
பொங்கல் உண்பதற்காய் காலைப்
பொழுதோடு வருவாய் நீ
காத்திருந்து கையளிக்கிறேன்
கனிவாய் உனக்கோர் விண்ணப்பம்
ஊரெல்லாம் இன்று
உனக்காய்ச் சமைக்கயிலே
உணவில்லா மக்களுக்கும்
ஒரு பங்கைக் கொடுத்துவிடு
மரத்தின் நிழலில் வாடும்
மக்களிற்காய்க் கேட்கின்றேன்
மத்தியான வெயிலைக் கொஞ்சம்
மந்தமாக எறித்துவிடு
இரவில் ஒளியின்றி
இருக்கும் எம் மக்களிற்காய்
உன்னுடைய ஒளியைக் கொஞ்சம்
இரவினிலும் கொடுத்துவிடு
ஊரெல்லாம் வெடியுடனே
உனக்காய்ப் பொங்குகையில்
ஓரத்தின் ஓலத்திற்கும்
ஒருமுறை காதுகொடு
எமக்கெட்டாத ஊர்களையும்
எட்டிவிடும் நீ எமது
கட்டாத கதை மனதைத்
தட்டட்டும் சொல்லிவிடு
உழவுக்கு உயிர் கொடுக்கும்
உன்னிடத்தில் எனக்குள்ள
உரிமையில் கேட்கின்றேன் இல்லை
என்றிடாமல் ஏற்றுவிடு
0 comments:
Post a Comment