தேர்தல்
விதை விதைத்தவன் தெரியாமல்
வேர் நீர் நனைத்தவன் அறியாமல்
கல் எறிபவனுக்கெல்லாம் - தன்
காய் கொடுத்துக்கொண்டிருக்கிறது
மரம் - மக்கள்
வழங்கும் வாக்குப் போல..!
பெரிசு
எரிந்து முடித்தவனின் அஸ்தி கரைத்து,
தாகத்து விலங்கின் நா தழுவி,
ஆடை கழுவும் அழுக்கையும் இழுத்துக்கொண்டு,
வழிப்போக்கன் கால்கழுவி, ஊர் வழி உப்பெடுத்து,
ஓடைக்குள் ஓர்நாள் ஒதுங்கிநின்று வந்தாலும்
பானைக்குள் போன மறுநாள்தான் - பழசு
ஆக்கப்படுகிறது தண்ணீர்
பெரிசு ஆக்கப்படும் தாய்போல…!
மாற்றம்
ஆதி அடி மரத்தின் அருமை அறியாது
வெட்டி ஒட்டிவிட்ட வெள்ளைப் பூவையே
பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்
சிவப்புச் செவ்வரத்தை..!
.
‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!
