Saturday, October 2, 2010

எந்திரன் – குற்றமும் பின்னணியும்


 

cbe20_Endhiran-Movie-Aug-Stills-19

“சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதையில் இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாகவேண்டும்” - சுஜாதா

மேலைநாட்டுக் இலக்கியங்களிலேயே தாராளமாகக் காணப்பட்ட அறிவியல் புனைகதைகள் (Science fiction) மற்றும் எதிர்காலவியல் சிந்தனைகளுடன் கூடிய கதைகள் (Futurology) என்பவற்றை மேலைநாட்டு வட்டத்தைத்தாண்டி தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அவருக்கு முன்னரும் சில கதைகள் தமிழில் இந்த வட்டத்தைத் தொட முயற்சித்திருந்தாலும், சைன்ஸ்ஃபிக்ஷன் என்று அவற்றை ஏற்றுக்கொள்வது சிரமம்தான்.

இந்த சைன்ஸ்ஃபிக்ஷனை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் ஆங்கிலத்தில் சாதாரணமானவை என்றாலும், தமிழுக்குப் புதிது. இவற்றுக்குப் பின்னாலிருக்கின்ற அதிக பொருட்செலவுதான் இதற்குச் சொல்லப்படுகின்ற பிரதான காரணமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களுக்குள்ளாகவே நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் குத்தப்பட்டுவிடுகின்ற ‘இமேஜ்’ உம், அதைவிட்டு வெளியே வருவதை அவர்களும், ரசிகர்களும் விரும்பாததும்கூடக் காரணம்தான். இதே காரணத்துக்காகத்தான் எந்திரன் ரஜினி படமா, சங்கர் படமா என்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் அண்மைக்காலப் படங்களில் ரஜினி என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார். சந்திரமுகி, சிவாஜி என்று இப்போது எந்திரனில் சாதாரணமாக நடித்துவிட்டுப் போயிருப்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், வரவேற்கவேண்டிய ஒரு விடயமே. அடுத்ததாக சங்கர். அவரது வழமையான ஊழல் பேயைத் துரத்தும் வேலையையும், நாட்டை மாற்றியமைக்கும் முக்கியமான பொறுப்பையும் புறந்தள்ளிவிட்டு, வித்தியாசமான ஒரு முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்.

00000667-constrain-160x200 சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, இன்னும் அவற்றில் லாஜிக் அடி வாங்கிய இடங்களையும் மாற்றி எந்திரனில் ரோபோவையும் காதலிக்கவைத்திருக்கிறார். படத்தில் இவரது பல வசனங்கள் நறுக் என்று இறங்குகின்றன. வசனங்களில் தாராளமாகக் கடந்துபோகும் அறிவியல் சங்கதிகள் எல்லாம் உறுத்தாமல் இறங்குகின்றன. இப்படி ஒரு படத்திற்கான கதையை பத்துவருடங்களுக்கு முன்னரேயே எழுதிவிட்டு இறந்துபோயிருக்கிறார். இவர் இல்லாவிட்டால் எந்திரனை தொழில்நுட்பத்தில் அதிகம் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இப்படி ஒரு பரிமானத்தில் சாத்தியமே இல்லை. எந்திரத்திற்கும் உணர்வுகள் வருகின்றட என்பதை மீண்டும் ஜீனோவில் தொட்டுச்சென்றவர், எந்திரனில் அதைக் காதலிக்கவும் வைத்துவிட்டார். படத்தை குறைந்தபட்சம் அவருக்கு சமர்ப்பணமாவது செய்திருக்கலாம். எல்லாம் பணம் செய்யும் வேலை.

ரஹ்மானின் பின்னணி இசை எங்கேயுமே உறுத்தாமல் படத்தோடு சேர்ந்து ரசிக்கமுடிகிறது. பாடல்கள் தியேட்டரில் கேட்கும்போது அதிகமாக இனிக்கின்றன. குறிப்பாக அரிமா அரிமா ஹெட் செட்டில் கேட்கும்போது இல்லாத ஒரு உணர்வை தியேட்டரில் கொடுத்தது. ஆஸ்கர் பெற்றுக்கொண்டபோது அவர்முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மீண்டும் ஒருமுறை எந்திரன் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். கிளிமாஞ்சாரோ பாடல் ஏற்கனவே பிடித்துவிட்டாலும் திரையில் பாடலை ரசிக்கவிடாமல் ஐஸ் ஆக்கிரமித்திருக்கிறார். ஐஸ் படம் முழுவதும் அப்படியேதான் வந்துபோனாலும் க்ளோசப் காட்சிகள் அவருக்கும் வயதாவதைக் காட்டுகின்றன.

