை நூலை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.
கொழும்பு- 0777537930.
யாழ்ப்பாணம் - 0779779769
கண்டி - 0779697270.
புத்தகம் கிடைக்கும் இடங்கள்
கொழும்பு -
1.Poobalasingam bk depot, 309A 2/3 Gale rd,welawta.
2. Kokilam bk shp, 4c-5 fussels lane,welawata.
3. Cordova bk shp. 226, gale rd.welawta.
யாழ்ப்பாணம்-
1.poobalasingam.
2.book lab(ramanathan rd)
10 comments:
ஆமாம் சுபாங்கன் அற்புதமான கவிதைகள் ..!! அத்தனை கவிதைகளும் நாங்கள் அனுபவித்த உணர்ந்த கணபொழுதுகள்தான் அதுதான் எனக்கும் ரொம்பவும் பிடித்து போனது சாரங்கனின் படைப்புகள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!
கவிஞர்களே ..!
/////கடதாசிகளை கொடுங்கள்
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்
இல்லயேல்
கண்ணீரையாவது துடைக்கட்டும்..!//////
மிகவும் அழுத்தமான வார்த்தைகள் அருமையான தொகுப்புதான் . பகிர்வுக்கு நன்றி !
பகிர்வுக்கு நன்றி சுபாங்கன். நானும் வாங்கி வாசிக்கிறேன்
உங்கள் நீண்ட மௌனம் முடித்து ஒரு பதிவு வாங்கோ.
எனக்குப் பொதுவாகவே கவிதைகள் மேல் அவ்வளவு ஈர்ப்பில்லைத்தான். ஈர்ப்பில்லை என்பதைவிட வாசிக்க அறிவு போதாது என்பதே சரி.
ஆனால் இந்தக் கவிதைகள் இலகுவாக என்னை ஈர்த்துவிட்டன....
இயல்பான வார்த்தைகளில் அழகான கவிதைகள்....
வாங்குவதற்கு முயற்சிக்கிறேன்... :))
கவிதை நூல் பற்றிய பகிர்விற்கும், விமர்சனத்திற்கும் நன்றிகளும், பராட்டுக்களும் நண்பா. ‘’காசின்றிக் கடைத்தெரு போனாலும்,
பேர்சிற்குள் ஐடென்ரி பேணிடப் பழகு’ இது தானே முற்காலக் கொழும்பு வாழ்க்கை. இதனைத் தத்ரூபமாகக் கவிஞர் சொல்லிச் சென்றுள்ளார்... நன்றிகள் நண்பா.
வாழ்த்துக்கள் கவிஞரின் நிஜங்களின் படப்பிடிப்பிற்கும், உணர்வுகள் நிறைந்த வரிகளுக்கும்.
பகிர்விற்கு நன்றி சுபாங்கன் ..
சாரங்கன் அண்ணாவின் கவிதைகளை
இந்துக் கல்லூரி காலத்தில் இருந்தே அனுபவித்து வருகின்றேன்..
அவர் பாடுபொருள் எங்கள் வாழ்வினூடே பயணிப்பதால் இலகுவில் எங்களை ஈர்த்து விடுகிறது..
அவருடைய வலைத் தளம் ...http://www.vaanampaadi.blogspot.com/
என்னுள்ளும் இருக்கும் மௌனம்.............இதனைத் தத்ரூபமாகக் கவிஞர் சொல்லிச் சென்றுள்ளார்..
சாரங்கனின் படைப்புகள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!
.
சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.... எனது கவிதைகளை ஆழ வாசித்து அருமையான விமர்சனத்தை எழுதி இருக்கிறீர்கள்..... உங்கள் ரசனையும் ஊக்குவிப்பும் உண்மையிலேயே எனக்கு புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் தருகின்றன..... நீங்களும் வாசித்து மற்றவர்களையும் வாசிக்க வைக்கிறீர்கள்....
மிக்க நன்றி சுபாங்கன்....!
இந்த பதிவை படித்து, வாழ்த்தும் வாசகர்களுக்கும் எனது நன்றிகள்.....!
Post a Comment