Wednesday, April 02, 2025

Wednesday, June 30, 2010

கொஞ்சம் ஆறுதலாக …

43 comments

 

இஞ்சியை மென்று விழுங்கிய ஃபீலிங்கில் தொடர்ந்து கொஞ்சநாள் பதிவெழுதிவிட்டேன் போலிருக்கிறது. பதிவெல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது, ஏதாவது பிரச்சினையா என்று கேட்டே விட்டார் ஒரு பதிவர். அதற்காகத்தான் இன்று கொஞ்சம் ஆறுதலாக. அவ்வப்போதாவது மரணமொக்கைப் பதிவுகளும் எழுதவேண்டும். இல்லாவிட்டால் யாழில் இலக்கியவாதியாக ஆக்கப்பட்டுவிடும் அபாயம்வேறு இருக்கிறது.

 

FILE4998 இப்போதெல்லாம் மூன்றுநாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை வந்தாலே வீட்டுக்குப் பயணப்பட்டுவிடுகிறேன். ஊரில் சந்திப்பதற்கு இதுவரைகாலமும் பதிவராக பாலவாசகன் மட்டுமே இருந்தநிலையில் இப்போது ஜெனாவும், Cool Boy கிருத்திகனும் இணைந்திருக்கிறார்கள். ஒருபுறம் Cool Boy தனது யதார்த்தமான கருத்துக்களால் கவர்கிறார் என்றால் மறுபுறம் பதிவர் ஜெனா எங்கள் ஆச்சரியத்தையும், பொறாமையையும் சேர்த்தே வாங்கிக்கொள்கிறார். முதலாவது சந்திப்பில் சுஜாதாவின் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். மனிதர் வீட்டில் பெரிய லைப்ரரியே வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். மகளுக்குச் சாக்லெட் கொடுப்பது போலவாவது ஒருமுறை உள்ளே நுளைந்துவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

 

அண்மைக்காலமாக அதிக நூல்கள் படிக்கக்கிடைக்கிறது. முக்கியமாக மூன்றைப்பற்றிக்  குறிப்பிட்டே ஆகவேண்டும். முதலாவது த. அகிலனின் மரணத்தின் வாசனை. எமது ஈழத்து மொழிவழக்கில் எங்கேயோ கண்ட, கேட்ட போரின் வடுக்களைப்பற்றிப் பேசிச்செல்லும்போது அந்த வாசனையை உண்மையிலேயே உணரமுடிகிறது. அகிலனைச் சந்திக்கும் வாய்ப்பை அனியாயமாகத் தவறவிட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்புக்கிடைத்தால் கண்டிப்பாக சந்தித்தே தீரவேண்டும்.

 

kolaiyuthirkaalam அடுத்தது சுஜாதாவின் கொலையுதிர்காலம். நீண்டகாலம் தேடியலைந்த புத்தகம். இப்போதுதான் கிடைத்தது. விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து மனிதர் கதகளியே ஆடியிருக்கிறார். வழமைபோலவே விபரிக்கும் காட்சிகள் அனைத்தும் மனதில் திரைபோல விரிய, எதிர்பாராத திருப்பங்களுடன் கதை நகர்கிறது. அதிலும் கதாநாயகி லீனா குளிக்கும் காட்சியில் அவரது வர்ணிப்பு

“மார்பகங்கள் இரண்டு வெண்புறாக்கள் போல, இரண்டு ஷம்பேன் கோப்பைகள் போல – மிகக் கொஞ்சம் ஊதா தொட்டுத் தெரிய கணேஷ் எச்சிலை விழுங்கினான்”.

கூடவே வாசித்துக்கொண்டிருக்கும் நானும்.

 

மூன்றாவது புத்தகம் என்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவி. இரண்டு பாகங்களைக்கொண்ட கொஞ்சம் பெரிய நாவல். அவர் கதைகளில் உறவுகளைச் சித்தரிக்கும் பாங்கை முன்னர் வாசித்த சில நாவல்களிலேயே உணர்ந்திருந்தாலும், இதில் கொஞ்சம் அதிகமாகவே உணர்வுகளோடு விளையாடியிருக்கிறார். அதிலும் கதாநாயகியின் பாத்திரம் மனதைவிட்டு அகல மறுக்கிறது. ஏறத்தாள முழுக்கதையின் பெரும்பாலான பகுதிகளை ஒரே மூச்சில் படித்துவிட்டுப் படுத்த நேரத்தில் பெரும்பாலும் ஊரில் பலர் எழுந்துவிட்டிருப்பார்கள். அதற்கடுத்தநாள் ஸீரோ டிகிரி படிப்பதற்காய்த் திறந்து சிறிது நேரத்தில் லேசாகத் தலை வலிக்கத்தொடங்கியது. அனேகமாக முதன்நாள் சரியாக நித்திரை இல்லாததுதான் காரணமாக இருக்கவேண்டும்.

 

ravana4325423-4 ராவணன் படத்தை அனேகமானோர் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டனர். அவற்றில் பெரும்பாலானவற்றை வாசிக்கமுதலேயே படத்தைப் பார்த்துவிட்டதாலோ, அல்லது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாத்தாலோ என்னவோ படத்தை ரசிக்கமுடிந்தது. ஆங்காங்கே உறுத்தல்கள் இருந்தாலும், படமாக்கப்பட்ட இடமும், கேமராவும், விக்ரமின் நடிப்பும் அபாரம். கேமராவுக்காகவே தியேட்டரைவிட்டு ஓடமுதல் இந்தியிலும் ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறேன். படம் பார்த்த அடுத்த நாளே மழை தூறிக்கொண்டிருக்க மலையேறும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் பாதிப்பில் நன்றாகவே ரசிக்க முடிந்தும் ஒரே குறை, பக்கத்தில் ஐஸ்தான் இல்லை.

Tuesday, June 29, 2010

கொழும்பு விலை

9 comments

 

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”

“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.

ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

19_11_06_jaffna_01
இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

பி.கு :- ஈழத்துமுற்றத்துக்காக எழுதப்பட்டது.

Wednesday, June 16, 2010

முன்வந்த சிம்பு, பின்தங்கிய த்ரிஷா

4 comments

 

AAAAAAA300 (1)

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 வாக்களிப்புகள் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நண்பர்களால் ஒன்றுசேர்ந்து ஆரம்பிக்கப்பட்டு பல பதிவர்கள் மற்றும் திரட்டிகளின் ஆதரவோடு நடைபெறும் வாக்களிப்பு வரும் வெள்ளி (18.06.2010) இரவுடன் முடிவடைந்து, முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளன.

எனவே இதுவரை வாக்களிக்காத, ஆர்வமுள்ளவர்கள் கீழே காணப்படும் சுட்டிக்குச் சென்று வாக்குகளைப் பதிவுசெய்யுங்களேன்

http://tamilcinemavote.blogspot.com/2010/05/awards-2010.html

பி.கு: – தலைப்பு வேறொன்றுமில்லை, தற்போதய நிலவரம்தான் ;)

Sunday, June 13, 2010

காட்டுச்சிறுக்கி

30 comments

 

dink

அவளிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஐந்தாவது முறையாகவும் தானாகவே துண்டிக்கப்பட்டிருந்தது. மனத்திற்கும், புத்திக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக்கொண்டு என்னால் தொலைபேசியை வெறிக்க மட்டுமே முடிகிறது. நல்ல ஒரு நண்பியாய், ஒரு தேவதையாய், ராட்ஷசியாய் அறிமுகமாகிவிட்டிருந்த அவளது ஆறாவது அழைப்பிற்காய் சிணுங்கத்தொடங்குகிறது தொலைபேசி.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

“ஹலோ, இஸ் நிதின் ஓவர் தேர்?”

“யெஸ்”

“ஐம் ம்ருதுளா ப்ரம் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மன்ட்”

அவள் குரலைக் கேட்ட அந்த முதற்கணம் இன்னும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. அலுவலகத்தில் சேர்ந்த முதல்நாளின் முதல் அழைப்பு. நல்ல சகுனம். வந்த தகவலால் அல்ல, கேட்ட அவள் குரலால்!

அவளுடன் முதல் சந்திப்பு, அலுவலகத்தில்தான். அவளைக் குரலைக்கொண்டு அவளை வடித்துவைத்திருந்த எனது கற்பனை என்னை ஏமாற்றியிருக்கவில்லை. அன்று அவள் அணிந்திருந்த வெள்ளை டீ – ஷர்ட்டும், அவளிடமிருந்து வந்த மெல்லிய பர்ஃப்யூம் வாசனையும், இன்ன பிறவும் தேவதைக்கான வரைவிலக்கணங்களைப் பூர்த்திசெய்துகொண்டிருக்க, மிருதுவாகக் கைகுலுக்கிக்கொண்ட அவளது ஸ்பரிசத்தில் ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன், ம்ருதுளா!

தேவதை நெருங்கிய நண்பியாகிவிட்டாள். அலுவலக ஓய்வு நேரங்கள் மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே அவளுடன்தான் கழிகின்றன. அதிகமாகப் பேசுகிறாள். பேசுவதா? நானா? கை ஒதுக்கும் கன்னத்து முடியையும், உதட்டோரச் சிரிப்பையும், தலையோடே ஆடும் காது வளையத்தையும் ரசிக்கவே நேரம் சரியாகிவிடுகிறதே எனக்கு!

திமிர் பிடித்தவள்! இதுதான் அவளைப்பற்றிய அதிகம்பேரின் விமர்சனம். எமக்குள்ளான நட்பு உடைத்துவிட்ட தடைகளால் நானும் அதை உணரத்தொடங்கியிருந்தேன். அதிகம் பேசியவள், அதிகமாக ஏசத்தொடங்கியிருந்தாள். சின்னச்சின்னத் தவறுகளுக்கும் சீறிவிழுந்தாள். அவளுடனான சந்திப்புக்கள் பெரும்பாலும் சண்டையில்தான் முடிகின்றன. ஏற்படுத்திக்கொள்ளும் சமாதானங்களும் நீடிக்க மறுக்கின்றன. என் தேவதையின் ராட்ஷசி அவதாரம்!

அன்றும் அப்படித்தான். ஒன்றுமே இல்லாத விடயத்துக்காய் அவளுடன் ஒருமணிநேரச் சண்டை. வலிந்து ஏற்படுத்திய யுத்தநிறுத்த உடன்படிக்கையின்பின் சொல்லிவிட்டுப் போனாள்

“ஏதடா ஒன்றுமில்லாத விடயம்? உன் சின்னத் தவறுகளையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீ எனக்கு நண்பனுக்கும் மேலேயடா!”

வாயடைத்து நின்றுவிட்டேன். விழித்துக்கொண்டுவிட்ட என் காதலை போய் சொல்லடா என்றது மனம். இந்தத் கோபக்காரியிடம் மாட்டிக்கொள்ளப்போகிறாயா என்றது புத்தி. இந்தக் குழப்பத்திலேயே கடந்துவிட்ட ஒருவாரத்தின்பின்தான் அவளின் இந்தத் தொடர் அழைப்பு. ஒருவழியாக குழப்பத்திற்கு முடிவு கண்டுவிட்டவனாய் ஆறாவது அழைப்பை எடுத்துக் காதில் வைக்கிறேன்.

ஆம், காதல் மனது சம்பந்தப்பட விடயம்!