Endhiran-Stills-009

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் க்ளைமாக்சின்போது கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தாலும், அதன் நுணுக்கங்கள் கச்சிதமாக இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் சிட்டி ரோபோ தன் எந்திர உடலுடன் முதன்முறையாக ரஜினி ஸ்டைலிலேயே நடந்துவந்து, இடுப்பில் கைவைத்து லுக்குவிடும் காட்சி ஒன்றே போதும், கிராபிக்சின் துல்லியத்தையும், சங்கர் அவற்றைக் கையாண்ட நேர்த்தியையும் சொல்ல.

இந்தப் படத்தில் ரசித்த இன்னுமொரு விடயம், காட்சிகளை பலதரப்பட்ட ரசிகர்களையும் கவரும்படியான காட்சிகள்தான். விஞ்ஞான நுணுக்கங்களைக்கூட போகிறபோக்கில் உறுத்தாமல் சொல்லிவிட்டுச் செல்வது அழகு. படத்தின் ஒன்லைன், பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், சொல்லப்பட்ட விதம் எல்லாமே தமிழ் சினிமாவிற்குப் புதிது. இதில் உள்ள ஆங்கிலப்படத்தின் தாக்கங்களை தேடித்தேடிப் பலரும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தப்படத்துக்கான சிந்தனை பத்து வருடங்களுக்கு முற்பட்ட ஒன்று, இரண்டாவது இப்படி ஒரு படம் தமிழுக்குப் புதிது. எந்திரன் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு படம். குறை கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்துக்கொண்டேயிருங்கள். புறக்கணிப்பவர்கள் புறக்கணித்துக்கொண்டேயிருங்கள். உங்களுக்காகவே யாராவது மசாலா அரைத்துக்கொண்டிருப்பார்கள்.

15 comments:

கன்கொன் || Kangon on October 2, 2010 at 5:12 PM said...

:-)

கன்கொன் || Kangon on October 2, 2010 at 5:13 PM said...

குறிப்பு:
முழுக்க வாசித்துவிட்டுத்தான் சிரிப்பான் போட்டேன். :-)
படம் பார்க்காதபடியால் கருத்துச் சொல்ல முடியாது, அதுதான் வருகையைப் பதிவுசெய்தன். :-)

balavasakan on October 2, 2010 at 5:44 PM said...

முதலில் இதுவரை வெள்ளைக்காரன் படம் எடுக்க அதை வாய்கிழிய பார்த்த நாங்கள் எங்களாலேயும் அதேயளவுக்கு சிறப்பாக எடுக்க முடிந்திருக்கிறது என்பதில் நிச்சயம் பெருமையாக இருக்கிறது....

படத்தில் ஷங்கர் பணம் பிரம்மாண்டம் ரஜனி ஐசின் அழகு என்பவற்றைதாண்டி .. கொடுக்கிற காசுக்கு கொஞ்சம் அறிவையும் வளர்க்கலாம்... படத்தினிடையை பல விஞ்ஞான தகவல்கள் அள்ளி வீசப்பட்டிருக்கிறது..மொத்தத்தில் தமிழனின் தரத்தை உலக அளவில் கொஞ்சம் உயர்த்திவைக்கிற படம் அந்த வகையில் சண் குழுமத்துக்கு நன்றிகள்...

வந்தியத்தேவன் on October 2, 2010 at 5:53 PM said...

நீங்கள் சுஜாதா ரசிகர் என்பது தெர்கின்றது. அமரர் சுஜாதாவிற்க்கு ஆரம்பத்தில் நன்றிகள் போட்டிருக்கலாம் நன்றி மறப்பது சன்னுக்குப் புதிதல்லவோ,

தர்ஷன் on October 2, 2010 at 6:11 PM said...

அருமையாக எழுதியிருகிறீர்கள் சுபாங்கன்,
எனக்கும் முழுத் திருப்தி அளித்த படம் ஒரு ரஜினி ரசிகனாக நான் எதிர் பார்ப்பது இதைதான் எனக்குத் தெரிந்து அவரது வழமையான ஆர்ப்பாட்டங்கள் இல்லாதது ரசிகர்களுக்கு அத்தனை ஏமாற்றத்தை தந்திருக்காது.
ஒரு பெண்ணின் அருகாமையை இன்னமும் முழுமையாய் உணரவில்லை என்று கதையின் இறுதியில் ஜீனோ ஏங்குவதை இதில் தீர்த்திருக்கிறார். ஆனால் சுஜாதாவினுடையது என நான் நம்பிய சில வசனங்கள் கார்க்கியினால் எழுதப்பட்டது என அறிய நேர்ந்தது ஒரு சுஜாதா ரசிகனாக எனக்கு ஏமாற்றமே

anuthinan on October 2, 2010 at 6:58 PM said...

ரஜனி ரசிகனாக ஏமாற்றிய எந்திரன்!!! எனக்கு ஏதோ ஒரு வகையில் ரொம்பவே பிடித்து இருக்கிறான். (சுஜாதா காரணமாக இருக்கலாம்)

//எந்திரன் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு படம். குறை கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்துக்கொண்டேயிருங்கள். புறக்கணிப்பவர்கள் புறக்கணித்துக்கொண்டேயிருங்கள். உங்களுக்காகவே யாராவது மசாலா அரைத்துக்கொண்டிருப்பார்கள்//

இதற்க்கு மேல நான் சொல்ல ஒன்றுமில்லை!!!

Jana on October 2, 2010 at 8:51 PM said...

மற்றவிடயங்களை தாங்கள் சொல்லிவிட்டதால் ரஜினி பற்றிய விடயத்திற்கு வருகின்றேன். படம் வரும் முன்பே பல ஹொக்ரெயில்களில் நான் சொல்னதே தற்போதும். எந்திரனுக்கு ரஜினி மிகச்சரியான தெரிவே.
நிரூபித்து காட்டியிருக்கின்றார். சுஜாதாவுக்கும் ரஜினிக்கும் ஒரு வகையில் இணைவது இது மூன்றாவது படம். (காயத்திரி, பிரியா, எந்திரன்)
மூன்றுமே ரஜினி ஜொலித்த படங்களே என்பதில் சந்தேகம் இல்லை.
இத்திரைப்படத்தில், அந்த இயந்திரத்திற்கு உணர்வு வந்தவுடன் முதலில் காட்டும் காதல் உணர்ச்சி வெளிப்பாட்டில் ரஜினி காட்டும் எஸ்பிரஸன் டொப்.
"கடவுள் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு சொல்லும் பதிலும், சொன்ன ஸ்ரைலும் நச்.
நெகட்டிவ் ரோபோவாக அப்ஸலூட்லி கி இஸ் த சுப்பர் ஸ்ரார் மறுப்பதற்கு இல்லை.
படத்தை முடித்த விதம் அதைவிட சிறப்பே.

தர்ஷன் on October 2, 2010 at 10:43 PM said...

என்ன ஜனா சிவாஜியை விட்டு விட்டீர்கள் இது நான்காவது

Kiruthigan on October 3, 2010 at 6:53 AM said...

: )

பார்ப்போம் இன்னும் இவரின் எத்தனை கதைகளை உல்டா பண்ணபோகிறார்கள் என்று..

DHANS on October 3, 2010 at 3:45 PM said...

padathula kathai shankar nu varuthe???

i hope dialogue only written by sujatha.

தனா on October 3, 2010 at 9:40 PM said...

//நல்ல விமர்சனம் நண்பரே, நாம் சுஜாதா விசிறி, நீங்களும் அவ்வாறே!!!!!!!
என் இனிய இயந்திரா ஒரு அறிவியல் நாவல்,
எந்திரன் என் இனிய இயந்திராவின் தழுவல்,
ஆகவே எந்திரன் அறிவியல் படம்.
- IT'S A HYPOTHETICAL STATEMENT.....:)
என்னை பொறுத்த வரைக்கும் எந்திரன் புல் மீல்ஸ் DOT

ம.தி.சுதா on October 7, 2010 at 10:53 PM said...

ஃஃஃஃரஜினியின் அண்மைக்காலப் படங்களில் ரஜினி என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார்.ஃஃஃஃஃ
உண்மை தான்.....

ஃஃஃஃசங்கர். அவரது வழமையான ஊழல் பேயைத் துரத்தும் வேலையையும், நாட்டை மாற்றியமைக்கும் முக்கியமான பொறுப்பையும் புறந்தள்ளிவிட்டு, ஃஃஃஃ
சரியாகச் சொன்னிங்க சுபா... அதொடு இன்ன மொன்று ரஜனி ரசிகர்களால் இதை சரியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது...

கார்த்தி on October 15, 2010 at 11:53 PM said...

உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் நானும்.
இருக்கின்ற பணத்துடனும் தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இவ்வாறான ஒரு படத்தை தந்திருப்பது பாரதட்டக்கூடிய விடயம்!

Anonymous said...

//இவர் இல்லாவிட்டால் எந்திரனை தொழில்நுட்பத்தில் அதிகம் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இப்படி ஒரு பரிமானத்தில் சாத்தியமே இல்லை. //

Sure...

Uthistran on October 19, 2010 at 11:45 AM said...

//விஞ்ஞான நுணுக்கங்களைக்கூட போகிறபோக்கில் உறுத்தாமல் சொல்லிவிட்டுச் செல்வது அழகு//
nice..

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy