Wednesday, February 1, 2012
வேண்டாம்.. விலகிவிடு!
காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது
வேண்டாம் விலகிவிடு
வேண்டாம்.. விலகிவிடு!
மரணத்தின் வலிகூட
மரத்துப்போன பிறகும் - உன்
வார்த்தைகள் வலிக்கிறது..!
வேண்டாம்.. விலகிவிடு!
காலங்கள் கடந்து
காப்பியமாய்க் கிடக்க - காதல்
முடிந்ததென்று நீயோ
முற்றுப்புள்ளி இடுகிறாயே..!
வேண்டாம்.. விலகிவிடு!
கற்கள் கேட்கிறாயே நீ - இந்தக்
காதல் கொண்ட கடைக் கவியிடம்
சொற்கள் மட்டும்தானே
சொந்தமாய் இருக்கின்றன!
வேண்டாம்.. விலகிவிடு!
யதார்த்தம் பேசுகிறாய் நீ - அது
முடியாதவர்களின்
முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் - இன்னும்
எஞ்சியிருக்கும் வெப்பம்
அது போதும் எனக்கு!
வேண்டாம்.. விலகிவிடு!
என்
கவிதைகள் கசக்கிறதா உனக்கு? - சொல்
மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்
என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? - சொல்
போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்
மரணம் கேட்கிறாயே நீ - மறந்தாயா
நம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!
வேண்டாம்.. விலகிவிடு!
நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்
வேண்டாம்.. விலகிவிடு!
Subscribe to:
Posts (Atom)