நூறு. முதலாவது மூவிலக்க எண். பெரும்பாலான பரீட்சை வினாத்தாள்களின் அதியுச்சப் புள்ளி. இதன் மூவிலக்கத்தின் முதலாவது எண் என்ற பெருமையே இது ஒரு அடையாளமாக கருதப்படக் காரணம். ஆனால் சில சமயங்களில் இது அடைய முடியாத இலக்காகி விடுகின்றது. அவ்வாறான சந்தற்பங்களே ஐம்பதையும் அடையாளமாக்கின.
பரீட்சையில் ஐம்பது புள்ளிகள் எடுத்தவரை யாரும் கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில் ஐம்பது என்பது அங்கே சராசரியை விடக் குறைவு. ஆனால் கிரிக்கெட் போன்ற உடலை களைப்பாக்குகின்ற விடயங்களில் நூறு என்பது சிறிது கடினமான விடயம்தான். அதனால்தான் ஐம்பதும் ஒரு அடையாளமாகக் கருதப்பட்டது. கிரிக்கெட்டில் முதலில் பிரபலமாகத் தொடங்கிய ஐம்பது பின் அனைத்திலுமே அடையாளப்படுத்தப்பட்டது. பதிவுலகிலும்தான். எனக்கும் இது ஐம்பதாவது பதிவு.
ஐம்பதாவது பதிவை இடுவதென்பது ஒவ்வொரு பதிவருக்கும் ஆனந்தமான விடயம். எனக்கும்தான். இந்த எனது ஐம்பதாவது பதிவிற்காக எழுத உட்கார்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்கிறேன் என்பது எனக்கே தெரிகின்றது.
அனைவரையும் போலத்தான் ஐம்பதாவது பதிவில் கடந்துவந்த பாதையைப்பற்றி எழுத ஆசைதான். ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக எனக்கில்லை. ஆரம்பத்தில் கவிதைகளை மட்டுமே எழுதிவந்தேன். ஏதோ ஒரு உந்துதல். எழுதவும் தொடங்கினேன். தமிழ்மணம் கூட தாமதமாகத்தான் தெரியவந்தது. தமிழிஷ் அதைவிடத் தாமதம். ஆனால் அதன்பின்தான் ஏதோ எனது எழுத்தையும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. தமிழிஷ் இல் ஒவ்வொரு முறை எனது பதிவுகள் பிரபலமாகும்போதும் ஏதோ பரீட்சையில் சித்தியடைந்த சந்தோசம். இளமை விகடனில் எட்டிப்பார்த்தபோது பல்கலையில் நுளைந்தபோது இருந்த மகிழ்ச்சி. தமிழ்மணத்திலும் ஒன்றிரண்டு சூடானதாம். யாரோ சொல்லித்தான் தெரியும். அதனால் அதை அனுபவிக்க முடியவில்லை.
பதிவுலகம் எனக்குக் கற்றுக்கொடுத்ததும் பெற்றுக்கொடுத்ததும் ஏராளம். நான்கு மாதங்கள் பதிவிட்டிருந்தாலும் பதிவுலகோடு தொடர்பு ஏற்பட்டது இரண்டு மாதங்களாகத்தான். அதற்குள் இவ்வளவும். நண்பர்கள் கூடப் பலர் கிடைத்துவிட்டார்கள். ஐம்பது என்பது வெறும் எண் கணக்குக்குத்தான் என்பதும் எனக்குத் தெரியும். மொக்கைப் பதிவுகளை உதிரிகளாகச் சேர்த்துக் கொண்டால் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை ஐம்பது.
பதிவுலகில் ஒருவரைச் சந்திப்பதென்பது கடற்கரையில் சந்திப்பது போன்றது என எங்கோ ஆங்கிலப் பதிவில் படித்த ஞாபகம். ஆயிரக்கணக்கானோர் மத்தியில் தேவையானவரைச் சந்திப்பது அதிசயமே. அப்படி நான் சந்தித்தவர்களும், என்னைச் சந்தித்தவர்களுமே எனக்குத் தெரிந்த பதிவுலகம். இன்னும் சந்திக்க வேண்டியோர் பலர். கடற்கரைக் காற்தடங்களை ஆராய்ந்து பிரிக்க முடியாதது போலவே பதிவுலகும். நான் செல்கின்ற பாதை யாரோ ஒருவர் சென்ற பாதையாகக் கூட இருக்கலாம். ஆனால் Copyயாக இருந்தாலும் Smart Copyயாக இருக்கவே விரும்புகிறேன்.
எனது பாட்டியிடம் ஒரு பெட்டி இருக்கும். அதில்தான் அவர் பொக்கிசமாகக் கருதியவற்றை இட்டு வைப்பார். அது அந்தக்கால ஐந்தறைப் பெட்டி என்பார். இந்தப் பதிவுத் தளத்திற்கு ஏதாவது பெயர் வைக்கவேண்டும் எனத் தேடியபோது ஏனோ அது ஞாபகம் வரவே அதையே வைத்துவிட்டேன். அதிகம் பேர் விளக்கம் கேட்டாலும் எப்படி இருக்கிறது என்று யாரும் இதுவரை சொன்னதில்லை. இருந்தாலும் ஏனோ பிடித்துவிட்டது.
இதுவரை எழுதிய பதிவுகளில் அதிக நேரம் எடுத்தது இந்தப் பதிவுதான் என நினைக்கின்றேன். மகிழ்ச்சியில் எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. இதுவரை ஆதரவளித்துவந்த, தொடர்ந்து வாசிக்கின்ற, அடிக்கடி வந்து பின்னூட்டமிடுகின்ற, தொடர்கின்ற, வாக்களிக்கின்ற அனைவருக்கும் நன்றிகள். இனியும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
5 comments:
வாழ்த்துக்கள்..
நல்ல பதிவுலகாகவே போடுகிறீர்களே, அப்புறம் வராமல் எப்படி இருப்பது?
இன்னும் எழுதுங்கள்....
இந்த வருடம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 13 பதிவுகள் தான் போடுகிறீர்களே என்று நினைத்தேன். இந்த 50 வது பதிவைப் போட்டு மாத்தீட்டீங்களே...
நல்லாயிருக்கேடா, நான் அநேகமாய் உன்னுடைய பதிவுகளை வாசித்தவன் என்ற அடிப்படையில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ...
நன்றி சிந்து, கணேஸானந், நேற்றே பதிலளித்திருக்க வேண்டும், சிறிது வேலையாக இருந்துவிட்டேன்.
// Sinthu said...
இந்த வருடம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 13 பதிவுகள் தான் போடுகிறீர்களே என்று நினைத்தேன். இந்த 50 வது பதிவைப் போட்டு மாத்தீட்டீங்களே...//
எப்படி சிந்து?? உக்காந்து யோசிப்பீங்களோ?
Post a Comment