Thursday, June 3, 2010

சேறும்… சகதியும்…

24 comments

 

sad_man

ஒருவகை விரக்தியுற்ற மனநிலையிலேயே இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன். அடித்துக்கொண்டிருக்கும் புயலில் சேர்ந்தே அடிபட்டுவிடும் என்று தெரிந்தும், என் மன ஆறுதலுக்காகவே இதைப் பதிகிறேன். நாட்கள் பல கடந்தும் இன்னும் எங்களை நாங்களே கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒரு மின்னஞ்சலிலோ, அல்லது ஒரு தொலைபேசி அழைப்பிலோ முடித்துவிடக் கூடிய பல தனிப்பட்ட பிரச்சினைகள் பதிவுலகில் பொதுவெளிக்கு இழுக்கப்படுவது இங்கே ஒன்றும் புதிதல்ல என்றாலும் , இப்போது கொஞ்சம் அதிகமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

பதிவுகளை பலரும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பல இடங்களிலும் மார்தட்டிக்கொள்கிறோம். பதிவுகள் அச்சு எழுத்துக்களாக ‘நன்றி இணையம்’ என்பதைத் தாண்டியும் ஏறத்தொடங்கியிருப்பதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். எல்லாம் இருந்தும் என்ன, நாம் செய்துகொண்டிருக்கும் சில செயற்பாடுகள் திரும்பவும் ஆரம்பித்த இடத்துக்குத்தான் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன.

பிரச்சினைகள் இல்லாத இடங்கள் இல்லை. முடிந்தவரை சம்பந்தப்பட்டவர்களே அதனைப் பேசித் தீர்த்துக்கொண்டால் பிரச்சினை தீர்ந்தது. அதைப் போதுவெளிக்குள் இழுத்து, பலரும் அதற்கு, தத்தமது வசதிக்கேற்ற பூச்சுக்களைப் பூசி, ஊதிப் பூதாகாரமாக்கி, பிரச்சினைகள் வளர்க்கப்படுகின்றனவே தவிர முடிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

sad-wallpaper

 

பதிவுலகம் எனக்கு பெரிய வாசிப்பனுபவம் ஒன்றைத் தந்திருக்கிறது. பல நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. என்னில் எனக்கே தெரிந்த பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. என் எழுத்துக்களையும் படிக்கிறார்கள் என்ற ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு கொடுத்தும் என்ன, இருக்கும் வன்மங்களால் பாரிய மன உளைச்சலையும், வெறுப்பையும் சேர்த்தே கொடுத்துவிட்டிருக்கிறது.

பதிவுலகம் ஒரு போதை. அதன் போதையை இன்னும் அதிகரித்துவிடுவதற்காகவே இருக்கின்ற, அண்மைக்காலத்தில் கொஞ்சம் மிகையாகவே பதிவுகளிலேயே பேசப்பட்ட ஓட்டுக்களின் எண்ணிக்கைகள், ஹிட்ஸ்கள், பின்னூட்டம், பிரபல இடுகை, பரிந்துரை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் இருக்கின்ற பதிவுலக பிரபலம் என்ற சொல் வரை தலைகால் புரியாமல் ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பிரபலம் என்ற வார்த்தை யார் வாயிலிருந்தாவது வந்துவிடாதா என்பதற்காகவே எத்தனையோ குறுக்கு வழிகளில் போய், காணாமல் போனவர்களும் பலர்.

பரந்த பதிவுலகில் நான் நேரில் சந்தித்து, நட்புப் பாராட்டிக்கொண்டிருப்போர் மிகச்சிலர். ஏனய, விரும்பிவாசிக்கும் பலரது எழுத்துக்கள்தான் அவர்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை மனதிலே ஏற்படுத்தியிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற பல பதிவர்கள், பதிவுகளை வாசிப்பவர்களும் இவ்வாறுதான். ஒருவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து, அவற்றின்மூலம் உருவான ஏதோஒரு புரிதல், அவரை முதன்முதல் சந்திக்கும்போது தயக்கம் ஏதுமின்றி அளவளாவ முடிந்ததை உணர்ந்துமிருக்கிறேன். எனவே எழுத்துக்களால் உருவாக்கப்படும் பிம்பத்தை அதனாலேயே உடைத்துக்கொள்ள வேண்டாமே.

தயவுசெய்து குடும்பப் பிரச்சினைகள் தெருவுக்கு வேண்டாம், காரணம் நாங்கள் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy