
அன்றுனக்கு வயதிரண்டு!
தட்டுத் தடுமாறித் தவழ்ந்துவரும் தாய்மொழியும்,
கட்டாமல் விட்டதனால் கலைந்துவிட்ட உன்தலையும்,
புழுதிகள் பிரண்டுவிட்ட செம்பட்டை நிறமுடியும்,
அதிகம் அலட்டாமல் அணிந்துவரும் ஆடையும்,
தத்தித் தவழ்ந்துவரும் நடையெனும் நாட்டியமும்,
காண்பவரின் கண்களெல்லாம் கனிவோடு நோக்குதடி.

வளர்ந்துவிட்டாய் இன்று, வயது இருபத்தொன்று!
ஆங்கிலத்தின் நடுவினிலே தடுமாறும் தமிழ்மொழியும்,
கட்டாமல் நீட்டிவிட்டுக் கத்தரித்த உன்தலையும்,
காஸ்ட்லி மை பிரண்ட செம்பட்டை நிறமுடியும்,
தோளிரண்டில் நூலிற் தொங்குகின்ற உன் உடையும்,
அடிமீது அடிவைத்து இடையாட்டும் கேட்வாக்கும்,
காண்பவரின் கண்ணையேல்லாம் காமத்தால் நிரப்புதடி.
ஆண்டுகளின் மாற்றத்தில் மாறவில்லை நீ எதுவும்,
காண்பவரின் கண்களிற்றான் காலத்தின் மாற்றமோடி?
அன்று நீ செய்துவிட்டால் குழந்தையின் அறியாமை,
இன்று நீ செய்வதுதான் நாகரிக நரிவேலை!
0 comments:
Post a Comment