
வழமையாக கொழும்பில் பெய்யும் மாலைநேர மழை அன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கையிலிருந்த குடை காற்றில் தன் கையை முறித்துக்கொள்ள அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்திற்குள் அடைக்கலமானேன். அடிக்கின்ற தூவானம் அதற்குள்ளும் மழை பெய்ய வைத்தது. ஆனாலும் அதனுள் கூட்டத்திற்குக் குறைவில்லை. கூட்டத்தில் ஏதோ ஒரு ஹைஹீல்ஸ் என் காலை மிதித்துவிடவே ஐயோ என அலறவேண்டும் போல இருந்தாலும் நாகரிகம் கருதி shit என்றவாறே திரும்பினேன். அ.. அது அவளேதான். யாரவள்?
அது என் பாடசாலைப்பருவம். எதிர்காலக் கனவு என்று பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும் அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப் படித்த நாட்கள். ஸ்கூலையும் டியூசனையும் விட்டால் பெரிதாக ஒன்றும் தெரியாது. அம்மாவின் புண்ணியத்தில் சில கோயில்கள் மட்டும் தெரிந்திருந்தன. அப்படி ஒரு கோயிலில்தான் அவளை முதன்முதலில் பார்த்தேன். கணுக்கால் தெரியத் தூக்கிப்பிடித்த பாவாடை தாவணியோடு கோயிலை அடி அடியாக அளந்துகொண்டிருந்தாள். என்னுடைய வயது இல்லையென்றால் ஒன்றிரண்டு குறைவாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். ‘தம்பி’ அம்மாவின் குரல். அடுத்த கோயிலுக்குப் போக அப்படி என்ன அவசரமோ?
Oh sorry என்றவாறே திரும்பியவள் அதே மூச்சில் நீங்களா என்றாள். நான் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் வாங்களேன். Coffee குடித்துக்கொண்டே பேசலாம் என்றாள். அப்போதும் லேசாகத் தூறிக்கொண்டிருந்த மழை பெரிதாக நனைத்துவிடாது என்ற தைரியத்தில் அவளுடன் இறங்கி எதுவுமே பேசிக்கொள்ளாமல் நடக்கத் தொடங்கினேன். என் நினைவுகளுடன் கூடவே..
அன்று ஒரு சனிக்கிழமை. வழமையான டியூசன் வகுப்புகளில் ஐநூறோடு ஐநூற்றி ஒன்றாக இருந்து படித்துக்கொண்டிருந்தேன். ஆசிரியர் தனது வளமையான பாணியில் ஒவ்வொருவராக எழுப்பிக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார். அப்போதுதான் கவனித்தேன். அவர் எழுப்பியது அது.. அவளேதான். எப்படி மிஸ் பண்ணினேன் இவ்வளவு நாளும் என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அன்று பெயர் தெரிந்துவிட்டது.
இரண்டு Coffee ஓடர் செய்துவிட்டு அமர்ந்தோம். கொழும்பு அவளையும் முழுவதுமாக மாற்றிவிட்டிருந்தது. உங்களைச் சந்திப்பேன் என நினைக்கவே இல்லை. அவள்தான் ஆரம்பித்தாள். இருந்த கடுப்பை எல்லாம் இப்படி ஹைஹீல்சால் காட்டுவீர்கள் என்று நானும்தான் நினைக்கவில்லை என்றேன். ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப்போல விழுந்து விழுந்து சிரித்தாள். அதற்குள் Coffee வந்துவிடவே பேச்சு சிறிது தடைப்பட்டது. அதற்குள் சிறிது flash back போய்விட்டு வரலாம்
மச்சான் அதில போறாளே அந்த சிவப்புக் கலர் சுடிதார். நண்பனின் கை அவளை நோக்கி நீண்டது. ஆமா அவளுக்கு என்னடா? இது நான். சூப்பரா இருக்கால்ல? அவன். இல்லடா சுமார்தான். இது நான். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான். ஆனால் அவன் அடுத்து அவளைத்தாண்டா நான் லவ் பண்ணறேன் என்று சொன்னபோது ஆடிப்போய் விட்டேன். என்னடா சொல்றே? எனக்கே தெரியாமல் எப்படி? என்றேன். ஒரு நாலு மாசமாடா. நம்ம கோயிலுக்குக்கூட அடிக்கடி வருவாடா. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணணும் என்ற அவனது காதலைப்பார்த்த என் காதல் இதயத்தின் மூலைக்குள் ஓடி ஒளித்துக்கொண்டது. முடிவு செய்தேன். அவனுக்குத்தான் அவள் என்று.
அவள் Coffeeயை எடுத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள். எதுவும் பேசாமலிருக்க ஒரு மாதிரி இருந்தது. மழைக்கு சுடச்சுடக் Coffee குடித்தால் சூப்பராத்தான் இருக்கும் இல்லயா என்றேன். ஏன் என்ன பேசுவது என்று தெரியவில்லையா என்றாள். எப்படித்தான் கண்டுபிடித்தாளோ. அப்படியில்லை என நான் இழுக்க நீங்கள் முதன்முதலில் எங்கிட்ட வந்து பேசினீங்களே ஞாபகம் இருக்கா என்றாள். மறக்க முடியுமா?
மச்சான் நீதான்டா என்னோட லவ்வை எப்படியாவது அவளிட்ட சொல்லணும். நண்பன் சொன்னபோது முதலில் மறுத்தாலும் பின் சம்மதிக்க வேண்டியதாகிவிட்டது. முதன்முதலில் வீட்டில் டியூசன் என்று பொய் சொல்லிவிட்டு நண்பனுடன் அவள் செல்லும் கோயிலுக்குச் சென்றேன். பல சினிமாப் படங்களை நினைவுபடுத்தும் ஒரு கவிதை எழுதிய கடதாசியைக் கையில் திணித்துவிட்டு காணாமல் போய்விட்டான். அதை அவளிடம் கொடுத்துவிட்டு, ஒன்பதுமுறை எச்சிலை விழுங்கிவிட்டுச் சொல்லிவிட்டேன் அவளிடம். நண்பனின் காதலை.
எல்லாமே இன்று நடந்ததுபோல் நினைவில் நின்றது. அப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அவளே தொடர்ந்தாள். உங்களுக்குத் தெரியாது. நான் டியூசனில உங்களைப் பார்த்ததில இருந்து உங்களை எவ்வளவு லவ் பண்ணின்னான் என்று. நீங்களும் என்னை கோயிலிலை வைத்து என்னைப் பார்த்தது எல்லாம் எனக்குத் தெரியாது என்றே நினைக்கிறியள்? எனக்கு எல்லாம் தெரியும். இதைச் சொல்லவே முடியாது எண்டிருந்தனான். நல்லவேளை இன்று உங்களைச் சந்திச்சேன். இல்லேன்னா என்ட மனசுக்குள்ளையே கிடந்திருக்கும். என்றுவிட்டுக் Coffeeயை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்தாள்.
அவள் கப்பை வைப்பதற்கும் அவளுடனான காதல் தோல்வியால் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட என் நண்பன் கையில் பில்லுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
4 comments:
arumaiya eluthukkal suba
//அடிக்கின்ற தூவானம் அதற்குள்ளும் மழை பெய்ய வைத்தது. /
Super
// அவள் கப்பை வைப்பதற்கும் அவளுடனான காதல் தோல்வியால் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட என் நண்பன் கையில் பில்லுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. //
romba nalla kathai
Super ending :)
superb.....
சொந்த அனுபவம் போல இருக்கு...
முடிவு நச்...
நண்பனின் வலிகளை சொல்லாமல் சொல்லியிருப்பது அழகு...
அழகான பெண்கள் எல்லாம் அண்ணி / sister ஆகிவிடும் வலி தெரிகிறது வார்த்தைகளிள்..
வயதுக்கோளாறு பாலினக்கவர்ச்சிகள் எல்லாம் கண்டதும் காதல் ஆகிவிடுவது கவலை தருகிறது...
கதை சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment