கமல், கே. எஸ். ரவிக்குமார் இணைப்பில் வந்திருக்கும் கமலின் இன்னுமொரு ராக்கெட் மன்மதன் அம்பு. கமலின் கலகல + விறுவிறுப்பான திரைக்கதையில், அவரது பாணி அலட்டலில்லாத நடிப்பில் இறுதிவரை கட்டிப்போட்டுவிடுகிறது மன்மதன் அம்பு.
பிரபல தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவனும், சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். சூர்யாவுடனான சூட்டிங்கின்போது த்ரிஷாவிற்கு புதிதாக வாங்கிய காரை பரிசளிக்க வரும் மாதவனும் அவரது தாயார் உஷா உதூப்பும் சூட்டிங் பார்ப்பதற்காக இருந்துவிட அங்கு நடக்கும் சில சம்பவங்கள் த்ரிஷாமீது மாதவனுக்கு சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடுகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக பாரீஸ் செல்லும் த்ரிஷாவைக் கண்காணிக்க கமலை நியமிக்கிறார் மாதவன். அங்கு இடம்பெறும் திடீர் திருப்பங்களும், கதையோடு ஒட்டிய நகைச்சுவையும் திரையில் பார்க்கப்படவேண்டியவை.
முறுக்குமீசையும், மூன்றுநாள் தாடியுமாக இந்திய இராணுவ கமான்டோ மேஜர் ராஜா மன்னாராக வருகிறார் கமல். காதல் மனைவியை விபத்தில் பலிகொடுத்துவிட்டு பஞ்சதந்திரம் நண்பன் ரமேஷ் அரவிந்த்தின் கான்சர் ட்றீட்மென்ட்டுக்காக மாதவன் கொடுக்கப்போகும் பணத்தை எதிர்பார்த்து பாரீசில் அவருக்காக த்ரிஷாவைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் பாத்திரத்தில் வருகிறார் கமல். த்ரிஷாவின் பர்சைப் பறிக்கும் கும்பலைத் துரத்திப்பிடிக்கும் சேசிங் காட்சியில், அவரது மனைவியாக வரும் ஜூலியட்டை கடந்தல் கும்பலிடமிருந்து இராணுவ மேஜராக இருந்து காப்பாற்றும் காட்சியில், ‘போனால் போகட்டுன்னு’ பாடலில் ஆடிக்கொண்டே நடக்கும் காட்சியில், மனைவியுடனான ரொமான்டிக் காட்சியில், என்று நடிப்பில் வழமைபோல பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். திரைக்கதை, வசனங்களிலும் தனித்துத் தெரிகிறார்.
அவரைச்சுற்றியே நடக்கும் கதையைத் தாங்கும் நடிகையின் பாத்திரம் த்ரிஷாவுக்கு. கவிதை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவராக , அம்புஜாஶ்ரீ என்ற பிரபல நடிகையாக வருகிறார் அவர் இம்முறை சொந்தக் குரலில் பேசி அலட்டலில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
த்ரிஷாவைக் காதலிக்கும் சந்தேகப் பேர்வழியாக தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். அவருக்கேயுரிய ரொமான்டிக் லுக்குடன் அறிமுகமாகிறார். த்ரிஷாவுடனான ஊடலுக்குப் பிறகு அவரைக் கண்காணிக்க கமலை அனுப்பிவிட்டு அங்கு நடப்பவற்றை தொலைபேசியில் கேட்பதும், எந்நேரமும் நண்பர்களுடன் பாரில் தண்ணீரில் மிதப்பதுவும்தான் அவரது வேலை. க்ளைமார்க்சில் பாரீசிற்கு வந்து காமெடியில் கலக்குகிறார்.
பாரீசில் த்ரிஷாவின் பள்ளித்தோழியாக, இரு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்துவாழும் கதாபாத்திரத்தில் சங்கீதா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மகனாக வரும் குட்டி வாலு விஷ்ஷு பண்ணும் ரகளைகளும், பெரியவர்களின் சங்கேதங்களைப் பிடித்துக்கொண்டு அவன் பண்ணும் சேட்டைகளும் படம் முழுவதும் கலகல.
கான்சரில் அவதிப்படும் கமலின் நண்பனின் பாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், அவரது மனைவியாக ஊர்வசியும் வந்து போனாலும் ரமேஷ் அரவிந்த்தின் பாத்திரம் இன்னும் மனதிலேயே நிற்கிறது. இவர்களைத்தவிர த்ரிஷாவிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க அவரைத் துரத்தும் கேரள தயாரிப்பாளர் குஞ்சன் குரூப்பும், அவரது மனைவியும் கதையூடே நகரும் நகைச்சுவைக்கு நன்றாகத் துணைபோயிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் சூர்யாவாகவே வந்துவிட்டுப் போகிறார்.
கமலின் வரிகள் மற்றும் குரலில், தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் தியேட்டரில் தாளம்போட வைக்கின்றன. இலங்கை இரசிகர்களுக்கு போனஸ் பரிசாக கமலின் ‘கண்ணோடு கண்ணைக் கலந்தாள்’ கவிதையும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. புதுமையான ஒரு முயற்சியாக பின்னோக்கிப் பயணிக்கும் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் நீலவானம் பாடலும், அதற்கேற்ப சரியான வாயசைப்புகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. மனூஸ் நாடனின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரமும், சுற்றுலாக் கப்பலும் கண்முன்னே விரிகின்றன.
அருமையான கதைக்களத்தைத் தேர்வுசெய்து, அதற்கு நகைச்சுவை முலாம்பூசி வெளியிடுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் கமலும் கே. எஸ். ரவிக்குமாரும் என்றே சொல்லலாம். ஆங்காங்கே தன் நாத்திகக் கருத்துக்களையும் கமல் விதைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் மைனசாகச் சொல்லவேண்டுமானால் க்ளைமார்க்சுக்கு முந்தய கொஞ்சம் இழுவையான படகுக் காட்சிகளைச் சொல்லலாம். மற்றபடி அமைதியான முதற்பாதியும், கலகலப்பான இரண்டாம் பாதியுமாக ரசிகர்களுக்கு விருந்தாகிறது மன்மதன் அம்பு.
மன்மதன் அம்பு – கமலின் ராக்கெட்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (19 – 12 – 2010) காலை 9.31 முதல் இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். சந்திப்பு வழமைபோல பதிவர் கெளபோய்மது அவர்களால் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.
இதையொட்டி பதிவர்களின் அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக இன்று இடம்பெற்ற பதிவர்களிற்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் புகைப்படங்களை கீழே காணுங்கள்
ஆழம்
ஆழி அடி இருளில்
அமிழ்ந்திருந்து, அலைக்கழிந்து மேல்வந்து
ஆர்ப்பரிந்த மேற்பரப்பின் ஓரத்தில்
வெளிச்சத்தின் கிறக்கத்தில் - இவன்
அறிவுக்கெட்டிய ஆழத்தின் தேடுதலில்
இன்னும்
அதே இருளில்
அது...!
நம்பிக்கை
பொத்தி விரிந்த கரங்களில்
ஒட்டிக்கொண்ட மஞ்சள்பற்றி
லஜ்ஜையற்றுக் கிளம்பியது
இரசாயணத்தில் இறக்கப்போகும்
இறுதிப் பட்டாம்பூச்சி..!
அன்பு
தொடங்கலிலும், முடிவிலுமாக
கடிதங்களில் மட்டும் தொங்கியிருந்ததைக்
கலைத்தெறிந்துவிட்டது காலம்
சங்கேதச் சுருக்கங்களையும்
அடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி - இன்னும்
பாட்டியின் பார்வைக்கு மட்டும் இழைத்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு சந்திப்பிற்கிடையிலும்…!
முஸ்கி – இந்தப் பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. தெரிந்தோ, தெரியாமலோ யார் மனதாவது புண்பட்டால் மருந்து போடுவதற்கு மருத்துவர் பாலவாசகனை அணுகவும்.
இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையில் பதிவர் நிரூஜாவின் அறிமுக உரையோடு ஆரம்பமாகியது.
இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள். பதிவுகளின் மூலம் சந்தித்துவந்திருக்கும் நாம், இன்று நேரில் சந்தித்திருக்கிறோம். இணையம் என்பதே ஒரு மாயை. அதில் கவற்சியான பெயர்கள் மற்றும் சம்பவங்கள் கொண்டு யாரையும் ஏமாற்றிவிடலாம் என்பதாலேயே இப்படியான சந்திப்புகள் அவசியமாகின்றன. முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றேன். நான் நிரூஜா என்று ஆரம்பிக்க முன்னாள் பதிவர் புல்லட் வாய்க்குள் ஈ புகுந்தது கூடத் தெரியாமல் அவரையே வெறித்துப்பார்க்கின்றார்.
அடுத்ததாக தன்னை அறுமுகப்படுத்த வருகிறார் பதிவர் மதிசுதா.
‘எனக்குத்தான் சுடுசோறு, இரண்டாவதாக பேசினாலும் சோறு இன்னும் ஆறேல்லை, சூடாத்தான் கிடக்கு’ என்றவர், ‘ நான் மதிசுதா, நனைவோமா என்ற தளத்தில் எழுதிவருகிறேன்’ என்று முடித்தார்.
அடுத்ததாக கன்கொன் கோபியின் முறை வர, அதைக் கவனிக்காமல் தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து யாரோ கோபிக்கண்ணா என்று செல்லமாக அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
‘நான் கோபிகிருஷ்ணா, கன்கொன் என்ற பெயரில் ….. பெயரில் ….. ‘என்று சிறிதுநேரம் யோசித்தவர், ‘தளத்தின்ட பெயர் எனக்கே மறந்துபோச்சு, அடுத்தமுறை வரேக்கை பாத்துக்கொண்டுவாறன்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.
அடுத்ததாக பதிவர் ஜனா
‘நான் ஜனார்த்தனன். Cheers with Jana என்ற தளத்தில் எழுதி வருகிறேன். இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்.... ஜப்பானிய இலக்கிய எழுத்தாளர் ஹருகி முரகாமி தனது யசுநாரி கவபாட்டா என்ற நாவலில் கூறியிருக்கிறார் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று. அவ்வாறான எனது தேடல்கள்தான் பதிவுலகுமூலம் வெளிப்படுகின்றன. பதிவர் சந்திப்புக்கு நன்றி’ என்று முடித்தார்.
அடுத்ததாக மைக்கைப்பிடித்தார் பதிவர் மது
‘அன்பின் பதிவர் எல்லாருக்கும் வணக்கம், நான் தான் மது’. எல்லோரும் குறுகுறுன்னு யாரோ புதியவரைப் பார்ப்பது போல பார்க்க, ‘ஆங்.. என்ன அப்பிடிப் பாக்கீங்க எல்லாரும் நான்தான் மதுயிசம் மது’ என்றார். அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் தோன்ற அப்பாடா என்று உட்காந்தார்.
அடுத்து சிவப்பு டீசர்ட் கையில் கறுப்பு ஜாக்கட், டீசர்ட் கழுத்தில் டீசர்ட்டை ஈய்த்துக்கொண்டிருக்கும் கறுப்புக்கண்ணபடி, காலில் கன்வஸ் சப்பாத்து,கைகளில் கறுப்பு கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்
‘அனைவருக்கும் வணக்கம் நான்தான் வந்தி வித்தின் பிரக்கட்ஸ் லண்டன் என் உளறல்களி்ல் சூப் வழங்கி வருகிறேன். இப்பதான் லண்டனில இருந்து ஃபிளைட் பிடிச்சு நேரா வாறேன்’. என்று முடித்தார்.
அடுத்ததாக சிரித்துக்கொண்டே மைக் பிடித்தார் கூல்போய் கிருத்திகன்.
‘வணக்கம். நான் கிருத்திகன். மதிசுதா அண்ணைக்கு சுறுசோறு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் பதிவு எழுதாவிட்டாலும் பதிவுலகத்தை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். பொழுது போக்கு எண்ட தளத்தில எழுதுறன். யாரும் எனக்குக் கோல் எடுத்துப்போடேதைங்கோ, ஐ ஆம் ஆல்வேய்ஸ் பிசி’ என்று காதுவரைக்கும் சிரித்தார்.
அடுத்ததாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பதிவர் ஆதிரை
‘நான்தான் ஆதிரை. கடலேறி என்ற தளத்தில எழுதினான். திடீரென்று பார்த்தால் அது என் பார்வையினூடு… என்று மாற்றப்பட்டிருக்கு. எனக்கு அடிக்கடி பதிவெழுத ஆசைதான். ஆனாலும் சில கடவுச்சொல் பிரச்சினைகளால் எழுதமுடியாமலிருக்கு’ என்று கவலையுடன் அமர்ந்தார்.
அடுத்து எழுந்த அனுதினன்
‘ஹாய் எவ்ரிபொடி, ஐம் அனு சுருக்கமா என்னை அனுதினன் அனுதினன்னு கூப்பிடுவாங்க, ஆடுகளம் என்ற பெயரில வலைப்பதிவை எழுதி வருகிறேன். சுத்தவர இருக்கிற 205 பட்டிக்கும் or பியூட்டிக்கும் நானே ராஜா, ஒரு நாள் நான் திருகோணமலையில இருந்து ரெயினில வந்துகொண்டிருந்த போது…..’ என ஆரம்பிக்க பவன் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கத்தொடங்கினார்.
