கமல், கே. எஸ். ரவிக்குமார் இணைப்பில் வந்திருக்கும் கமலின் இன்னுமொரு ராக்கெட் மன்மதன் அம்பு. கமலின் கலகல + விறுவிறுப்பான திரைக்கதையில், அவரது பாணி அலட்டலில்லாத நடிப்பில் இறுதிவரை கட்டிப்போட்டுவிடுகிறது மன்மதன் அம்பு.
பிரபல தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவனும், சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். சூர்யாவுடனான சூட்டிங்கின்போது த்ரிஷாவிற்கு புதிதாக வாங்கிய காரை பரிசளிக்க வரும் மாதவனும் அவரது தாயார் உஷா உதூப்பும் சூட்டிங் பார்ப்பதற்காக இருந்துவிட அங்கு நடக்கும் சில சம்பவங்கள் த்ரிஷாமீது மாதவனுக்கு சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடுகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக பாரீஸ் செல்லும் த்ரிஷாவைக் கண்காணிக்க கமலை நியமிக்கிறார் மாதவன். அங்கு இடம்பெறும் திடீர் திருப்பங்களும், கதையோடு ஒட்டிய நகைச்சுவையும் திரையில் பார்க்கப்படவேண்டியவை.
முறுக்குமீசையும், மூன்றுநாள் தாடியுமாக இந்திய இராணுவ கமான்டோ மேஜர் ராஜா மன்னாராக வருகிறார் கமல். காதல் மனைவியை விபத்தில் பலிகொடுத்துவிட்டு பஞ்சதந்திரம் நண்பன் ரமேஷ் அரவிந்த்தின் கான்சர் ட்றீட்மென்ட்டுக்காக மாதவன் கொடுக்கப்போகும் பணத்தை எதிர்பார்த்து பாரீசில் அவருக்காக த்ரிஷாவைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் பாத்திரத்தில் வருகிறார் கமல். த்ரிஷாவின் பர்சைப் பறிக்கும் கும்பலைத் துரத்திப்பிடிக்கும் சேசிங் காட்சியில், அவரது மனைவியாக வரும் ஜூலியட்டை கடந்தல் கும்பலிடமிருந்து இராணுவ மேஜராக இருந்து காப்பாற்றும் காட்சியில், ‘போனால் போகட்டுன்னு’ பாடலில் ஆடிக்கொண்டே நடக்கும் காட்சியில், மனைவியுடனான ரொமான்டிக் காட்சியில், என்று நடிப்பில் வழமைபோல பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். திரைக்கதை, வசனங்களிலும் தனித்துத் தெரிகிறார்.
அவரைச்சுற்றியே நடக்கும் கதையைத் தாங்கும் நடிகையின் பாத்திரம் த்ரிஷாவுக்கு. கவிதை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவராக , அம்புஜாஶ்ரீ என்ற பிரபல நடிகையாக வருகிறார் அவர் இம்முறை சொந்தக் குரலில் பேசி அலட்டலில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
த்ரிஷாவைக் காதலிக்கும் சந்தேகப் பேர்வழியாக தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். அவருக்கேயுரிய ரொமான்டிக் லுக்குடன் அறிமுகமாகிறார். த்ரிஷாவுடனான ஊடலுக்குப் பிறகு அவரைக் கண்காணிக்க கமலை அனுப்பிவிட்டு அங்கு நடப்பவற்றை தொலைபேசியில் கேட்பதும், எந்நேரமும் நண்பர்களுடன் பாரில் தண்ணீரில் மிதப்பதுவும்தான் அவரது வேலை. க்ளைமார்க்சில் பாரீசிற்கு வந்து காமெடியில் கலக்குகிறார்.
பாரீசில் த்ரிஷாவின் பள்ளித்தோழியாக, இரு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்துவாழும் கதாபாத்திரத்தில் சங்கீதா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மகனாக வரும் குட்டி வாலு விஷ்ஷு பண்ணும் ரகளைகளும், பெரியவர்களின் சங்கேதங்களைப் பிடித்துக்கொண்டு அவன் பண்ணும் சேட்டைகளும் படம் முழுவதும் கலகல.
கான்சரில் அவதிப்படும் கமலின் நண்பனின் பாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், அவரது மனைவியாக ஊர்வசியும் வந்து போனாலும் ரமேஷ் அரவிந்த்தின் பாத்திரம் இன்னும் மனதிலேயே நிற்கிறது. இவர்களைத்தவிர த்ரிஷாவிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க அவரைத் துரத்தும் கேரள தயாரிப்பாளர் குஞ்சன் குரூப்பும், அவரது மனைவியும் கதையூடே நகரும் நகைச்சுவைக்கு நன்றாகத் துணைபோயிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் சூர்யாவாகவே வந்துவிட்டுப் போகிறார்.
கமலின் வரிகள் மற்றும் குரலில், தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் தியேட்டரில் தாளம்போட வைக்கின்றன. இலங்கை இரசிகர்களுக்கு போனஸ் பரிசாக கமலின் ‘கண்ணோடு கண்ணைக் கலந்தாள்’ கவிதையும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. புதுமையான ஒரு முயற்சியாக பின்னோக்கிப் பயணிக்கும் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் நீலவானம் பாடலும், அதற்கேற்ப சரியான வாயசைப்புகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. மனூஸ் நாடனின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரமும், சுற்றுலாக் கப்பலும் கண்முன்னே விரிகின்றன.
அருமையான கதைக்களத்தைத் தேர்வுசெய்து, அதற்கு நகைச்சுவை முலாம்பூசி வெளியிடுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் கமலும் கே. எஸ். ரவிக்குமாரும் என்றே சொல்லலாம். ஆங்காங்கே தன் நாத்திகக் கருத்துக்களையும் கமல் விதைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் மைனசாகச் சொல்லவேண்டுமானால் க்ளைமார்க்சுக்கு முந்தய கொஞ்சம் இழுவையான படகுக் காட்சிகளைச் சொல்லலாம். மற்றபடி அமைதியான முதற்பாதியும், கலகலப்பான இரண்டாம் பாதியுமாக ரசிகர்களுக்கு விருந்தாகிறது மன்மதன் அம்பு.
மன்மதன் அம்பு – கமலின் ராக்கெட்.
13 comments:
ஆஹா.. ஆளாளுக்கு படத்தைப் பார்த்துவிட்டு ஆர்வத்தைத் தூண்டுறாங்களே..
உள்ளேன் ஐயா...
படத்தை விரைவாகப் பார்க்க உத்தேசம், பார்த்துவிட்டு விமர்சனத்தை வாசிக்கிறேன். :-)
பார்த்திட்டன். ம்ம்...
சுடச்சுட விமர்சனம் என்றாலும் மிகவும் அருமையாக உள்ளது.கடைசிநேரக் குழப்பங்கள் சில இருப்பினும் நம்மவரின் திரைக்கதை மிகவும் அருமை. அஹிம்சை, அடக்குமுறை, காவித்தீவிரவாதம், பாகிஸ்தானியர் தீவிரவாதம் எல்லாம் அரசியல் சூழ்ச்சி என்று சொல்வதில் நம்மவர் தனித்து காட்சி அளிக்கிறார். பார்க்க வேண்டிய படம்.
நல்லதொரு பார்வை சுபா
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)
படம் பார்த்த பின்னர் விரிவான பின்னூட்டமிடுகிறேன்
நாங்களும் நாளைக்கு இரவு பார்ப்பமல்ல...!! கமல் படம் முதற்தடவையாக முதல் காட்சி மிஸ்ஸிங்.
நேரம் கிடைத்தால் இந்தகிழமை பார்க்கலாம்.
நேர்த்தியான விமர்சனம்..!
நாங்களும் பாத்திட்டமில்ல, துரோகிகளா..
சுருக்கமாக சுவையாக சொல்லியுள்ளீர்கள். படத்தின் திருப்தி, முடிந்த பிறகு வெளியே வந்த உங்கள் முகத்தில் தெரிந்தது :)
எங்கள் இருவரின் விமர்சனத்திலும் பல ஒற்றுமைகள் :)
நல்ல படத்துக்கு நல்ல விமர்சன்ம்..
ரசித்தேன்
ம்ம் விமர்சனம் சூப்பர் பாஸ்
Post a Comment