பொதுவாக ஞாயிறு விடுமுறையை விடுமுறையாகவே கழித்துவிடுபவன் நான். ஆனால் இம்முறை மறுநாளும் விடுமுறையானதாலும் வெளியூரில் படிக்கும் நண்பர்கள் பலரும் வந்ததாலும் எங்காவது செல்வது என ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டிருந்தது. இலங்கை, இந்திய ஐந்தாவது ஒருநாள் போட்டி, தேசத்தின் மகுடம் கண்காட்சி என்பன போட்டியிட்டாலும் இறுதியில் வென்றது நான் கடவுள்தான். பாலா காரணமாக இருக்கலாம், இல்லை விலை மலிவான தியேட்டரில் ஓடியதும் காரணமாக இருந்திருக்கலாம்.
வைத்த நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை பாலா. அதே அவரது பாணியிலான படம். அசத்திவிட்டார். படத்தில் மனித உருவிலான கடவுள்களையும், மிருகங்களையும் உலவ விட்டிருக்கிறார். ஆனால் பெயரிலேயே கடவுள் இருப்பதாலோ என்னவோ மிருகங்களைச்சுற்றித்தான் படம் பெரும்பாலும் நகர்கிறது. ஆனால் கடவுளைப்போல அவ்வப்போதுதான் காட்சிதரும் ஆர்யா அசத்துகிறார். பாலாவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட இன்னொருவர். தமிழ் சினிமாவிற்கு மற்றொரு ‘நடிகர்’.
நகைச்சுவையும் இருக்கிறது படத்தில். அழகான இரட்டை அர்த்தங்களற்ற காமெடி. ஆனால் அதிலுள்ள உண்மையின் ஆழத்தை உணர்பவர்களால் சத்தியமாகச் சேர்ந்து சிரிக்க முடியாது. அத்தனையும் நிஜமான மனிதர்களின் உண்மைகள். பாலா பாலாதான்.
பார்ப்பது தமிழ் சினிமாதான் என உணர்த்தவோ என்னவோ, போலிஸ் மட்டும் தமிழ் சினிமாவால் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட அதே போலீஸ். வில்லனில் சற்று வித்தியாசம். படத்தின் கிளைமார்க்ஸில் பெரும்பாலான தமிழ் சினிமா கிளைமார்க்ஸைப் பார்ப்பது போன்று யாரும் சிரிக்கவில்லை. அழுவதற்கோ அரங்கில் பெண்கள் இல்லை. படத்தின் நீளம்தான் சென்சர் போர்ட் மீது சந்தேகம் வர வைக்கின்றது.
காசியில் சாமியார்களோடு சேர்ந்து வளர்ந்தவர் ஆர்யா. தன்னையே கடவுளாக உணர்ந்து கொண்டவர். இவர் கெட்டவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை மரணம். வாழ முடியாதவர்களை இவர் கொன்றால் அது வரம். இவரை ஒருமுறை இலங்கைக்கு வருமாறு கேட்கத்தான் வேண்டும். நிறைய ‘வேலை’ இருக்கும்.
2 comments:
பாலா மேல ரொம்ப அபிப்ராயமோ?
இல்லாம ? அவர் சிறந்த இயக்குனர் மட்டுமல்லர், சிறந்த தயாரிப்பாளரும் கூட! நல்ல நடிகர்களைத் தயாரிப்பவர்!
Post a Comment