நடிகர் விஜயின் வீடு. மணி மாலை ஏழாகிக்கொண்டிருந்தது. கோக், ஸ்னாக்ஸ் சகிதமாக விஜய் ஆஜர். இயக்குனர் பேரரசுவின் அசிஸ்ரன்ட்டாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளம் இயக்குனர் கதை சொல்லத் தொடங்குகின்றார்.
இயக்குனர் – சார், நான் கதை சொல்றேன். நீங்க அப்படியே ஸ்கிறீனில நடக்கிற மாதிரி இமேஜின் பண்ணிக்குங்க. இது டபுல் ஆக்டிங் சாப்ஜெக்ட் சார். அப்பா, மகன் ரெண்டு ரோலையும் நீங்கதான் பண்றீங்க. அப்பா றோலுக்கு கொஞ்சம் கெட்டப் சேஞ்ச் பண்ண வேண்டியிருக்கும்.
விஜய் – என்னங்க நீங்க, கெட்டப் சேஞ்ச், அது, இதுன்னுட்டு
இயக்குனர் – இல்லசார், மகன் கேரக்டருக்கு மூணு நாள் தாடியோட வர்றீங்க. அப்பா கேரக்டருக்கு ஒருநாள் எக்ஸ்ரா, நாலு நாள் தாடி.
விஜய் – அப்ப ஓகே, மேல சொல்லுங்க.
இயக்குனர் – சார், படத்த ஓபன் பண்ணா, நீங்க பசங்களோட சேர்ந்து பம்பரம் விட்டு விளையாடீட்டு இருக்கீங்க. அப்ப வில்லனோட அளுங்க பசங்ககிட்ட பம்பரத்தைத் தரச்சொல்லி வம்புக்கு வராங்க சார். நீங்க உடனே கோபமாகி, பமுபரத்தை ரொம்ப ஸ்பீடா சுத்தி விடுறீங்க. அந்த ஸ்பீடுக்கு புழுதி எல்லாம் பறக்குது சார். அதைத் தாங்க முடியாம அவங்க ஓடுறாங்க சார். உடனே நீங்க பக்கத்துல இருந்த காய்கறி வண்டில்ல கால ஊண்டி யம்ப் பண்ணி மேல போயிட்டிருந்த ஏரோபிளேனை பிடிச்சுடுறீங்க சார். அப்படியே பிளைட்டில தொங்கிட்டே உங்க காலால வில்லனோட ஆழுங்களை எல்லாம் பந்தாடுறீங்க சார். பைட்டு முடிஞ்சதும் அப்படியே பறந்துபோய் லண்டனில லேன்ட் ஆகுறீங்க சார். அங்க பீச்ல பாரின் டான்சர்ஸ்சோட ஒரு பாட்டு வைக்கிறம் சார். A.R. ரஜ்மான் சாருட்ட கூட பேசிட்டன்.
விஜய் – யாரு? A.R.R சாரா? ஓகே சொல்லிட்டாரா?
இயக்குனர் – ஆமா சார்.
விஜய் – சரி, மேல சொல்லுங்க.
இயக்குனர் – சாங் முடிஞ்சதும் அங்க இருந்து கப்பல்ல கிளம்பி இந்தியாவுக்கு வர்றீங்க. அந்தக் கப்பல்லதான் அறிமுகமாகிறாங்க ஐஸ்வர்யாராய் மெடம்.
விஜய் – யாரு?
இயக்குனர் – ஐஸ்வர்யாராய் சார், அவங்களத்தான் ஹீரோயினாப் போடுறதா இருக்கோம்.
விஜய் – சரி, மேல சொல்லுங்க.
இயக்குனர் – ஐஸ் அவங்க தாய்மாமனோட கப்பல்ல வந்திட்டிருக்காங்க சார். அந்தத் தாய்மாமன் றோலை வடிவேலு சார் பண்ணுறாரு. அவருக்கு ஐஸ்வர்யாராய் மேல லவ்வு. அத வச்சே கப்பல்ல காமெடி பண்றோம் சார்.
விஜய் – இன்ட்றஸ்டிங்….
இயக்குனர் – நீங்க வந்து காபரில இறங்குறீங்க சார். அங்கதான் வில்லனா அறிமுகமாகிறார் ஜக்கிச்சான்.
விஜய் – யாரு ஜக்கிச்சானா?
இயக்குனர் – ஆமா சார், அவரைத்தான் வில்லனாப் போடுறதா இருக்கோம். அனேகமா ஓகே சொல்லிடுவார். உங்க அம்மா றோலுக்குக் கூட மல்லிகா செரவத்தைத்தான் போடுறதா இருக்கோம்.
விஜய் – சரி, சொல்லுங்க.
இயக்குனர் – காபரில காபர் கான்ராக்ரறா அறிமுகமாகுறாரு ஜக்கிச்சான். அவரைக் கண்டவுடனேயே டாடீன்னுட்டு ஓடிப்போயி அவரைக் கட்டிக்கிறாங்க ஐஸ். உங்களுக்கோ பழைய ஞாபகங்களெல்லாம் வருது.
விஜய் – இங்கதான் அப்பா கேரக்டர் வருதா?
இயக்குனர் – கரெக்ட் சார், அப்படியே பிளாஸ்பேக்கில நீங்க அப்பாவா வரீங்க. உங்க வை(f)பா மல்லிகா செரவத் இருக்காங்க. அதில நீங்க ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசரா வரீங்க. ஏரியா தாதாவா ஜக்கிச்சான் இருக்காரு. அவரைக் கள்ளச் சாராயக் கேஸில நீங்க உள்ள பிடிச்சுப் போட்டுறறீங்க. ஆறு மாசம் உள்ள இருந்துட்டு வர்ற அவர் உங்களைக் கொலை பண்ணிடறார்.
விஜய் – அவரை இப்ப மகனா நான் பழிவாங்குறன். அதானே கதை?
இயக்குனர் – எக்ஸாட்லி சார்.
விஜய் – வேணாங்க. இந்த மாதிரிக் கதையெல்லாம் எனக்கு இனிச் சரிவராது. இந்த டீவீடீ க்களப் பாருங்க. இந்தமாதிரி ஒரு கதையை ரெடி பண்ணிட்டு வாங்க. நாம கண்டிப்பாப் பண்ணலாம்.
விஜய் மூன்று டீவீடீ க்களை கையில் திணிக்கிறார். அதிர்ச்சியான இயக்குனர் அதைப் பார்க்கிறார். அந்த டீவீடீக்கள்
- துள்ளாத மனமும் துள்ளும்!
- காதலுக்கு மரியாதை!!
- பூவே உனக்காக!!!
பி.கு – ஒண்ணும் இல்லீங்க. விஜய் இந்தமாதிரிப் படங்கள் பண்ணணுமுன்னு எனக்கு ஒரு ஆசை, லட்சியம், கனவு, எதிர்பார்ப்பு எல்லாமே!. விஜய் ரசிகர்கள் வேணுமுன்னா அப்படியே அஜித்துக்கு ஏற்றமாதிரி வேண்ணா மாத்திப் படிச்சுக்கங்க.