அடுத்ததாக எழுந்த பதிவர் லோஷன்
‘நான்தான் லோஷன் அலைஸ் விக்கி அலைஸ் விக்கிரமாதித்தன்’ என்று தொடங்க குறுக்கிட்ட நிரூஜா,
‘அண்ணே கோவிக்காதைங்கோ, உங்களைத்தெரியாதாக்கள் யாராவது இருப்பினமோ? இப்ப இடைவேளை நேரம்’ எனச்சொல்ல கன்கொனும், அஸ்வினும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பதிவர் வதீஸ் கையில் பக்கோடாவுடன் வர, லண்டனில குளிர் -17. சூடா பக்கோடா சாப்பிட்டா இதமா இருக்கும் என்றவாறே சதீஷ் எழுந்துகொள்ள இடைவேளைக்காக அறிமுகம் இடைநிறுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது. கண்டி மாநகரின் கடுங் குளிருக்கு இதமாக இரண்டாம் முறையாக அடித்த அலாரத்தையும் ஸ்னூசில் போட்டுவிட்டு அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டாள் வர்ஷா.
‘ஹேப்பி பர்த்டே டார்லிங்’ பார்த்ரூமிலிருந்து உற்சாகமாக வெளிப்பட்ட கௌதம் குரலைத்தணித்து ‘இன்னும் தூங்கிட்டிருக்கியா? ரொம்பவே டயர்ட் போல’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். அந்தக் குளிருக்கும் குளித்திருந்தான். இடுப்பில் சுற்றியிருந்த துவாயின் கீழே கால்களில் இன்னும் ஈரமிருந்தது. மெதுவாக அருகில் வந்து ஈர விரல்களால் அவள் கன்னங்களை வருடினான். சிணுங்கிக்கொண்டே திரும்பியவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுவிட்டு, மறுபடியும்
‘ஹேப்பி பர்த்டேடா’
‘ம்ம், விஷ் எல்லாம் இருக்கட்டும். என்ன கிஃப்ட் தரப்போறீங்க?’
‘அதான் நேற்று நைட்டே கொடுத்தேனே’ சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.
‘ஏய், யூ…’ என்று அவனைத் தள்ளிவிட்டவள், ‘ஓகே, ரெடியாகு, இன்னும் பத்தே நிமிஷத்தில கிளம்பிடலாம்’ என்றவாறே எழுந்து, பாத்ரூமிற்குள் சென்று சாத்திக்கொண்டாள்.
இரவுக் குளிரில் ஈரமான வீதிகளை மரங்களினூடான சூரியப்பொட்டுக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. இலைகளில் ஒடுங்கிக்கிடந்த நீர்த்துளிகள் சொட்டத்தொடங்கி காலைக்குளிரை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்க, அந்தக் குளிரிலும் திருமணமாகி ஒரு வாரமே ஆன புது மனைவியின் கைகோர்த்தபடி நடந்துகொண்டிருப்பது இதமாகத்தான் இருந்தது கௌதமிற்கு.
‘வர்ஷு, ஹௌ டூ யூ ஃபீல்?’
‘இப்படியே நடந்துட்டே இருக்கலாம் போல இருக்குங்க’ கையை இன்னும் இறுக்கியவாறே அவன் தோளில் சாய்ந்துகொண்டவளைக் கடைக்கண்ணால் ரசித்துக்கொண்டான். சிலநிமிட நடையில் இருக்கும் கோயிலில் பிறந்தநாள் தரிசனம் முடித்துவிட்டு, அருகிலேயே ரெஸ்ரொரன்டில் காலை உணவையும் எடுத்துக்கொண்டு கொழும்பு புறப்பட்டாகவேண்டும். திருமணத்திற்காக எடுத்த விடுமுறை இன்றுடன் முடிய, அடுத்தநாள்முதல் அமரிக்க முதலாளித்துவத்திற்கு ஆணி பிடுங்கி, றூபியுடன் மல்லுக்கட்டவேண்டும் என்று நினைக்கையிலேயே என்னவோ செய்தது அவனிற்கு.
**********************************
கொழும்பு நகரின் இதயப்பகுதியிலிருக்கும் அந்த அப்பார்ட்மென்ட் வழமைக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையும் பரபரப்பாகக் காணப்பட்டது.
‘இங்கதான் சேர், த்தேர்ட் ஃப்ளோர்’
‘இவர்தான் முதல்ல பாத்திருக்கார்’
‘அன்யூஸ்வலா கதவு ரொம்பநேரம் திறந்திருந்தது சார், அதுதான் எட்டிப்பார்த்தேன்’
அப்போதுதான் வந்திறங்கியிருந்த இன்ஸ்பெக்டரிடம் யார்யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். லிஃப்டில் ஏறி வேகமாக மூன்றாம் மாடியை அடைந்தார் இன்ஸ்பெக்டர். மூன்றாம்மாடி வெறிச்சொடிப்போய் நிசப்தமாக இருந்தது. லிஃப்டின் எதிரிலேயே ‘ஓ’வெனத் திறந்திருந்த வீடு அவரை வரவேற்றது. டைல்ஸில் வடிந்திருந்த இரத்தம் வாசலில் திட்டாக உறைந்துபோய்க் கிடந்தது. இரத்தத்தைக் கண்ணாலேயே பின்தொடர்ந்தவருக்கு அதிகம் வேலை வைக்காமல் முன்னால் சொஃபாவின் அருகிலேயே சுருண்டு கிடந்தாள். பிங்க் நிறத்தில் இரவு உடை அணிந்திருந்தாள். இரத்தம் தோய்ந்த கத்தி அருகிலேயே கிடக்க, அவள் வயிற்றுப்புற ஆடை பிங்கிலிருந்து சிவப்பாக மாறி, பின் கபிலமாகக் காய்ந்துபோயிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் தயங்கியபடியே அழைத்துவரப்பட்டார்.
‘இவங்க பெயர் தெரியுமா?’
‘ஜெனி சார்’
‘கூட வேற யார்யாரெல்லாம் இருந்தாங்க?’
‘பேரன்ட்ஸ் இருந்தாங்க சார், போன கிழமைதான் ஊருக்குக் கிளம்பிப்போனாங்க. அவங்களுக்குக்கூட ஃபோன் பண்ணி சொல்லிட்டோம்’
‘கல்யாணம் ஆயிடுச்சா?’
‘இன்னும் இல்லை சார்’
‘நைட் உங்களுக்கு சத்தம் எதுவுமே கேக்கலையா?’ உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்.
‘ஓகே, யூ மே கோ நவ், அப்புறமாக் கூப்பிடுறேன்’ என்று தலையாட்டியவாறே வீட்டுக்குள் நுளைந்த இன்ஸ்பெக்டர் ஆதாரங்களைச் சல்லடை போடத்தொடங்கினார். ப்ரிண்ட்ஸ்காக ட்ஸ்ட் பண்ணி முடித்திருந்த சொபா முதற்கொண்டு மேசை ட்றாயர் வரை சல்லடைபோட்டார். அலமாரிகளைப் புரட்டிப்போட்டார். அங்கே கிடைத்த ஜெனியின் ஹேன்ட் பேக்கை ஆராயத்தொடங்கினார். மூக்கு மட்டுமே தெரியக்கூடிய சைசில் முகம்பார்க்கும் கண்ணாடி, லிஃப்ஸ்டிக், இரண்டு வகை ஸ்ப்ரே, சில கிரீம்கள் என்று ஒவ்வொன்றாகப் புறக்கணித்துக்கொண்டு வந்தவரின் கைகளில் அவளின் பர்ஸ் அகப்பட்டது. எடுத்துத் திறந்தவர் ஒருமுறை நெற்றியைச் சுருக்கிவிட்டுக்கொண்டார்.
அதிலே இருந்த புகைப்படத்தில் ஜெனியின் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.
இந்தத் தொடர்கதையை சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது. அவரவர் கற்பனைக்கே விடப்பட்டுள்ள தொடரில் எனக்கு அடுத்ததாக பதிவர் பவன் தொடர்வார்.
பின்னிணைப்பு
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம்பாகம்
பதிவர் சதீஷால் எழுதப்பட்ட மூன்றாம்பாகம்
பதிவர் மதுவால் எழுதப்பட்ட நான்காம்பாகம்
பதிவர் லோஷனால் எழுதப்பட்ட ஐந்தாம்பாகம்
வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட
ஊமல் கொட்டைகளினதும்
மண் கட்டிகளினதும்
எறி பிடி விளையாட்டு
தண்ணீர் நிரம்பிய
சதுரக் குழிகளுக்குள்
சறுக்கி விழுந்து அடித்த நீச்சல்
எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்
கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு
பேச நாதியின்றி
எமக்குள் பேசியபடி
நானும், இன்னுமொரு பொம்மையும்
பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்
சரியாக ஒரு வருடம் ஏழு நாட்களுக்கு முந்தய ஒரு இனிய பொன்மாலைப்பொழுதில் ஆமர்வீதி 176ம் இலக்க பேருந்து நிறுத்தத்தில்தான் இவருடனான எனது முதலாவது சந்திப்பு. அன்று கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தள்ளாடி ஆரம்பித்த எங்கள் நட்பு அதன்பின்னரான மின்னஞ்சல் கும்மிகளால் ஸ்டெடியானது.
இவர் ஒரு தாவர போஷணி. எக்காலத்திலும் மாமிசத்தை ருசிக்கவே மாட்டேன் என்று தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்திருக்கும் இவர் ஒரு முருங்கைக்காய்ப் பிரியர் என்பது கூடுதல் தகவல்.
பெரிதாக நண்பர்கள் இல்லாது இலண்டனில் தனிமையில் தவித்துவந்த இவர் சதீஷின் இலண்டன் விஜயத்துக்குப் பிறகு மகிழ்ச்சியில் திளைப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைச் சிரிப்புக்குச் சொந்தக்காரர். சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் விண்ணர். சிரிப்பிலும், சொ. செ. சூ வைத்துக்கொள்வதிலும், ஏன் இவரது எல்லாத் தனித்துவங்களிலுமே இவருக்குப் போட்டியாக இளவல் ஒருவர் உருவாகிவந்தாலும்கூட இவருக்கு நிகர் இன்னும் இவரேதான்.
தன்னைப் பச்சிளம் பாலகனாக அறிவித்துக்கொள்ளும் இவர் அதற்கேற்ப தனது நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்பவர். லோஷன், ஆதிரை, கோபி, பவன் என்று விரிவடைந்த இவரது நட்பு இப்போது வந்து நிற்பது லோஷன் அண்ணாவின் குட்டி மகன் ஹர்ஷுவில்!
இவர் ஒரு கமல் பைத்தியம். உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.
இவர் ஒரு சங்கீதப்பிரியர். இளையராஜாவின் இசை ரசிகர். எக்காரணம் கொண்டும் இசைஞானியின் பாடல்களைத் தாண்டிப் பெரிதாகக் கவராத இவரது ரசனையை எந்திரன் பாடல்கள் கவர்ந்துள்ளன. காரணம் ஒரு தொலைபேசி அழைப்பாம்.
யாழில் பிறந்து, கொழும்பில் வளர்ந்து, தற்போது இலண்டனில் உயர்கல்வி கற்றுவரும் இவர் தனது எதிர்காலத்தை குஜராத்தில் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்.
நீச்சல், ஜிம் என்று தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் ஒரு கராத்தே ஸ்பெசலிஸ்டும் கூட. மின்னஞ்சல் கும்மிகளில் தனது (மான்)கராத்தே கலையை அடிக்கடி காண்பித்து அசத்துவார்.
பெற்றோரின் செல்லப்பிள்ளை. வீட்டின் இளவல். உறவினர்களுக்கு இவர் என்றாலே ஆவல். நண்பர்களின் கும்மிக்கோ இவர் ஒரு அவல்.
இத்தனையும் எதற்காக என்கிறீர்களா...?
இன்று இவருக்கு பிறந்த நாள்.
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வந்தியரே...
அனைவருக்கும் சுடச்சுட சூப் கொடுக்கும் இவருக்காக எனது பிறந்தநாள் பரிசு சிரட்டையால் செய்யப்பட்ட இந்த soup bowl
“சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதையில் இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாகவேண்டும்” - சுஜாதா
மேலைநாட்டுக் இலக்கியங்களிலேயே தாராளமாகக் காணப்பட்ட அறிவியல் புனைகதைகள் (Science fiction) மற்றும் எதிர்காலவியல் சிந்தனைகளுடன் கூடிய கதைகள் (Futurology) என்பவற்றை மேலைநாட்டு வட்டத்தைத்தாண்டி தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அவருக்கு முன்னரும் சில கதைகள் தமிழில் இந்த வட்டத்தைத் தொட முயற்சித்திருந்தாலும், சைன்ஸ்ஃபிக்ஷன் என்று அவற்றை ஏற்றுக்கொள்வது சிரமம்தான்.
இந்த சைன்ஸ்ஃபிக்ஷனை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் ஆங்கிலத்தில் சாதாரணமானவை என்றாலும், தமிழுக்குப் புதிது. இவற்றுக்குப் பின்னாலிருக்கின்ற அதிக பொருட்செலவுதான் இதற்குச் சொல்லப்படுகின்ற பிரதான காரணமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களுக்குள்ளாகவே நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் குத்தப்பட்டுவிடுகின்ற ‘இமேஜ்’ உம், அதைவிட்டு வெளியே வருவதை அவர்களும், ரசிகர்களும் விரும்பாததும்கூடக் காரணம்தான். இதே காரணத்துக்காகத்தான் எந்திரன் ரஜினி படமா, சங்கர் படமா என்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ரஜினியின் அண்மைக்காலப் படங்களில் ரஜினி என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார். சந்திரமுகி, சிவாஜி என்று இப்போது எந்திரனில் சாதாரணமாக நடித்துவிட்டுப் போயிருப்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், வரவேற்கவேண்டிய ஒரு விடயமே. அடுத்ததாக சங்கர். அவரது வழமையான ஊழல் பேயைத் துரத்தும் வேலையையும், நாட்டை மாற்றியமைக்கும் முக்கியமான பொறுப்பையும் புறந்தள்ளிவிட்டு, வித்தியாசமான ஒரு முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்.
சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, இன்னும் அவற்றில் லாஜிக் அடி வாங்கிய இடங்களையும் மாற்றி எந்திரனில் ரோபோவையும் காதலிக்கவைத்திருக்கிறார். படத்தில் இவரது பல வசனங்கள் நறுக் என்று இறங்குகின்றன. வசனங்களில் தாராளமாகக் கடந்துபோகும் அறிவியல் சங்கதிகள் எல்லாம் உறுத்தாமல் இறங்குகின்றன. இப்படி ஒரு படத்திற்கான கதையை பத்துவருடங்களுக்கு முன்னரேயே எழுதிவிட்டு இறந்துபோயிருக்கிறார். இவர் இல்லாவிட்டால் எந்திரனை தொழில்நுட்பத்தில் அதிகம் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இப்படி ஒரு பரிமானத்தில் சாத்தியமே இல்லை. எந்திரத்திற்கும் உணர்வுகள் வருகின்றட என்பதை மீண்டும் ஜீனோவில் தொட்டுச்சென்றவர், எந்திரனில் அதைக் காதலிக்கவும் வைத்துவிட்டார். படத்தை குறைந்தபட்சம் அவருக்கு சமர்ப்பணமாவது செய்திருக்கலாம். எல்லாம் பணம் செய்யும் வேலை.
ரஹ்மானின் பின்னணி இசை எங்கேயுமே உறுத்தாமல் படத்தோடு சேர்ந்து ரசிக்கமுடிகிறது. பாடல்கள் தியேட்டரில் கேட்கும்போது அதிகமாக இனிக்கின்றன. குறிப்பாக அரிமா அரிமா ஹெட் செட்டில் கேட்கும்போது இல்லாத ஒரு உணர்வை தியேட்டரில் கொடுத்தது. ஆஸ்கர் பெற்றுக்கொண்டபோது அவர்முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மீண்டும் ஒருமுறை எந்திரன் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். கிளிமாஞ்சாரோ பாடல் ஏற்கனவே பிடித்துவிட்டாலும் திரையில் பாடலை ரசிக்கவிடாமல் ஐஸ் ஆக்கிரமித்திருக்கிறார். ஐஸ் படம் முழுவதும் அப்படியேதான் வந்துபோனாலும் க்ளோசப் காட்சிகள் அவருக்கும் வயதாவதைக் காட்டுகின்றன.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் க்ளைமாக்சின்போது கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தாலும், அதன் நுணுக்கங்கள் கச்சிதமாக இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் சிட்டி ரோபோ தன் எந்திர உடலுடன் முதன்முறையாக ரஜினி ஸ்டைலிலேயே நடந்துவந்து, இடுப்பில் கைவைத்து லுக்குவிடும் காட்சி ஒன்றே போதும், கிராபிக்சின் துல்லியத்தையும், சங்கர் அவற்றைக் கையாண்ட நேர்த்தியையும் சொல்ல.
இந்தப் படத்தில் ரசித்த இன்னுமொரு விடயம், காட்சிகளை பலதரப்பட்ட ரசிகர்களையும் கவரும்படியான காட்சிகள்தான். விஞ்ஞான நுணுக்கங்களைக்கூட போகிறபோக்கில் உறுத்தாமல் சொல்லிவிட்டுச் செல்வது அழகு. படத்தின் ஒன்லைன், பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், சொல்லப்பட்ட விதம் எல்லாமே தமிழ் சினிமாவிற்குப் புதிது. இதில் உள்ள ஆங்கிலப்படத்தின் தாக்கங்களை தேடித்தேடிப் பலரும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தப்படத்துக்கான சிந்தனை பத்து வருடங்களுக்கு முற்பட்ட ஒன்று, இரண்டாவது இப்படி ஒரு படம் தமிழுக்குப் புதிது. எந்திரன் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு படம். குறை கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்துக்கொண்டேயிருங்கள். புறக்கணிப்பவர்கள் புறக்கணித்துக்கொண்டேயிருங்கள். உங்களுக்காகவே யாராவது மசாலா அரைத்துக்கொண்டிருப்பார்கள்.
கையிலிருந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு புன்னகையுடன் மீண்டும் ஒருமுறை தலையை ஆட்டிக்கொண்டான் சிவா. அதிலே பூக்களின் பின்னணியில், மாலைச்சூரிய வெளிச்சத்தால் அங்கங்களும் கொஞ்சம் மஞ்சள் தொட்டுத் தெரிய, வெள்ளை நிற ஆடையில், ஃபேன்சி தோடுகள் சகிதமாக ‘சீஸ்’ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள் காமினி.
‘சூப்பரா இருக்கா பாஸ், ஆமா பெயர் என்ன சொன்னீங்க?’
‘காமினி’ இது பரந்தாமன்
‘என்ன பெயர் பாஸ் இது? ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க?’
‘அடேய், அது அவளோட ஒரிஜினல் பெயர்டா, சரி நீ கிளம்பு. நைட் 2.30க்கு லேன்டிங். ட்றஃபிக் இருக்காது. ஒன் அவர்ல இங்க வந்துடலாம். பொருள் பத்திரம்’
‘பயப்படாதீங்க பாஸ், பொண்ணும் பத்திரமா இருக்கும்’ சிரித்தபடியே காரைக் கிளப்பினான் சிவா.
-
பதினைந்து நிமிடத் தாமதத்துடன் ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி முரண்டுபிடித்துவிட்டு, மூன்றாவதுதடவை முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வருகையை ஒற்றை வார்த்தையில் அறிவிப்புப்பலகை அறிவிக்க, ஒருவித பரபரப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. சிறிதுநேரத்திலேயே வெளிப்பட்ட காமினியைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமமிருக்கவில்லை அவனுக்கு.
‘ஹாய், ஐம் சிவா’ என்றவாறே கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டான்.
‘காமினி’
‘ஐ நோ, நைஸ் நேம். ட்ராவல்ல ஒண்டும் பிரச்சினையில்லையே?’
‘இல்லை. போகலாமா?’
இடதுபக்கக் கதவால் காமினி பின் சீட்டில் ஏறிக்கொள்ள, சீட் பெல்ட்டை மாட்டியவாறே காரை எடுத்தான் சிவா.
‘U.K ல எங்க இருக்கிறீங்க?’
‘Uxbridge’
‘ஸ்டூடன்ஸ் விசாவா? என்னோட மாமாகூட அங்கதான் இருக்கார், பெயர் கூட வந்…’
‘சிவா, உங்க பருப்பு எங்கிட்ட வேகாது. பரந்தாமன் அங்கிள் உங்களைப்பற்றி முன்னாடியே எல்லாம் சொல்லிட்டார். So, கொஞ்சம் பேசாமப் போறீங்களா?’
கோபத்துடன் சிவா ஆக்சிலரேட்டரை மிதிக்க, அதிகம் வாகனநடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் சீறிப்பாய்ந்தது கார். சிறிதுதூரத்தில் குறுக்கே புகுந்த மோட்டார்சைக்கிள்காரனைக் காப்பாற்ற சிவா எடுத்துக்கொண்ட முயற்சியால் கார் கண்ணுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த இரும்பு மின்விளக்குக்கம்பத்தை 30 பாகையால் சரிக்க, அதே வேகத்தில் முன் சீட்டில் இடிபட்டு, மீண்டும் பின்னால் பிடரியில் அடிபட்டு பின்சீட்டிலேயே வலதுபக்கமாகச் சரிந்தாள் காமினி.
-
உடலில் ஆங்காங்கே வயர்கள் மாட்டப்பட்டு, கண்கள் சொருகிய நிலையில் சோர்ந்து கிடந்தாள் காமினி.
‘சீரியசா எதுவுமில்லை. நெத்தியிலதான் ஏழு ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். ரத்தம் கொஞ்சம் அதிகமாப் போனத்தல மயங்கிட்டா. பிரடியில அடிபட்டதால மூச்சுவிட கொஞ்சம் கஸ்டப்பட்டா, இப்ப எல்லாம் நார்மல். கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சுடுவா’ அருகில் டாக்டர் ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி, பரந்தாமன் வீட்டைச் சென்றடைந்தாள்.
‘என்ன ஆச்சு காமினி? ஏன் இவ்வளவு லேட்? நெத்தியில என்ன காயம்?’ பார்த்ததுமே பதறிய பரந்தாமனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள் காமினி.
‘அப்ப சிவா?’
‘சீட் பெல்ட் மாட்டியிருந்ததால அவனுக்கு அவ்வளவா அடிபடல போல, ஆக்சிடன்ட் ஆனதுமே கார்லருந்து இறங்கி என்னோட ஹேன்ட்பேக்கையும் எடுத்துட்டு ஓடுறதைப பார்த்தேன். அதுக்கப்புறம் நான் மயங்கிட்டதால எதுவுமே தெரியல’
‘அதுசரி, நீ எதுக்கும்மா ஹாஸ்பிட்டல்ல இருந்து ஓடிவந்த? போலீஸ் கேஸ் வேற. சிக்கலாயிடும். வா போலீஸ் ஸ்ரேசனுக்குப் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு, உன் மத்த லக்கேஜசையும் வாங்கிட்டு வந்துடலாம்’
இவர்கள் வாசலால் வெளியேற, அதற்காகவே காத்திருந்தவன் போல குறுக்கே பாய்ந்து
‘ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை’ என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
‘த்சோ த்சோ த்சோ, பயந்துட்டியா?’ என்றவாறே துப்பாக்கியை எடுத்து இம்முறை பரந்தாமனின் நெற்றியில் வைத்தான்.
‘உன்னோட லக்கேஜில எனக்குத் தேவையான பொருள் ஒண்டு இருக்கு. மரியாதையா அதை எப்படியாவது போலீஸ்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்திடு. ஏதாவது வம்பு பண்ணணும்னு நினைச்சா உன்னோட பரந்தாமன் அங்கிள் அந்தப் பரந்தாமன்கிட்டயே போகவேண்டியதுதான்’ என்றான் சிவா.
-
சில மணி நேரங்களில் லக்கேஜை எடுத்தவாறு உள்ளே நுளைந்த காமினி பரந்தாமனும், சிவாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றாள்.
‘காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே’ என்று பாராட்டினார் பரந்தாமன்
‘டைமன்டா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி
‘என்னோட ப்ரண்ட் உன்கிட்ட தந்துவிட்ட பார்சல்ல டைமன்ட் இருக்கிற விசயம் உனக்குத் தெரியாது. அது இருக்கிற பாக் எண்டு நினைச்சுத்தான் சிவா உன்னோட ஹேன்ட்பேக்கை எடுத்துட்டு ஓடினான் என்கிறதும் உனக்குத் தெரியாது. கடைசியா நான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தா அரஸ்ட் பண்ணிடுவாங்க என்கிறதால உன்னைத் தனியா அங்க அனுப்புறதுக்குப் போட்டதுதான் இந்த துப்பாக்கி ட்றாமா என்கிறதும் உனக்குத் தெரியாது’ என்றுவிட்டு அதிர்ந்து சிரித்தார் பரந்தாமன்.
‘இப்ப உங்களைக் கொண்ணுட்டு டயமன்டை நானே எடுத்துக்கப்போறேன் எண்டுற விசயம் உங்களுக்குத் தெரியாது பாஸ்’ என்றவாறே பரந்தாமன் தலையில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
‘வெரிகுட், ஆனா நான் போலீஸ் என்கிற விசயம் உங்கள் ரெண்டுபேருக்குமே தெரியாது’ என்றவாறே சிவாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாள் காமினி.
யாழ் பொதுசன நூலகம்
காரைநகர் ஈழத்துச்சிதம்பரம்
சங்கிலிய மன்னனும், ஆட்சியின் எச்சங்களும்
யாழ்ப்பாணம் நூதனசாலையிலிருந்து…
நல்லூர்
பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்
வாசித்துவிட்டுத் தொடர்ந்து வாசிக்கவும்.
சந்தோஷின் தொலைபேசியில் தெரிந்த அவளது பெயரைப் பார்த்ததுமே எடுத்துப் பேசடா என்று மனது குறுகுறுக்க, நண்பனின் தொலைபேசியில் ஒரு பெண்ணின் அழைப்பு என்ற நாகரிகங்களையெல்லாமே மறந்துவிட்டுத் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக் ‘ஹலோ’ என்றான் ஹரீஷ்.
‘ஹலோ, இஸ் சந்தோஷ் ஓவர் தேர்?’ என்ற எதிர்முனையின் குரலைக் கேட்டு மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிக்க, அவள்தான், அவளேதான் என்று இதயம் வேகமெடுக்க, தானாகவே கிளம்பிய சிரிப்பையும் கட்டுப்படுத்திக்கொண்டு
‘நோ, ஐம் ஹிஸ் ப்ரன்ட் ஹரீஷ்’
‘பார்டன்’
‘ஐம் ஹரீஷ், நீங்க தேவா சேரின்ட மகள் தானே?’
………….
‘ஹலோ….. ஹலோ......’
எதிர்முனையின் மௌனத்தை தொலைபேசி இணைப்பின் ‘பீப்’ ஒலி துண்டித்தது. கண நேரத்துக்குள் கலைந்துவிட்ட தன் சந்தோஷத்தை ஹரீஷ் பெருமூச்சாக வெளிவிட, ‘யார் மச்சான் ஃபோனில?’ கேட்டுக்கொண்டே வந்தான் சந்தோஷ்.
இலண்டன் மாநகரத்தின் வானத்தை மாலைச்சூரியன் செம்மையாக்கிக்கொண்டிருந்தது. அப்போதே ஆரம்பித்துவிட்ட பனியின் துகள்கள் மெதுவாக வீசிய காற்றில் ஆடியபடியே கீழிறங்கிக்கொண்டிருக்க, யன்னலினூடான சூரியக்கதிர்களைத் தன்மேல் படரவிட்டபடி இதையெல்லாம் ரசிக்கமுடியாதவளாய் வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள் வைஷாலி. சந்தோஷிற்கு அழைப்பெடுத்த அக்கா ஒரு வார்த்தைகூடப் பேசாமல் லைனைக் கட் செய்ததும், சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் அறைக்குள் சென்று அடைத்துக்கொண்டதும், வேகமாக வீட்டைவிட்டு வெளியே போனதும் அவள் மனதில் குழப்பத்தையும் பயத்தையும் உண்டாக்கிவிட்டிருந்தது. தான் ஒத்திகை பார்த்து அரங்கேற்றிய நாடகம் தன் கண்ணெதிரிலேயே திசைமாறிப்போனதை மீண்டுமொருமுறை அசைபோடத்தோடங்கினாள் அவள்.
அவளுக்கும், அக்காவிற்குமான நேற்றய அந்த உரையாடல் மிக நீண்டதாக இருந்தது. முற்றிலும் புதிய ஒரு மனிதருடன் பேசுவதுபோல உணர்ந்தாள். எதைப் பேசுகிறேன் என்று அவளுக்கே தெரியாத அளவிற்குப் பேசினாள். சமயங்களைப்பற்றிப் பேசினாள். சாதியைப்பற்றிப் பேசினாள். யாழ்ப்பாணத்து அயலவர்கள் பற்றிப் பேசினாள். சந்தோஷைப்பற்றிப் பேசினாள். இறுதியாக அவனுடனான காதலைப்பற்றிப் பேசினாள். அவளது காதல் புரிந்துகொள்ளப்பட்டபோது சந்தோஷப்பட்டாள். அந்தக் கணம் முதல் அக்கா சந்தோஷிற்கு அழைப்பெடுத்த கணம்வரை எல்லாம் அவள் விரும்பியபடியேதான் நடந்திருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள். அதிகம் வார்த்தைகள் இல்லாத அந்த ஒற்றை நிமிடநேர தொலைபேசி உரையாடல் அவ்வளவு கனமானதா என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவள் தோள் தொட்டுத் திருப்பப்பட்டாள்.
பரீட்சைப் பெறுபேற்றை எதிர்பார்க்கும் மாணவனின் ஆர்வத்தோடு, கண்ணில் நிராகரிப்பின் வலியோடு, ஒரு நிராயுதபாணியாய், கருணையற்ற உலகத்தின்முன்னால் வைக்கப்படும் கடைசிப்பிரார்த்தனையாக அவள் நிமிர்ந்து பார்க்க, அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அக்கா.
சில நாட்களுக்குப்பிறகு…
அரைமணிநேரத் தாமதத்துடன் கட்டுநாயக்க விமானநிலைத்தில் வந்திறங்கிய ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் விமானத்திலிருந்து காதலையும், கடைமையையும் எதிர்நோக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தாள் லாவண்யா.
- பதிவர் கன்கோனினால் தொடரப்படும்.
கொழும்பிலிருந்து விலகும் அந்த நெடுச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்துக்கும் சற்று அதிகமாகச் சீறிக்கொண்டிருந்த அந்தக் காரைச் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பெண் என்றால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். காருக்குள் ராபின் திக்கிலின் செக்ஸ் தெராஃபி கரைந்துகொண்டிருக்க, நெற்றிக்கு மேலாக கண்ணாடியைக் கவிழ்த்துவிட்டபடி காரை ஓட்டிக்கொண்டிருந்த சந்தியாவின் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம்போட்டுக்கொண்டிருக்க, பற்களுக்குள் பபிள்கம் ஒன்று நசுங்கிக்கொண்டிருந்தது. அவளைப்பற்றி அதிகம் வர்ணிக்கத் தேவையில்லை. இலட்சங்களில் சம்பாதித்துக்கொண்டு தனது இருபதுகளையே இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் பொதுவாக என்ன விடயங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்களோ, அவை எல்லாமே இருந்தது அவளிடம்.
இவை எல்லாம் நடந்துகொண்டிருந்த கணத்தில் நான் ஒரு அரைச்சொகுசுப் பேருந்தில் அவள் செல்லும் அதே பாதையில் சென்றுகொண்டிருந்தேன். கையில் சுஜாதாவிக் கடவுள்
“தற்போது எக்ஸ்டென்டட் சூப்பர் கிராவிட்டி என்று ஒன்று கொண்டுவந்திருக்கிறார்கள். அதை விளக்க ‘கிராவிட்டான்’, ‘க்ளுவான்’ போன்ற கற்பனைத் துகள்களை… “
என்று ஏதோ தெளிவாக்க முயன்று, தெளிவாகக் குழப்பிக்கொண்டிருக்க பக்கத்து சீட்டில் இருந்தவர் ஆரம்பித்தார்.
‘தம்பி’ நிமிர்ந்து பார்த்தேன்.
‘நேரம் என்ன?’ சொன்னேன்.
‘நிறைய வாசிப்பீங்களோ?, எத்தினையாம் நம்பர்?’
‘2’
‘ரண்டாம் நம்பர்க் காரர்தான் இப்படி ஏதாவது தேடிக்கொண்டே இருப்பாங்கள். என்ன சந்தேகப்புத்தி கொஞ்சம் கூட. ஏழாம் நம்பர்ப் பெட்டையாப் பாத்துக் கட்டுங்கோ தம்பி, அப்பதான் சந்தோஷமா இருக்கலாம்’
ஒரு புன்னகையை அவருக்குப் பதிலாகக் கொடுத்துவிட்டு, ஜன்னலுக்கால் பார்வையைத் திருப்பியபோதுதான் அவளை எனது பஸ்சிற்குப் பக்கத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தபோது முதன்முதலில் தரிசித்தேன். பஸ்சிலிருந்தான பார்வைக்கோணம் காருக்குளிருந்த அவளைத் தெளிவாகக் காண்பிக்க, அடிவயிற்றில் பட்டாம்பூச்சி, தலைக்குமேல் பல்ப் என்று அத்தனை சகுனங்களும் சரியாக இருக்க இவள்தான் அந்த ஏழாம் நம்பராக இருக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டிக்கொண்டபோது, பச்சை எரிந்து வாகனங்கள் வெவ்வேறு வேகங்களில் விரையத்தொடங்கியிருந்தன.
ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு பஸ் பயண விதிகளின்படி இறங்குவதற்கு சிறிது நேரமே இருக்கையில் சரியாக எழுந்திருந்தேன். வெளியில் மழை பெய்துகொண்டிருக்க பஸ் ஹப்புத்தளையை அண்மித்துக்கொண்டிருந்த இருள் கவ்வத்தொடங்கியிருந்த மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று பஸ்சின் முன்னால் பெரிய சத்தமொன்று கேட்க, டிரைவர் பஸ்சை வலப்பக்கமாகத் திருப்பி, அவசரமாக பிரேக் போட்டு, மலைச்சுவற்றோடு உராய்ந்தபடி நிறுத்த கண்ணாடி உடைந்து சிதறியதில் எனக்குமேலும் துகள்கள் கொட்ட, பின்னாலிருந்த பெண் வீலிட்டாள்.
இறங்கிச்சென்று பார்த்தபோது பஸ்சுடன் முட்டியும் முட்டாமலுமாக மேலிருந்து உருண்டு விழுந்த ஒரு பெரிய பாறாங்கல் சமத்தாக வீற்றிருந்தது. அந்தப் பாதையில் மேலும் பல இடங்களில் மண்சரிவு என்பதை சற்று நேரங்களுக்கெல்லாம் வந்த தொலைபேசிக் குறுஞ்செய்தி உறுதிசெய்ய, சிறுவயதிலிருந்தே நன்று பழகியிருந்த இறப்பர்த்தோட்டங்களுக்குள்ளாக இறங்கி வீதியை ஒட்டியபடி வீட்டை நோக்கி நனைந்தவாறே நடக்க ஆரம்பித்த சிறிது தூரத்தில் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்
‘எக்ஸியூஸ்மி’ என்றது.
‘யெஸ்’ என்றவாறே திரும்பினேன். சிறிது தூரத்தில் அவள், அதே அவள் முழுவதுமாக நனைந்தபடி ஒடிவந்துகொண்டிருக்க, ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவள் அங்கங்களின் எளிமையிசை இயக்கத்தால் மனது பிரௌணியின் இயக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்க, தற்செயலாகத் திறந்துவிட்ட ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில் சிலையாகி, கனவா நனவா எனச் சுயசோதனை செய்துகொண்டு, சிலமுறை எச்சில் விழுங்கி, எனக்கே எனக்காக ஒருமுறை மூச்சுவிட முயன்று தோற்றுக்கொண்டிருக்க அருகில் வந்து
“லேண்ட் ஸ்லாப்பில் கார் மாட்டிட்டுது. நாளைக்குத்தான் எடுக்கலாம். இரவு தங்கறதுக்கு நல்ல ஹோட்டல் பக்கத்தில எங்கயாவது இருக்குமா?’ என்றாள்.
அவளைக்கூட்டிக்கொண்டு தங்குமிடம் தேடித்திரிந்ததில் நன்றாகக் கழைத்துவிட்டிருக்க, குளிர் வேறு உடம்பைக் குத்திக்கொண்டிருந்தது. அருகிலிருந்த ஹோட்டல்கள் எல்லாம் மண்சரிவின் புண்ணியத்தில் நிறைந்து வருமானம் பார்த்துக்கொண்டிருக்க, எஞ்சியிருந்த இரண்டாம்தர ஹோட்டல்களில் ஒரு பெண்ணாக அவள் தனியே தங்குவது சாத்தியப்படாது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
‘தெரிஞ்சவங்க வீடு ஏதாவது இருந்தாலும் பரவாயில்லை. அங்க தங்கிக்கலாம். அவங்களுக்கு நான் பே பண்ணிடறேன்’ என்று அவளே ஆரம்பித்தாள்.
‘உங்களுக்குப் பிரச்சினை இல்லேன்னா எங்க வீட்டுக்கும் வரலாம். அம்மாவும், தங்கச்சியும் இருக்கிறாங்கள்’ என்றதற்கு அவள் தலையை ஆட்டியபோது மனம் துள்ளிக்குதிக்க, ஏதோ ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பெண் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைத்தாள்.
வீட்டாரின் சந்தேகப்பார்வையைத் தீர்த்து, சம்பிரதாயபூர்வ அறிமுகங்கள் முடிந்த சிறிது நேரத்திலேயே தங்கையுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். அவள் பாடத்திலிருந்த ஏதோ ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைத்தாள். அம்மாவின் சாம்பாரை ர(ரு)சித்தாள். எமிலி டிக்கின்ஸன் கவிதைகளோடு வைரமுத்து கவிதைகளையும் ரசிப்பதாகச் சொன்னாள். தமிழில் பிடித்த எழுத்தாளர் சுஜாதா என்றும், தமிழில் அவரைத்தாண்டி அதிகம் வாசிப்பதில்லை என்றாள். மறுநாள் விதியில் கற்கள் ஒதுக்கப்பட்டு காரை வீட்டுக்கு எடுத்துவந்தபோது பலமுறை நன்றிசொன்னாள். தொலைபேசி இலக்கத்தைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றபோது மனதில் தைரியத்தை வரவளைத்துக்கொண்டு அவளது பிறந்ததினத்தைக் கேட்டுக்கொண்டேன்
ஏப்ரல் 7, 198*.
- தொடரலாம்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயம்
யாழ் கோட்டை, மற்றும் அங்கிருந்து சில …
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
கப்பலில் செல்லும்போது கரையை முதலில் அறிவிக்கும் காங்கேசன்துறை சீமெந்து ஆலை மற்றும் கீரிமலை தேவாலயம்
செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் பாலம்
தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy