Saturday, January 17, 2009

ஆடைக்குறைப்பு – ஒரு அலசல்

1 comments
தமிழ்த் திரைப்படங்களில் இன்று ஹீரோயினின் அங்கங்களிற்கு இருக்கும் மரியாதை ஹீரோவிற்குக் கூட இல்லை என்னுமளவிற்கு ஆடைக்குறைப்பு திரைப்படங்களை ஆக்கிரமித்துள்ளது. நல்ல கதையம்சமுள்ள படங்களிற்கூட பாடல்க்காட்சிகள் வந்துவிட்டால் குடும்பக் குத்துவிளக்காக இருக்கும் நடிகை குட்டிப் பிசாசாக மாறிவிடுகிறார். ஆனால் இதைப்பற்றி தயாரிப்பாளரிடமோ, இல்லை இயக்குனரிடமோ கேட்டால் உடனே ஹிந்திப் படங்களுடன் ஒப்பிட்டு அதன் பாதிகூட இல்லை என்பார்கள். ஆனால் அங்கே வெளியாகும் ‘தாரே சமன் பார்’ போன்ற சிறந்த படங்களின் பாதியளவு கூட எடுக்க மாட்டார்கள். குடும்பக் குத்துவிளக்காக இருக்கும் எமது ( ஒரு உரிமைதான் ) தமிழ் நடிகைகளும் ஹிந்திப்படங்களில் காட்சிப் பொருளாகிவிடுகிறார்கள்.



மூன்று மணிநேர சினிமாவில் தோன்றிய இக் கலாச்சாரம், இன்று நாகரிகம் என்ற பெயரில் நடைமுறை வாழ்க்கைக்கும் வந்துவிட்டது. நம் கலாச்சாரத்திற்கு முரணாக இருப்பதாக பலர் கூறினாலும், இதில் கலாச்சாரத்தை சம்பந்தப்படுத்த நான் விரும்பவில்லை, அதைப்பற்றிப் பின்னால் கூறுகிறேன். அந்தரத்தில் தொங்கும் ஆடைகளும், அது எப்போது அவிழ்ந்துவிழும் என பின்னாலேயே அலையும் கூட்டமும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. நாகரிகம் என்ற பெயரில் தமது உடலமைப்பிற்கு சற்றும் பொருந்தாத ஆடைகளை அணியும் பெண்களைப் பார்க்கயில் ஐயோ பாவம் என்றிருக்கும். ஆனால் அழகாக உடுத்துவதே நாகரிகம்தான். என்னைப் பொறுத்தவரைஅடுத்தவர் கண்ணுக்கு விசரமாகத் தெரியாத எந்த ஆடையுமே நல்ல ஆடைதான்.

இந்த ஆடைக்குறைப்பால்தான் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை. ஆண்கள் திருந்தலாம்தானே என்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் ஆபாசமின்றி உடுத்தினாலே அதைத் தடுக்கமுடியுமே. மறைந்திருக்கும் ஒருபொருள் கண்ணுக்குத் தெரியும்போது பார்வை அதன்மீது திரும்புவது இயற்கையானதே. இதனால் ஆண்கள் செய்வதை நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் எப்போதும் அடுத்தவரைத் திருத்துவதை விட தான் திருந்துவது சுலபம் என்பது பலருக்குப் புரிவதில்லை.

உண்மையில் ஆடை விடயத்தில் எமது கலாச்சாரம் என்பது ஆங்கிலேய ஆட்சியின் எச்சம் என்பது எங்கோ வாசித்த ஞாபகம். அன்றய ஆங்கிலேயர்களின் ஆடைகள் உடலை முழுவதும் மூடியதாக இருக்குமாம். அவர்கள் உணவுண்ணும் மேசையின் கால்கூட வெளியில் தெரியாதவாறு மூடி வைப்பார்களாம். எமது ஆடைமுறையோ அதற்கு நேர் மாறாக இருந்ததாம். சிறிது யொசித்துப் பார்த்தால் இதை உண்மை என ஊகிக்க முடியும். ஆடை அணியத் தொடங்கிய காலத்தில் அது அவர்கள் வாழும் சூழலின் தன்மையில் தங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. எமது வெப்பமான நாடுகளில் அங்கங்களை மறைக்க மட்டுமே ஆடை தேவை. ஆனால் குளிர் நாடுகளில் குளிரிலிருந்து காக்கும் தேவையும் இருக்கின்றது. ஆங்கிலேயர்கள் தமது கலாச்சாரத்தை இங்கே விட்டுவிட்டு எமது கலாச்சாரத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். எமது கோவில்களில் காணப்படும் சிற்பங்களே இதற்குச் சான்று. இன்றும் சில இந்தியக் கிராமங்களில் இடுப்பிற்கு மேல் வெறும் முந்தானையால் மூடும் பெண்களும் இருக்கின்றார்கள். ஆனால் இந்த ஆடைத் Theory க்கு விதிவிலக்காக வெப்பப் பிரதேசங்களில் அதிகம் வாழும் முஸ்லீம் பெண்களின் பர்தா உள்ளது. உடலை முழுவதும் மூடும் கறுப்பு ஆடை வெப்பத்திற்கு ஏற்றதல்ல. ஆனால் அதற்கும் ஏதாவது வரலாற்றுப் பின்னணி இருக்கக்கூடும்.



என்னதான் சொன்னாலும் ஆடை விடயத்தில் ஆண்கள் பாவம்தான். ஆங்கிலேயர் கூட எமது ஆடைகளைக் கண்டுகொள்ளவில்லை.

பின்னூட்டங்கள்

1 comments

இதுவரை பின்னூட்டங்கள் எதையுமே சந்தித்திராத பதிவுத்தளம் இது. ஏன், என்னையும் என் சில நண்பர்கள், உறவினர்கள் தவிர வேறு யாராவது பார்த்திருப்பார்களா என்பது கூடச் சந்தேகமே. பின்னூட்டம் பற்றி என்னை எழுதத் தூண்டியது லோஷன் அண்ணா 15.01.2009 அன்று எழுதிய "சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா?" என்ற பதிவுதான்.

( http://loshan-loshan.blogspot.com/2009/01/blog-post_15.html )

கவிதை என்ற பெயரிலான எனது கிறுக்கல்களை சேமிக்கவே இப் பதிவுத் தளத்தை உருவாக்கினேன். லோஷன் அண்ணாவின் பதிவுத் தளத்தின் வலதுபக்க மேல் மூலையிலுள்ள Create a blog என்ற இணைப்பினைச் சொடுக்கியே இதை உருவாக்கினேன். அவரது பதிவுகள் ஒன்று விடாது வாசித்து வருபவன் நான். அவரது இப் பதிவு அவர் மனதை மறைக்காது கூறியதுடன் சிந்திக்கவும் வைத்தது.

என்னைப் பொறுத்தவரை ஒரு பதிவிற்கு பின்னூட்டங்கள் அவசியமானவையே, எழுதிய கருத்துக்களிற்கு ஆதரவு, எதிர்க்கருத்துக்களையும், பதிவில் நாம் தவறவிட்டவற்றையும் சுட்டுபவை அவை பதிவின் சுவாரசியத்தையே சமயத்தில் அவை அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால் அப் பின்னூட்டமானது பதிவிற்கு இடப்பட வேண்டுமே தவிர அதை எழுதியவருக்கு அல்ல என்பது எனது அபிப்பிராயம். அவரது சுய கௌரவம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தாக்குபவையாக அமையக் கூடாது.

ஒருவர் என்ன எழுத வேண்டும் எனத் தீர்மானிப்பது அவரேதான். தான் நினைப்பதை, அது அடுத்தவரைப் பாதிக்காதவரை எழுதும் உரிமை அவருக்குண்டு. தான் விரும்புவதை தானே ஒரு பதிவுத்தளத்தை உருவாக்கி எழுதுவதை விடுத்து அதை அடுத்தவர் மீது திணிப்பதும், தான் எதிர்பார்ப்பதை அவர் செய்யாதவிடத்து அவரை தனது பெயரையும் குறிப்பிடாது ஒற்றை வார்த்தைகளால் இகழ்வதும் காட்டுமிராண்டித்தனம் தவிர வேறில்லை.

இது நான் எழுதும் முதலாவது பதிவு. ஏனோ எழுத வேண்டும் எனத் தோன்றியதால் எழுதிவிட்டேன். இனியும் எழுதப் போகின்றேன். எனது எழுத்துக்களை பதிவுலகம் ஏற்றுக் கொள்கின்றதோ இல்லையோ, எனக்கும் எதிர்க்கருத்துக்கள் கிடைக்கின்றதோ இல்லையோ, எனது பதிவுகளை என்னைத் தவிர வேறு யாராவது படிக்கின்றார்களோ இல்லையோ, நானும் எழுதப் போகின்றேன். எனது பாணியில், எனக்குத் தெரிந்தவற்றை.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy