Wednesday, March 4, 2009

அரசியலாக்கப்பட்ட விளையாட்டு – கிரிக்கெட்




இலங்கையில் அரசியலும் கிரிக்கெட்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள இரு துறைகள் என்றே சொல்லுமளவிற்கு இரண்டிற்கும் இடையிலான உறவுகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் ஆனது அரசியலுக்கு பெரிதும் உதவியாகவே இருந்துவருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிகள் அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இலங்கையிலுள்ள ஏனயோருக்கு வயிற்றில் புளியையே கரைக்கும். ஏனெனில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் எந்த ஒரு பாரிய வெற்றியைத் தொடர்ந்தும் பொருட்களின் விலை உயர்வு இருக்கும். அது இந்த வெற்றியின் மூலம் மறைக்கப்பட்டும் விடும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு, அதன் தலைமைத்துவம் போன்றவற்றில் அரசியல் சில வேளைகளில் தனது கைவரிசையைக் காட்டிவிடும். இதனால் வீரர்களின் திறமைக்கு அளிக்கப்படும் மதிப்புக் குறைவு எனக் கூறிவிட முடியாவிட்டாலும், அதன் தாக்கத்தை பல தடவைகளில் உணரமுடியும்.

இங்கே கிரிக்கெட் வீரர்களுக்கு வளங்கப்படும் மரியாதையும் மிகமிக அதிகம். ஒரு வீரர் பிரகாசிக்கத் தொடங்கியவுடனேயே இலங்கையிலுள்ள பிரபல நிறுவனங்கள் பலவற்றின் விளம்பரங்கள் பலவற்றில் சிரிக்கத் தொடங்கிவிடுவார். அவை அவரது ஒவ்வொரு அசைவுகளுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதுபோல தமது விளம்பரங்களை பிரபலமாக்கிவிடும். இந்தியாவிலும் இது இருந்தாலும், அங்கே விளம்பரங்களில் நடிகர்கள் பிடித்துக்கொண்ட இடத்தையும் இங்கே கிரிக்கெட் விட்டுவைக்கவில்லை.

இலங்கையில் உள்ளோரில் கிரிக்கெட் ரசிகர்களின் சதவீதம் பாரிக்கும் மேல். கிரிக்கெட் என்றால் அனைத்தையும் விட்டுவிட்டு அதனுடனே மூழ்கிவிடுவோர் பலர். எனது கம்பஸ்சிலும் கிரிக்கெட் போட்டிகளின் போது Lecture Hall இனை விட canteen இலுள்ள TV முன் இருப்போர் அதிகம். Lecture Hall இலும் கையடக்கத் தொலைபேசிமூலம் பலர் ஓட்ட விபரங்களோடு இணைந்திருப்பர்.


இந்த அரசியல் ஆட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று இலங்கை கிரிக்கெட் அணிமீது பாகிஸ்தானில் வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையருக்கு துப்பாக்கிச் சூடு ஒன்றும் புதிதல்ல என்றாலும் அது கிரிக்கெட் அணிமீது நடாத்தப்பட்டதும், ஆறு வீரர்கள் காயமுற்றதும் உலகிற்கே புதிது.

இதற்கு விளையாட்டு காரணமல்ல ஏனெனில் பாகிஸ்தான் அணி ஒன்றும் மோசமாக விளையாடவில்லை. இலங்கை அரசியல் பாகிஸ்தானில் எதிரொலிக்கச் சாத்தியமில்லை. எனவே இதற்குப் பாகிஸ்தான் அரசியலே காரணமென ஊகிக்கலாம். அங்கே வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என இந்தியக் கிரிக்கெட் அணி கூறிவந்ததை இது உறுதிப்படுத்திவிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இது சோதனைக்காலம். இனி எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் செல்லத் தயங்கும். இது அதனது வருமானத்தைப் பாதிக்கும்.

பாகிஸ்தானிடம் இலங்கை விரும்பி வாங்கும் ஒன்றாலேயே, பாகிஸ்தானிலேயே வைத்து வாங்கிக்கட்டுவோம் என இலங்கை கனவிலும் நினைத்திருக்காது.



1 comments:

Anonymous said...

//பாகிஸ்தானிடம் இலங்கை விரும்பி வாங்கும் ஒன்றாலேயே, பாகிஸ்தானிலேயே வைத்து வாங்கிக்கட்டுவோம் என இலங்கை கனவிலும் நினைத்திருக்காது.
//


:))

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy