சென்ற வார இறுதியில் என் சொந்த ஊரான யாழ்ப்பாணம் சென்றுவரும் வாய்ப்புக் கிடைத்தது. யாழிற்கான A9 வீதியினூடான போக்குவரத்துகள் சீராக்கப்பட்டபின்னர் எனது முதலாவது பயணம் அது. அதன்போது அங்கே கேள்விப்பட சம்பவங்களாலான பதிவே இது.
கடந்த பல வருடங்களாக அதிகரித்த விலைகளாலும், தட்டுப்பாடுகளாலும், தடைகளாலும் அவதிப்பட்டுவந்த யாழ் மக்கள் இப்போது மலிந்துள்ள பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள வியாபாரிகளும் தமது பார்வையை யாழ் நோக்கித் திருப்பியுள்ளர். இதெல்லாம் கொஞ்சம் பழைய கதைதான்.
கடந்த பல வருடங்களாகவே யாழ் வியாபாரிகளிடம் மட்டுமே யாழ் மக்கள் பழகி வந்துள்ளனர். யாழில் நிலவிய தட்டுப்பாட்டு நிலைமையால் அங்குள்ள வியாபாரிகளைச் சார்ந்திருக்கவேண்டிய நிலைமையே வாடிக்கையாளர்களுக்கு இருந்தது. சந்தையை வியாபாரிகளே ஆதிக்கம் செலுத்தும் தன்மை காணப்பட்டது. இப்போது புதிதாக அங்கு புறப்பட்டிருக்கும் தென்னிலங்கை வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அணுகும் விதமும், அவர்களது பேச்சும் அங்குள்ளவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம். இந்த அணுகுமுறையால் கவரப்படும் மக்களை இலகுவில் ஏமாற்றி பணத்தைக் கறந்துவிடுகின்றனர் இவர்கள். மேலும் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பொருட்களும் யாழ் கடைகளில் தாராளமாகக் கிடக்கின்றன.
இது தொடர்பாக அங்கே நான் கேள்விப்பட்ட மூன்று வெவ்வேறு விதமான அடிப்படையைக் கொண்ட உண்மைச் சம்பவங்களை உதாரணங்களாகத் தருகிறேன்.
- இலங்கையின் பிரபல நிறுவனமொன்றின் பெயர்தாங்கிய பதாதையுடன் வாகனமொன்றில் வீடுவீடாக இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்தவாறு வந்த ஒரு குழுவினரின் பேச்சில் மயங்கி எனக்குத் தெரிந்த ஒருவர் வாங்கியது 10,000 /- பெறுமதியான, உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு ஃபிளென்டர். இரண்டாவதுநாளே அது பழுதடைந்துவிட, ஒரு வருட உத்தரவாதம் இருப்பதாகவும், ஏதாவது பிரச்சினையென்றால் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் கூறி ஒரு தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துவிட்டு சென்ற அவர்களுக்குத் தொடர்புகொண்டால் அந்த இலக்கம் அகராதியிலேயே கிடையாது என்று பதில் வந்தது.
- இரண்டாவது சம்பவம் எனது அயலவர்களுக்கு நடந்தது. தம்மிடம் சிறந்த ஒட்டு இன மரக்கன்றுகள் இருப்பதாகவும், தம்மிடம் முற்பணம் செலுத்தினால் ஒரு வாரத்தினுள் மரக்கன்றுகளைக் கொண்டுவந்து தருவதாகக் கூறி, ஒரு கன்றுக்கு 200/- வரை பணம் பெற்றுக்கொண்டு சென்ற கூட்டத்தினர் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் வரவே இல்லை.
- மூன்றாவது சம்பவம் எனக்கே நடந்தது. யாழில் ஒரு கடையில் RED BULL வாங்கிக் குடித்தபோது அதனுள் இருந்தது வெறும் சீனி கரைத்தது போன்ற சுவையுடைய ஒரு திராவகம்.
பல சந்தைகளில் இது ஒன்றும் புதிதல்ல என்றபோதும், யாழில் பல நிறுவனங்களும் அறிமுக விலையாக குறைந்த விலைக்கு பொருட்களை சந்தைப்படுத்திவரும் நிலையில், இவ்வாறான போலிகளின் ஊடுருவலை இனம்காண்பதற்கு போதிய விழிப்புணர்வு அல்லது அனுபவம் இருந்தாலன்றி சாத்தியமில்லை.
15 comments:
நான் தான் முதலாவது....
// இந்த சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள வியாபாரிகளும் தமது பார்வையை யாழ் நோக்கித் திருப்பியுள்ளர்.//
அது நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தால், நேர்மையான விதத்தில் அமைந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே....
//இப்போது புதிதாக அங்கு புறப்பட்டிருக்கும் தென்னிலங்கை வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அணுகும் விதமும், //
தென்னிலங்கை வியாபாரிகள்... ம்...
தென்னிலங்கை வியாபாரிகள் என்பதை விட தென்னிலங்கைப் போலி வியாபாரிகள் என்பது சிறப்பாக இருக்குமோ?
ஏனென்றால் நிறையப் பேர் ஏமாற்றமே புறப்பட்டிருக்கிறார்கள்.
//ஃபிளென்டர்//
ஃபிளெண்டர்கள் வழமையாகவே அப்படித்தான்... இது வீட்டுக்கு வந்து ஏமாற்றும் வேலையா?
அதற்குத்தான் பேசாமல் நம்பகமாக கடைகளில் வாங்குவது எமக்குப் பாதுகாப்பானது...
என்ன செய்ய...
