Tuesday, March 17, 2009

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த, உலகக் கிண்ண வெற்றியின் 13ம் ஆண்டு.






17/03/1996. எனக்கு ஒன்பது வயது ஆவதற்கு ஓரிரு மாதங்களே பாக்கியிருந்தன. அப்போது நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறையில் தங்கியிருந்த காலம். பாடசாலைகள் எல்லாம் இடம்பெயர்ந்தோரால் நிறைந்திருந்தன. படிப்பு இல்லை. ஆகையால் கிரிக்கெட்தான் ஏறத்தாள முழுநேர வேலை என்றாகிப்போனது. எனக்கும் வேறு பொழுதுபோக்கில்லை. பெரிய அண்ணாமார் கிரிக்கெட் ஆடும்போது வெளியில் சென்று விழும் பந்துகளைப் பொறுக்குவதுதான் எனது வேலை. அதற்காகவே அணியில் பதினேழாவது அல்லது பதினெட்டாவது வீரனாக இடம்பிடித்துவிடுவேன்.

அக்காலத்தில் ஒட்டுமொத்த யாழ்ப்பாணமுமே தென்மராட்சி, வடமராட்சிக்குள் சுருங்கிப்போனதால் எங்கும் சன நெரிசல். அதனால் எமக்கும் அணிக்கு இருபது பேர் கொண்ட கிரிக்கெட் போட்டிதான். எனது ஒன்றுவிட்ட அண்ணாவின் வீட்டின் பின்புறம் இருந்த தரிசு நிலம்தான் எங்கள் மைதானம்.


அன்று 17/03/1996. இலங்கை அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி. எனக்கோ இலங்கையும் தெரியாது, ஆஸ்திரேலியாவும் தெரியாது. என்னோடு விளையாடும் அண்ணாமார் எல்லோரும் சேர்ந்து காசு சேர்த்து ஒரு ஜெனரேட்டர் பிடித்து, பக்கத்து ரியூசன் கொட்டிலின் ஒரு வகுப்பறையில் மேட்ச் பார்க்க ஆயத்தமானார்கள். அது ஆஸ்திரேலியாவில் நடந்ததால் எமக்கு முழு இரவுப் போட்டியாக அமைந்திருந்தது என நினைக்கின்றேன். எனது அறிவுக்கு எட்டியவரை அதுதான் நான் T.V யில் பார்த்த முதல் கிரிக்கெட் மேட்ச்.


நீல உடை அணிந்தவர்கள்தான் இலங்கை அணியாம். மஞ்சள் உடையினர் ஆஸ்திரேலியாவாம். அண்ணாதான் சொல்லித்தந்தார். நாங்கள் இலங்கை ரண் எடுக்கும்போது கை தட்ட வேண்டுமாம். அண்ணாதான் சொன்னார். அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் கைதட்டிக் கூச்சல் போட்டுவிட்டு என்னை அறியாமலேயே தூங்கிப்போனேன். திடீரென யாரோ தட்டி எழுப்பினார்கள். அந்தக் கொட்டில் முழுவதும் ஒரே கூச்சலாக இருந்தது. இலங்கை உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம். நித்திரைக் கலக்கத்தில் பாதிதான் புரிந்தது. மறுபடியும் தூங்கிவிட்டேன். எப்படி வீடு வந்தேன் என எனக்கே தெரியாது. அடுத்தநாள் அப்பாதான் கூட்டிவந்தார் எனக் கூறும்வரை.


இன்று அதன் பதின் மூன்றாம் ஆண்டு நிறைவாம். இப்போதும் கொண்டாடுவதற்கு அதுதான். அதற்குப்பிறகு ஒன்றுமில்லை. அதைப்பற்றித்தான் இன்றுவரை பேச்சும்!.

நேற்று முன்தினம் நான் பார்த்த இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியே ஞாபகம் இல்லாத போது ஒன்பது வயதுகூட ஆகாத நிலையில் பார்த்த அந்தப் போட்டி எவ்வாறு நினைவில் நிற்கிறது என எனக்குப் புரியவில்லை.

இடம்பெயர்ந்த காலத்து வலியின் வேதனைகளோடு இந்த நினைவுகளும் சேர்ந்து விட்டதாலா?, இல்லை ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்து ஊர்களிலிருந்து வந்த மக்களுடன் ஒன்றாக இருந்த நினைவுகளாலா?, இல்லை நான் T.V யில் பார்த்த முதல் கிரிக்கெட் மேட்ச் என்பதாலா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கூறிய அனைத்துமே என் ஆழ்மனத்து நினைவுகள் என்பதுமட்டும் தெரியும்.

1996 உலகக் கிண்ணக் கிரிக்கெட்டை இலங்கை வென்ற 13ம் ஆண்டு நிறைவு நாள் இன்று. அதைப்பற்றித்தான் எழுத உட்கார்ந்தேன். ஆனால் பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்காய் முடிந்த கதையாக கடைசியில் இப்படி ஆகிவிட்டது.

5 comments:

Anonymous said...

உண்மையில குரங்குதான் பிடிக்க‍ப்போய் பிள்ளையாரா ஆயிட்டுது தம்பி

Anonymous said...

நானெல்லாம் இந்தப் போட்டியின் நேர்முகவர்ணணையை.. ரேடியோல டைனமோச்சுத்திக் கேட்டனான் என்ன.. என்ர பழைய பதிவொண்டிலயும் இதைப்பற்றி எழுதியிருப்பன்.. ம்..ம்..

ARV Loshan on March 20, 2009 at 10:26 AM said...

உங்கள் வயதை ரொம்பக் குறைத்துக் காட்டும் முயற்சியோ???
;)

Subankan on March 20, 2009 at 11:26 AM said...

//LOSHAN said...

உங்கள் வயதை ரொம்பக் குறைத்துக் காட்டும் முயற்சியோ???
;)
//

ஏ.....ன்? கூட்டிக் கழித்துப் பாருங்கள், வயது சரியாக வரும்.

Pranavan on March 30, 2009 at 6:00 PM said...

இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது.
எனக்கே அந்த போட்டி நேற்று நடந்தது போல் ஞாபகம் உள்ளது.
It was a wonderful game!!

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy