‘உங்கள் மனைவியிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது’
பிரதீப் முன்னாலிருந்த கணிணித்திரை அவன் கவனத்தைக் கலைத்தது. ‘இப்போது வேலையாக இருக்கிறேன், பிறகு பேசச்சொல்’ என்றுவிட்டு தனக்கு முன்னாலிருந்த ட்ரான்ஸ்பேரன்ட் தொடுதிரையில் தோன்றிய தகவல்களுக்கேற்ப கணினிக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான்.
‘இல்லை, உடனடியாகப் பேசவேண்டுமாம், சிறிது கோபமாக இருக்கிறார்கள்’
மீண்டும் கூறிய கணினியிடம் ‘சரி தொடர்பைக் கொடு’ என்றவாறே அதன்பக்கம் திரும்பினான்.
பிரதீப், கொழும்பிலுள்ள வர்த்தகமையக் கட்ட்டத்தின் 110ஆவது மாடியில் இருந்த பிரதீப் அண் கோ வின் சுழல் நாற்காலியில் நாள்முழுவதும் சுழன்றுகொண்டிருக்கும் ஒருவன். அவனைச்சுற்றியிருந்த தொடுதிரைகள் அவனது வியாபாரத்தில் உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை கணப்பொழுதுக்குள் காட்டிக்கொண்டிருக்க, அவளது எண்ண ஓட்டங்களையே கட்டளைகளாக ஏற்று சில நிமிடங்களுக்குள் லட்சங்களில் சம்பாதித்துக்கொடுத்துக்கொண்டிருந்தது அவனது கணினி.
பிரதீப்பின் முன்னாலிருந்த கணினித்திரையில் தோன்றினாள் ப்ருந்தா.
‘ஹேய் ப்ருந்த், யூ லுக் சோ பியூட்டிபுல்’ என்றவனிடம்
‘பின்ன, வாரக்கணக்கில பாக்காம இருந்தா அப்படித்தான். இண்டைக்காவது வீட்டுக்கு வந்துடுவேல்ல?’ என்றாள். ‘
‘சாரிடா, உனக்குத்தான் தெரியுமில்ல, ஒன் அவர் நான் இங்க இல்லேன்னா எவ்வளவு லாஸ்ட் ஆயிடும் தெரியுமா உனக்கு?’ என்று பரபரத்தான் பிரதீப்.
அவனைப்பொறுத்தவரை பணம்தான் எல்லாமே. பணம் பண்ணும் ஒரு இயந்திரமாகவே நடமாடிக்கொண்டிருந்தான் அவன். மாத்திரைகளும், உடலின் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருந்த இயந்திரங்களும் அவனுக்குத் தூக்கத்தை முற்றிலுமாக மறக்கச்செய்திருந்தன. உலகெங்கும் பரந்திருந்த அவனது நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், ஆயிரக்கணக்கான இயந்த்திரங்களையும் ஒற்றை மேசையில் இருந்தவாறே வழிநடாத்திக்கொண்டிருப்பதற்கு அவனுக்கு நாள் ஒன்றுக்கு 24 மணித்தியாலங்கள் போதாதுதான்.
‘இன்னும் இரண்டு மணி நேரத்துல உனக்கு பிறந்தநாள் தெரியுமில்ல?, அதுக்குக்கூடவா வீட்டுக்கு வரக்கூடாது?’ என்றவளைப்பார்த்துப் புன்னகைத்துவிட்டு,
‘அப்படியா?, சரி சரி அதுக்கு முன்னாலேயே வீட்டில் இருப்பேன்’ என்றவாறே அழைப்பைத் துண்டித்தான்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திலிருக்கும் வீட்டுக்குப் போவதற்கே இருபத்தெட்டு நிமிடங்கள் ஆகிவிடும். எப்படியும் இரண்டுமணி நேரம் வீணாகப்போகிறது. வேலைகளை விரைவாக முடித்தாகவேண்டும் என்று அவன் எண்ணிமுடிக்கும் முன்னரே அவனது வேலைகளை கணினி அவன்முன் பட்டியலிட்டிருந்தது.
எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, அதிவேக லிப்டில் சில நொடிகளுக்குள் இறங்கிவந்து சரியாக 11.30க்கு காரில் ஏறினான். போகவேண்டிய இடத்தை அதிலிருந்த கம்யூட்டருக்குத் தெரியப்படுத்திவிட்டு கண்ணை மூடினான். தரையிலிருந்து சில அடி உயரத்தில் மிதந்தவாறே கணினியால் செலுத்தப்பட சீறிக்கொண்டு புறப்பட்ட கார் சில நிமிடங்களிலேயே நிறுத்தப்படது. விழித்துக்கொண்டு வினவிய அவனுக்கு காரிலிருந்த கம்யூட்டர்
‘மன்னிக்கவும், எல்லாப்பாதைகளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. சரியாக ஐம்பத்தெட்டு நிமிடத்தின் பின்னரே இங்கிருந்து எம்மால் நகரமுடியும்’ என்று கூறி ஓய்ந்தது.
காரில் இருந்தபடியே மெதுவாக எட்டிப்பார்த்தான் பிரதீப். அங்கேயிருந்த மேடையில் 2124ம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் சிறுபான்மை மக்களுக்கு நியாயமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று முழங்கிக்கொண்டிருந்தார்.