//தம்மிடம் சிறந்த ஒட்டு இன மரக்கன்றுகள் இருப்பதாகவும், //
ஏமாற்றுபவர்கள் பிழையானவர்களென்றால் ஊர் பெயர் தெரியாதவர்களிடம் பணம் செலுத்தும் எம்மவர்களை என்ன சொல்வது?
//யாழில் ஒரு கடையில் RED BULL //
நீங்கள் தான் இதற்குள் ஓரளவு நியாயமானவர்.. அதாவது ஏமாற்றப்பட்டது மோசமாக நீங்கள் தான்...
நீங்கள் பிழையே செய்யவில்லை...
மற்றைய 2 சந்தர்ப்பங்களிலும் அவர்கள் ஏமாந்தார்கள், இங்கே நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்...
அது சரி...
Red bull ஆ?
அதில கொக்கையின் இருக்காமே? :D
//இவ்வாறான போலிகளின் ஊடுருவலை இனம்காண்பதற்கு போதிய விழிப்புணர்வு அல்லது அனுபவம் இருந்தாலன்றி சாத்தியமில்லை.//
அதே தான்...
எம்மவர்கள் விழித்துக் கொண்டாலொழிய சாத்தியமில்லை...
நல்ல பதிவு சுப்பன் அண்ணா... :P
///இவ்வாறான போலிகளின் ஊடுருவலை இனம்காண்பதற்கு போதிய விழிப்புணர்வு அல்லது அனுபவம் இருந்தாலன்றி சாத்தியமில்லை.///
அப்போ அனுபவம் ஐயாவுக்கு கூடித்து போல...
நல்ல பதிவு நன்றி பகிர்வுக்கு...
சுப்பன் ஹிஹீஹீஹீ அது கிடைச்சுதா??
அதாவது இதுவரை கிணத்துதவளைபோல இருந்திருக்கிறார்கள் மக்கள், வியாபாரிகள் ஆற்றுத் தவளைபோல இருக்கிறார்கள் என்கிறீர்கள்..ம்ம்
//ஒரு கடையில் RED BULL வாங்கிக் குடித்தபோது அதனுள் இருந்தது வெறும் சீனி கரைத்தது போன்ற சுவையுடைய ஒரு திராவகம்//
சிங்கத்தையே சீண்டிப்பாத்துட்டாங்களா அப்ப பெரிய கள்ளனுகள்தான்...
ஹிம்ம்... தேர்தலுக்குப்பிறகாவது ஏதாவது நல்லது நடக்குமெண்டு நம்புவம்
பாவம் அந்த மக்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அந்த மக்களை ஏமாற்றுவார்களோ தெரியாது
இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்களின் வழமை. இது ஆரம்பம் தானே . போக போக தான் இழப்பின் அருமையும் வசந்தத்தின் தன்மையும் புரியும்.
இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்களின் வழமை. இது ஆரம்பம் தானே . போக போக தான் இழப்பின் அருமையும் வசந்தத்தின் தன்மையும் புரியும்.
இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்களின் வழமை. இது ஆரம்பம் தானே . போக போக தான் இழப்பின் அருமையும் வசந்தத்தின் தன்மையும் புரியும்.
சில பல விஷயம் கேள்விப்பட்டேன்... தெரிந்ததுதானே... நடக்கும்போது... கை கட்டிப் பெருமூச்சு மட்டும் விட முடிகிறது...
மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் .விட்டால் கோவணத்தையும் கழற்றி கொண்டு போய்விடுவார்கள்
அது எப்பிடிங்கோ ரெட்புல்லுக்க சீனி வந்தது ஒண்ணுமே புரியல்ல
பனையால் விழுந்தவர்களை மாடுகள் ஏறி மிதிக்கின்றன..
//Red bull ஆ?
அதில கொக்கையின் இருக்காமே? :D
//
இல்லை தம்பி.. அப்படியொரு கதையை யாரோ போட்டி நிறுவனத்தார் கட்டிவிட்டார்கள்..
உண்மை உண்மை... நானும் நிறைய கேள்விப்பட்டேன்...
அத்தோடு இந்த தளபாட விற்பனையாளர்களின் மோசடியும் கூடவாம்.. ம்....யாரொடு நோக....
யோ வொய்ஸ் (யோகா)
///பாவம் அந்த மக்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அந்த மக்களை ஏமாற்றுவார்களோ தெரியாது///
ஏமாறுபவர்கள் இருக்கும் படியால் தானே ஏமாற்றுகிறார்கள்,
ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்... யோசித்ததுண்டா...
கொழும்பில் இருந்து வந்தால் உயர்வானது என கருதுகிறார்கள். மலிவாக இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் யாழ்பாணத்தில் அதைவிட மலிவாகவும் தரமாகவும் பொருட்கள் வாங்கலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பதை எல்லோர் போலவும் நாங்களும் (யாழ்பாணத்தவர்) நம்புகிறோம்.
red bull கதை எனக்கும் கனபேர் சொன்னவை!
வீடுகளுக்கு சாமான்களை சுமந்துகொண்டு போய் விக்கிறவை கூடிப்போடுது!
அதிலையும் சிலபேர் சாமான் வாங்காட்டி சிங்களத்தில் உள்ள கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகினம்!
எங்கடை ஆக்கள் சிரித்துக்கொண்டு பிறகு வாங்கோ,இப்ப காசு இல்லை எண்டு சொல்லுகினம்,
சனம் கொஞ்சம் கவனமாக இருக்க வேணும்!!
என்ன செய்ய!?!?!?!?!?
அது சரி உங்களுக்கு என்னத்துக்கு RedBull. பேசமா வழமை மாதிரி. Scotch Whiskyஐ வாங்கி அடிக்க வேண்டியதுதானே!!!!
Post a Comment