Tuesday, June 29, 2010

கொழும்பு விலை


 

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”

“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.

ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

19_11_06_jaffna_01
இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

பி.கு :- ஈழத்துமுற்றத்துக்காக எழுதப்பட்டது.

9 comments:

கன்கொன் || Kangon on June 29, 2010 at 7:28 PM said...

இரசித்தேன்....

எங்கள் வாழ்க்கை முறையும், அந்த சொற்களின் பாவனையுமே ஒரு வித்தியாசம் தான்...

பகிர்விற்கு நன்றி. :)))

archchana on June 29, 2010 at 7:43 PM said...

கொழும்பு விலை யின் ஆதிக்கம் யாழில் மட்டுமல்ல நம்மவர் எந்த எந்த நாடுகளில் இருக்கிறார்களோ அந்த நாடுகளின் டொலர் பவுன்ஸ் யுரோ ஏன் இந்திய ரூபா என்றாலும் கடையில் நின்று கூட்டி கழித்து கொழும்பு விலையுடன் ஒப்பிட்டு தான் வாங்குவார்கள். எல்லாம் பழக்க தோஷம் ......

Bavan on June 29, 2010 at 7:45 PM said...

ஹாஹா.. நான் கொழும்பு வரும் போதும் ஒவ்வொடு பொருட்களையும் கூறி கொழும்பில எவ்வளவு எண்டு விசாரிச்சிட்டு வா மச்சான் என்று பலர் கூறியிருக்கிறார்கள்..:)

பதிவு நல்லாயிருக்கு..:)))

anuthinan on June 29, 2010 at 8:41 PM said...

கொழும்பு விலையை புரிய வைத்த சுபாங்கன் அண்ணாவுக்கு நன்றிகள்!!!

vasu balaji on June 29, 2010 at 8:43 PM said...

தெரியாத தகவல் அழகு வட்டார மொழியில். பகிர்வுக்கு நன்றி சுபாங்கன்.

கலகலப்ரியா on June 29, 2010 at 8:59 PM said...

ம்ம்.. என்ன சொல்ல..

Karthik on June 29, 2010 at 9:04 PM said...

கஷ்டம் புரியுது தல..

Karthick Chidambaram on June 30, 2010 at 9:35 AM said...

இது எனக்கு புதிய செய்தி நண்பரே. தங்கள் வாழ்வின் ஒரு சுவையான சொல்லாடலை தெரிந்து கொண்டேன்.

Kiruthigan on June 30, 2010 at 10:52 AM said...

அருமை சுபாங்கன் அண்ணா..
: )

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy